நவீன அறிவியல் நுட்பங்களின் பயன்களை தமிழில் பிரபலப்படுத்தும் ஒரு சிறு முயற்சியில் நானும் ஒரு அங்கமாக...
Sunday, December 28, 2008
'பங்கீ ஜம்ப்பிங்'
இந்த விமானம் இப்போது கடத்தப்படுகிறது !!!
Wednesday, November 26, 2008
பொழுது விடிந்து வெர்டனை நெருங்க...
Tuesday, November 18, 2008
இந்த உயிர் இன்னும் சில நிமிடங்களுக்குத்தானா?
நில நடுக்கமென அவன் வார்த்தைகள் அவள் குருத்தேலும்பில் ஊடுருவின.
Sunday, November 9, 2008
ஈரோடு தமிழன்பன் - 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' வெளியீட்டு விழா தலைமையுரை
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நூல் வெளியீட்டு விழாவில்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையுரை :-
தாலாட்டுப் பாடலாக நமது தாய்மார்கள் பாடக்கூடிய பாடல் "பத்துக்கடல் தாண்டி பறித்து வந்த தாமரையே" என்பது. இந்நூலாசிரியர் அறிவியல்நம்பி பத்துவருடங்கள் உழைத்து இந்நூலை உருவாக்கி இருக்கிறார். ஒரு பொருளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த உழைப்பின் பயனை அவர்கள் அடையவில்லை. வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
நியூஜெர்சிக்கு நான் சென்றிருந்த போது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் கடைசியாகக் கரும்பலகையில் எழுதி வைத்திருந்த 'இயற்பியற் சூத்திரத்தை' அப்படியே பாதுகாத்து வைத்திருந்தார்கள்.
நியூ ஸ்டோரி என்பது நாவலாகும். இந்த நாவல் 'நாவல்லா' என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இந்நூலில் சொல்லவேண்டிய கருத்துக்களை சொல்லவேண்டிய விதத்தில் வாசகர்களுக்கு அலுப்புத்தட்டாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் கவிதைகளாகக் கதை வெளிப்பாடுகள் காணப்படுகின்றன.
கதைக்குள்ளாக அறிவியல் விஷயங்கள் இடையிடையே கூறப்படும் போது வாசகர் பார்வை வேறு பகுதிக்கு மாறிவிடாதிருக்கும்படி மிகச் சாமர்த்தியமாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர். இதைச் சரியாகச் செய்யாது போனால் அனைத்தும் வீணாகிவிடும்.
அதேபோல் இந்நூலில் நாடு நகர்கள் பற்றி விவரித்திருக்கும் விதம், சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் ஆடற்கலைச் சிறப்புப் பற்றிக் கதையிலிருந்து விலகி விரிவாகப் பேசப்பாட்டாலும், அவை தமிழர் கலைத்திறனாக எக்காலத்திலும் தமிழ்மக்களிடையே பதிய வேண்டியவை என்பதனால் பொருந்தி நிற்கின்றன. இந்நூலில் பேசப்படும் நாடுகளில் மொனாக்கோ என்ற சின்னஞ்சிறிய நாட்டைப் பற்றிய தகவல் கூட சுவையாகக் கூறப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
புதினங்களை மூன்று பெரும் வகைகளாக சமூகப் புதினம், வரலாற்றுப் புதினம், அறிவியல் புதினம் எனக் கொள்ளலாம். மூன்றும் கலந்த கலவையாக இந்நூல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பாராட்டத்தக்க அம்சம் இந்நூலில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றியது. கதாநாயகி தாரிணியாகட்டும், ஓரிரு இடங்களில் பேசப்படும் ஜெனிபர், நிஷாந்தியாகட்டும், இன்டர்போல் அதிகாரியாக வரும் வினோதினியாகட்டும் அனைவரும் மிக உயர்வாக, அறிவார்ந்த பாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கருடா விமானத்தின் வேகத்தைவிட அதிவேகத்தில் அவளிடமிருந்து விலகி ஓடிவிடத் துடிக்கும் அவன் உள்ளம் என்றும், தாரிணியைப் பற்றி சொல்லும் போது, குளிர் நிலவென நெற்றி, இன்பமொழி பேசும் கண்கள், கம்ப்யூட்டர் வரைவில் மூக்கு, கிள்ளிப்பார்க்கத் தூண்டும் கன்னம், என்றும் நாவலின் வர்ணணைகளில் கூட அறிவியல் வார்த்தைகள் கையாண்டவிதம் அற்புதமானது.
நூலின் தனிச்சிறப்புகள்:
1. சமூகத்தளத்தில் இயங்குகிற வாழ்க்கையின் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கை கூறுகள்.
2. இவற்றினூடாக இயங்கும் விஞ்ஞான தொழில்நுட்ப புதுமைகள் கதையைச் சேதப்படுத்தாமல் சிதைக்காமல் வெளிப்படுத்தியிருக்கும் விதமும் அவற்றின் மிகத் துல்லியமான விவரங்களும்.
3. இது விஞ்ஞானக் களத்தில் இயங்கும் கதை என்பதனால் விஞ்ஞான கூறுகள் உவமைகள்கூட மின்னி வெளிப்படுகிற மேம்பாடு.
4. கலைச் சொல்லாக்கம் கதையின் நோக்கம் இல்லையானாலும் ஆங்காங்கு ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற விஞ்ஞான கலைச்சொற்களுக்கு தகுந்த முறையில் தமிழில் உருவாக்கி பயன்படுத்தியிருக்கும் முறைமை.
இப்புதினம் ஒரு கலைப்படைப்பாக கருதத்தக்கது என்னும் சமூக உண்மைகளுக்கு சமன்பாடான நிலையில், விஞ்ஞான உண்மைகளையும் வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் கலைப்பணி, சமுதாயப்பணி, விஞ்ஞானப்பணி, தமிழ்ப்பணி என நான்கு கோணங்களிலும் தமது எல்லையை விரிவுபடுத்தி தன் வெற்றியைச் சாதித்திருக்கிறது என்று என்னால் கூற முடியும்.
Friday, November 7, 2008
"அறிஞர்கள் கற்றுக் கொடுக்காததை அலைகள் கற்றுக் கொடுக்கும்"
தமிழகத்தில் நூல் பதிப்பகங்கள் ஐநூறு உள்ளன. இந்த பதிப்பகங்கள், தனி நபர்கள் பதிக்கக்கூடிய நூல்களைத் தமிழக அரசு வருடம்தோறும் 12 கோடிக்கு வாங்குகின்றது. இப்படி வாங்கக் கூடிய இந்தப்பணம் மக்களது வரிப்பணம்.
கட்டிலிலிருந்து கத்திரிக்காய் வரை விற்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிக்கு நூலகவரி என்ற ஒன்று உள்ளது. இந்த வரிப்பணம் அனைத்தும் மக்களுக்காக நூல்களை வாங்கி நூலகங்கள் மூலம் மக்கள் அறிவு வளர்ச்சி அடைய பயன்படுகின்றது.
பதிப்பகங்கள் நல்ல நூல்களை மக்களுக்குத் தேவையானவற்றை பதிப்பிக்க வேண்டும். 25% பதிப்பகங்களே நல்ல நூல்களைப் பதிப்பிக்கின்றன.
கேரளாவில் உள்ள பதிப்பகங்கள் எழுத்தாளர்களை உரிய முறையில் கௌரவித்து 'ராயல்டி' தருகின்றன. அத்தகைய நிலையை தமிழிலும் உருவாக்க பதிபகங்கள் முன்வர வேண்டும்.
நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுகிறீர்கள் என்றால், பூஜை அறையை போல் அங்கு நூல்களை வைப்பதற்கும் ஒரு அறையை நிர்மானியுங்கள். நமக்கு அறிவுக்கண் திறக்க அது வழி வகுக்கும்.
"அறிஞர்கள் கற்றுக் கொடுக்காததை அலைகள் கற்றுக் கொடுக்கும்" என்றார் கண்ணதாசன். அழுக்கை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் கடலலை சங்கு, பாசிகளை கரையில் கொண்டு வந்து தள்ளுகின்றன. இதனைப் போன்று நல்லவைகளைப் பதிப்பகங்கள் பதிப்பிக்க வேண்டும்.
- இவ்வாறு தமிழக நூலக ஆணைக்குழுத் தலைவர் திரு. கயல் தினகரன் அவர்கள், 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' நூல் வெளியீட்டு விழாவின் போது உரையாற்றினார்.
Wednesday, November 5, 2008
'இங்கேயும் ஒரு சொர்க்கம்' - வெளியீட்டு விழா
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவல் வெளியீட்டு விழா மிக சிறப்பான முறையில் 03/11/08 அன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் "இங்கேயும் ஒரு சொர்க்கம்' நூலை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.
உடன் (படத்தில் இடமிருந்து) காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வீ.சித்தண்ணன், புலவர் செ.பொன்னம்பலம், நூலக ஆணைக்குழுத் தலைவர் கயல் தினகரன் மற்றும், நூலாசிரியர் அறிவியல்நம்பி.
நாவல் கிடைக்குமிடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., இராயபேட்டை, சென்னை -600 014. தொலைபேசி : 044 - 28482441 / 28482973 மின்னஞ்சல்: pavai123@yahoo.com
நியு செஞ்சுரி புக் ஹௌஸ் பிரைவேட் லிமிடெட்
புதிய எண் 156 / பழைய எண் 786,
அண்ணா சாலை (ரஹேஜா டவர் அருகில்), சென்னை - 600 002 தொலைபேசி : 044 - 28528351
மற்றும் தமிழகத்தில் உள்ள
நியு செஞ்சுரி புக் ஹௌசின் அனைத்து கிளைகள்.
நூல் வெளியீட்டின் போது எடுத்த புகைப்படங்களை அருகில் உள்ள ஆல்பத்தில் காணலாம்.
Thursday, October 30, 2008
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நூல் வெளியீட்டு விழா அழைப்பிதல்
Sunday, October 26, 2008
அண்டம் - உட்கூறியல் (Anatomy of the Universe)
அண்டம் உருவாக்கத்திற்கு அறிவியலர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பு அல்லது பெரும்பிரளயம் (Big Bang) என்பதாகும். பெருவெடிப்பு நிகழ்வுக்குப்பின் அந்தக் காலகட்டத்தில் அண்டம் என்பது 10000 டிகிரி உயர் வெப்ப நிலையில் வெறும் வாயுக்களாலான ஒரு பெரிய தீக்கோளமாகும். அது விரிந்து பரவி பரவி குளிரும் தன்மை உடையதாய் இருந்தது. வெப்பம் தணியத் தொடங்கியதும் முதலில் அணுக்கருவின் நுண்துகள் உருவாகி அதன் பின்னர் புரோட்டான் எலக்ட்ரான் ஆகியன உருவாகின.
பின்னர் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப்பின் அணுக்களின் ஈர்ப்பு விசை, வெப்பநிலை தணிதல் போன்ற காரணங்களால் தொடக்கத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் ஆகிய அணுக்கருக்கள் உருவாகி, விண்மீன் கூட்டங்கள் உருவாக அடிப்படை காரணிகளாக (Protogalaxy) அமைந்தன. மேலும் மேலும் அணுக்கரு இணைவு, வெப்பம், குளிர்தல், ஈர்ப்பு விசை ஆகிய காரணங்களால் சுமார் 500கோடி ஆண்டுகளுக்குப்பின் விண்மீன்கூடங்கள் உருவாகி பின்னர் அவற்றில் நட்சத்திரங்கள் உருவாகியிருக்கும் என்பதும், நம் சூரியன் உருவாகி 1000கோடிஆண்டுகள் இருக்கும் என்பதும் வானவியலர் கருத்து.
விண்மீன் கூட்டங்கள் கொத்துக் கொத்தாதாக (Super cluster) அண்டவெளியில் ஈர்ப்பு விசையினால் குறிப்பிட்ட இடங்களில் பின்னி பிணைந்து கிடக்கின்றன. லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனபோதிலும் இன்னும் இந்த அண்டம் மேலும் மேலும் விரிந்து கொண்டுதானிருக்கிறது.
பெருவெடிப்பு கோட்பாட்டின் அறிவியல் உண்மைகள்:-
1. அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்கள், கிரகங்கள் துணைக்கோள்கள் அனைத்திலும் ஹைட்ராஜன், ஹீலியம், லித்தியம் கார்பன்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் நீக்கமர நிறைந்து பரிமளிப்பதானது, இவைகள் ஒரு ஆதிமூல சக்தியை அடிப்படையாக கொண்டு உருவானதை நிரூபிக்கும் அம்சமாகும்.
2. சூரியனைக் கிரகங்கள் சுற்றி வருவது போல் இந்த அண்டத்தின் எந்த ஒரு நட்சத்திரமாகட்டும் அல்லது நுண்ணிய அணுத்துகளாகட்டும் அதன் மையத்தில் ஒரு நியூக்கிலியசும் அதைச் சுற்றி எலெக்ட்ரான்களும் மின்னல் வேகத்தில் சுற்றி வருகின்றன. இதுவும் நமக்கு அண்டத்தின் அனைத்து அணுக்களும் ஆதியில் ஒரே தாய்க்கருவை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கக்கூடும் என்ற பெருவெடிப்பு கோட்பாட்டை நிரூபிக்கும் அம்சமாகும்.
3. ஒரு மங்கிய கதிர்வீச்சு அண்டத்தின் எல்லா திசைகளிலிருந்தும், குளிர்ந்த பின்னனியில் ஒரே சீராக வருவதானது பெருவெடிப்பு நிகழ்வின் எஞ்சிய கதிர்வீச்சை நமக்கு உணர்த்துகின்றன.
4. காஸ்மிக் கதிர்வீச்சின் வெப்பநிலையில் காணப்படும் 'சிற்றலைகளானது' விண்மீன் கூட்டங்கள் உருவாவதற்கு முந்திய நிலையிலிருந்த (Protogalaxy) அண்டக்கோளத்தின் அடர்த்தியில் காணப்பட்ட வேறுபாட்டினை உணர்த்துவதாகும்.
5. பூமியில் உள்ள உயிரினங்களைப்போல் அண்டக் கோளத்தில் நட்சத்திரங்களின் பிறப்பும் (Formation of supernova), நம் சூரியனைப் போல் வாலிபப்பருவம் அடைந்து, கடைசியில் அவைகள் ஒரு கருந்துகளாக (Block Hole) மாறி விண்மீன் கூட்டத்திலிருந்து விலகி அண்டத்தில் கலந்து எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கி கல்லரையாகி விடுவதும் விண்ணில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியாகும். அதே போல் அண்டப் பெருக்கத்தின் காலகட்டமும் ஒருநாள் முடிந்து, அது மீண்டும் ஒரு அணுத்துகளாக சுருங்கி மறைந்து போகக்கூடிய சாத்தியக் கூற்றையும் மறுப்பதற்கு இல்லை. அந்த காலகட்டத்தை வேண்டுமானால் வானவியலர்களால் அறுதியிட்டுக்கூற முடியாதிருக்கலாம். ஆனால் நடக்ககூடிய ஒன்று என்பது மட்டும் நிச்சயம்.
6. இப்பேரண்டத்தில் இதுகாறும் மனிதனால் கண்டறியப்பட்ட விண்மீன் கூட்டங்கள், பால்வீதிகள், விண்மீன்கள் கிரகங்கள் பற்றிய உண்மைகள் வெறும் 4% மட்டுமே. ஆய்வில் உள்ள டார்க் மேட்டர் எனப்படும் பருப்பொருள் 23%. நம்மால் அறியப்படாத சக்தி 73%. ஆக அண்டத்தைப்பற்றி நாம் அறிந்திருப்பது வெறும் கைமண் அளவே.
மாணிக்கவாசகரும் இந்த பேரண்ட உட்கூரியல் உண்மையினை 'இல் நுழை கதிரின் துன் அணு ஒப்ப' என்ற வரிகளில் பரந்த அண்ட கோள எல்லையில் அமைந்த எத்தனையோ கோடான கோடி தூசுகளில் இந்த உலகமும் ஒரு சிறு தூசு என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு உணர்த்தியுள்ளார்.இதன் மூலம் தமிழர்களின் அறிவியல் சிந்தனை எத்தகையது என்பதனை அறிந்து கொள்ளலாம். அத்தகைய சிந்தனையை நாமும் வளர்க்க 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' நாவலைப் படிப்போம்.
Sunday, October 5, 2008
'நானோ' அதிசயம் !
நானோ ஆராய்ச்சி வைரஸ்களையும் விட 100 மடங்கு சிறிய நுண்ணிய அணுக்களைப் பற்றியது.
நானோவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள...
புத்தக வெளியீட்டு விழா பற்றிய தகவல் விரைவில் இங்கு அறிவிக்கப்படும்.
Sunday, September 28, 2008
செயற்கைப் பிரளயம்
பிரபஞ்சம் என்பது சுமார் 15 அல்லது 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 'Big Bang' எனப்படும் பெரும் பிரளயத்துக்குப் பின் உருவானது. அக்கணத்தில் உருவான வெப்பமிகுந்த தீக்கோளம் விரிந்து பரவி குளிரத் தொடங்கியதும், முதலில் அணுக்கருவின் நுண் துகள்கள் உருவாகின. பின்பு அணுவின் உட்கருவாகிய நியூட்ரான் புரோட்டான் உருவாகி அதன் பின்னரே எலெக்ட்ரான்கள் தோன்றின.
அணுக்கரு இணைவு, வெப்பம் குளிர்தல் ஆகிய காரணங்களால் விண்மீன்கள் உருவாகின. 1000 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் விண்மீன்களில் ஒன்றான நம் சூரியன் தோன்றியது.
மேற்கூறிய 'பெரும் பிரளயம்' கோட்பாட்டின் அடிப்படையில் ஜெனிவாவில் LHC (Large Hadron Collidar) மூலம் செயற்கைப் பிரளயம் ஒன்றை உருவாக்கி முதன் முதலில் தோன்றிய துகளின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.
இதுவே கடவுள் துகளாக (Higgs boson particle) இருக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதைப் பற்றி எனது முந்தய இடுகையில் கூறப்பட்டுள்ளது. இதுவே அணுக்களுக்கு மிக முக்கியமான பொருள் திணிவை (mass) அளிப்பதுமாகும்.
பிரபஞ்சத்தின் கிரகங்கள், நட்சத்திரங்கள், கரும்புள்ளிகள் (black holes) ஆகிய அனைத்திற்கும் அடிப்படை அலகு (unit) இக்கடவுள் துகளே.
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலைப் படியுங்கள்,
இப்பிரபஞ்ச ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நாவல் கிடைக்குமிடம் :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
இராயபேட்டை, சென்னை -600 014.
போன் : 044 - 28482441 / 28482973
மின்னஞ்சல்: pavai123@yahoo.com
Sunday, September 14, 2008
கடவுள் துகள் படைக்கும் 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'
செப்டம்பர் 10, 2008 ல் ஜெனிவாவில் CERN (European Organisation for Nuclear Research), LHC (Large Hadron Collider) மூலம் நடத்திய ஆராய்ச்சி போன்று, பிரபஞ்ச சிருஷ்டியின் ஆதி மூலத்தை அறியும் நீண்ட காலப் போராட்டத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பௌதீக வாரிசுகள் 'கடவுள் துகள்' (GOD PARTICLE) வரை முன்னேறி வந்து விட்டனர்.
அதை மனிதன் தன் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்வரை அவன் ஓயப்போவதில்லை.
அந்த சூட்சுமத்தை மனிதன் அறிந்து கொண்டால்....
பின் நிகழ்வன பற்றிய புனை கதைதான் 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'
Saturday, September 6, 2008
இங்கேயும் ஒரு சொர்க்கம் - வடிவமைப்பு
நீங்களும் ஒரு விமானியாக உலகை வலம் வர வேண்டுமா ?
RAW, INTERPOL அதிரடி நடவடிக்கைகளை அறிய வேண்டுமா ?
தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு, துனீசியாவில் தூரின்,
பிரான்சில் பாரிஸ், மார்சைல்ஸ், லியான் மற்றும் கார்சிகா தீவு போன்ற இடங்களை ரசிக்க...
விரைவில்... இங்கேயும் ஒரு சொர்க்கம்.
Thursday, September 4, 2008
இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - V
Sunday, August 31, 2008
இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - III
அருண் : மூளையிருப்பவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான். தம் குரு அரிஸ்டாட்டிலின் வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்ற, ஒரு இந்திய துறவியை உடன் வருமாறு பணித்தார் அலெக்ஸாண்டர். "மகன்களை மன்னர்கள் வற்புறுத்த முடியாது," என்று உடன் செல்ல மறுத்தார் சன்யாசி.
"என்னோடு கிரேக்கத்துக்கு வர மறுத்தால் அடுத்த வினாடி உன் தலை ஜீலம் நதியில் மிதக்கும்...ம்...புறப்படு" என்று வாளை உறுவினான் அலெக்ஸாண்டர்.'
அலெக்ஸ்ஸாண்டரின் கோபாக்கினி துறவியிடம் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை. 'மகா அலெக்ஸாண்டருக்கு இந்த துறவி உத்தர விடுகிறேன், ம்... ...வெட்டி எறி என் தலையை' என்றார் துறவி ஆவேசமாக.'
ஓங்கிய கை ஓங்கியபடியே நிற்க அதிர்ச்சியில் கல்லானான் அலெக்ஸ்ஸாண்டர்! மகுடம் சூட்டிய மாமன்னர்களே எதிரில் நிற்க திராணியற்று ஓடி ஒளியும் போது, கேவலம் உடுத்த முழம் துணி இல்லாத இந்த சன்யாசி, அலெக்ஸாண்டருக்கு உத்தரவிடுவதா? அவன் உள்ளம் கூனிகுறுகிப் போனது. உடை வாள் உறைக்குள் போனது.
இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - II
ஊர்வலம் முடிந்து வந்த மன்னன், மகன் முகம் வாட்டமுற்றிருப்பதை அறிந்து அவன் நாடியை உயர்த்தியபடி "மகனே இந்த நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் போது உனக்குமட்டும் என்ன குறை? என்று வாஞ்சையாய்க் கேட்க, அதற்கு அலெக்ஸாண்டர் "தந்தையே இந்த உலகில் நான் வெற்றிகொள்ள என்று எதையும் நீங்கள் மிச்சம் மீதி வைக்கப்போவதில்லை அப்படித்தானே?"
இதை சற்றும் எதிர்பாராத மன்னன் சமாளித்து விட்டு "மகனே முரட்டுக் குதிரை - 'பெர்ஸபோலஸை' அடக்கிய உன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் மாசிடோனியா மிகச் சின்னஞ்சிறிய நாடு! நீ வெற்றிகொள்ள என்று உலகில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உன் தந்தையின் வீரத்துடன், உன் தாயின் புத்திக்கூர்மையும் உன் குரு அரிஸ்டாட்டிலின் ஆசியும் உனக்கு எப்போதும் துணையிருக்கும். இந்த உலகத்தை ஒரு நாள் நீ வெற்றி கொள்ள வேண்டும். இதுதான் உன் தந்தையின் ஆசை!" என்றதும் தந்தையை கட்டிப்பிடித்து காலில் விழுந்தான் அலெக்ஸாண்டர்.
(கார்சிகா தீவில் அருணை உத்வேகப்படுத்த பத்மநாபன் கூறிய சரித்திர மேற்கோள்)
Sunday, August 17, 2008
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலின் சில முத்துச் சிதறல்கள்... ...
"என்ன பேச்சே காணோம். இதயங்களை துளைத்துப் பார்ப்பதில்தான் உங்க ரசனை இருக்கும் போலிருக்கு சரிதானே?"
இங்கேயும் ஒரு சொர்க்கம் - பதிப்பகத்தார் பார்வையில்!
எல்லா சாதிக் கலவரங்களும், இன மோதல்களும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் சுய லாபத்துக்காகவும் ஆதாயங்களுக்காகவும் நடைபெறுவனதான் என்பதை நாவலாசிரியர் மிகப் பிரமாதமாக புதினமாக்கி இருக்கின்றார். சமூக அக்கறையுடன் உண்மையாகவும், நீதிக்காகவும், தேசத்திற்காகவும் நின்று போராடும் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வார்த்தளித்துள்ளார்.
திடீர் பாய்ச்சலில் இந்தியா முன்னேறுவதற்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பினை நிகழ்த்திய விஞ்ஞானியிடமிருந்து ஆய்வு ரகசியத்தைத் திருட முயலும் சதிகாரர்களிடமிருந்து அந்த புதிய கண்டுபிடிப்பை மீட்பதற்காகவும் தேசத்தின் இறையாண்மையைக் காப்பதற்காகவும் கதாநாயகன் அருண் நடத்தும் போராட்டம் 'கத்திமேல் நடப்பதாக' அமைந்து மெய்சிலிர்க்க வைக்கின்றது.
ஒரே சமயத்தில் புலனாய்வுக் கதையாகவும், சமூக நாவலாகவும், அறிவியல் புனைகதையாகவும் கதை வளர்ந்து பின்னிப் பிணைந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்து ஆவலைத்தூண்டும் விதத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கத்தகுந்த நாவலாக நாவலாசிரியர் படைத்துள்ளார். இது மிக நீண்ட கால உழைப்பில் உருவானதென்றுகருதத்தக்க நல்ல நாவலாகும்.
அருண், தாரிணி, பத்மநாபன் முதலான கதாபாத்திரங்கள் நம் மனதில் நின்று என்றும் வாழும்பான்மையுடையன.
இந்நாவலாசிரியரின் முதல் நாவலான "கனவு கிராமம்" ஏற்கனவே தமிழக அரசின்புதினத்திற்கான முதல் பரிசை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் இவரின் நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" பல பரிசுகளைப் பெறுவதுடன் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுமென நம்புகின்றோம்.
இந்நாவலை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியருக்கு எமது உளமார்ந்த நன்றி.
- பாவை பப்ளிகேஷன்ஸ்
Sunday, August 10, 2008
"இங்கேயும் ஒரு சொர்க்கம்"
காஷ்மீர் - கன்னியாகுமரி அல்ட்ரா மாடர்ன் நெடுஞ்சாலை போட
ஒரே மாதம் !
அடுத்த வருடம் பாருங்களேன் விண்ணிலிருந்து பார்ப்பவர்களுக்கு, நம் பூமியில் சீன நெடுஞ்சுவர் மட்டுமல்ல, கங்கா - காவேரி இணைப்புக் கால்வாயும் தெரியும் !
- என வெற்றி முழக்கமிட்ட விஞ்ஞானியை...
செந்தீயின் கோர நாக்குகள் விழுங்க முயல...
அவர் கதியை அறிய இந்திய நாடு மட்டுமல்ல
விடை தேடும் ஒரு பயணமாக "இங்கேயும் ஒரு சொர்க்கம்"
புத்தம் புதிய விஞ்ஞானக் கருத்துக்களை நாடி நாமும் ஒரு விமானியாக,
பிரான்சில் - பாரிஸ், மார்சைல்ஸ், லியான், கார்சிகா தீவு,
இந்தியாவில் - தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு,
என விமானத்தில் வலம் வருவோம் !
விரைவில் இந்நாவல் வாசகர்களின் கையில் !
பறக்கத் தயாராவோம் !
வெளியீடு :
பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
17 / 142, ஜானி ஜான் கான் சாலை,
இராயபேட்டை, சென்னை - 600 014
தொலைபேசி : 91 - 44 - 28482441 / 28482973
Monday, January 7, 2008
"கனவுக் கிராமம்" - அங்கீகரிக்கப் பட்ட தருணம்...
1997 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ‘புதினம்’ எனும் தலைப்பில் போட்டியிட்டு முதல் பரிசு ரூ.10,000/- பெற்றது.
16-01-1999 உழவர் திருநாளில் சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
Sunday, January 6, 2008
வாசகர்களின் பார்வையில் "கனவுக் கிராமம்"...
கனவுக் கிராமம் திரு.அறிவியல் நம்பி அவர்களின் கன்னி முயற்சி…
ஆனால் அதன் சுவடுகள் எங்கும் தெரியவில்லை…
ஒரு கை தேர்ந்த எழுத்தாளர் போல் கதையை அற்புதமாக நகர்த்துகிறார்… தன் எளிய நடையில் ஆங்காங்கே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச் சாதரண வாசகர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குகிறார்…
இங்கிலாந்துக்குச் செல்லாமலேயே அங்குள்ள பல நகரங்களின் மூளை முடுக்குகளையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டி விவரிக்கிறார்…
தமிழ் இலக்கியத்தோடு மட்டுமின்றி ஐரோப்பிய இலக்கியத்தோடுகூட தனக்கிருக்கும் பரிட்சயத்தைக் காட்டுகிறார்…
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் “கனவுக் கிராமம்” சுவாரஸ்யமான ஒரு நாவல் மட்டுமல்லாமல் ஒரு அறிவு பெட்டகமாகவும் திகழ்கிறது…
ஏப்ரல் 1999 அமுத சுரபி மாத இதழில், பத்மா சமரசம் அவர்கள்
இந்நூல் ஆங்கில குற்றப் புதினங்களைப் போன்று விறுவிறுப்பாகச் செல்கிறது…
அகதா கிறிஸ்டி, ஆட்லிச்சேஸ், அயன் பிளெமிங் ஆகியோர் தமிழில் எழுதியது போல் இப்புதினம் உள்ளது…
குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் தமிழ் பேசி மோகனாக உலா வருவது போல் உள்ளது...
இது தமிழில் மூல நூல் எனும்போது பெருமையாக உள்ளது…
நூல்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம் :
1) BOOKS FOR EVER
2) BOOKS FOR THE HOUR
3) BOOKS FOR NEVER
இதில் "கனவுக் கிராமம்" முதல் வகையைச் சார்ந்தது…
பிப்ரவரி 1999 மாணவர் சக்தி மாத இதழ் - புத்தக விமர்சனம்
கனவுக் கிராமம் – சமுதாயக்கதை என்ற எண்ணத்தை தலைப்பு ஏற்படுத்தலாம்…முகப்பு அட்டை கம்ப்யூட்டர் கதையோ என்ற பிரமிப்பை ஏற்படுத்தலாம்...ஆனால் கதையோ விறுவிறுப்பான ஜேம்ஸ் பாண்ட் நாவலாக உள்ளது…
படிக்க கையில் எடுத்தால் கீழே வைக்கத்தோனாத அளவிற்கு விறுவிறுப்பான நடை கையாளப்பட்டு உள்ளது பாராட்டத்தக்கது…
பிரிட்டன் பற்றியும் காமன்வெல்த் நாடுகள் குறித்தும் இந்நாவலில் விவரிக்கப்பட்ட விதம் அந்நகரங்களை நேரில் பார்த்த உணர்வைத் தோற்றுவிக்கின்றன…
இந்நாவலில் கதாநாயகன் கையாளும் விஞ்ஞான புதுமைகள் கைகூடும் நாட்களும் வெகு தூரத்தில் இல்லை…
ஆகஸ்ட் 1998 – மங்கையர் மலர் – புக் ஷெல்ப் பகுதி
அறிவியலோடு இணைந்த சுவாரஸ்யமான நவீன நாவல்...
புதுமையான விஷயங்கள் படிக்க விரும்புகிறவர்களுக்கு சுவாரஸ்யம்…
S.S. போத்தையா, என்னுடைய பள்ளி ஆசிரியரின் விமர்சானக் கடிதம், 16.06.1998
"கனவுக் கிராமம்" – ஒரு துப்பறியும் நாவலாக இருந்தாலும், ஆபாசம், வன்முறை இல்லாமல், பக்கத்திற்கு பக்கம் அறிவியல், வரலாறு, புவி இயல், இலக்கியம் பற்றிய விஷயங்களை ஏற்ற வகையில் கதை போக்குடன் இணைந்து சுவை குன்றாமல் விறுவிறுப்பு குறையாமல் எழுதியிருப்பது யாராலும் மறுக்க முடியாது…
கி.ராஜ நாராயணின் பாஷையில் சொல்வதென்றால், "நீ தமிழுக்கு கிடைத்த ஒரு வசமான கை !"...
பதிப்பகத்தாரின் பார்வையில் "கனவுக் கிராமம்"
ஓர் அடர்ந்த ஆலமரத்தை, போன்சாய் மாதிரி சிறு பூந்தொட்டியில் அடக்கும் வித்தை போல் பல்வேறு சம்பவங்கள் ஒருசேர ஒரு நாவலில் அடக்கும் திறமை கைவரப் பெற்றால், வெற்றி நிச்சயம்...
இந்த வகையில் இந்த நாவலாசிரியர் தன் கன்னி முயற்சியிலே இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம்...
'எந்த நாவல் படித்ததும் உங்களுக்கு பூரண திருப்தியளிக்கிறதோ, அதுவே சிறந்த நாவல்' என்றார் ஓர் அறிஞர். அந்த அறிஞரின் வாக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது இந்நாவல் எனில் அது மிகையில்லை...
- மதி நிலையம் (பதிப்பகத்தார்), தியாகராய நகர், சென்னை - 17
கனவுக் கிராமம் - ஒரு அறிமுகம்...
இதற்காக உலகைச் சுற்றுவதர்க்குப் பதிலாக சில நூலகங்களை வலம் வந்தேன்...எதிர்பார்த்ததற்கும் மேலாகவே லண்டன் நகரைப் பற்றி ஒவ்வொரு சதுர மீட்டருக்கும், பிரிட்டனைப் பற்றி ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் தகவல்கள் கிடைத்தன...
பல கதைகளில் சொல்லப்பட்ட கற்பனைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உண்மைகளாகி உள்ளன...முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட பிரெஞ்சு தத்துவ ஞானி மாண்டஸ்க்கியூவின் கூற்று இன்று உண்மையாகி ஐரோப்பா கண்டமே ஒரே நாடாக மாறி அடுத்த நூற்றாண்டில் காலடி வைக்க இருக்கிறது...இதேபோல இந்நூலின் வாயிலாக நான் அப்போது வலியுறுத்திய பல கருத்துக்கள் இன்று உண்மையாகி வருகின்றது...
இலக்கிய ரீதியில் தம் ஆற்றலால் அறிவுத்திறத்தால் தமிழன்னைக்கு மாலைகளாகச் சூட்டி மகிழ்ந்த மாமேதைகள் கொலுவீற்றிருக்கும் இத்தரணியில் அறிமுகமே இல்லாத நான் ஒரு சிறு மலர் கொண்டு இந்நாவலின் வாயிலாக அன்னைக்கு அர்ச்சனை செய்திருக்கிறேன்...
என்னுடைய எழுத்துலகம்...
வளமான நூல்கள், போதுமான நேரம், சிந்திக்க இதமான சூழல் எனில், அச்சிந்தனைச் செழிப்பில் நம் கற்பனைத் திறன் கருக்கொள்ள இயல்பு போலும். அத்தகைய இன்சூழலில் ஏதாவது ஒன்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளும் முகிழ்த்தது...
ஒவ்வொருவருக்கும் அவர்கள் எழுத்து நடனமாட, அரங்கம் தேர்ந்த ஒன்றாகும் களம் புதுமையாகவும் இருக்க விரும்புவது இயற்கையே...அத்தகைய தேடுதலின் போது ஆங்கில நாவல்களை ஒப்பிடுகையில் தமிழில் பயண நூல்களையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் தவிர்த்து வெளிநாடுகள் மற்றும் விஞ்ஞானம் பற்றிப் பேசிய தமிழ் நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...இது என் மனதை நெருடியதன் தாக்கமே "கனவுக் கிராமம்" எனும் நாவல் மலர காரணமாயிற்று...
என்னுடைய எழுத்துலக பயணத்திற்கு இதுவே முதல் வித்து...
அடுத்து தினத்தந்தியில் நாற்றாக வெளிவந்தது "மனிதாபிமானம்" என்ற சிறுகதை...
வரவிருக்கும் எனது இரண்டாவது நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" கிளைத்துப் பரவ வாசக அன்பர்களின் அபிமானம், பேருதவி புரியும் என எதிர்பார்க்கிறேன்...