Sunday, August 17, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - பதிப்பகத்தார் பார்வையில்!

சேதுக்கரை என்ற தென்தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களாகத் துவங்கும் இந்த நாவல் களம் உலக நாடுகளில் நடந்தேறும் சம்பவங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது.


எல்லா சாதிக் கலவரங்களும், இன மோதல்களும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் சுய லாபத்துக்காகவும் ஆதாயங்களுக்காகவும் நடைபெறுவனதான் என்பதை நாவலாசிரியர் மிகப் பிரமாதமாக புதினமாக்கி இருக்கின்றார். சமூக அக்கறையுடன் உண்மையாகவும், நீதிக்காகவும், தேசத்திற்காகவும் நின்று போராடும் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வார்த்தளித்துள்ளார்.


திடீர் பாய்ச்சலில் இந்தியா முன்னேறுவதற்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பினை நிகழ்த்திய விஞ்ஞானியிடமிருந்து ஆய்வு ரகசியத்தைத் திருட முயலும் சதிகாரர்களிடமிருந்து அந்த புதிய கண்டுபிடிப்பை மீட்பதற்காகவும் தேசத்தின் இறையாண்மையைக் காப்பதற்காகவும் கதாநாயகன் அருண் நடத்தும் போராட்டம் 'கத்திமேல் நடப்பதாக' அமைந்து மெய்சிலிர்க்க வைக்கின்றது.


ஒரே சமயத்தில் புலனாய்வுக் கதையாகவும், சமூக நாவலாகவும், அறிவியல் புனைகதையாகவும் கதை வளர்ந்து பின்னிப் பிணைந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்து ஆவலைத்தூண்டும் விதத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கத்தகுந்த நாவலாக நாவலாசிரியர் படைத்துள்ளார். இது மிக நீண்ட கால உழைப்பில் உருவானதென்றுகருதத்தக்க நல்ல நாவலாகும்.


அருண், தாரிணி, பத்மநாபன் முதலான கதாபாத்திரங்கள் நம் மனதில் நின்று என்றும் வாழும்பான்மையுடையன.


இந்நாவலாசிரியரின் முதல் நாவலான "கனவு கிராமம்" ஏற்கனவே தமிழக அரசின்புதினத்திற்கான முதல் பரிசை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் இவரின் நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" பல பரிசுகளைப் பெறுவதுடன் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுமென நம்புகின்றோம்.


இந்நாவலை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியருக்கு எமது உளமார்ந்த நன்றி.


- பாவை பப்ளிகேஷன்ஸ்

No comments: