Showing posts with label கனவுக் கிராமம். Show all posts
Showing posts with label கனவுக் கிராமம். Show all posts

Monday, January 7, 2008

"கனவுக் கிராமம்" - அங்கீகரிக்கப் பட்ட தருணம்...

கனவுக் கிராமம் - பரிசளிப்பு விழா


1997 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ‘புதினம்’ எனும் தலைப்பில் போட்டியிட்டு முதல் பரிசு ரூ.10,000/- பெற்றது.

16-01-1999 உழவர் திருநாளில் சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Sunday, January 6, 2008

வாசகர்களின் பார்வையில் "கனவுக் கிராமம்"...

திரு.அ.ஜேம்ஸ் வில்லியம்ஸ், தலைவர், மதுரை காமராஜ் – மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு (MUTA)

கனவுக் கிராமம் திரு.அறிவியல் நம்பி அவர்களின் கன்னி முயற்சி…

ஆனால் அதன் சுவடுகள் எங்கும் தெரியவில்லை…

ஒரு கை தேர்ந்த எழுத்தாளர் போல் கதையை அற்புதமாக நகர்த்துகிறார்… தன் எளிய நடையில் ஆங்காங்கே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மிகச் சாதரண வாசகர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குகிறார்…

இங்கிலாந்துக்குச் செல்லாமலேயே அங்குள்ள பல நகரங்களின் மூளை முடுக்குகளையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டி விவரிக்கிறார்…

தமிழ் இலக்கியத்தோடு மட்டுமின்றி ஐரோப்பிய இலக்கியத்தோடுகூட தனக்கிருக்கும் பரிட்சயத்தைக் காட்டுகிறார்…

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் “கனவுக் கிராமம்” சுவாரஸ்யமான ஒரு நாவல் மட்டுமல்லாமல் ஒரு அறிவு பெட்டகமாகவும் திகழ்கிறது…

ஏப்ரல் 1999 அமுத சுரபி மாத இதழில், பத்மா சமரசம் அவர்கள்


இந்நூல் ஆங்கில குற்றப் புதினங்களைப் போன்று விறுவிறுப்பாகச் செல்கிறது…

அகதா கிறிஸ்டி, ஆட்லிச்சேஸ், அயன் பிளெமிங் ஆகியோர் தமிழில் எழுதியது போல் இப்புதினம் உள்ளது…

குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் தமிழ் பேசி மோகனாக உலா வருவது போல் உள்ளது...

இது தமிழில் மூல நூல் எனும்போது பெருமையாக உள்ளது…

நூல்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம் :

1) BOOKS FOR EVER
2) BOOKS FOR THE HOUR
3) BOOKS FOR NEVER

இதில் "கனவுக் கிராமம்" முதல் வகையைச் சார்ந்தது…

பிப்ரவரி 1999 மாணவர் சக்தி மாத இதழ் - புத்தக விமர்சனம்


கனவுக் கிராமம் – சமுதாயக்கதை என்ற எண்ணத்தை தலைப்பு ஏற்படுத்தலாம்…முகப்பு அட்டை கம்ப்யூட்டர் கதையோ என்ற பிரமிப்பை ஏற்படுத்தலாம்...ஆனால் கதையோ விறுவிறுப்பான ஜேம்ஸ் பாண்ட் நாவலாக உள்ளது…


படிக்க கையில் எடுத்தால் கீழே வைக்கத்தோனாத அளவிற்கு விறுவிறுப்பான நடை கையாளப்பட்டு உள்ளது பாராட்டத்தக்கது…

பிரிட்டன் பற்றியும் காமன்வெல்த் நாடுகள் குறித்தும் இந்நாவலில் விவரிக்கப்பட்ட விதம் அந்நகரங்களை நேரில் பார்த்த உணர்வைத் தோற்றுவிக்கின்றன…

இந்நாவலில் கதாநாயகன் கையாளும் விஞ்ஞான புதுமைகள் கைகூடும் நாட்களும் வெகு தூரத்தில் இல்லை…

ஆகஸ்ட் 1998 – மங்கையர் மலர் – புக் ஷெல்ப் பகுதி


அறிவியலோடு இணைந்த சுவாரஸ்யமான நவீன நாவல்...

புதுமையான விஷயங்கள் படிக்க விரும்புகிறவர்களுக்கு சுவாரஸ்யம்…

S.S. போத்தையா, என்னுடைய பள்ளி ஆசிரியரின் விமர்சானக் கடிதம், 16.06.1998

"கனவுக் கிராமம்" – ஒரு துப்பறியும் நாவலாக இருந்தாலும், ஆபாசம், வன்முறை இல்லாமல், பக்கத்திற்கு பக்கம் அறிவியல், வரலாறு, புவி இயல், இலக்கியம் பற்றிய விஷயங்களை ஏற்ற வகையில் கதை போக்குடன் இணைந்து சுவை குன்றாமல் விறுவிறுப்பு குறையாமல் எழுதியிருப்பது யாராலும் மறுக்க முடியாது…

கி.ராஜ நாராயணின் பாஷையில் சொல்வதென்றால், "நீ தமிழுக்கு கிடைத்த ஒரு வசமான கை !"...

பதிப்பகத்தாரின் பார்வையில் "கனவுக் கிராமம்"



ஓர் அடர்ந்த ஆலமரத்தை, போன்சாய் மாதிரி சிறு பூந்தொட்டியில் அடக்கும் வித்தை போல் பல்வேறு சம்பவங்கள் ஒருசேர ஒரு நாவலில் அடக்கும் திறமை கைவரப் பெற்றால், வெற்றி நிச்சயம்...

இந்த வகையில் இந்த நாவலாசிரியர் தன் கன்னி முயற்சியிலே இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம்...

'எந்த நாவல் படித்ததும் உங்களுக்கு பூரண திருப்தியளிக்கிறதோ, அதுவே சிறந்த நாவல்' என்றார் ஓர் அறிஞர். அந்த அறிஞரின் வாக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது இந்நாவல் எனில் அது மிகையில்லை...

- மதி நிலையம் (பதிப்பகத்தார்), தியாகராய நகர், சென்னை - 17

கனவுக் கிராமம் - ஒரு அறிமுகம்...

விஞ்ஞான தொலைத்தொடர்பு சாதனங்களால் உலகம் ஒரு கிராம அளவில் சுருங்கிவிட்ட இக்காலத்தில் உலக ஞானம் நமக்கு எத்தனை அவசியம் என்பது சொல்ல வேண்டியது இல்லை...வெளிநாடுகளுக்கு நேரில் சென்று அந்நாடுகளின் கலாச்சாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவற்றை அறிந்து வந்து எழுதுவது என்பது பொருளாதார ரீதியில் நமக்கு கட்டுபடியாகாத ஒன்று...அந்நாடுகளுக்கு போகாமல் நாம் எழுத முடியுமா? என்று என் மனதில் எழுந்த கேள்விக்கு விடைதான் "கனவுக் கிராமம்"...

இதற்காக உலகைச் சுற்றுவதர்க்குப் பதிலாக சில நூலகங்களை வலம் வந்தேன்...எதிர்பார்த்ததற்கும் மேலாகவே லண்டன் நகரைப் பற்றி ஒவ்வொரு சதுர மீட்டருக்கும், பிரிட்டனைப் பற்றி ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் தகவல்கள் கிடைத்தன...

பல கதைகளில் சொல்லப்பட்ட கற்பனைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உண்மைகளாகி உள்ளன...முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட பிரெஞ்சு தத்துவ ஞானி மாண்டஸ்க்கியூவின் கூற்று இன்று உண்மையாகி ஐரோப்பா கண்டமே ஒரே நாடாக மாறி அடுத்த நூற்றாண்டில் காலடி வைக்க இருக்கிறது...இதேபோல இந்நூலின் வாயிலாக நான் அப்போது வலியுறுத்திய பல கருத்துக்கள் இன்று உண்மையாகி வருகின்றது...

இலக்கிய ரீதியில் தம் ஆற்றலால் அறிவுத்திறத்தால் தமிழன்னைக்கு மாலைகளாகச் சூட்டி மகிழ்ந்த மாமேதைகள் கொலுவீற்றிருக்கும் இத்தரணியில் அறிமுகமே இல்லாத நான் ஒரு சிறு மலர் கொண்டு இந்நாவலின் வாயிலாக அன்னைக்கு அர்ச்சனை செய்திருக்கிறேன்...