Sunday, June 28, 2009

அலைகள் பலவிதம்

பொழுது புலர்ந்திருக்க, போர்டிகோவில் நின்றிருந்த ஹோண்டா சிட்டியில் அவசர அவசரமாய்த் தன் உடமைகளைத் திணித்துக் கொண்டிருந்தாள் அருணா.

அருணா ஒரு நவீனயுக யுவதி. சென்னையில் அவள் வங்கிக்கான ஐந்து நாள் பயிற்சி முடிந்து இன்று
மதுரை திரும்புகிறாள்.

“ரகு அண்ணா! 7.50க்கு ரயில். சீக்கிரமாத்தான் கிளம்பேன்.”

“வந்துட்டேன் அருணா.”

“இல்லே நீ வேணும்னா தூங்கு. நான் காரை ஸ்டேஷனில் விட்டு விட்டுப் போறேன். ஸ்பேர் சாவிய மறக்காம எடுத்துட்டுவா?”

“எல்லாவற்றிலும் உனக்கு அவசரம்தான். வண்டிக்கு மட்டும் ஸ்பேர் சாவி ஞாபகம் வருதா? அம்மா, அப்பா குறை தெரியாம உன்னை வளர்த்து விட்டேன். நாலு பேரைப் போல நீயும் இருக்கணும். என்னை அனுபவம் போதாதவன்னு பிறர் சொல்லும்படி வைத்து விடாதே அருணா.”

“ஆரம்பிச்சாச்சா? நான் மதுரை போன மாதரித்தான்.” அவள் பார்வை அவனை அடக்கியது.

“சரி சரி உன்னால என் வாயைத்தான் மூட முடியும் அருணா.”

“ஊர் வாய மூடனும்னா இப்பச் சொல்லு ரகு. உன் டேஸ்டுக்கு ஏற்றால் போல் அழகா அம்சமா ஒருத்திய…”

“நோ நோ அருணா! உன் வாழ்க்கை பிரச்சினை முதலில் முடியட்டும்.”

“நீ மூளையோடுதான் பேசறியா ரகு?” இல்ல குளிச்சிட்டு வரும்போது அதையும் வெளுத்துக் காயப்போட்டுட்டு வந்துட்டாயா? நீ பேசாம மதுரைக்கே வந்துரு. உன் டேஸ்டுக்கு தகுந்த மாதிரி சமைச்சாவது போடுறேன்.”

“நீ சென்னைக்கு மாறி வரணும். நாம ரெண்டு பேர் கல்யாணமும் ஒரே முகூர்த்தத்தில் நடக்கணும். அது தான் என்னோட ஆசை அருணா.”

“என் நிலைதான் உனக்குப் புரியலை. என் அவசரமுமா தெரியாது? சீக்கிரமா வண்டில ஏறிக்க.”

ரகு ஏறியதுதான் தாமதம். அருணா வண்டிய விருட்டெனக் கிளப்பினாள்.

எழும்பூர் ரயில் நிலைய வளாகம் உட்சபட்ச பரபரப்பில் திணறிக் கொண்டிருந்தது. வாகனங்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தின் எதிரே நின்று விட்ட பஸ்ஸிலிருந்து குதித்த நிஷாந்த், நிலையத்தை நோக்கி ஓட, எதிர்பட்ட ஆட்டோவில் இடித்தான். ஆட்டோ டிரைவரிடம் ‘சாவு கிராக்கி’ பட்டம் பெற்றுக் கொண்டு அடுத்த வழித் தடுப்பில் ஏறி நிலையத்தை பார்த்தபடி கார் பாதையில் இறங்க, வேகமாக வந்த ஹோண்டா சிட்டி, அவனை முத்தமிட்டு நின்றது. அவன் ஆட்டோ டிரைவரிடம் வாங்கியிருந்த பட்டத்தை கார் டிரைவருக்கு கொடுத்துவிட கோபத்தில் திரும்பினான். கண்ணாடி வழியே ஸ்டியரிங் வீலுக்குப் பின்னாலிருந்த அருணாவின் தோற்றம் அவன் கண்களைப் பரவசப் படுத்தியிருக்க வேண்டும்! மௌனித்தான்.

“சாரி” என்ற அவள் வார்த்தகளைத் தொடர்ந்து அவள் இதழ்கள் உதிர்த்த புன்னகை ஜீரோ டிகிரிக்கு அவனை குளிர்விக்க, நிஷாந்த் உரைந்து போனான்.

மணி 7.47. ‘பயணிகள் கவனத்திற்கு. 6127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஐந்தாவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்’ என்ற அறிவிப்பைக் கேட்ட நிஷாந்த், மின்னல் வேகத்தில் ஓடி மின்அணு எந்திரத்தில் முன் பதிவை உறுதிப் படுத்தி விட்டு, எஸ்கலேட்டரை நோக்கிப் பாய்ந்தான். ஐந்தாவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலில் S-6 பெட்டிக்கு அவன் தாவவும், ரயில் நகரவும் சரியாய் இருந்தது. இருக்கை எண் 48. அது பக்க இருக்கைகளில் ஒன்று. மேல் பெர்த்தில் சூட்கேசை வைத்தவன் கீழே குனிய ‘வாவ்’ அவன் மனம் கூவியே விட்டது! காரில் வந்து அவனை இடித்த அதே பெண்! அருணாவின் பார்வையை ரகுவிடமிருந்து பறித்துக் கொண்ட ரயில் வேகமெடுத்ததும், உள்ளே திரும்பியவள் பார்வை நிஷாந்த் மீது விழ, லேசாய்ப் புன்னகைத்தாள். காதல் பூக்கள் உதிர்வதாக உணர்ந்தான்! நளினமான சிவந்த தளிர் விரல்கள்! உடல் முழுதும் சுடிதார்ப் பூக்கள்!

“காயம் எதுவும் இல்லையே! ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரம். அதான் காரை கொஞ்சம் வேகமாய் ஓட்டி வந்தேன்.”

இந்த விரல்கள் ஒத்தடம் கொடுக்குமானால் அவனுக்கு காயம் பட்டிருந்தால் தேவலாம் போலிருந்தது. சுதாரித்துக் கொண்டவன் “எனக்கும் அதே பிரச்சினைதான். எல்லாம் அப்பவே மறந்து விட்டென், உங்கள் முகம் தவிர.”

“என் முகம் என்ன அவ்வளவு அசிங்கமா?” சிரித்தாள்

“சீ சீ என்னங்க நீங்க. 1000 வாட்ஸ் பளிச் உங்க முகத்தில்!”

“என் அண்ணன் காருக்கு ஏதும் ஆகியிருக்குமோ வென முறைத்தான். நீங்க வேறு கோபத்தில் திரும்பினீர்களா... உங்களுக்கு அடிபட்டிருக்குமோவென பயந்து போனேன்.”

ஆளை பார்க்கா விட்டாலும், உடன் வந்தது அண்ணன் என்பதில் அவனுக்கு அலாதி திருப்தி. அவள் மணமானவளோ? அறிந்து கொள்ள அவனுள் ஒரு துடிப்பு. அவள் கழுத்தைத் துப்பட்டா மறைத்திருந்தது.

“உள்ளே வரும்போது நான் ஒரு ஆட்டோவை இடித்து விட்டேன். அவன் என்னை அசிங்கமா திட்டிவிட்டான்.”

“ஓகோ அதை என் மீது திருப்பி விடத்தான் முறைத்தீர்களாக்கும்?” அதே டிரேட் மார்க் புன்னகை! “பிறகு ஏன் என்னைத் திட்டாமல் நிறுத்திக் கொண்டீர்கள்?”

“எல்லாம் உங்கள் புன்னகையின் மகிமை தான். முதலில் அதை காப்பீடு செய்து விடுங்கள்.”

“நல்லாவே பேசறீங்க” வார்த்தையை அவள் முடித்த போது TTR வந்து அவள் டிக்கெட்டை சரி பார்த்தவர், நிஷாந்திடம் திரும்பினார். அவனுள் ஒரு பளிச்! TTR அவன் பெயரை தேடிய போது, சார்ட்டில் அவன் கண்கள் மேய, இருக்கை எண் 47 Ms. அருணா 23 என்றிருந்தது. Miss என்று எதிர் பார்த்தவனுக்கு ஏமாற்றம்! அடுத்த ஏமாற்றம் அவளுக்கு 18 வயது இருக்கலாம் என்ற அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக அவள் இளமைக்குள் மேலும் 5 ஆண்டுகள் ஒளிந்திருந்தது!

சென்னைப் புறநகரின் காலை நேரத் துடிப்புகள் அருணாவின் கண்களில் படமாயின.

அவளிடமிருந்த தமிழ் நாளிதழை வாங்கிக் கொண்ட நிஷாந்த் பக்கங்களைப் புரட்டினான்.

காலமான கைம்பெண் சொத்துக்காக நடந்த வழக்கில் கணவன் வீட்டுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!’ என்ற செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.

திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவனை இழந்த பெண்ணை, அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கூறி கணவன் வீட்டார் விரட்டி விட்டனர். அவள் தந்தை அவளை மேலும் படிக்க வைத்து, ஒரு வேலையில் சேர்த்து விட்டார். வாரிசு இல்லாமல் மரணமடைந்த அவள் பணத்துக்கும், சொத்துக்கும் யார் வாரிசு என்பதில் அவள் தந்தைக்கும், கணவர் வீட்டாருக்கும் நடந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியிருந்தது. செய்தியைப் படித்து முடித்ததும்...

“மேடம் படித்தீர்களா இந்த செய்தியை. அருணா பதில் சொல்லும்முன் பாதையைத் தாண்டி அமர்ந்திருந்த பெரியவர் பதில் சொன்னார். “நானும் அந்த செய்தியைப் படித்தேன் தம்பி. ஒரு சிற்பியின் கண் கொண்டு, மனிதனின் யதார்த்த வாழ்வை ஒவ்வொறு கோணத்திலும் நுட்பமாக ஆராய்ந்து எழுத்துக்களாக நமக்குச் செதுக்கித் தந்தவர் லியோ டால்ஸ்டாய். அப்படி ஒரு யதார்த்தமான தீர்ப்பை நாம் கோர்ட் மூலம் எதிர்பார்க்க முடியாதுதான். நீதிமன்றத்தின் கண்களுக்கு சட்டம் மட்டுமே தெரியும். மனச்சாட்சி எப்படித் தெரியும் தம்பி?.

“எப்படி சொல்றீங்க?” ஒரு பெண்ணுக்கு மணமான பின் புகுந்த வீடுதானே எல்லாம்.

“நீங்க சொல்றது வாஸ்தவம் தான் தம்பி. ஆனா அதிர்ஷ்டம் இல்லை என்று விரட்டி விடப்பட்டவள் சொத்துக்கு, புகுந்தவீடு எப்படி உரிமை கோரலாம்?”

“சார்! நீங்க சொல்வதுதான் சரி. பெண்களின் வாழ்க்கை ஒரு ஓடம் போன்றது. அதன் பயணத்துக்கு அன்பு என்ற துடுப்பு அவசியம் தேவை. இவங்க பிறந்த வீட்டின் அன்பில் பயணம் செய்தவர்கள். அதன் பலனை பெற்றவர்கள் அனுபவிப்பதுதான் நியாயம். ஆனால் படகையே கவிழ்த்து விட்ட புகுந்த வீட்டார், பலனைத் தட்டிப் பறித்திருக்கின்றனர். அதற்கு நீதிமன்றமும் துணை போயிருக்கிறது. இது அநியாயம் சார்.” என்றாள் அருணா.

“உண்மைதான்!” அனைவரும் அருணாவை அமோதித்தனர்.

“இப்படி பேசுகிறாள்! ஒரு வேளை இவளும் மணமானவளோ?” துப்பட்டா விலகி யிருந்த இடைவெளியில் அவள் கழுத்தைப் பார்த்தான். ஒரே ஒரு செயின் மட்டும் மின்னியது. சே!..சே!

விழுப்புரம் இரயில் நிலையம். டீ காபி.... டீ காபி...

“இரண்டு காபி” என்றாள்.

அவன் பணம் கொடுக்க பர்ஸை எடுத்தான்.

“இல்ல...நான் தானே வாங்கினேன். நீங்க காபி நல்லா இருக்கா பாருங்க.”

“நீங்க வாங்கிக் கொடுத்தால் ருசிக்கு கேட்கவா வேண்டும்?”

அப்போது ஊட்டிய இட்லியை அம்மாவிடம் வாங்கிக் கொண்ட சிறுமி பிரீத்தி இருக்கைகளுக்கு இடையில் பின்னாலேயே நடந்து வந்து அருணாவை நெருங்கி விட்டாள். புறப்படும் போது ரயில் குலுங்க, சிறுமி லேசாகத் தடுமாற...

“பிரீத்தி ஒழுங்கா பார்த்து நட. கீழே விழுந்தா அம்மாவிடம் சொல்லாதே.”

“சரி அப்பாவிடம் சொல்லிக்கறேன்” என்று பிரீத்தி சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டனர். விழ இருந்த சிறுமியை அருணா பிடித்துக் கொண்டாள்.

“உனக்கு அப்பான்னா ரொம்ப இஷ்டமா?”

“ஆமா என்றவள் எனக்கு அம்மாவையும் பிடிக்குமே.” என்றபடி அருணாவையும் நிஷந்தையும் மாறி மாறிப் பார்த்தவள் “உங்க பாப்பா வரலையா” என்றதும் அவர்கள் இருவருமே சிரித்து விட்டனர்.

“யேய் வாயாடி இங்க வா. அவங்க அம்மா அப்பா இல்லை.” என்று அம்மா சொன்னதும் அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே சென்றாள் சிறுமி.

நிஷாந்த் பேப்பரை மறுபடி புரட்டினான். மணமகன் தேவை பகுதியில் ஒரு செய்தி பேனாவால் கட்டமிடப்பட்டிருந்தது.

வங்கிப் பணி 23/152 செ.மீ. பி.காம் சிவந்த நிறம். பொருத்தமான மணமகன் தேவை.
அந்தச் செய்தியை அவன் மனம் அசை போட்டது. எதேச்சையாய் அவள் பார்வை நிஷாந்த் மீது விழ, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களைப் பிடித்துக் கொண்டதும்,

“உங்களுக்கு பேங்கில் தானே வேலை.”

“ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்? எங்க பிராஞ்சுக்கு வந்திருக்கீங்களா?” என்று அவள் கேட்க, சிரித்துக் கொண்டான்.

“முதல்ல உங்க சிரிப்பைத்தான் இன்ஷுர் செய்ய வேண்டும்.” என்றதும் அண்டார்டிகாவின் ஐஸ் முழுக்க அவன் தலைக்கு மேல் வந்தது போல் உணர்ந்தான்.

“இன்று காலை நம் கண்கள் ஒரு சவாலை ஏற்றுக் கொண்டுதான் சந்தித்திருக்க வேண்டும். நம் சந்திப்பிற்கு நிச்சயம் ஒரு அர்த்தமிருக்க வேண்டும். நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” நிஷாந்த் கேள்வியில் ஆர்வம் தொற்றிக்கொள்ள...

“நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.”

பகல் மணி 1.00 திருச்சியில் சாப்பாடு முடிந்ததும் அசதியில் நிஷாந்த் மேல் பெர்த்துக்குத் தாவிப் படுத்துக் கொண்டான்.

ரயில் அந்த வளைவில் திரும்புகிறதா அல்லது உலகம் சுழல்கிறதா? அவன் மெய்மறந்தான்! அவன் கனவில் தேவதையாக வலம் வந்தாள் அருணா! அவளிடம் அவன் மனம் திறந்தான் நிஷாந்த்! அவள் பதிலுக்காக அவன் ஏங்கித் தவிக்க...

“மிஸ்டர் நிஷாந்த்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவன், மிரள மிரள விழித்தான்! அவன் பெயரை யார் கூப்பிட்டது?

“என்ன அப்படிப் பாக்கறீங்க! தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? மதுரை வரப் போகுது” என்றவுடன் கீழே குதித்தான்.

வெளியே அவன் பார்வை தாவியது. ரயில் சோழவந்தான் நிலையத்தில் சிக்னலுக்கு நின்றிருந்தது. அவன் பார்வை மீண்டு அவளிடம் சென்றது.

“நிஷாந்துனு கூப்பிட்டது நீங்களா?”

“ஆமா ஏன்? உங்களால் என் உத்தியோகத்தைத் தெரிஞ்சுக்க முடியும் போது, உங்க பேரை என்னால் யூகிக்க முடியாதா?”

பெயரை யூகிக்க ... இல்லை என்னைத் தெரிந்தவங்களாத்தான் இருக்கணும்...அவன் மூளையின் நினைவாற்றல் தொகுப்பிலிருந்து அவனுக்குத் தெரிந்தவர்கள் பட்டியல் அணிவகுத்தன! ஞாபகப்படுத்திப் பார்த்தான். ம்..கூம். ரயில் கிளம்பியது.

அருணா அந்த தினசரியை பெரியவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு “நன்றி” என்றாள்.

“அது உங்க பேப்பர் இல்லையா?”

“இல்ல ஏன்?”

அசடு வழிந்தான்.

“உங்க பேர் எனக்கு எப்படித் தெரியும் என்று குழம்பியிருக்கிறீர்கள். சரிதானே?”

அவன் பார்வை ஆமா என்றது.

“என் அண்ணன் ரகுதான் சொன்னான். அவன் உங்க கிளாஸ்மேட்டாம்?”

“ஓ நீங்க ரகுவோட சிஸ்டரா? அப்ப நாம நெருங்கி வந்துவிட்டோம்!”

“என்னது”

“ரகு உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கான். நாம தான் சந்திச்சதில்லையே!”

“இன்று காலையில் நானும் அண்ணனும் தான் காரில் வந்தோம். உங்களைக் கூப்பிட்டார். நீங்க ஸ்டேஷன் ஒலிபெருக்கி அறிவிப்பைக் கேட்டதும், நிற்காமல் ஓடி விட்டீர்கள்.”

“ஆமா எனக்கு மதுரையில் அவசரமான வேலை. டிக்கட் வேறு கன்பர்ம் ஆகலயா. அதான். இப்ப ரகு என்ன செய்கிறான்? பார்த்து நாளாச்சு.”

“ஒரு தனியார் கம்பெனில எக்ஸிகியூட்டிவா இருக்கான். ரகு விஷயமா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும். நான் உங்களுக்கு காபி வாங்கிக் கொடுத்ததிலும் கொஞ்சம் சுயநலம் உண்டு.”

“இந்த பயணத்தில் உங்களை நான் முழுசா நம்பிவிட்டேன். நீங்கதான் என்னை நம்பவில்லை போல் தெரிகிறது. நான் என்ன செய்யனும் சொல்லுங்க..”

“ரகு கல்யாணம் பண்ணிக்காம அடம் பண்றான். என் சூழ்நிலையைப் புரிஞ்சுக்காம பிடிவாதமா இருக்கான். அவனைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்கணும்” அவள் ரகுவின் விசிட்டிங் கார்டை நீட்டினாள். ரயில் நின்றது.

மதுரை சந்திப்பு. ரயில் நிலைய கடிகாரம் மணி மாலை 4.25 என்றது.

“என்னிடம் ஒரு சூட் கேஸ் கொடுங்க”.

“தேங்க்ஸ் நிஷாந்த். நான் கேட்டுக் கொண்ட விஷயத்தில் எனக்கு உதவுங்கள். உங்கள் உதவியை என்றும் நான் மறக்க மாட்டேன். லக்கேஜ நான் மேனேஜ் பண்ணிகறேன்”. அவள் சூட்கேசை கையிலும் பையை தோளிலும் மாட்டிக் கொண்டு இறங்க ஆயாத்தமானாள்.

“கண்டிப்பாய் செய்யறேன் அருணா!” பிளாட்பாரத்தில் நடந்தவள் நின்றாள்.

“உங்க பேர்தானே? நான் ரிசர்வேசன் சார்ட்டில் பார்த்தேன்.” சிரித்தவன், ஆமா ரகு ஏன் இந்த விஷயத்துல பிடிவாதம் பண்றான்?”

“நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.”

உயரழுத்த மின்சாரம் அவன் இதயத்தைத் தாக்கியது போலானான் நிஷாந்த். அவன் கால்களுக்கு கீழே பூமி நழுவுவது போலிருந்தது.

“அதோ வர்றாங்களே... அவங்கதான் என் ஓராண்டுகால மணவாழ்க்கையில் மலந்த புது உறவுகள். அவங்க என் மாமியார். உடன் வருவது என் கணவரின் தங்கை. அவள் கையிலிருப்பது அப்பா முகத்தையே பார்த்தறியாத என் ஆறுமாதக் குழந்தை. மனோஜ். இவர்களுக்கு இன்று நான் தான் ஆதரவு. எனக்கு கிடைத்திருக்கும் வேலை மும்பைக் கலவரத்தில் உயிரிழந்த என் கணவருக்குப் பதிலாக எனக்குக் கிடைத்தது.”

மும்பைக் கலவரத்திலா?

“ஆமாம் நிஷாந்த். மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 26-11-08 அன்று தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பலியான 50 பேரில் என் கணவரும் ஒருவர். வங்கியின் தலைமை அலுவலத்திற்கு வேலை விஷயமாக சென்றிருந் தார். அன்று ஊர் திரும்ப இருந்தார். எமன் உருவில் வந்த தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் என் வாழ்வைப் பறித்து விட்டனர்!”

நிஷாந்த் சிலையாகி விட்டிருந்தான். இவள் வாழ்வு மொட்டிலேயே கருகக் காரணம் தீவிரவாதமா? இதற்கு முடிவுதான் எப்போது? அவன் உள்ளம் கனத்தது.

“நீங்க சொல்லுங்க நிஷாந்த். இவங்கள நான் உதறி விட்டு வந்துடனுமாம். ரகு சொல்றான். என் கணவர் படிப்புக்காக அத்தனையும் இழந்து விட்டு இவங்க நிர்கதியாயிருக்காங்க. என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அவள் கண்களில் நீர்
கசிந்தது.

நிஷாந்த் இன்னும் அவனுள் ஊடுருவிய அதிர்ச்சி அலைகளில் இருந்து மீளவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அருணா. அவன் மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

“கவிதா! மனோ அழாமல் இருந்தானா” அவள் பார்வை தன் மகன் மீது தாவியது.

“அண்ணி! மனோ சமத்தா இருந்தான்” குழந்தை அருணாவிடம் தாவியது.

“என் செல்லம்...” அருணா முத்த மழை பொழிந்தாள்.

“அத்தை! இவங்க ரகு அண்ணன் நண்பர். இன்று தற்செயலா ரயிலில் சந்திச்சேன். ரகு அண்ணனுக்கு நல்ல புத்திமதி சொல்லிக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பதாக உறுதி சொல்லியிருக்காங்க.”

“என்னமோ அருணா! நல்லது நடந்தா சரிதான். உன் எதிர் காலத்தை உத்தேசித்து உன் அண்ணன் சொல்வதிலும் தவறு இல்லை.”

“அத்தை நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிறீங்களா? நிஷாந்த் நாங்க கிளம்பறோம். ரகு விஷயம் மறக்க மாட்டிங்களே?”

“நிச்சயமா. இன்றே அவனிடம் தொலைபேசியில் பேசறேன்.” கூடவே நடந்து நிலையத்துக்கு வெளியே மேற்கு வெளிவீதிக்கு வந்தான். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறியதும் நன்றியுடன் கையசைத்தனர்.

ஆட்டோ டவுன் ஹால் ரோட்டில் மறையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். அருணா ஒரு அல்ட்ரா மாடர்ன்தான். ஆனால் கடமையையும் கண்ணாகக் கருதுகிறாள். சொத்து சுகம் மட்டுமே உலகமில்லை. நாம் வாழ்கிற வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவளை நினைத்துப் பெருமைப்பட்டான்.

கடலில் எத்தனையோ அலைகள் தோன்றினாலும் அத்தனையுமா கரை சேர்கின்றன? அவன் மனதில் எழும்பிய அலைகளும் இப்போது ஓய்ந்து அமைதியடைந்தன.

-முற்றும்-


(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)


Sunday, June 7, 2009

தமிழ் ஈழம் - கனவுகள் சிதைவதில்லை


யாத குண்டு மழை எழுப்பிய கரும்புகை ஈழத்தின் வானத்தை கருமையாக்கி விட்டிருக்கிறது. தீரமுடன் குண்டுகளை எதிர்த்து நின்று சாவை முத்தமிட்ட ஆயிரக்கணக்கான போராளிகளையும், தங்கள் தானைத் தலைவர்களைக் காக்க தங்கள் இன்னுயிர் தந்து அவர்களுடன் மடிந்த லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களையும் சேர்த்து விழுங்கிய ஈழத்து மண், செங்குருதியில் நனைந்து சிவப்பாகச் சிவந்து கிடக்கிறது.


தமிழ் ஈழம் என்ற கொள்கைக்காக தங்கள் இன்னுயிர் தந்த அத்தனை வீரத் தமிழர்களுக்கும் இத்தருணத்தில் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கை ஆக்குவோம். சிங்கள வெறியர்களின் குண்டு மழையில் கருகிய அந்த தியாக மொட்டுகள் அவர்கள் தாகம் தமிழ் ஈழம் மலர தியாகமாக விளங்கட்டும்!


ஒரு தேசீய இனத்தின் விடுதலைத் தாகம் அதை அடையும் வரை அடங்காது என்பார்கள். இதைச் சாதித்துக் காட்டிய நாடுகளின் வரிசையில், ஆணானப் பட்ட கிரேட்பிரிட்டனிலிருந்தே பிரிந்து சென்ற ஐயர்லாந்து, சைப்ரஸ் தீவில் வடக்கு சைப்ரஸ் (Turkish Republic of Northern Cypress), கொசோவா, தெற்கு ஒசேத்தியா, கிழக்கு திமோர், அப்காசியா, இஸ்ரேல், அந்த சுண்டைக்காய் நாட்டிற்குள் ஒரு பாலஸ்தீனம் என எத்தனையோ சின்னஞ்சிறு நாடுகளைப் பட்டியலிடலாம்.


இந்த பட்டியலில் தமிழ் ஈழமும் சேர முடியாமல் போனது ஒரு சோகமுடிவு மட்டுமல்ல, தங்கள் உரிமைக்காக 50 ஆண்டுகளாக போராடியும் இன்னும் அவர்களுக்கு ஒரு பதில் கிடைக்காமல் போர்முடிவுக்கு வந்திருப்பது, உலகின் பத்துக் கோடி தமிழர்களுக்கும் நேர்ந்த பெருத்த அவமானம் தமிழர்களுக்கென்று ஐ.நா மன்றத்தில் குரல் கொடுக்க பிரதிநிதித்து்வம் இல்லாமையின் அவலம்.


யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்! அது போல தமிழ் ஈழம் மலர்ந்தால் முதலில் அங்கீகரிக்க வேண்டிய பிராந்திய வல்லரசும், தமிழ் இனத்துக்கு தாயகமுமான இந்தியா அங்கீகரிக்காமல் மற்ற நாடுகள் அதை வழிமொழியாது என்ற உண்மையை மறந்து ஈழத் தமிழர்கள் இந்தியாவைப் பகைத்துக் கொண்டது இமாலயத் தவறு. வடக்கு சைப்ரஸை தாயாதி நாடான துருக்கி மட்டும்தான் அங்கிகரித்துள்ளது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. தொலைவில் உள்ள எத்தனை நாடுகளின் உதவி கிடைத்தாலும், கூப்பிடு தூரத்திலுள்ள இந்தியாவின் ஆதரவில்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்த அதிபர் ராஜபக்சே, ‘புலிகளுக்கு தடை’ என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, இந்தியா உதவியுடன் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலிருந்தும் போராளிகளுக்கு கடல் மார்க்கமாக எந்த உதவியும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்.


அதிபர் ஜயவர்த்தனே காலத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி அரசுமுறை பயணமாகக் கொழும்பு விமான நிலையம் வந்து இறங்கினார். அங்கு அவருக்கு இலங்கை அரசின் ராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அணிவகுப்பை பார்வையிட்டு வந்த போது சிங்கள ராணுவ வீரன் ஒருவன் ராஜீவைத் தன் துப்பாக்கியால் தாக்கினான். இந்த ஒரு காரணத்தை வைத்தே ராஜதந்திரத்தை பயன்படுத்தியிருந்தால், சிங்களர்களை நிரந்தரமாக இந்தியாவிடமிருந்து விலகச்செய்து, போராளிகள் இந்தியாவிடமிருந்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். ‘தமிழ் ஈழம்’ இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பிரதேசம் என்பதை நிலைநாட்டியிருந்தால் தமிழ் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். ஆனால் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டது மட்டுமல்லாமல் அவரையும் பகைத்துக் கொண்டது, தமிழ் ஈழம் கரையேற முடியாமல் போனதற்கு மூல காரணமாகும்.


விளைவு? பின்னாளில் மெக்சிகோ, கோஸ்டோரிக்கா போன்ற சம்மந்தம் இல்லாத நாடுகள் சேர்ந்து ‘இலங்கை விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு போரை நிறுத்தி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும்’ என்று ஐ.நா மன்றத்தில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்த போது, தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் இந்தியா அதை ஆதரிக்கவில்லை.


இலங்கை இராணுவ புலனாய்வுத்துறை, புலிகள் இயக்கத்துக்குள் பிளவு ஏற்பட காய்களை நகர்த்திய போது, அதை உணராமல் இயக்கம் பிளவுபட அனுமதித்தது பெருந்தவறு. இது கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் அரசிடம் இழந்து, ஈழப்போர் தீராத வேதனையில் முடிய முக்கிய காரணமாயிற்று.


போராட்டக் குழுக்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தாங்களே கோடாரிக் கம்புகளாக மாறி நம் இனத்தையெ அழித்ததோடு, முஸ்லிம்களையும் பகைத்துக் கொண்டது தேவையற்ற சம்பவங்கள்.


இனி ஈழத் தமிழர்கள் தங்கள் தவறுகளைத் திருத்தி, இந்தத் தோல்வியை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டுவார்களாக! ஒரு புதிய பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வீறுகொண்டு உயிர்த்தெழுந்து, சிதைந்து போன தங்கள் லட்சியக் கனவை நனவாக்கிக் காட்டு வார்களாக! நாம் பத்துக்கோடித் தமிழர்கள் என்பதை இவ்வுலகிற்கு நிரூபிப்போம்!

Sunday, May 17, 2009

தமிழ் ஈழம் என்ற மான்குட்டியும் சீனா என்ற மலைப்பாம்பும்

லங்கிய அரசியல் குட்டையில் எப்படி மீன் பிடிப்பது என ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்தியத் திரு நாட்டில் நிகழ்ந்து வந்த போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்து, அரசியல் களம் தெளிவடைந்து விட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் களம், இலங்கைப் பிரச்சினையும் சேர்ந்துக் கொண்டு பல அரசியல் கட்சிகளையும் பல வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கச் செய்திருந்தது. இலங்கைத் தமிழர்கள், அங்கு தங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஒரு அமைதியான சூழல் மலர, இன்றுள்ள அரசியல் சூழ் நிலைக்குத் தகுந்தாற்போல் தங்கள் எதிர்கால உத்திகளை திட்டங்களையும் வகுத்து வெற்றிக்கு வழி செய்து கொள்வார்களாக!

காயம்பட்ட கைக்குழந்தையின் கதறல் குரல் போல் மரண ஓலம் ஈழத்தின் திக்கெட்டும் எதிரொலிக்கின்றது! ராஜீவ் மரண தினம் மே 21க்கு முன்பாக, இந்தியாவில் அடுத்த அரசு பதவி ஏற்பதற்கு முன்பாக, யுத்தம் முடிந்து விட்டது என்று சொல்லியே, எவ்வளவு தமிழர்களை கொன்று குவிக்க முடியுமோ அவ்வளவு பேரை கொன்று குவித்திட இலக்கு நிர்ணயித்து செயல் படுவது போல் செயலாற்றுகிறது சிங்கள அரசு.

தேர்தல் கால வாக்குறுதியாக, எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பாதாக இல்லாமல், இந்திய ராணுவத்தை அனுப்பியாவது ‘தனித் தமிழ் ஈழம்’ மலரச் செய்வோம் என்று ராஜிவ் காந்தி கொலை வழக்கு என்ற அஸ்திரத்தால் கட்டுண்டு கிடக்கும் தமிழகத் தலைவர்கள் பேசக்கூடிய உட்சபட்ச எல்லையின் வரம்பு இதுதான். அத்தகைய வக்குறுதிகளைப் பற்றிக் கவனத்திற் கொள்ள இப்போது ஏதும் இல்லை என்றாலும், பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சென்னையில் 09-05-09'ல் அளித்த பேட்டியில், ஐக்கிய இலங்கையில் ராஜிவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும், அவர்கள் வாழ்வுரிமைகளை மீட்டுத்தரவும் பாடுபடுவோம் என்று அவர் சொன்னதும், யாரிடம் அதிகாரத்தை பகிந்து கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு அது பற்றி ஈழத் தமிழர்களிடம் பேச்சு நடத்துவோம் என்ற அவர் பதிலும் கவனத்திற்கு உரியவை. இந்திய ராணுவத்தை அடுத்த நாட்டிற்கு அனுப்புவது என்பதும் சாத்தியமான ஒன்று அல்ல என்பதும் இந்தியாவின் அடுத்த பிரதமரின் நிலைப்பாடு.

‘தனி ஈழம்’ என்ற ஆர்வலர்களுக்கு இந்தியாவின் இந்த நிலைப்பாடு ஒரு பக்கமிருக்க, இலங்கை அரசின் நிலைப்பாட்டை மாற்றொரு கோணத்தில் இருந்தும் ஆராய வேண்டிய கட்டாயத்தற்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் பாதுகாவலனாக தற்போது பொறுப்பேற்றிருக்கும் நாடான சீனா பற்றிய செய்திகள்தான் அவை. சில ஆண்டுகளுக்கு முன், பீகிங் நகர் தியாமன் சதுக்கத்தில் திரண்டு, ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த தன் நாட்டு மக்களையே இரணுவத்தை ஏவி கொன்று குவித்த நாடு சீனா. இதுதான் சீனா என்ற நாட்டின் உண்மையான எதேச்சாதிகார முகத்தோற்றம்.

திபெத், சூடான், மியான்மர் (பர்மா) போன்ற, சீனா காலடி வைத்த நாடுகளில் எல்லாம் அந்த மலைப்பாம்பின் கோர நாக்குகளால், கொடூரம் நாளுக்கு நாள் தலைவிரித்து ஆடுகிறதே தவிர, அங்கெல்லாம் பிரச்சினைகள் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. ஆமை புகுந்த வீடு் உருப்படாது என்பார்கள். சீனா காலடிவைத்த நாடும் அப்படித்தான்.

உலகின் உயர்ந்த பீடபூமி திபெத்தில், சுயசார்பாய் யாருக்கும் எந்த ஒரு தீங்கும் நினையாதவர்களாய் தலாய்லாமா, பஞ்சன்லாமா, என மடாதிபதி களும், சாதுக்களுமாய் பரிபாலனம் செய்து வந்த நாட்டை, தன் படை பலத்தால் கைப்பற்றி, திபெத்தியர்களுக்குச் சிறிதும் பரிச்சயமில்லாத கம்யூனிசத்தை அங்கு புகுத்தி, அவர்கள் விளைநிலங்களை அபகரித்து, திபத்தியர்களை உலகெங்கும் சிதறி ஓடச் செய்த பெருமை சீனாவையே சாரும்.

மனித உரிமைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி, தெற்கு சூடனில் உள்ள ஆப்ரிக நீக்ரோ இனத்தவர்களை அழிக்க, அரபு முஸ்லிம்கள் நிறைந்த வடக்கு சூடானுக்கு கொலை வெறி ஆயுதங்களை இன்று வரை கொடுத்து வரும் நாடு சீனா!

சீனா உதவியுடன் மியான்மரின் இராணுவ ஆட்சி செய்துவரும் அட்டுழியங்கள், வார்த்தைகளால் எழுதக் கூடியது ஒன்று அல்ல. மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவி ஆங் சூயியை வீட்டு சிறையில் அடைத்துவிட்டு, உடம்பு சுகவீனமுற்று இருக்கும் அவருக்கு மருத்துவ உதவி கூட அளிக்க மறுத்து, இராணுவ பலத்தின் மூலம் அவரை வதைத்து வரும் நாடு மியான்மர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தன் சீடன் வடகொரியாவுக்கு உதவி செய்வதன் மூலம் கொரிய தீபகற்பத்திற்கு மட்டுமல்லாமல்
உலகுக்கே அச்சுறுத்தலாகத் திகழும் நாடு சீனா.

இதெல்லாம் எதற்கு? ஆசியாவில் தான் ஒரு வல்லரசாககக் கருதப்படவேண்டும் என்ற தனது மேலாதிக்கத்தை உலக நாடுகளிடம் தம்பட்டம் அடித்து அதை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

ஆனால் சிங்கப்பூர் தலைவர் லீ குவான் ஒரு முறை கருத்துக் கூறும் போது 'ஆசிய நாடுகள்’ என்ற விமானத்தின் இறக்கைகள் இந்தியாவும், சீனாவும் என்றார். அதன் பொருள் சீனாவுக்கு ஈடாக ஆசிய மண்டலத்தில் இந்தி்யாவால் தான் ஈடு கொடுக்க முடியும் என்பது. சீனாவுக்கு இது பொறுக்குமா? இந்தியாவையும் தன் பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ‘முத்துமாலை’ திட்டம் என்று ஒன்றை மத்திய கிழக்கில் இருந்து ஆரம்பித்து தென் சீனக் கடல் வரை எல்லா நாடுகளுடனும் நட்பு கொண்டு, உதவி
செய்து அதன் மூலம் அங்கெல்லாம் தன் ராணுவ தளத்தை, கடற்படை தளத்தை அமைப்பதுதான் அதன் நோக்கம். இந்த திட்டம் மூலம் இந்தியாவை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தி அதன் கழுத்தை இறுகச் செய்ய வேண்டும் என்பது சீனாவின் நீண்டகாலத் திட்டம்.

இதுதான் இன்றைய சீனா என்ற நட்பு நாட்டின் நேசமனப்பான்மை. நாம் இவர்களிடம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியுமா?

இந்த மேலாதிக்க மனப்பான்மையுள்ள சீனாவின் நட்பு வலையில் கடைசியாக விழுந்திருக்கும் நாடுதான் இலங்கை! தற்சமையம் சீனா இலங்கைக்கு தமிழ் இன ஒழிப்புக்குத் தேவையான பொருளாதார, ஆயுத உதவியுடன், ஐக்கிய நாடுகள் சபையிலும் ராஜரீக உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது. இதற்கு கைமாறாக ஹம்பன்தொடா (Hambantota) என்ற துறைமுகத்தை சீனாவிற்கு இலங்கை அரசு தாரை வார்த்திருக்கிறது. இத்துறைமுகத்தை கோடிக் கணக்கான டாலர்கள் செலவு செய்து சீனா நவீனப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இத்துறைமுகம் இந்துமாகடலில் வலம் வரும் சீனக் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மையம் என்ற பெயரில் ஆதன் கடற்படை தளமாகத் திகழப்போகிறது! பிறகு ஏன் சீனா தமிழர்களைப் பற்றிக் கவலைப் படப் போகிறது்? தமிழர்கள் விவகாரத்தில் மேலை நாடுகளின் வேண்டுகோள்களை இலங்கை அரசு உதாசீனப் படுத்துவதற்கு காரணம் சீனாவுடன் மலர்ந்திருக்கும் இந்தப் புது உறவுதான்.

ஆக சீனா என்ற நச்சரவம் (Dragon) கடைசியாக இலங்கையிலும் தன் கொடிய நாக்கை நீட்டி தமிழ் ஈழம் என்ற மான் குட்டியை விழுங்கத் தொடங்கி விட்டது. இனி திபெத், சூடான், மியான்மர் (பர்மா) போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட கதிதான் இலங்கைக்கும் ஏற்படப் போகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்று அல்ல. ஆனால் அந்த விஷப்பாம்பிடமிருந்து விடுபட்டு தமிழ் ஈழம் தன்னை எப்படிக் காத்துக் கொள்ளப்போகிறது என்பதுதான் முக்கியம்!

தமிழ் ஈழம்! பயணம் நெடியது மட்டும் அல்ல கொடியதும் கூட என்று இப்போது சூழ்நிலை மாறி வருகிறது. மாறிவிட்ட இன்றைய அரசியல் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் ஈழத் தமிழர்கள் தங்கள் வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இந்தப் பனிப்போரை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவின் நற்பைப் பெற முயலவேண்டும்.

இது மட்டும் சாத்தியமானால் ஐக்கிய இலங்கை என்ற பேச்சை முடிவுக்கு கொண்டு வருவது வெகு சுலபம். இலங்கைத் தீவைப் பிரித்து அதன் மத்தியில் ஒரு சர்வதேசக் கோடு விழந்து விட்டால், ஈழத் தமிழர்கள் இப்போதைக்கு தங்களைக் காத்துக் கொள்ள இதுபோதும்! நாளை நடக்கப் போவது யாருக்குத் தெரியும்?

இந்திய வைஸ்ராய் கர்சான் பிரபு பிரித்தாலும் சூழ்ச்சிக்கு வித்தாக அப்போதைய வங்காளம் என்ற மாகாணத்தில் இந்து, முஸ்லிம்களைப் பிரிக்க 1905ல் வங்களத்தின் மையத்தில் ஒரு கோடு போட்டார். அது மேற்கு வங்காளம், கிழக்கு வங்களம் என்று ஆகி, 1911ல் மீண்டும் ஒன்றாகி, பிறகு பிரிந்து, பிரிவினைக்குப்பின் கிழக்குப் பாகிஸ்தானாக மாறி, இன்று இந்திராகாந்தி புண்ணியத்தில் வங்காள தேசம் என்ற சுதந்திர நாடாகத் திகழ்கிறது. அதுபோல் அடுத்து வீசப்போகிற அரசியல் காற்றில் தமிழ் ஈழம் தனிநாடாக மலரலாம். அல்லது தமிழ்நாடுடன் சேர்ந்து ஒரெ நாடாகவும் மலரலாம். யாருக்குத் தெரியும்? நாம் நகார்த்தும் காய் மட்டும் சரியான திசையில் இருக்கவேண்டும்.

இதைத்தான் ஏற்கனவே ‘தமிழ் ஈழமும் மதுரை மீட்ட சுந்தர பாண்டியனும்’ என்ற எனது கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன்.

இப்போது ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டியது, கர்சான் பிரபு வங்காளத்தில் போட்டது போல் இலங்கை தீவின் மையத்தில் ஒரு சர்வதேசக் கோடு வர வழி வகுக்க வேண்டும்.! இதற்காக இந்தியாவின் உடனடி ஆதரவைப் பெற ஈழத் தமிழகள் இந்தியாவின் 29வது மாகாணமாக மாறலாம். இது இந்தியாவை மனதில் வைத்து செய்ய வேண்டிய அவசியல்லை. தமிழர் தந்தை செல்வா அவர்கள் சொன்னது போல் உங்களுக்கு 20 கடல் மைல் கூப்பிடு தொலைவில் இந்தியத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதற்காகச் செய்யுங்கள்.

இனம் இனத்தோடு தான் சேரவேண்டும் என்று மலேசியாவின் சராவாக், சுபா மாகண மக்கள் போர்னியோத் தீவைப் பிரிக்க முடிவு எடுத்தததைப் போல் நீங்களும் இந்தியவின் 29வது மாகாணம் தமிழ் ஈழம் என்று முடிவு எடுங்கள். முதலில் தாமிழர்கள் நாம் ஒன்று சேருவோம். பிறகு வானம் நம் வசப்படும்!

இதுவரை பட்டது போதும். இனியாகிலும் துன்பம் வரும் முன் காப்போம் என்று துணிந்து செயல்பட்டால் தான் ஈழத் தமிழர்கள் சீனாவிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் காலங் காலத்திற்கும் இனிமேலும் இரத்த சகதியில் புரள வேண்டியதுதான்.

ஈழத் தமிழர்களிடையே இந்தியவின் 29வது மாகாணமாக திகழ கோரிக்கை வலுக்கும்போது, இம்முடிவை இந்தியா எதிர்க்க எந்த நியாயமுமில்லை. இப்போதைய சூழ்நிலையில் சீனாவின் அரசியல் தந்திரத்தை முறியடிக்க இது இந்தியாவிற்கு மிகபெரிய வரப்பிராசாதமாக அமையும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளும் ஐ.நா மூலம் இலங்கையில் வாக்கெடுப்புக்கு துணை செய்யும் சூழல் உருவானால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம்!

ஈழத் தமிழர்கள் படுகொலையில் இந்தியாவிற்கும் பங்கில்லையா? அப்படியிருக்கும் போது அந்த நாட்டோடு எப்படி சேர்வது என்ற கேள்வி அனைத்து தமிழர்கள் மனதையும் உறுத்தும் ஒரு அம்சம்தான். இப்போதைக்கு இதை நினைவு கூறத் தேவையில்லை. உலக வரைபடத்தில் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்! அதற்காக நாம் எந்த தியாகத்திற்கும் தயாராவோம். நடந்ததை மறப்போம். நடப்பதை நினைப்போம்.

இப்போதைக்கு இந்திய அச்சுறுத்தலை விட சீனாவின் அச்சுறுத்தல் மிகப் பயங்கரமானாது. எலிக்குப் பயந்து ஓடி சிங்கத்திடம் அகப்பட்ட கதை போல் ஆகிவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இன்று இருப்பவர்கள் என்றும் இருப்பார்கள் என்று நினைக்கத்தேவை இல்லை.
தமிழர்களுக்கு ஆதரவானவர்களும் ஒருநாள் புது டில்லியில் அமரலாம். அதுவரை காத்திருப்போம்.