Sunday, August 31, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - III

பாரிஸ் - லக்ஸம்பெர்க் பூங்கா

ஏஞ்சலின் : நான் மட்டும் உண்மையை சொல்லியிருந்தால் என்னையும் பலியிட்டு நீங்களும் அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு பலியாகியிருப்பீர்கள்.

அருண் : மூளையிருப்பவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான். தம் குரு அரிஸ்டாட்டிலின் வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்ற, ஒரு இந்திய துறவியை உடன் வருமாறு பணித்தார் அலெக்ஸாண்டர். "மகன்களை மன்னர்கள் வற்புறுத்த முடியாது," என்று உடன் செல்ல மறுத்தார் சன்யாசி.

"என்னோடு கிரேக்கத்துக்கு வர மறுத்தால் அடுத்த வினாடி உன் தலை ஜீலம் நதியில் மிதக்கும்...ம்...புறப்படு" என்று வாளை உறுவினான் அலெக்ஸாண்டர்.'

அலெக்ஸ்ஸாண்டரின் கோபாக்கினி துறவியிடம் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை. 'மகா அலெக்ஸாண்டருக்கு இந்த துறவி உத்தர விடுகிறேன், ம்... ...வெட்டி எறி என் தலையை' என்றார் துறவி ஆவேசமாக.'

ஓங்கிய கை ஓங்கியபடியே நிற்க அதிர்ச்சியில் கல்லானான் அலெக்ஸ்ஸாண்டர்! மகுடம் சூட்டிய மாமன்னர்களே எதிரில் நிற்க திராணியற்று ஓடி ஒளியும் போது, கேவலம் உடுத்த முழம் துணி இல்லாத இந்த சன்யாசி, அலெக்ஸாண்டருக்கு உத்தரவிடுவதா? அவன் உள்ளம் கூனிகுறுகிப் போனது. உடை வாள் உறைக்குள் போனது.

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - II

தாய் ஒலிம்பியா அருகில், உப்பரிகையில் சோகமாய் சிறுவன் அலெக்ஸாண்டர் அமர்ந்திருக்க, இரண்டாம் ஃபிலிப் மன்னன் கிரேக்கம் முழுவதும் வாகை சூடிய பெருமிதத்தில் ஊர்வலமாய் தலைநகரில் பிரவேசித்தான்.

ஊர்வலம் முடிந்து வந்த மன்னன், மகன் முகம் வாட்டமுற்றிருப்பதை அறிந்து அவன் நாடியை உயர்த்தியபடி "மகனே இந்த நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் போது உனக்குமட்டும் என்ன குறை? என்று வாஞ்சையாய்க் கேட்க, அதற்கு அலெக்ஸாண்டர் "தந்தையே இந்த உலகில் நான் வெற்றிகொள்ள என்று எதையும் நீங்கள் மிச்சம் மீதி வைக்கப்போவதில்லை அப்படித்தானே?"

இதை சற்றும் எதிர்பாராத மன்னன் சமாளித்து விட்டு "மகனே முரட்டுக் குதிரை - 'பெர்ஸபோலஸை' அடக்கிய உன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் மாசிடோனியா மிகச் சின்னஞ்சிறிய நாடு! நீ வெற்றிகொள்ள என்று உலகில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உன் தந்தையின் வீரத்துடன், உன் தாயின் புத்திக்கூர்மையும் உன் குரு அரிஸ்டாட்டிலின் ஆசியும் உனக்கு எப்போதும் துணையிருக்கும். இந்த உலகத்தை ஒரு நாள் நீ வெற்றி கொள்ள வேண்டும். இதுதான் உன் தந்தையின் ஆசை!" என்றதும் தந்தையை கட்டிப்பிடித்து காலில் விழுந்தான் அலெக்ஸாண்டர்.

(கார்சிகா தீவில் அருணை உத்வேகப்படுத்த பத்மநாபன் கூறிய சரித்திர மேற்கோள்)

Sunday, August 17, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலின் சில முத்துச் சிதறல்கள்... ...


தாரிணி : இப்படி முற்றும் துறந்த முனிவர் மாதிரி பேசறீங்க. உங்க நடத்தை அப்படியில்லையே? விமானங்கள் சாகசம் சரி. ஆனா ஆர்டின்ல அம்பு விட்டு பறந்தீர்களே? முனிவர்களுக்கு எதற்கு இந்த வேலை? கன்ட்ரோலர் ஆப் தி டீம் ஆப்பரேசன்ஸ் ஆச்சே! பதில் சொல்லுங்க. அதுவும் மூன்றாவதாக இதயத்தைத் துளைத்துச் சென்ற விமானத்தை ஓட்டியது நீங்கள்தானாமே!


".... .... ...."


"என்ன பேச்சே காணோம். இதயங்களை துளைத்துப் பார்ப்பதில்தான் உங்க ரசனை இருக்கும் போலிருக்கு சரிதானே?"


அருண் : இதயத்தைப்பற்றி இதயமில்லாதவங்க கிட்ட என்னத்தை பேசறதுன்னுதான் யோசிக்கிறேன். நான் ரோட்ல சரியா இடப்புறமாத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். தவறான வழில போறவங்க என்னை பார்த்து விரலை நீட்ட வேண்டாம்.

இங்கேயும் ஒரு சொர்க்கம் - பதிப்பகத்தார் பார்வையில்!

சேதுக்கரை என்ற தென்தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களாகத் துவங்கும் இந்த நாவல் களம் உலக நாடுகளில் நடந்தேறும் சம்பவங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது.


எல்லா சாதிக் கலவரங்களும், இன மோதல்களும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் சுய லாபத்துக்காகவும் ஆதாயங்களுக்காகவும் நடைபெறுவனதான் என்பதை நாவலாசிரியர் மிகப் பிரமாதமாக புதினமாக்கி இருக்கின்றார். சமூக அக்கறையுடன் உண்மையாகவும், நீதிக்காகவும், தேசத்திற்காகவும் நின்று போராடும் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வார்த்தளித்துள்ளார்.


திடீர் பாய்ச்சலில் இந்தியா முன்னேறுவதற்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பினை நிகழ்த்திய விஞ்ஞானியிடமிருந்து ஆய்வு ரகசியத்தைத் திருட முயலும் சதிகாரர்களிடமிருந்து அந்த புதிய கண்டுபிடிப்பை மீட்பதற்காகவும் தேசத்தின் இறையாண்மையைக் காப்பதற்காகவும் கதாநாயகன் அருண் நடத்தும் போராட்டம் 'கத்திமேல் நடப்பதாக' அமைந்து மெய்சிலிர்க்க வைக்கின்றது.


ஒரே சமயத்தில் புலனாய்வுக் கதையாகவும், சமூக நாவலாகவும், அறிவியல் புனைகதையாகவும் கதை வளர்ந்து பின்னிப் பிணைந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்து ஆவலைத்தூண்டும் விதத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கத்தகுந்த நாவலாக நாவலாசிரியர் படைத்துள்ளார். இது மிக நீண்ட கால உழைப்பில் உருவானதென்றுகருதத்தக்க நல்ல நாவலாகும்.


அருண், தாரிணி, பத்மநாபன் முதலான கதாபாத்திரங்கள் நம் மனதில் நின்று என்றும் வாழும்பான்மையுடையன.


இந்நாவலாசிரியரின் முதல் நாவலான "கனவு கிராமம்" ஏற்கனவே தமிழக அரசின்புதினத்திற்கான முதல் பரிசை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் இவரின் நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" பல பரிசுகளைப் பெறுவதுடன் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுமென நம்புகின்றோம்.


இந்நாவலை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியருக்கு எமது உளமார்ந்த நன்றி.


- பாவை பப்ளிகேஷன்ஸ்

Sunday, August 10, 2008

"இங்கேயும் ஒரு சொர்க்கம்"

பாரதி கண்ட கனவாம் "சிங்களத் தீவினுக்கோர் பாலம்" நனவாக
ஒரே வாரம் !

காஷ்மீர் - கன்னியாகுமரி அல்ட்ரா மாடர்ன் நெடுஞ்சாலை போட

ஒரே மாதம் !

கங்கா - காவேரி அதி நவீன இணைப்புக் கால்வாய் அமைக்க
ஒரே ஒரு வருடம் !

அடுத்த வருடம் பாருங்களேன் விண்ணிலிருந்து பார்ப்பவர்களுக்கு, நம் பூமியில் சீன நெடுஞ்சுவர் மட்டுமல்ல, கங்கா - காவேரி இணைப்புக் கால்வாயும் தெரியும் !

- என வெற்றி முழக்கமிட்ட விஞ்ஞானியை...
செந்தீயின் கோர நாக்குகள் விழுங்க முயல...

அவர் கதியை அறிய இந்திய நாடு மட்டுமல்ல
உலகமே பதற்றத்தில் துடித்தது.

விடை தேடும் ஒரு பயணமாக "இங்கேயும் ஒரு சொர்க்கம்"
நாவலைக் கையில் எடுப்போம்...

புத்தம் புதிய விஞ்ஞானக் கருத்துக்களை நாடி நாமும் ஒரு விமானியாக,
பிரான்சில் - பாரிஸ், மார்சைல்ஸ், லியான், கார்சிகா தீவு,
இந்தியாவில் - தூத்துக்குடி, சென்னை, பெங்களூரு,
என விமானத்தில் வலம் வருவோம் !

விரைவில் இந்நாவல் வாசகர்களின் கையில் !

பறக்கத் தயாராவோம் !

வெளியீடு :

பாவை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,
17 / 142, ஜானி ஜான் கான் சாலை,
இராயபேட்டை, சென்னை - 600 014
தொலைபேசி : 91 - 44 - 28482441 / 28482973