Showing posts with label அணுசக்தி. Show all posts
Showing posts with label அணுசக்தி. Show all posts

Friday, August 19, 2011

அணுசக்தி பிறந்த கதை-1

ப்ரல் 1986ல் ரஷ்யாவில் செர்னோபில் அணு உலை, மார்ச் 2011ல் ஜப்பான் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலை, என அணு உலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளால் கதிகலங்கிப் போயுள்ளது கூடங்குளம் கிராமம். தாங்கள் எந்நேரமும் ஊரைக் காலி செய்ய நேருமோவென்ற அச்சம் மக்களை வாட்டி வதைக்கின்றது. ரஷ்ய உதவியுட்ன் அங்கு நிறுவப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவில் உற்பத்தி தொடங்க இருக்கின்றது. இரண்டாவது உலைக்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. அணு உலைகளின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொண்டுள்ள மக்கள் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் வாழ்விடங்கள் பறிபோய் விடுமோ என்ற பதைபதைப்பில் பீதியின் காரணமாக கூடங்குளம் சுற்று வட்டார கிராம மக்கள் கடந்த 10 தினங்களாக உண்ணாவிரதம், சாலைமறியல் என பல்வேறு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக தற்காலிகமாகப் போரட்டத்தை நிறுத்தியுள்ளனர்.



செர்னோபில் சிதைவுகள்


எனவே அணுசக்தி, அணு உலை, அணு குண்டு சமாச்சாரங்களைப் பற்றிய சில அடிப்படை தகவல்களை நாம் தெரிந்து கொள்வது நமக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பிறருடன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொள்வது நம்மை நாமே அவசர காலங்களில் பாதுகாத்துக் கொள்ளவும் பிரச்சினகளை எதிர்கொள்ளவும் உதவும்.



சுனாமியின் போது ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலை, ஜப்பான்

.நாம் ஒரு கட்டிடத்தை எழுப்ப செங்கற்களைப் பயன்படுத்துவது போல் இப்பிரபஞ்சத்தின் எந்த ஒரு ஜீவராசியும் செல் என்ற அடிப்படை அலகைக் கொண்டே உருவாகின்றது. எந்த ஒரு ஜடப்பொருளும் ஒரு சின்னஞ் சிறு அணு என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றது. அணு ஒரு உரோமத்தின் பருமனில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவிற்கு மிக மிகச் சிறியதான துகள்! ஒரு சாதாரண நுண்ணோக்கி மூலம் ஒரு ஊசி முனைப் புள்ளியில் ஒரு கோடி அணுக்களை நாம் காணமுடியும்.

ஒரு அணுவின் கட்டமைப்பு



இரசாயணக் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு பொருளின் அணுவும் அதற்கென ஒரு தனித் தன்மை கொண்டவை. அப்படி ஒரே தன்மை கொண்ட பலகோடி அணுக்கள் சேர்ந்து உருவாகும் ஒரு இரசாயணப் பொருளை நாம் தனிமம் (element) என்கிறோம். உதாரணமாக ஹைட்ரஜன், ஆக்சிஜன், இரும்பு, ஈயம், செம்பு, துத்தநாகம் மற்றும் யுரேனியம் போன்றவைகள் தனிமங்கள் ஆகும்.

எனவே ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு அடிப்படைத் தன்மை கொண்ட அணுக்களே அதற்கான செங்கற்கள் எனலாம்! ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் சேரும்போது ஒரு புதிய கூட்டுப்பொருள் (compound) உருவாகிறது. உதாரணமாக நாம் அருந்தும் நீரைச் சொல்லலாம். ஹைட்ரஜன் அணுக்களும் ஆக்ஸிஜன் அணுக்களும் சேர்ந்து நீர் உருவாகின்றது.


நீரின் மூலக்கூறு ((H2O)

நீரை உருவாக்கப் பயன்படும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்களின் சேர்மம் ஒன்றுக்கு ஒன்று என்ற சரி விகிதத்தில் இல்லாமல் சற்று வித்தியாசமான தாயும், சிக்கல் நிறைந்த அம்சமாகவும் உள்ளன. அணு எடை வித்தியாசம் காரணமாய் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரே ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்து நீரை (H2O) உருவாக்குகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்வதால் உருவாகும் இந்த சேர்மத்தின் அடிப்படை அலகை நாம் நீரின் மூலக்கூறு (Molecule) என்கிறோம்.

ஒவ்வொரு தனிமங்களின் அணு எடையைப் பொறுத்தவரை அதிக வித்தியாசம் காணப்படும் அளவிற்கு அதன் பருமனைப் பொறுத்தவரை குறுக்களவில் அதிக வித்தியாசம் ஏதும் இல்லை. ஏறக் குறைய அணுக்கள் யாவுமே ஒரே குறுக்களவைக் கொண்டுள்ளன. உதாரணமாக இவ்வுலகில் அதிக அணு எடை கொண்ட தனிமமான யுரேனியத்தின் அணு எடையானது ஹைட்ரஜன் அணு எடையை விட 200 மடங்கு அதிகம்! ஆனால் யுரேனிய அணுவின் குறுக்களவோ ஹைட்ரஜன் அணுவின் குறுக்களவை விட 3 மடங்கே அதிகம்!



யுரேனிய அணுவின் அமைப்பு


ஹைட்ரஜன் அணுவின் அமைப்பு


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதென்பார்கள். அணுதான் இப்பிரபஞ்சத்தின் மிக மிகச் சின்னஞ் சிறிய பொருள். ஆனால் அதன் சக்தியும் வீரியமும் மிக மிகப் பெரிய அளவிலானது. அணுவில் பொதிந்துள்ள ஆற்றலின் (energy) அளவோ அளவிட முடியாத அபரிமித சக்தியாகும்! குதிரையை வசப்படுத்த நாம் சேணம் பூட்டி அதைக் கட்டுப்படுத்துவது போல் அளப்பரிய அணுவின் ஆற்றலையும் கட்டுப்படுத்தி நம் தேவைக்குப் பயன்படுத்த நம் விஞ்ஞானிகள் வழிவகைகள் கண்டுள்ளனர்.

மீண்டும் அணுசக்தி பிறந்த கதை-2ல் சந்திப்போம்!