Sunday, December 28, 2008

'பங்கீ ஜம்ப்பிங்'

இங்கேயும் ஒரு சொர்க்கம் - அத்தியாயம் 34 

கார்சிகா

'பங்கீ ஜம்ப்பிங்' (Bungee Jumping) என்பது ஹெலிகாப்டர்கள், செங்குத்தான மலை உச்சிகள், உயரமான கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றிலிருந்து கீழே பாதாளத்தை நோக்கித் தலைகீழாய்க் குறிப்பிட்ட இலக்கில் குதிக்கும் முறையாகும். குதிப்பவரின் கால்களை ரப்பர் கயிறு பிணைத்திருக்க, அந்த இணைப்பிலுள்ள ஸ்பிரிங் அசைந்து அசைந்து வேகத்தைக் குறைக்க, குதிப்பவர் தரையை நெருங்கும் போது சாதாரணமாக ஒரு திண்ணையிலிருந்து குதிக்கும் வேகத்தில் தரையில் இறங்குவார்.அன்று நடு நிசியில் கார்சிகா தீவின் தென்பகுதி மலை உச்சி ஒன்றில் பிரெஞ்சு இராணுவ ஹெலிக்காப்டர் ஒன்றின் மூலம் சப்தமின்றி 'பங்கீ ஜும்பிங்' மூலம் கீழே குதித்தான் அருண். குளிருக்கான ராணுவ உடைகள் அணிந்திருந்தாலும் உடைகளை மீறி கடும் குளிர் துளைத்தெடுக்க, 600 அடி உயரத்தில் நிலை நின்ற ஹெலிகாப்டரிலிருந்து மலைஉச்சியில் உள்ள சிறய சமநிலைப் பகுதியில் குதித்தான். மலை மீதிருந்து மெதுவாக பாறைகளை பற்றி இறங்கினான். மலை ஏறி இறங்கும் பயிற்சி அவனுக்கு இப்போது கை கொடுத்தது. பாறைகளின் வழியே 300 அடிக்கு கீழே இறங்கிய பிறகே மரம் செடி கொடிகளிடையில் அவன் ஐக்கியமானான். பொழுது புலரும் முன் கருக்கிருட்டிலேயே, அவன் மலை அடிவாரத்துக்கு சென்று விட திட்டமிட்டான். சில இடங்களில் முரட்டு செடிகொடிகளும் முட்புதர்களும் அவனுக்கு திகிலூட்டின. வன ஜந்துக்கள் சில இடங்களில் அவனை பயமுறுத்தின.

இருளைக் கவசமாக்கிக்கொண்டு இறங்கியவனுக்கு மேலும் சோதனைகளைக் கொடுத்தது மேகங்கள். ஏற்ற இறக்கமான மலை பிரதேசம் அவன் மூச்சை திணறடித்தன. வாயின் இருபுறமும் கோர பற்களையுடைய ஆபத்தான காட்டுப் பன்றிகள் பற்றி அவன் ஏற்கனவே எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறான். அவன் கை, துப்பாக்கியை ஒருதரம் தடவிப்பார்த்துக் கொண்டது. மலை ஆடுகள் தண்ணீர் இருந்த நீரோடைகளின் கரைகளில் படுத்துக் கிடந்தன. மலை அடிவாரத்தை நெருங்கியதும் அவன் விழிப்புடன் செயல்பாட்டான்.

பொழுது விடிய இருந்த நேரம். ஆனாலும் அங்கு கும்மிருட்டுதான். ஒரு மரக்கிளையைப் பிடித்து அவன் திரும்ப இருந்த நேரம், திடீரென மௌனத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு வேதனைக்குரல் விண்ணைப் பிளந்தது. அவன் முதுகுத்தண்டை உறைய வைத்து அப்பிரதேசமே நடுங்கும் கிரீச்சிடும் ஒலி. அவன் சப்த நாடியும் அடங்கிவிட்டது. சப்தம் வந்த திசையில் உற்றுப்பார்த்தான். இருளில் ஒன்றும் புலப்படவில்லை. மேலும் கீழே இறங்கி வந்து பார்த்தான். இருளில் பார்க்கக்கூடிய டெலெஸ்கோப்பை கொண்டு ஆராய்ந்தான். அங்கு ஒரு குகை இருக்கவேண்டும். இருள் தன் கட்டு குலைந்த அச்சமவெளிப் பகுதியில் அவன் கண்கள் ஊடுருவ, குகைக்குள்ளிருந்து இருவர் ஓடிவந்ததை அவன் கண்டான். அந்தக் குரலின் குலைநடுக்கத்தின் வீச்சு அவன் இதயத்தின் மையத்திலிருந்து அவன் உடலெங்கும் இன்னும் பரவிக் கொண்டிருந்தது.

... .... .....

No comments: