Showing posts with label நாவலிலிருந்து சில துளிகள். Show all posts
Showing posts with label நாவலிலிருந்து சில துளிகள். Show all posts

Sunday, December 28, 2008

'பங்கீ ஜம்ப்பிங்'

இங்கேயும் ஒரு சொர்க்கம் - அத்தியாயம் 34 

கார்சிகா

'பங்கீ ஜம்ப்பிங்' (Bungee Jumping) என்பது ஹெலிகாப்டர்கள், செங்குத்தான மலை உச்சிகள், உயரமான கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றிலிருந்து கீழே பாதாளத்தை நோக்கித் தலைகீழாய்க் குறிப்பிட்ட இலக்கில் குதிக்கும் முறையாகும். குதிப்பவரின் கால்களை ரப்பர் கயிறு பிணைத்திருக்க, அந்த இணைப்பிலுள்ள ஸ்பிரிங் அசைந்து அசைந்து வேகத்தைக் குறைக்க, குதிப்பவர் தரையை நெருங்கும் போது சாதாரணமாக ஒரு திண்ணையிலிருந்து குதிக்கும் வேகத்தில் தரையில் இறங்குவார்.



அன்று நடு நிசியில் கார்சிகா தீவின் தென்பகுதி மலை உச்சி ஒன்றில் பிரெஞ்சு இராணுவ ஹெலிக்காப்டர் ஒன்றின் மூலம் சப்தமின்றி 'பங்கீ ஜும்பிங்' மூலம் கீழே குதித்தான் அருண். குளிருக்கான ராணுவ உடைகள் அணிந்திருந்தாலும் உடைகளை மீறி கடும் குளிர் துளைத்தெடுக்க, 600 அடி உயரத்தில் நிலை நின்ற ஹெலிகாப்டரிலிருந்து மலைஉச்சியில் உள்ள சிறய சமநிலைப் பகுதியில் குதித்தான். மலை மீதிருந்து மெதுவாக பாறைகளை பற்றி இறங்கினான். மலை ஏறி இறங்கும் பயிற்சி அவனுக்கு இப்போது கை கொடுத்தது. பாறைகளின் வழியே 300 அடிக்கு கீழே இறங்கிய பிறகே மரம் செடி கொடிகளிடையில் அவன் ஐக்கியமானான். பொழுது புலரும் முன் கருக்கிருட்டிலேயே, அவன் மலை அடிவாரத்துக்கு சென்று விட திட்டமிட்டான். சில இடங்களில் முரட்டு செடிகொடிகளும் முட்புதர்களும் அவனுக்கு திகிலூட்டின. வன ஜந்துக்கள் சில இடங்களில் அவனை பயமுறுத்தின.

இருளைக் கவசமாக்கிக்கொண்டு இறங்கியவனுக்கு மேலும் சோதனைகளைக் கொடுத்தது மேகங்கள். ஏற்ற இறக்கமான மலை பிரதேசம் அவன் மூச்சை திணறடித்தன. வாயின் இருபுறமும் கோர பற்களையுடைய ஆபத்தான காட்டுப் பன்றிகள் பற்றி அவன் ஏற்கனவே எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறான். அவன் கை, துப்பாக்கியை ஒருதரம் தடவிப்பார்த்துக் கொண்டது. மலை ஆடுகள் தண்ணீர் இருந்த நீரோடைகளின் கரைகளில் படுத்துக் கிடந்தன. மலை அடிவாரத்தை நெருங்கியதும் அவன் விழிப்புடன் செயல்பாட்டான்.

பொழுது விடிய இருந்த நேரம். ஆனாலும் அங்கு கும்மிருட்டுதான். ஒரு மரக்கிளையைப் பிடித்து அவன் திரும்ப இருந்த நேரம், திடீரென மௌனத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு வேதனைக்குரல் விண்ணைப் பிளந்தது. அவன் முதுகுத்தண்டை உறைய வைத்து அப்பிரதேசமே நடுங்கும் கிரீச்சிடும் ஒலி. அவன் சப்த நாடியும் அடங்கிவிட்டது. சப்தம் வந்த திசையில் உற்றுப்பார்த்தான். இருளில் ஒன்றும் புலப்படவில்லை. மேலும் கீழே இறங்கி வந்து பார்த்தான். இருளில் பார்க்கக்கூடிய டெலெஸ்கோப்பை கொண்டு ஆராய்ந்தான். அங்கு ஒரு குகை இருக்கவேண்டும். இருள் தன் கட்டு குலைந்த அச்சமவெளிப் பகுதியில் அவன் கண்கள் ஊடுருவ, குகைக்குள்ளிருந்து இருவர் ஓடிவந்ததை அவன் கண்டான். அந்தக் குரலின் குலைநடுக்கத்தின் வீச்சு அவன் இதயத்தின் மையத்திலிருந்து அவன் உடலெங்கும் இன்னும் பரவிக் கொண்டிருந்தது.

... .... .....

இந்த விமானம் இப்போது கடத்தப்படுகிறது !!!

இங்கேயும் ஒரு சொர்க்கம் - அத்தியாயம்-37

பாரிசிலிருந்து மும்பைக்கான அந்த விமானம் தூனிஸ் நகரிலிருந்து சரியாக மாலை 5.30 க்குப் புறப்பட்டது. விமானம் விண்ணில் தாவி உச்சிக்கு வந்து 30000 அடி உயரத்தில் நிலைகொண்ட போது பயணிகள் கண்களுக்கு விருந்து அளித்த அட்லாஸ் மலைத் தொடர்களின் கம்பீரமான எழில் தோற்றம், துனிசிய வளைகுடாவை நோக்கி இரு பகுதிகளாகி, கிழக்கில் வர வர மலைத் தொடர் சறுக்கி துனிசிய வளைகுடாவில் சரிந்து கலந்து மறைந்து கொண்டிருந்தது. துனிசியாவின் ஜீவ நதி மஜர்தா, இரு மலைத் தொடர்களுக்கும் இடையில் ஓடி அப்பள்ளத்தாக்கை பச்சைப் பசேல் எனக்காட்டி கண்களைக் கவர்ந்தது. தெற்கிலுள்ள தாபஸ்ஸா மலைத்தொடர் தெற்கு நோக்கி குன்றுகளாக இறங்கி பீடபூமியாக மாறி சகாரா பாலைவனத்தில் சங்கமித்தது.

ரோமானியர்களின் உணவுக் களஞ்சியம் துனிசியா, பார்வையிலிருந்து விடைபெற, துனிசிய வளை குடாவில் மேலெழும்பிய விமானம், மத்தியதரைக் கடல் பகுதியில் பிரவேசித்த போது துனீசிய நேரம் மணி 5.45 (16.45 GMT) விமானப் பணிப்பெண்கள் ஒரு பக்கம் குளிர்பானங்களை வினியோகிக்க, மறுபக்கம் அதுவரை கண்களுக்கு விருந்தளித்த அட்லாஸ் மலையின் அழகிய சிகரங்கள் பின்னோக்கி விலகி மறைந்து கொண்டிருந்தன. சிலர் பானங்களை பருகியபடி காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். சிலருக்கு பானங்களில் மனம் லயிக்கவில்லை. அவர்கள் மனம் துனிசியாவின் ரம்யமான புகழ் பெற்ற மாலை நேரக் காட்சிகளில் லயித்திருந்தன. துனிசியாவின் பிரத்தியேக வயலட் வண்ணத்தில் மாலை நேரம் மிளிர, கடலில் ஒரு நெருப்புக் கோளமாய் சூரியன் விழுந்து கரைந்து கொண்டிருந்தது. சிலர் நினைவுகளில் முந்திய தினங்களின் இரவுநேர இயற்கை காட்சிகள் மின்னி மறைய அந்நெஞ்சங்களில் பிரிவு ஒரு சுமையாகி கனத்தன.

கேபினில் லைட்டுகள் மங்க, சில பயணிகள் தூங்க ஆரம்பித்தனர். குளிர் பானங்களை தொடர்ந்து சாக்லெட் மற்றும் இனிப்பு வகைகளைப் பணிப்பெண்கள் வழங்க, இனிமையாகக் களித்த விடுமுறை நாட்களைப் பல நெஞ்சங்கள் நினைவு கூர்ந்தன. சில நினைவுகள் அவர்கள் மனத்திரையில் மலர்ந்து மனதுக்கு இதமளித்தன. மறக்க முடியாத நிகழ்வுகளை மனது அசைபோட்டன. பயணம் நன்கு அமைந்த மைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டன. அரை மணி நேரம் சென்றிருக்கும். விமானம் மால்ட்டா தீவுகளின் தலைநகரம் வலேட்டா மீது பறந்து கொண்டிருந்தது.

அடுத்து வந்த நிமிடங்கள் அவர்களுக்கு பெரும் மனக்கிலேசத்தையும் சஞ்சலத்தையும் கொடுத்து அவர்களை கையறு நிலைக்கு மாற்றின. வெளியே இருள் பரவ பரவ உள்ளே பயமும் பீதியும் போட்டி போட்டு பயணிகளை அச்ச மூட்டின. பயணிகளோடு பயணிகளாக வந்த சிலர் விமானத்தைக் கடத்துவதாக அறிவித்ததும், இன்ப நினைவுகள் கொடூரமானதாக மாறியது. அவர்களைப் பயமுறுத்த பல்வேறு யுக்திகளை கடத்தல்வாதிகள் கையாள, பயணிகள் மிரண்டனர்.


பின் புறமிருந்த பெண்கள் பகுதியில்தான் அந்த பயங்கரம் முதலில் ஆரம்பமானது. மணி 6.15 இருக்கும். பின்னிருக்கை ஒன்றிலிருந்து எழுந்த அலெக்ஸ், தன் கொடூர முகத்தை ஒரு கைத்துணியால் மூடிக்கொண்டு ஒரு கை குண்டைத் தூக்கி பிடித்தபடி முன்னே வந்தான். அத்துணியில் கண்களுக்கு மட்டும் இரண்டு திறப்புகள் இருந்தன. வலப்புற இருக்கையிலிருந்து முகத்தைக் கறுப்பு துணியால் மறைத்து கட்டியிருந்த யூசுப், ஒரு ரிவால்வரை தலைக்கு மேல் உயர்த்தியவன் உரத்த குரலில் சொன்னான் "இந்த விமானம் இப்போது கடத்தப்படுகிறது என்று."



Wednesday, November 26, 2008

பொழுது விடிந்து வெர்டனை நெருங்க...

A4 நெடுஞ்சாலையில் விமானத்தை ஓட்டுவது போல் அருண் காரை ஓட்ட...வாயு வேகத்தில் பறந்து கொண்டிருந்தது அவன் கார். வலப்பக்க ட்ரைவிங் அவனுக்குப் பிரச்சினையேயில்லை. அவன் ஏற்கனவே பலமுறை மைரேஜ் விமானங்களை ஓட்டும் பயிற்சிக்குப் பலமுறை பிரான்ஸ் வந்தவனாகையால், இது ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல. 280 கி.மீ தூரத்தை மூன்றே மணி நேரத்தில் கடந்திருந்தான்.

ஆரம்பத்தில் மார்னே நதி தீரத்தில் திராட்சைத் தோட்டங்களும், பசிய மரக் கூட்டங்களும், செர்ரி மரத்தில் பழங்கள் செக்கச் செவேலென அடைபிடித்திருந்த காட்சியும், ஏப்ரிகாட் பழத் தோட்டங்களும், பூந்தோட்டமுமாய் மலர்ந்த காட்சி, ரீம்ஸ் நகர் தாண்டியதும் பசுநீல மலைகளாக மாறியது.


பொழுது விடிந்து வெர்டனை நெருங்க நெருங்க வழி நெடுகிலும் ஒரே மயான பூமிக் காட்சிகள்! வழி நெடுகிலும் மரணத்தை நினைவு கூறும் நினைவகங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே தியாகச் சிலுவைகள்! பிரிட்டிஷ், அமெரிக்க, பிரெஞ்சு, ஜெர்மன் வீரர்களுக்கென்று தனித்தனி நினைவிடங்கள்!

ஊர் மையத்தை நெருங்குவதற்குள் அவன் கண்ட காட்சிகள் அவன் எலும்புக்கூடு அதிர்வில் சதைக் கோளங்கள் பிய்ந்து சின்னா பின்னமாகி உதிர்வதைப் போல் உணர்ந்தான். வெளியே சில்லிட்ட குளிர் வேறு ஊசியாக அவனை துளைத்தது. அவன் பார்வை அவனுக்கென ஓர் இடத்தை அம்மயான பூமியில் தேடுவது பொலிருந்தது.

வழியில் அவனை டிஜிட்டல் டைரி இடைமறித்து அழைத்தது!
தகவல் கண்டதும் இரத்தம் உரைந்த மனிதனாக அருண் காரை நான்சிக்குத் திருப்பினான்!


(இங்கேயும் ஒரு சொர்க்கம் - முப்பதாவது அத்தியாயத்திலிருந்து...)

Tuesday, November 18, 2008

இந்த உயிர் இன்னும் சில நிமிடங்களுக்குத்தானா?


நில நடுக்கமென அவன் வார்த்தைகள் அவள் குருத்தேலும்பில் ஊடுருவின.

தோலுக்கடியில் சூறாவளி என சுழன்றன. அவள் இதயத்தில் அணுவெடி சோதனை நிகழ்த்தின.

அதன் அதிர்வுகள் அவள் நாடி நரம்பெல்லாம் எதிரொலிக்க அவள் நரம்புகளில் நடுக்கம் கண்ணுக்கு வந்தது. அவளுக்கு உள்ளுக்குள் வியர்த்தது. வயிற்றில் எதோ ஒரு முடிச்சி இறுக்கி பிழிவது போல் உணர்ந்தாள்.

இந்த உயிர் இன்னும் சில நிமிடங்களுக்குத்தானா?

வெண்ணை திரண்டு வரும் போது நானே தாழியை உடைத்துக் கொண்டேனே! சே!

வெளியே அவளைக் குதறி விடத்துடிக்கும் ஓநாய்க்கூட்டம்! அவள் மனத்திரையில் அலெக்ஸ்சின் கர்ண கொடூர முகம் ஒரு வினாடி தோன்றி மறைந்தது. அவள் உடல் நடுக்கமுற்றது . உள்ளே அவளை விரட்டி விடத் துடிக்கும் இளவல். இனி போலீஸ் வேறா? எமன் எனக்காக இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கிறான் போலும்? பதை பதைத்தது பேதையின் உள்ளம். சோதனையில் படுகுழியாகிப்போன அவள் இதயத்தில் இட்டு நிரப்ப பலவாறு யோசித்தாள். அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.
ஜீசஸ்!...உங்கள் பெயரை உச்சரித்ததற்காகவா எனக்கு இந்த தண்டனை?......தேவனாகிய நீங்களா எனக்கு ஜூடாஸாக இருக்க முடியும்? ஒருக்காலும் இல்லை!

ஆபத்தான தருணங்களில் மனித மூளை அற்புதங்களை ஆற்றும் என்பது உண்மைதான் போலும்! காரிருளில் ஒரு மின்னல் கீற்று அவளைக் காக்க வந்தது போல் அடுத்த சில வினாடிகளில் அவள் மூளையின் இருண்ட அந்தகாரத்தின் வெகுதொலைவில் எங்கோ ஒரு 'பளிச்'! ஒரு நம்பிக்கை ஒளி! அந்த அடர் இருளில் அவளுக்கு விடியலைக் காட்ட...

(அவள் கதி என்னவானது ?????
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவல் படிப்பவர் அறிவர்)

Thursday, September 4, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - V

ஜமால்முகமது அருணிடம்...
"இறைவன் பூமியில் எல்லா இடங்களிலும் தங்கம், யுரேனியம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை வைக்கவில்லை. அவைகள் இருக்கும் ஒரு சில இடங்களை நாம்தான் தேடிக் கண்டுபிடிக்கிறோம்."
" ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். அந்தத் திறமையைக் கண்டறிந்து அதை வெளிக்கொணரும் பட்சத்தில்தான் அவன் திறமை பளிச்சிடும். உனக்குள்ள திறமை எது என்பது எனக்குத்தெரியும் அருண். நீ என்னோடு வரத் தயார் என்றால் இந்தக் கூழாங்கல்லை வைரமாக்க வேண்டியது என் பொறுப்பு. "

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - IV


மனிதன் முயலும் முயற்சிகளுக்கு நம்பிக்கை என்பது புகலிடம்!

வாழ்க்கை கைநழுவிப் போகும்போது நம்பிக்கை என்பது பாய்மரம்!

ஆபத்தில் மனம் அலைபாயும்போது நம்பிக்கை என்பது கலங்கரை!

கடவுளின் எல்லா ஆசிகளுக்கும் நம்பிக்கை என்பது உறுதிமொழி!

Sunday, August 31, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - III

பாரிஸ் - லக்ஸம்பெர்க் பூங்கா

ஏஞ்சலின் : நான் மட்டும் உண்மையை சொல்லியிருந்தால் என்னையும் பலியிட்டு நீங்களும் அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு பலியாகியிருப்பீர்கள்.

அருண் : மூளையிருப்பவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான். தம் குரு அரிஸ்டாட்டிலின் வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்ற, ஒரு இந்திய துறவியை உடன் வருமாறு பணித்தார் அலெக்ஸாண்டர். "மகன்களை மன்னர்கள் வற்புறுத்த முடியாது," என்று உடன் செல்ல மறுத்தார் சன்யாசி.

"என்னோடு கிரேக்கத்துக்கு வர மறுத்தால் அடுத்த வினாடி உன் தலை ஜீலம் நதியில் மிதக்கும்...ம்...புறப்படு" என்று வாளை உறுவினான் அலெக்ஸாண்டர்.'

அலெக்ஸ்ஸாண்டரின் கோபாக்கினி துறவியிடம் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை. 'மகா அலெக்ஸாண்டருக்கு இந்த துறவி உத்தர விடுகிறேன், ம்... ...வெட்டி எறி என் தலையை' என்றார் துறவி ஆவேசமாக.'

ஓங்கிய கை ஓங்கியபடியே நிற்க அதிர்ச்சியில் கல்லானான் அலெக்ஸ்ஸாண்டர்! மகுடம் சூட்டிய மாமன்னர்களே எதிரில் நிற்க திராணியற்று ஓடி ஒளியும் போது, கேவலம் உடுத்த முழம் துணி இல்லாத இந்த சன்யாசி, அலெக்ஸாண்டருக்கு உத்தரவிடுவதா? அவன் உள்ளம் கூனிகுறுகிப் போனது. உடை வாள் உறைக்குள் போனது.

இங்கேயும் ஒரு சொர்க்கம் - முத்துச்சிதறல்கள் - II

தாய் ஒலிம்பியா அருகில், உப்பரிகையில் சோகமாய் சிறுவன் அலெக்ஸாண்டர் அமர்ந்திருக்க, இரண்டாம் ஃபிலிப் மன்னன் கிரேக்கம் முழுவதும் வாகை சூடிய பெருமிதத்தில் ஊர்வலமாய் தலைநகரில் பிரவேசித்தான்.

ஊர்வலம் முடிந்து வந்த மன்னன், மகன் முகம் வாட்டமுற்றிருப்பதை அறிந்து அவன் நாடியை உயர்த்தியபடி "மகனே இந்த நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் போது உனக்குமட்டும் என்ன குறை? என்று வாஞ்சையாய்க் கேட்க, அதற்கு அலெக்ஸாண்டர் "தந்தையே இந்த உலகில் நான் வெற்றிகொள்ள என்று எதையும் நீங்கள் மிச்சம் மீதி வைக்கப்போவதில்லை அப்படித்தானே?"

இதை சற்றும் எதிர்பாராத மன்னன் சமாளித்து விட்டு "மகனே முரட்டுக் குதிரை - 'பெர்ஸபோலஸை' அடக்கிய உன் வீரத்திற்கும் விவேகத்திற்கும் மாசிடோனியா மிகச் சின்னஞ்சிறிய நாடு! நீ வெற்றிகொள்ள என்று உலகில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உன் தந்தையின் வீரத்துடன், உன் தாயின் புத்திக்கூர்மையும் உன் குரு அரிஸ்டாட்டிலின் ஆசியும் உனக்கு எப்போதும் துணையிருக்கும். இந்த உலகத்தை ஒரு நாள் நீ வெற்றி கொள்ள வேண்டும். இதுதான் உன் தந்தையின் ஆசை!" என்றதும் தந்தையை கட்டிப்பிடித்து காலில் விழுந்தான் அலெக்ஸாண்டர்.

(கார்சிகா தீவில் அருணை உத்வேகப்படுத்த பத்மநாபன் கூறிய சரித்திர மேற்கோள்)

Sunday, August 17, 2008

இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவலின் சில முத்துச் சிதறல்கள்... ...


தாரிணி : இப்படி முற்றும் துறந்த முனிவர் மாதிரி பேசறீங்க. உங்க நடத்தை அப்படியில்லையே? விமானங்கள் சாகசம் சரி. ஆனா ஆர்டின்ல அம்பு விட்டு பறந்தீர்களே? முனிவர்களுக்கு எதற்கு இந்த வேலை? கன்ட்ரோலர் ஆப் தி டீம் ஆப்பரேசன்ஸ் ஆச்சே! பதில் சொல்லுங்க. அதுவும் மூன்றாவதாக இதயத்தைத் துளைத்துச் சென்ற விமானத்தை ஓட்டியது நீங்கள்தானாமே!


".... .... ...."


"என்ன பேச்சே காணோம். இதயங்களை துளைத்துப் பார்ப்பதில்தான் உங்க ரசனை இருக்கும் போலிருக்கு சரிதானே?"


அருண் : இதயத்தைப்பற்றி இதயமில்லாதவங்க கிட்ட என்னத்தை பேசறதுன்னுதான் யோசிக்கிறேன். நான் ரோட்ல சரியா இடப்புறமாத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். தவறான வழில போறவங்க என்னை பார்த்து விரலை நீட்ட வேண்டாம்.