நில நடுக்கமென அவன் வார்த்தைகள் அவள் குருத்தேலும்பில் ஊடுருவின.
தோலுக்கடியில் சூறாவளி என சுழன்றன. அவள் இதயத்தில் அணுவெடி சோதனை நிகழ்த்தின.
அதன் அதிர்வுகள் அவள் நாடி நரம்பெல்லாம் எதிரொலிக்க அவள் நரம்புகளில் நடுக்கம் கண்ணுக்கு வந்தது. அவளுக்கு உள்ளுக்குள் வியர்த்தது. வயிற்றில் எதோ ஒரு முடிச்சி இறுக்கி பிழிவது போல் உணர்ந்தாள்.
இந்த உயிர் இன்னும் சில நிமிடங்களுக்குத்தானா?
வெண்ணை திரண்டு வரும் போது நானே தாழியை உடைத்துக் கொண்டேனே! சே!
வெளியே அவளைக் குதறி விடத்துடிக்கும் ஓநாய்க்கூட்டம்! அவள் மனத்திரையில் அலெக்ஸ்சின் கர்ண கொடூர முகம் ஒரு வினாடி தோன்றி மறைந்தது. அவள் உடல் நடுக்கமுற்றது . உள்ளே அவளை விரட்டி விடத் துடிக்கும் இளவல். இனி போலீஸ் வேறா? எமன் எனக்காக இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கிறான் போலும்? பதை பதைத்தது பேதையின் உள்ளம். சோதனையில் படுகுழியாகிப்போன அவள் இதயத்தில் இட்டு நிரப்ப பலவாறு யோசித்தாள். அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.
ஜீசஸ்!...உங்கள் பெயரை உச்சரித்ததற்காகவா எனக்கு இந்த தண்டனை?......தேவனாகிய நீங்களா எனக்கு ஜூடாஸாக இருக்க முடியும்? ஒருக்காலும் இல்லை!
ஆபத்தான தருணங்களில் மனித மூளை அற்புதங்களை ஆற்றும் என்பது உண்மைதான் போலும்! காரிருளில் ஒரு மின்னல் கீற்று அவளைக் காக்க வந்தது போல் அடுத்த சில வினாடிகளில் அவள் மூளையின் இருண்ட அந்தகாரத்தின் வெகுதொலைவில் எங்கோ ஒரு 'பளிச்'! ஒரு நம்பிக்கை ஒளி! அந்த அடர் இருளில் அவளுக்கு விடியலைக் காட்ட...
(அவள் கதி என்னவானது ?????
இங்கேயும் ஒரு சொர்க்கம் - நாவல் படிப்பவர் அறிவர்)
No comments:
Post a Comment