Showing posts with label சந்திரனுக்குப் போகலாம் வாங்க. Show all posts
Showing posts with label சந்திரனுக்குப் போகலாம் வாங்க. Show all posts

Tuesday, January 26, 2010

நிலவில் ஒரு பாலிவுட் நட்சத்திரம்!

சந்திரனுக்குப் போகலாம் வாங்க-3

நியூயார்க்கில் உள்ள சந்திர நில இயலின் சர்வதேச சங்கம் (International Lunar geographic society) நம் ஷாரூக்கான் பெயரை அங்குள்ள ஒரு எரிமலை வாய்க்கு (Crater) வைத்துப் பெருமைப் படுத்தியுள்ளது. இந்த அமைப்பு நிலாவியல் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் அமைப்பாகும். அதை சர்வதேச வான சாஸ்திரவியல் ஒருங்கிணைப்புக்குழு (International Astronomical Union)  ஆமோதித்துள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் அப்பல்லோ-11 விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங்க் எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் காலடி வைத்த அதே அமைதிக்கடல் பிரதேசத்தில்தான் (Sea of Tranquility) இந்த எரிமலைவாய்  அமைந்துள்ளது. பிரஞ்சு வானவியல் வல்லுனர் பிரான்சிஸ் J. D அரக்கோ, என்பவர் பெயரில் அமைந்துள்ள மாபெரும் 'அரக்கோ' தொகுப்பில் உள்ள நான்கு  எரிமலை வாய்களில் ஷாரூக்கான் பெயரில் அமைந்துள்ள எரிமலை வாய்தான்  மிகப் பெரியது. அப்பல்லோ-11 வீரர்கள் இறங்கிய இடம் இதற்கு தென் கிழக்கே உள்ளது. ஏராளமான ஷாரூக் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஷாரூக்கின்  தீவிர  ரசிகர் ஒருவர் ஏற்கனவே ஒரு துண்டு நிலத்தை சந்திரனில் வாங்கி அவருக்கு பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கணிதவியல் மேதை சர் சி.வி ராமன், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாரபாய், இந்திய அணுவியலின் தந்தை எனப் போற்றப்படும் ஹோமி பாபா ஆகியோர் வரிசையில் ஷாரூக் பெயரும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் லியார்னா டோ டாவின்சி, கிறிஸ்டோபர் கொலம்பஸ், சர் ஐசக் நியூட்டன், ஜூலியஸ் சீசர், ஜூல்ஸ் வெர்ன், பிளேட்டோ, ஆர்க்கிமீடிஸ், கெப்ளர், கோபர்னிக்கஸ், அரிஸ்டாட்டில் போன்ற வானவியல் மேதைகள் மற்றும் கிரேக்க ரோமானிய இதிகாச தெய்வங்கள் பெயர்களிலும் ஏற்கனவே சந்திரனின் பல மலைத் தொடர்களுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், எரிமலை வாய்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளன.

இந்திய நிலாவியல் அமைப்பின் காரியதரிசி பிரதீப் மோகன்தாஸ், இந்திய சந்திரபயணத் திட்டத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கஸ்தூரிரங்கன், தேசீய விண்வெளி அமைப்பின் தலைவர் சுரேஷ் நாயக் ஆகியோர் இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த இந்தியர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என வரவேற்றுள்ளனர்.

இனி நாம் நமது சந்திர பயணத்தை மேற்கொண்டு தொடர்வோம். வெண்ணிலாவில் நமக்கென்று ஒரு இடத்தை நாமும்  பிடிக்க வேண்டுமல்லவா?

சந்திரன் - சி அடிப்படைத் தகவல்கள்:

வயது : 460,00,00,000 ஆண்டுகள். 

பூமியிலிருந்து தூரம் மிகஅருகில் : 3,56,399  கி.மீ.

                   மிகதூரத்தில் :  406699 கி.மீ.

விட்டம் : 3476 கி.மீ (ஆஸ்திரேலியாவில் சிட்னி-பெர்த் நகரங்களுக்கு இடைப்பட்ட தூரம்)

சுற்றளவு : 10,927 கி.மீ.

தன்னைத் தானே சுற்ற ஆகும் காலம்: 27நாள் 7மணி 43நிமிடம்.

பூமியைச் சுற்றிவர  ஆகும் காலம்   : 27நாள் 7மணி 43நிமிடம்.

ஈர்ப்பு விசை : புவி ஈர்ப்பு விசையில் ஆறில் ஒருபங்கு.

ஈர்ப்புவிசையிலிருந்து விடுபட தேவையான வேகவிசை : 2.4 கி.மி/செகண்ட் 

வாயுமண்டலம் : சிறிதளவு/இல்லை.

வெப்பம் சூரிய உச்சத்தில்  : 1270C

சந்திரனின் நள்ளிரவில்    : -1730C௦

பொருள்திணிவு (Mass): பூமியின் 81ல் ஒரு பங்கு.

கொள்ளளவு (Volume) : பூமியின் 50ல் ஒரு பங்கு.

சந்திரனும் புதன், வெள்ளி போன்றே தனித்து சூரியனைச் சுற்றிய ஒரு கிரகம் என்றும், ஒரு தருணத்தில் பூமியின் மிக அருகில் வந்த சமையம் பூமியின் புவிஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியின் துணைக்கிரமாக மாறியது என்ற ஒரு கருத்தும் உள்ளது.

துணைக்கோள் இலக்கணத்திற்குச் சற்று பெரிது சந்திரன். இதன் குறுக்களவு 3470 கி.மீ. பூமியின் குறுக்களவில் கால் பங்கிற்கும் சற்றே அதிகம். சந்திரன் தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கும், பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கும் ஒரே நேரம் அதாவது 27.3 நாட்களே எடுத்துக் கொள்வதால்,  நிலாவில் நாம் பார்க்கும் அதே பகுதிதான் நமக்கு எப்போதும் தெரியும். ஆனால் நாம் பார்க்கும் சந்திரனின் பரப்பளவில் வித்தியாசம் இருக்கும். ஏனெனில் சந்திரன் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது அது பெரிதாகத் தெரியும். அதாவது அதன் மீது படும் சூரிய ஒளியின் பரப்பளவு அதிகம்.

நாம் சாதாரணமாகச் சந்திரனைப் பார்க்கும் போது சந்திரன் மென்மையான ஒரு பஞ்சு உருண்டை போல் காட்சி அளிக்கிறது. அதில் கறுப்பு மற்றும் சாம்பல் நிற திட்டுகள் பல இருப்பது போலும் உள்ளது. ஆனால் நாம் சந்திரனை ஒரு தொலைநோக்கி வழியே பார்த்தால் இந்தக் கறுப்புத் திட்டுகள் அகண்ட சமவெளி போல் காட்சி தரும். இக்காட்சியை முதன் முதலில் கலிலியோ தொலைநோக்கி வழியே பார்த்தபோது அவருக்கு இது பரந்த கடல் போல் கட்சி தரவே இதை அவர் மரியா (Maria) என்று லத்தீன் மொழியில் அழைத்தார். லத்தீனில் ‘மரியா’ என்றால் கடல் என்று பொருள். எனவேதான் நாம் இன்றும் சந்திரனின் சமவெளிப் பிரதேசங்களை ‘அமைதிக் கடல் பிரதேசம்’ போன்று ‘கடல் பிரதேசம்’ என்ற அடைமொழியுடன் அழைகிக்கிறோம்.

ஆனால் இன்று நமக்கு அந்தச் சமவெளிகள் சந்திரனில் உள்ள பள்ளத்தாக்குகள் என்றும், அவைகள் மெல்லிய மணல் அடுக்கினால் மூடியுள்ளன என்பதும் தெரியும். இவைகள் எரிமலைக் குழம்பாலும், சாம்பலாலும் உருவானவை.

அடுத்து அந்த சாம்பல் நிறத் திட்டுகளில் பெரும்பாலானவகள் உயர்ந்த பீடபூமி போன்ற மலைத் தொடர்களாகும். இவைகள் கற்களால் ஆன கெட்டியான வறண்ட பாறைத்தொடர்களாகும். சமெவேளிகள் நம் கண்ணுக்குத் தெரியும் நிலாப் பகுதிகளில் அதிகமாகவும் அதன் மறுபக்கத்தில் உயர்ந்த பீடபூமிகள் அதிகமாயும் காணப்படுகின்றன.

இவை தவிர பூமியைப் போல் இல்லாமல் சந்திரனில் கோடிக்கணக்கான எரிமலை வாய்கள் உள்ளன இவற்றில் 50 லட்சம் எரிமலை வாய்கள் 1.5 கி.மீக்கு அதிகமான விட்ட அளவு கொண்டவைகள். இந்த எரிமலை வாய்களில் சில 80 முதல் 100 கி.மீ விட்டம் கொண்டவைகள் கூட இருக்கின்றன. மீதி குறைந்த பட்சம் 30 செ.மீ விட்டத்திற்குக் குறையாதவைகள். மிகப்பெரிய ‘இம்பிரியம் பேசின்’ எரிமலைவாய் 1100 கி.மீ விட்டம் கொண்டது. இதைத்தான் நாம் தினம் தோறும் பார்க்கும் சந்திரக் கிழவியின் கண் என்கிறோம். உயர்ந்த மலைகள்தான்  சுவர்போல் இந்த எரிமலையைச் சூழ்ந்து நிற்கின்றன! இம்மலைத் தொடர்களில் சில 1000க் கணக்கான கி.மி உயரம் கொண்டவை. இத்தகைய ஒரு எரிமலை வாய்க்குத்தான் ஷாரூக்கான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.   

நிலவு குளிர்வானது. சூரியனையைப் போல் சந்திரன் தானாகவே பிரகசிப்பதில்லை. சூரியன் ஒளிர்விப்பதால் வானத்தில் சந்திரன் தெரிகிறது. அங்கு வாயு மண்டலம் என்ற ஒன்று கிடையாது. இப்போதுதான் நீர் இருப்பதற்கான சத்திய கூறுகள் பற்றி தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சி தொடர்கின்றது. ஆனால் கண்களுக்கு தெரியும் அளவுக்கு நீர் இல்லை என்பது மட்டும் நிச்சயம். இதன் உட்கரு (Core) உருகிய பாறை அல்லது இரும்பு குழம்பால் ஆனது. நிலவின் மேற்பரப்பு தூசுப் படலமானது. உயர்ந்த நிலப்பரப்புகளும், தாழ்ந்த   பள்ளத்தாக்குகளும் விண்கற்கள் விழுந்ததனால் உண்டானவை. தாழ்வான நிலப்பரப்புகள் எரிமலைக் குழம்பால் நிரம்பி இருண்ட பிரதேசமாய்க் காணப்படுகிறது. இவைகள்  நாம் நாள்தோறும் பார்க்கும் பகுதியில் உள்ள பள்ளத்தாக்குகள் ஆகும். நிலவின் மறு பிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்குகள் பெரும்பாலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றன.

சந்திரன் நமக்கு அருகாமையில் உள்ள ஒரே இயற்கைத் துணைக்கோள். சந்திரன் வெகு தொலைவில் உள்ளது என்றாலும் மற்ற எல்லா வானொளிக் கோளங்களையும் விட இது நமக்கு மிக அருகில் உள்ள கோளாகும். எனவேதான் இதை பூமியின் துணைக்கோள் என்கின்றனர். நாம் பூமியை ஒரு எழுமிச்சை பழத்திற்கு ஒப்பிட்டால் சந்திரன் ஒரு பட்டாணியின் அளவே உடையது.

பயணம் தொடரும்.....

சந்திரனுக்குப் போவோமா-2 கட்டுரையின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு  ஆல்பர்ட் ஐயின்ஸ்டீன் என்று சரியாக பதிலளித்தவர்கள் 3 பேர். அவர்களை இக்குடியரசு நன்னாளில் மனதார வாழ்த்துவதோடு அவர்களுக்கு உரிய பரிசு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

1. Srivatsan Gopalan
         Technical Manager
         Novalock Pvt. Ltd.  Chennai - 600 020

2. Thanga Murugan 

         Trichy - 620017

3. Vadivel Rajan

         Kovilpatti - 628501    

Sunday, January 17, 2010

சபாஷ் சரியான போட்டி!

சந்திரனுக்குப் போகலாம் வாங்க - 2

வானைத் தொடப் போட்டியிடும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நியூயார்க் நகரம்! அங்குள்ள புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆற்றோரத்து மாபெரும் தேவாலயம்! அத்தேவாலயத்தின் புனிதமான வெண்சுவர்களில் மனித குலத்துக்கு அரும்பெரும் தொண்டாற்றிய அமரத்துவம் வாய்ந்த அறுநூறு பெரியோர்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

clip_image001

clip_image002


<- அணுவில் அண்டம் & அண்டத்தில் அணுத்திரள் ->

பேரரசர்கள், மகான்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள் என வெண்சுண்ணாம்புக் கல்லில் சமைக்கப்பட்ட அவ்வுருவங்களில் அழிவில்லாத அருவமான உயிரோட்டம் இப்பிரபஞ்சம் முழுவதும் பரிணமித்திருக்கிறது. தேவாலயத்தின் அறுநூறு அப்பிரபல உருவங்ளில் 14 விஞ்ஞானிகளின் உருவங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த 14 விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுக்க, அதற்கான பொறுப்பேற்ற டாக்டர் ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் என்பவர், அப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளில் விஞ்ஞான சரித்திரத்தில் இடம் பெற்ற தலைசிறந்த 14 விஞ்ஞானிகளின் பட்டியலை அனுப்புமாறு கேட்டிருந்தார்.

அவ்வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒரு பட்டியலை அனுப்பி இருந்தனர். பெருவாரியான விஞ்ஞானிகள், ஆர்க்கிமிடீஸ், யூக்ளிட், கலிலியோ, கோபர்நிகஸ், ஐசக் நியூட்டன் போன்ற பிரபலங்களின் பட்டியலை அனுப்பியிருந்தனர். ஒவ்வொருவர் பட்டியலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தது. ஆனால் அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியலிலும் ஒரே ஒரு விஞ்ஞானியின் பெயர் மட்டும் தவறாமல் இடம் பெற்றிருந்தது!

அந்த தலைசிறந்த விஞ்ஞானி யாராயிருக்கும்?

மேற்கொண்டு நாம் பயணத்தைத் தொடருமுன் நம் பயணத்திற்கு விண்வெளியில் அறிவியில் ரீதியாக ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அந்த மாபெரும் அறிவியல் மேதையைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமல் நாம் பயணத்தைத் தொடர்ந்தால் அதில் பொருள் இல்லை.

ஏனெனில் 19ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை விஞ்ஞான உலகில் ஒரு குழப்பமான நிச்சயமற்ற நிலை நிலவியது.

கி.மு 300லிருந்து, இன்று வரை 2300 ஆண்டுகளாக ஜியோமிதி கணிதத்தின் தந்தை என்று போற்றப்படுகிறவர் யூக்லிட். சதுரம், வட்டம் செவ்வகம், முக்கோணம், ஐங்கரம், அறுகோணம், கனசதுரம், கனச்செவ்வகம், கோளம், உருளை பற்றி இன்றும் பள்ளிக் கணிதத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை கோட்பாடுகளும் இவருடையவை! பைபிளுக்கு அடுத்தபடியாக 13 தொகுதிகள் அடங்கிய இவரது கோட்பாடுகள் தான் உலகின் அத்தனை மொழிகளிலும் அதிக பிரதிகள் பதிப்பாகியுள்ளன!

ஆனால் பூமி தட்டையானது என்ற அனுமானத்தில் சொல்லப்பட்ட பல முக்கிய யூக்லிட் கோட்பாடுகள் பூமி உருண்டை என்று ஆனதும் தவறாகிப் போனது.

மேலும் அந்த காலகட்டத்தில் வெளிவந்த மேக்ஸ்வெல்லின் மின் காந்தவியல் கோட்பாடுகள் நியூட்டனின் இந்திரவியல் கோட்பாடுகளுக்கு மாறுபட்டிருந்தது. மாக்ஸ் பிளாங்கின் பகுதித் தத்துவம் (QUANTUM THEORY) விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராயிருந்தது. ஏற்கனவே கலிலியோ, பைசா கோபுரத்திலிருந்து இரண்டு வெவ்வேறு எடை கொண்ட இரும்பு குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட, இரண்டும் ஒரே நேரத்தில் தரையைத் தொட்டு, இது அதுவரை நிலவிவந்த அதிக எடை கொண்ட பொருள் தான் முதலில் பூமியைத் தொடும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்றுக்கும், அவருக்கு பின்னால் வந்த நியூட்டனின் இரண்டாவது விதிக்கும் மாறுபட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒலி பரவ காற்றும், அலைகள் தோன்ற நீரும் இன்றிய மையாதது போல், ஒளி பயணிக்க ஈதர் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஊடகம் பிரபஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கிறது. நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் அந்த ஊடகத்தில் மிதக்கிறது என்ற கூற்று நியூட்டன் காலத்திலிருந்து நிலவி வந்தது. இது கோபர்னிகசின் கிரகங்கள் தன்னைத்தானே சுற்றுகின்றன என்ற விதிக்கும், கிரகங்கள், நட்சத்திரங்கள் இவைகளின் இயக்கத்தால் ஒளியின் வேகம் மாறாது என்ற கோட்பாட்டிற்கும் முரண்பட்டிருந்தது.

இப்படி அவிழ்க்கமுடியாத பல புதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஒரு தேக்க நிலையை உண்டாக்கியிருந்த ஒரு காலகட்டத்தில் அம்மேதையின் கோட்பாடுகள் இந்த புதிர்களுக்கெல்லாம் விடை சொன்னதோடு மட்டுமல்லாமல், விஞ்ஞான உலகின் முகத் தோற்றத்தையே மாற்றி அமைத்தது, உலகின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியது. அவரது கோட்பாடுகள் மனித குலம் இருபதாம் நூற்றாண்டைக் கடந்து வர ஆதாரமாய் அமைந்தது என்றால் மிகையில்லை.

அணுவில் அண்டம்! அண்டத்தில் அணுத்திரள்! என்பது அவரது கோட்பாடுகளின் சாரம். அப்படிப்பட்ட ஒரு மகானைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பயணிப்பது சுவைக்குமா?

அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியலிலும் இடம் பெற்ற அந்த அறிவியல் மேதை யார்?

சரியான விடையை மின்னஞ்சல் செய்யும் வாசகர்களில் குலுக்கல் முறையில் ஐந்து நபர்களுக்கு பரிசாக அறிவியல்வீதி பதிப்பகம் சார்பில் இரண்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

(வெற்றியாளர்களின் விருப்பப்படி கீழ்க்கண்ட இரண்டு தொகுப்புகளில் ஏதேனும் ஒன்று)

1) கனவுக் கிராமம் + சுழலிறக்கை விமானம்

(அல்லது)

2) இங்கேயும் ஒரு சொர்க்கம் + ஆகாய விமானம்

உலகின் எந்த நாட்டில் இருப்பவரானாலும் அவருக்கு பரிசு பதிப்பகத்தின் செலவில் அனுப்பி வைக்கப்படும்.

பதில் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: arivialnambi@gmail.com

கடைசி தேதி: ஜனவரி 26 – பகல் 12 மணி வரை (இந்திய நேரம்)

Friday, January 1, 2010

சந்திரனுக்குப் போகலாம் வாங்க!

01-01-2010

வாசகர்களுக்கு
2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வரவிருக்கும் "சந்திரனுக்கு
ப் போகலாம் வாங்க!" கட்டுரைகள் வாயிலாக சூரியன், பூமி, சந்திரன் போன்றவற்றின் இயற்கை மைப்பு, பண்புகள், சந்திரனில் என்ன உள்ளது? சந்திரன் ஏன் வளர் பிறை வடிவமானது? என்பது பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம். அறிவியல் வீதி பதிப்பகம் மூலம் அடுத்து வெளியாகவுள்ள 'ராக்கெட்' என்ற நூலிலிருந்து தரப்படும் தகவல்கள் மூலம் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

புத்தாண்டுக் கொண்டாட்டமாக,

1) கனவுக் கிராமம்
2) இங்கேயும் ஒரு சொர்க்கம்
3) ஆகாய விமானம்
4) சூழலிறக்கை விமானம்

ஆகிய நான்கு படைப்புகளும் வாசகர்களின் கைகளில் தவழ, சென்னையில் நடைபெற்று
வரும் 33-வது புத்தகக் கண்காட்சியில்
காத்திருக்கின்றன. (Stall nos. 30 & 31)

இடம்: செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை.

தமிழக அரசின் விருது பெற்ற நாவலான கனவுக் கிராமம் நூலின் முன்னோட்டமாக முதல் பத்து அத்தியாயங்கள், உருவாகி வரும் எங்கள் வலைதளத்தில் வரும் பொங்கல் நன்னாளிலிருந்து
(14-01-2010) அனைவரும் படிக்கலாம்.



அன்புடன்,
அறிவியல்நம்பி