‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புல் உறு புன்கண்தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடைமணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணிஉகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர் புகார் என் பதியே;'
என்று கண்ணகி நீதிக்காக பாண்டிய மன்னனிடம் நின்ற காட்சிதான் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எந்த வழக்கிற்குமில்லாத வகையில் அதி முக்கியம் வாய்ந்த வழக்காக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குத் தண்டனை வழக்குக் கட்சிகள் நம் கண் முன்னே விரிந்து நிற்கிறது!
கோவலன் கொலையுண்ட நாளைப் போல் தமிழர் வரலாற்றில் ஒரு கறை படிந்த நாளாக மாற இருந்த செப்டம்பர் 9 தற்காலிகமாக வேறு ஒரு நாளுக்குத் தள்ளிப் போயிருக்கிறது.
ஆராயாமல் சொன்ன ஒரு தவறான தீர்ப்பிற்காக பாண்டிய மன்னன் ’யானே கள்வன்’ என்று தன் உயிரையே போக்கி பரிகாரம் கண்டான் அன்று!
தன் தேர்க் காலில் ஒரு பசுவின் கன்றைக் கொன்ற பாதகத்திற்கு தன் ஒரே மகனை மகன் என்றும் பாராமல் அதே தேர்க்காலில் அவனைப் பலிகொடுத்து தன் அரண்மனை ஆராய்ச்சி மணியை அடித்த ஒரு பசுவிற்கே நீதி வழங்கி நீதியை நிலைநாட்டினான் மாமன்னன் மனுநீதிச் சோழன்.
இந்த மண்ணுக்கே உரிய அந்தப் பெருமையை நிலைநாட்ட இன்று ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு நீதிகாகப் போராடியிப்பது பெருமைக்குறிய விஷயம்.
மாமன்னன் மனுநீதிச் சோழன் சிலையைத் தாங்கி நிற்கும் சென்னை உயர்நீதி மன்றமோ ஓரளவு நீதியை நிலைநாட்டி தன் பெருமையை உயர்த்திக் கொண்டுள்ளது.
‘தேரா மன்னா!’ (ஆராயாமல் தீர்ப்பளித்த மன்னனே!) என்று எடுத்த எடுப்பிலேயே மன்னன் என்றும் பாராமல் பாண்டியனை நோக்கி கண்ணகி தன் சுட்டு விரலை நீட்டினாள் என்றால் தன் கணவன் கள்வன் அல்ல என்ற நீதியை நிலை நாட்டவேண்டும் என்ற வெறி அவளுள் எவ்வளவு கனன்று கிளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்?
அந்த வெறியை இன்று ஒட்டு மொத்த தமிழகத்தின் சுட்டு விரல்களும் புதுடில்லியை நோக்கி நீண்டதைக் கண்கூடாகக் காண முடிந்து.
தமிழர் பிரதிநிதிகளால் முன்மொழியபட்டு இன்று புதுடில்லியில் ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கும் மான்புமிகு குடியரசுத் தலைவி அவர்கள் பதவியேற்றவுடன் சென்னைக்கு வந்து தமிழர்களுக்கு ந்ன்றி சொன்னது உண்மையெனில் தாங்கள் வழங்கிய தீர்ப்பை திருத்தி எழுதுவார்கள் என நம்பலாம். நம்புவோம். இதன் முதல்படியாக மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அம்மூவர் தண்டனையையும் ஆயுள் தண்டணையாக மாற்றக்கோரி இன்று ஏகமனதாகத் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றியிருப்பது ஒட்டு மொத்த தமிழர்களின் உள்ளங்களையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனல் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்களோ இத்தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறியிருந்தாலும் இதில் அவ்வளவாக நாம் கவலைப்பட ஒன்றுமில்லை.
ஏனெனில் இதே போன்றதொரு சூழல் கேராளாவில் 1957ல் கம்னியுஸ்ட் கட்சி தோழர் சி.கே பாலன் அவர்கள் மரண தண்டனை வழக்கிலும் நிலவியது. ஈ.எம் எஸ் நம்பியூதிரிபாடு அவர்கள் அமைச்சரவையில் உள்துறை மந்திரியாயிருந்த கே.வி கிருஷ்ணய்யர் அப்போது மத்திய உள்துரை அமைசராயிருந்த கோவிந்த வல்லப பந்த் அவர்களோடு போராடி சி.கே பாலனை தூக்கு மரத்தின் நிழலிருந்து மீட்டார் என்பது வரலாறு. இந்த பாலன் முன்பே மாநில ஆளுநருக்கு வேண்டுகோள் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். அது மறுக்கப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதுவும் மறுக்கப்பட்டது.
இதே கிருஷ்ணய்யர் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். அவரிடம் உள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில் இந்த வழக்கு வர அவர் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பின்னார். பாலனின் மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று எழுதி அனுப்பினார். இதற்கிடையில் தில்லியிலிருந்து கடிதம் வந்தது. பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் முன்பே நிராகரித்து விட்டதால் ஆளுநர் இதனை மறுபரிசீலனை செய்ய முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று! ஆனாலும் போராட்த்தில் இறுதியில் வென்றது கிருஷ்ணய்யர்தான். அதே போல் நமது முதல்வர்கள் அவர்களும் சாதிப்பார்கள் என உறுதியாக நம்பலாம்.
“ஆயிரம் குற்றவாளிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியாக தப்பி விடலாம். ஆனால் ஒரே ஒரு நிரபராதி சட்டத்தினால் தவறாக தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பது தான் நீதியின் தாரக மந்திரம் என்றால் என்னை நிபந்தனையின்றி விடுவியுங்கள்” என்று வாதிட்டவர் கே.வி பாலன் அவர்கள். அதன் எதிரொலிதான் வழக்கிலிருந்து விடுதலையாக பிற்காலத்தில் அவருக்கு உதவியது. அவரும் விடுதலையாகி ‘தூக்கு மரத்தின் நிழல்’ என்ற தன் சுயசரிதத்தை நுலாக எழுதி பல காலம் வாழ்ந்தார்.
’குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பெண்-காண் எல்லா!
திசை இரு-நான்கும் அதிர்ந்திடும்,
கதிரை இருள் விழுங்கக் காண்பெண்-காண் எல்லா!
விடும் கொடிவில் இர; வெம்பகல் வீழும்
கடுங் கதிர் மீன்; இவை காண்பெண்-காண் எல்லா!’
என்ற கண்ணகியின் சாபத்திற்கு மதுரை இலக்கானாது போல் தமிழர்களின் சாபத்திற்கு ஆட்பட புதுடில்லி விரும்பாது என நம்புவோம். தூக்குக் கயிற்ரை முத்தமிட இருந்த மூவரையும் சி.கே பாலனை விடுதலை செய்தது போல் விடுதலை செய்யும் என்ற நம் நம்பபிக்கை வீண் போகாது!
2 comments:
Super post
Your way of writing is super
Post a Comment