‘சென்னைக் கோட்டையில் புல் வெட்ட வேண்டும் என்றாலும், புதுடெல்லியில் இராணுவத்திடம் அனுமதி பெறவேண்டும்’ என்ற நம் அரசியல் தலைவர் களின் மனக்குறையே நாளடைவில் இந்த நிலைப்பாடை மாற்றியாக வேண்டும் என்ற குறிக்கோளில், தமிழகத்திற்கென்று ஒரு புதிய சட்டமன்றக் கட்டிடம் உருவாக்கும் லட்சியமாக மலர்ந்து மக்கள் மனதிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. கோட்டையில் போதிய இடவசதியின்மை, மிகப் பழைமையான கட்டிடம், தமிழக அரசுக்குச் சொந்தமான இடத்தில் இல்லாது இராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் இருப்பது போன்ற அசௌகரியங்கள் மேற்சொன்ன எண்ணத்திற்கு வலு சேர்த்து அதற்கான இடம் தேடலுக்கு வித்திட்டது
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் புதிய சட்டசபைக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கென்று ஒரு இடம் தேடல் ஆரம்பமானது. அவர் காலத்தில் சென்னையில் பொருத்தமான ஒரு இடத்தை அடையாளம் காணமுடியாமல் அவர் தலைநகரையே திருச்சிக்கு மாற்றி விடலாமா என்ற அளவிற்கு விவாதம் வளர்ந்து அவரது அளப்பரிய ஆசை ‘எக்ஸ்பிரஸ் அவின்யூ’ போன்ற ஒரு தோற்றப் பொலிவில் சென்னையில் நமக்கு அமைய இருந்த திட்டம் கருக்கொள்ள முடியாமல் முடிவில் அத்திட்டமே கிடப்பில் போடப்பட்டது.
தனது அரசியல் ஆசான் எம்ஜிஆர் அவர்களின் எண்ணத்தை ஈடேற்று முகமாக புரட்சித்தலைவியின் கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், மீண்டும் புதிய சட்ட சபைக் கட்டிடம் கட்ட பொருத்தமான இடம் தேடல் சென்னை யில் தொடங்கியது. எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றுவதில் உறுதி கொண்ட அவர் பலவித இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்த போதும் சளைக்கவில்லை. ஆனாலும், கடைசியில் அரசியல் குறுக்கீடுகளுக்கு அடிபணிய வேண்டிய நிர்பந்தம் காரணமாக அவரது ஆசையும் நிராசையானது.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம், கர்நாடக மாநிலத்தின் விதான் சவுதாவை விஞ்சும் வகையில் அமையுமா? பிரேசில் பராளுமன்றத்தைப் போல் ஒரு அதிநவீன மாட மாளிகையாக மலருமா? என்ற மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும் கடைசியில் ஏமாற்றத்தில் முடிந்தன.
விதான் சௌதா
பிரேசில் பாரளுமன்றம் இரவில்
இறுதியில் சென்ற கலைஞர் ஆட்சிக்காலத்தில் சட்டசபைக் கட்டிடத்திற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு அந்தக் கனவுகள் ஒருவழியாக நனவாகி, சட்டசபைக் கட்டிடமும் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், திட்டமிட்ட கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாத நிலையில் சென்ற 2010ம் ஆண்டு மார்ச் 13ல் சட்டசபைக் கட்டிடம் மட்டும் நமது பிரதமர் அவர்களால் திறப்பு விழா நடத்தி முடிக்கப்பட்டது.
இருந்த போதும் கட்டிடத்தின் அமைப்பு, செலவினங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் இப்படி அவசரகதியில் கட்டித் திறக்கப்ட பட வேண்டிய அவசியம் என்ன? என்பது போன்ற விமர்சனங்கள் அப்போதே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதோடு இப்போது தேர்தல் முடிந்து புதிய ஆட்சி மலர்ந்த நிலையில் பழைய அரசியல் காரணங்களும் சேர்ந்து கொள்ள புதிய சட்டசபை கட்டிட விவகாரம் நீதி விசாரணைக்கு உள்ளாகி பிரச்சினை பூதாகாரமாகி விட்டது. இன்று தமிழகத்தில் அதிகமாய் அலசப்படும் பொருள்களில் ஒன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மிகப் பிரமாண்டமாய்க் காட்சி தரும் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தின் எதிர்காலம் பற்றியதேயாகும். அண்ணாசாலை முகப்பில் உள்ளசட்டசபைக்கான கட்டிடத்திற்கு சுமார் 1092 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ஏறக்குறைய பாதித் தொகை செலவிடப்பட்டு விட்டது. மேற்கொண்டும் B பிளாக் எனப்படும் செயலகக் கட்டிடத்திற்காகவும்
அடுக்கு மாடி கார் பார்க் வசதிக்காகவும் மீதித் தொகை செலவிடப்பட உள்ளது. இதில் இந்த ஆண்டுக்காகற்கு 244 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், புதிய அரசு அனைத்துப் பணிகளையும் நிறுத்தி விட்டு, நிர்வாக வசதிக்காக பழையபடி கோட்டை சட்டமன்றக் கட்டிடத்திலிருந்து செயல்படத் துவங்கியுள்ளது.
புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது
இந்நிலையில் இக்கட்டிடம் வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படுமா? வாஸ்து சாஸ்திரப்படி திருத்தி அமைக்கப்படுமா? அல்லது கட்டிடம் கிடப்பில் போடப்படுமா என்பதற்கெல்லாம் விடை, நீதியரசர் தங்கராஜ் அவர்கள் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான் முடிவாகும். அதுவரை புதிய சட்டசபை மீண்டும் கனவாகிப் போகுமோ என்ற எண்ணம் அனைவர் உள்ளங்களையும் பற்றி நிற்கிறது. இக்கட்டிடத்தின் எதிர்காலமும் கேள்விக்குறி என்றாகி நாமும் பழையபடி கனவுலகத்தில் சஞ்சரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம்.
புதிய சட்டசபைக் கட்டிடம் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும் கூட கட்டிடத்திற்கு தேர்வான இடம் சாலப் பொருத்தம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாநகரின் மையத்தில் சட்டசபைக்கான இடம் தேர்வாகி இருப்பதே அதற்கான முக்கியக் காரணம் எனலாம். பொதுவாக எல்லா நாடுகளிலும் அதிகார மையம் என்பது அந்நாட்டின் தலைநகரின் மையத்தில் இருப்பதே நடைமுறை.
அரசினர் தோட்டத்தில் சட்டசபைக் கட்டிடம் செயல்பட்டால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் என்பது கூட ஒருசிலரின் வாதமாக உள்ளது. சட்டசபைக் கட்டிடத்தை எங்கு கட்டினாலும் ஒரு சில ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு மாநிலத்தின் அதிகார மையதைச் சுற்றித்தான் அனைத்து செயல்களும் எனும்போது போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. முயன்றால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எத்தனையோ வழிகள் தென்படாமலா போகும்?
எம்.ஜி.ஆரைப் போல் தலைநகரம் மாநிலத்தின் மையமான திருச்சியில் இருப்பதுதான் பொருத்தம் என்று கருதாமல், சென்னையின் மையத்தில்தான் சட்டசபைக் கட்டிடம் அமைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் புரட்சித் தலைவி அவர்கள். ஏற்கனவே சட்டசபைக்கு பொருத்தமான ஒரு இடத்தை சென்னையில்தான் அவர்கள் தேடினார்கள் என்பது கடந்த கால வரலாறு. எனவே ஓமந்தூரார் அரசினர் தோட்டம் புரட்சித்தலைவி அவர்கள் தேடலுக்கும் பொருத்தமான இடமாக அமைந்து விட்டது வரப்பிரசாதம் எனலாம். இப்பொழுது சட்டசபைக்கான இடத்தைப் பற்றிய விவாதம் தேவையற்ற ஒன்று என்ற நிலையில் கட்டிடத்தைப் பற்றி மட்டுமே பேசலாம்.
தமிழத்தின் முதல்வராக வாகை சூடிய புரட்சித்தலைவி அவர்கள் தமிழக மக்களின் எத்தனையோ ஆசைகளை நிறைவேற்ற சபதம் ஏற்றிருக்கிறார்கள். தலைநகரை புதுப்பொலிவில் காணவேண்டும் என்ற பேரவாவில் மாநகரின் அசுத்தக் கறைகளை கண்டறிய ஹெலிக்காப்டரில் வலம் வந்துள்ளர்கள்.
ஆனால் மாநகரின் மணிமகுடமாக திகழ வேண்டிய ஒரு புதிய சட்டசபைக் கட்டிடம் பற்றிய தமிழக மக்களின் மனக் குறையையும் நிச்சயம் நிவர்த்திக்க புரட்சித் தலைவி அவர்கள் தலைப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து கொள்ள இடம் இல்லை.
அண்ணாசாலை முகப்பிலுள்ள இப்போதைய கட்டிடம் மட்டுமே அவர்கள் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை என்பது மட்டும் பட்டவர்த்தனம். எனவே இக்கட்டிடத்தை சென்னையில் சர்வதேச மாநாடுகள் நடத்தும் வகையில் அரங்கத்தை மாற்றியமைக்கலாம்.
முன்பு தென்னகத்தில் சார்க் மாநாடு நடத்த மத்திய அர்சு விரும்பியபோது தென்னகத்தின் பெரிய மாநகரமாம் சென்னை யில் பொருத்தமான ஒரு இடம் இல்லாததால் சார்க் மாநாடு பெங்களூரு விதான் சௌதாவில் நடந்ததை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதோடு நூலகம், கலை அரங்கம், ஏற்கனவே இங்கு செயல்பட்ட அரசு இலாக்காக்களுக்காகவும் இக்கடிடத்தைப் பயன்படுத்தலாம்.
ராணிமேரிக் கல்லூரியில் கட்டுவதற்காக புரட்சித் தலைவி அவர்கள் எண்ணத்தில் முகிழ்த்த மாளிகையை, அரசினர் தோட்டத்தில் வாலாஜா சாலையை நோக்கிய வண்ணம் தரணி போற்றும் வகையில் ஒரு வரலாறுச் சின்னமாக புதிய சட்டசபைக் கட்டிடத்தை அவர்கள் எழுப்ப வேண்டும். எஞ்சிய பணிகளை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட பணத்திலேயே இதைக் கட்டி முடிக்கலாம். இது பெருவாரியான மக்களால் மகத்தான வெற்றிக் கனியை புரட்சித் தலைவி அவர்களுக்கு அளித்து ஆட்சி பீடத்தில் அமர்த்திய தமிழக மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக அமையும். தமிழ் கூறும் நல்லுலகில் மாமன்னன் ராஜாராஜன் பெயர் நிலைத்து நிற்பது போல் புரட்சித்தலைவிஅவர்கள் பெயரும் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதோடு வரலாற்றில் அவர்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
கட்டிடத்தை சங்கத் தமிழை நினைவுறுத்தும் வகையில் இரண்டு இதிகாசங்களைக் குறிக்க இரட்டைக் கோபுரமும், ஐம்பெருங் காப்பியங்களைக் குறிக்க ஐந்து நுழைவாயில்களையும் பத்துப் பாட்டைக் குறிக்க பத்து மாடிகளையும், இவ்வாறாக மற்ற இலக்கியங்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாம். தமிழன்னையை மகிழ்விக்கும் வகையில் தமிழ் அன்னை சிலையை நுழைவாயில் முகப்பில் அமைக்கலாம். தமிழர்களுகாக தமிழ் இலங்கியங்களின் நினைவாக கட்டப்படும் இச்சட்டசபைக் கட்டிடம் தமிழகத்தின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.
இதன் மூலம் சென்னை மாநகரின் மத்தியில் மதிப்பு வாய்ந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் பயன்படுவதோடு மக்கள் வரிப்பணமும் பாழாகாமல் தவிர்க்கப்ப்டும். இதன்மூலம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலேயே அரசின் அனைத்து இலாகாக்களும் செயல்பட ஏதுவாகும்.
வாலாஜா சாலை முகப்பில் கட்டப்பட வேண்டிய கட்டிடத்திற்கான மாதிரி வரைபடங்கள் சில:-
No comments:
Post a Comment