Friday, August 26, 2011

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் – நிலவரை ரகசியம்

மெகனாஸ் கோல்டு, மாண்டி கிரிஸ்டோ கோமான், புதையல் தீவு (Treasure Island) போன்ற மேலைநாட்டுக் கதைகள் அக்காலத்து கடல் மாலுமிகளின் பயண அனுபவங்களிலிருந்து பிறந்தவைகள். அவைகள் பெரும்பாலும் கட்டுக்கதைகள் என்றே நம்பப்படுகிறது. ஏனென்றால் கதைகளில் சொல்லப்படும் அளவிற்கு ஒரே இடத்தில் பொற்குவியல்கள் இருப்பதாக கற்பனையில்தான் வர்ணிக்க முடியும்.

தங்கத்தாலான மகா விஷ்னு சிலை
 
கிருஷ்ணர் சிலை
திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்த பத்மநாபசுவாமி கோயில் இன்று உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளது. இக்கோயில் பாதள அறைகளில் கண்டுபிடிக்கபட்ட அரிய பொற்குவியல் பற்றிய சமீபகாலச் செய்திகள் மேற்சொன்ன கதைகளில் உண்மை இருக்குமோவென நினைக்கச் செய்கிறது. கோயில் பாதாள அறைகளில் இருப்பது தங்கச் சுரங்கமா? தங்க ஆபரணச் சுரங்கமா? பொன்மலையா? என்று மலைக்க வைக்கிறது. வார்த்தைகளில் அடக்க முடியாத அளவிற்கு நம்மைப் பிரமிப்பின் உச்சத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது. இந்த செல்வக் குவியல்களை மேற்சொன்ன கதைகளோடு ஒப்பிடவே முடியாது . ஏனெனில் அவைகளை மிக மிகச் சாதாரணமாக்கி விட்டார் பத்மநாபசுவாமிகள். 

 


மேலும் அக்கதைகள் பெரும்பாலும் இந்தியாவை மையபடுத்தித் தான் இருக்கும் எனவும் நம்ப இடம் இருக்கிறது.
கஜினிமுகமது குஜராத் சோமநாதபுரம் ஆலயத்தை 17 முறை படையெடுத்து வந்து சூறையாடிச் சென்றுள்ளார். அங்குள்ள விக்கிரகங்களை குதிரைகள் மீதும் யானைகள் மீதும் ஏற்ற முடியாமல் கோயில் முற்றங்களில் போட்டு உடைத்து துண்டு துண்டுகளக்கி ஏற்றியுள்ளனர். தங்கத்தாலான கருவறை மூலவர் விக்கிரகத்தை உடைக்க மாதக் கணக்கில் ஆனதாம். இதையெல்லாம் உணர்ந்துதான் பத்மநாபசுவாமிகள் திருவுருவச் சிலையை திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் தங்கத்தால் உருவாக்கினாலும் மூலவர் மேனியைக் கருங்கல் திருப்பணி செய்து மறைத்துள்ளனர்.
கஜினிமுகமதுவுக்குப் பின்னால் வந்த அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் தங்க வேட்டைக்காக ராமேஸ்வரம் வரை வந்தவர் கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் வர்ணிப்பது போல் 
‘எழுந்தது சேனை யெழலு மிரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானு மலையும் வெறுந்தரை யான திசைகள்.
அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம்.

என எதிர்பட்ட நாடு நகரங்கலையெல்லாம் துவம்சம் செய்து விட்டுத் திரும்பினார்.
டெல்லி சுல்த்தான்களுக்குப் பின்னால் வந்த மொகலாயர்கள் போரிட்ட நாடுகள் மற்றும் சிற்றரசர்களிடமிருந்து செல்வங்களைக் கவர்ந்தாலும் நம் நாட்டிலேயே கோட்டை கொத்தளங்கள், தாஜ்மகால் போன்றவற்றைக் கட்டினர்.
ஆரம்பதில் சொன்ன ஆங்கிலக் கதைகளின் கர்த்தாக்களான ஐரோப்பியர்களோ ரிஷிமூலம் நதிமூலம் அறிந்து கடைசியாக இந்தியாவிற்கு வந்தவர்கள் இங்கே உள்ள மதிப்பு மிக்க செல்வங்கள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு சென்றனர். வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையைச் சுற்றியுள்ள காடுகளில் நூற்றாண்டுகள் பல கண்ட வைரம் பாய்ந்த மரங்களையெல்லாம் வெட்டி எடுத்த போது நம்மவர்கள் அவர்கள் மரங்களை வெட்டப் பயன்படுத்திய கருவிகளைக் கண்டு மெய்மறந்து நின்றனர்! விளைவு அடுத்த இரு நூறு ஆண்டுகளில் நமது அடிமைச் சருக்கம் ஆரம்பமாகி அது 1947 ஆகஸ்டு 15 வரை நீடித்தது.
லண்டனில் திப்புசுல்தான் வைரவாள், தங்க சிம்மாசனம் போன்ற அரிய வகைக் கலைச் செல்வங்கள் கோடிக்கணக்கான ரூபாய் வரை ஏலம் போனது. இன்னும் போகிறது. பிரிட்டிஷ் அரசியின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோகினூர் வைரம் போன்று மேலை நாடுகளின் அருங்காட்சியகங்கள் பலவற்றை அலங்கரிக்கும் அத்தனை பொக்கிஷங்களும் நம்மவர்களை வஞ்சித்து, ஏமாற்றி, ஈட்டி முனையில் கவர்ந்து செல்லப்பட்டவைகளே! 
சரித்திரம் கடந்து வந்த பாதையில் இத்தனை இடையூறுகளையும் தாண்டி இந்தப் பொக்கிஷங்களையெல்லாம் இன்று வரை பாதுகாத்து வந்த திருவாங்கூர் ராஜ வம்சத்தின் பெருமையை எவ்வளவு பாராடினாலும் தகும். இதன் மூலம் அவர்கள் புகழ் உயர்ந்து கொண்டிருப்பதில் வியப்பில்லை.. 
18 அடி நீளத்தில் அனந்த சயனம் கொண்டுள்ள மூலவர் பதம்நாப சுவாமியை கோவில் கர்ப்பகிரகத்திலுள்ள 3 வாயில்கள் வழியே பகுதி பகுதியாகத்தான் பார்க்க முடியும். 100 அடி உயரத்தில் அகண்ட 7 நிலைகளாக காட்சிதரும் கோவில் ராஜகோபுரம் திருவாங்கூர் சமஸ்தான ஆதித்தவர்ம மகாராஜாவால் கி.பி 1566ல் அடிக்கல் நாட்டப்பட்டு மார்தண்டவர்ம ம்காராஜவால் 260 ஆண்டுகளுக்குமுன் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 
கிழக்குக் கோட்டை வாயிலுக்கு உட்புறமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவள்ளுர் வீரராகவர், திருவெட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில்களில் இருப்பது போல் முலவர் இங்கும் ஐந்து தலை அனந்தத்தின் (நாகம்) மீது சயனம் கொண்ட நிலையில் காட்சிதருகிறார். கேரள பாணி திராவிடக் கலையழகுடன். மிளிரும் இத்திருத்தலம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு திருத்தலங்களில் ஒன்று. இங்குள்ள சுவர் ஓவியங்களும், கற்சிற்பங்களும் உலகப்பிரசித்தி பெற்றவை. 


 



தங்க, வைர, வைடூரியத்தால் இழைக்கப்பட்ட நகைகள், பானைகள், குடங்கள் அபூர்வ தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் பூஜைப் பொருட்கள், நவரத்தினக் கற்கள், தங்கத்தாலான ஒரு அடி உயரமுள்ள மஹா விஷ்னு சிலை (உற்சவரின் நகல்), 30 கிலோ எடையில் தங்க அங்கி, 5 கிலோ எடையில் கிருஷ்ணர் சிலை மற்றும் கலைப்பொருட்கள் என பட்டியல் நீளும் அளவிற்கு பொற்குவியலோ குவியல்! 
பொன்னாபரணங்கள், ஆரங்கள், மாலைகள் போன்றவற்றின் பல பெயர்கள் இன்று வழக்கொழிந்து விட்டன. உலகில் எந்த இடத்திலும் இவ்வளவு தங்க ஆபரணப்புதையல் இருப்பதாகத் செய்தி இல்லை.
நாடு சுதந்திரத்திரம் அடைந்த சமயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படாமல் சிதறிக் கிடந்த 600 சுதேச சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் ஒருங்கிணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய்படேல் அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராயிருந்த சித்திரைத் திருநாள் பலராமவர்மரிடம் எவ்வளவு மானியம் வேண்டும் என்று கேட்டபோது, மன்னர் எங்களுக்கு மானியம் எதுவும் வேண்டாம். பத்மநாபசுவாமி கோவிலை மட்டும் எங்கள் கட்டுப்பாட்டில் விட்டு விடுங்கள் போதும் என்று கேட்டுக் கொண்டாராம். நேர்மை மிக்க மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க சர்தார் வல்லபாய்படேல் அளித்த உறுதி மொழியின்படி மன்னர் குடும்பத்தின் ஆதிக்கத்தில் இன்று வரை இத்திருக்கோயில் உள்ளது.
திருவாங்கூர் மன்னர்களின் அன்பளிப்புகள், தங்கள் தவறுகளுக்கு பிராயச் சித்தமாக செலுத்திய பொற்காசுகள், பிறநாட்டு மன்னர்களின் பரிசுப் பொருட்கள், பிற நாடுகள் மீது படையெடுத்தபோது கவர்ந்த பொக்கிஷங்கள், பொருட்கள் போன்றவற்றிற்கு பிரயசித்தமாக கோவிலுக்குக் கொடுத்த காணிக்கைகள், மன்னர்கள், ஆங்கில அதிகாரிகள், பிரபுக்கள் போன்றோர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய போது துலாபாரம் மூலம் செலுத்திய காணிக்கைகள், பக்தர்களின் காணிக்கைகள் என பல நூறு ஆண்டுகளாக சேர்ந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோவில் நிலவரைகளில் பாதுகாத்து வைக்கப்பட்டன. இதிலிருந்து ஒரு பொற்காசு கூட அரசாங்க கஜானாவிற்கு சென்றதில்லை!
வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் நிலவறையின் ஆறு அறைகளிலுள்ள உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்து கணக்கெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவின்படி ஏழு பேர் கொண்ட ஒரு குழு தற்போது நகைகளை மதிப்பீடு செய்து வருகிறது. A, B, C, D, E, F என்று பெயரிடப்பட்ட ஆறு அறைகளில் B தவிர மற்ற 5 அறைகளும் திறக்கப்பட்டு விட்டன. 150 வருடக்களாக திறக்கப்படாத A, B அறைகளில் எஞ்சியுள்ள B அறையைத் திறக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதான் கோவிலின் பொற்களஞ்சியம் என்கிறார்கள்.
இந்நிலையில் மன்னர் குடும்பத்தினர் பழங்கால சம்பிரதாயப்படி தேவ பிரசன்னம் பார்த்து B அறையைத் திறந்தால் இயற்கை சீற்றமும் நாட்டுக்கே பெருங்கேடுகளும் விளையும் என்றும் அதைத் திறப்பவர்கள் குடும்பம் அழியும் என எச்சரித்துள்ளனர். இந்த வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர் சுந்தரராஜன் சமீபத்தில்தான் அகால மரணமடைந்தார்.
எந்த ஒரு காரியம் செய்வதென்றாலும் அதைத் தொடங்குவதற்கு முன் இறைவனின் அனுமதியைக் கேட்கும் வகையில் தேவவாக்கு பெற்ற பின்பே அக்காரியத்தை தொடங்க வேண்டும் என்பது மன்னர் குடும்பத்துச் சம்பிரதாயம். வெற்றிலை, சோழி, கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்தி தேவ பிரசன்னம் பார்க்கும் ஜோதிட நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. நடவடிக்கை களின் போது தெரிந்த சகுணங்களை முன்வைத்து புராதன விதிகளின் படி ஜோதிடக் கணிப்பு நடத்தப்பட்டது. ஆரூடத்தில் பொக்கிஷத்தின் மதிப்பீடுகளை வெளிடக் கூடாது என்றும் கோவிலுக்குத் தொடர்பில்லாத தேவைகளுக்கு பொக்கிஷத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதும் தேவ பிரசன்னம் மூலம் தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதன் உட்பொருள் நகைகள் பற்றிய முழு விவரமும் வெளி உலகுக்கு பகிரங்கப் படுத்தினால் அதன்பின் அவைகளைப் பாதுகாப்பது பெரும் பிரச்சினை என்பது மன்னர் குடும்பத்தின் கவலை. கோவிலுக்கு என்னதான் கட்டுக் காவல்கள் போட்டலும் அத்தனையும் தகர்த்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உள்ளே சென்று விடுபவர்களும் இருக்கிறார்கள். போலிகளை வைத்துவிட்டு அசலை எடுத்துச் சென்று விடும் செல்வாக்கு பெற்றவர்களும், சாமர்த்திய சாலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போதே கோவில் பொற்காசுகளை விற்றதில் முறைகேடுகள், இந்நாள் முன்னாள், கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் போன்றோர் நிலவரையிலிருந்து தங்கத்தைக் கடத்துவதாகவும், ஏற்கனவே கடத்தியிருப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மன்னர் குடும்பத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோவில் சொத்துக்களை புகைப்படம் எடுக்கவும் வீடியோ பதிவு செய்யவும் அனுமதிக்கக் கூடாது எனவும், கோவில் ஆசார வரை முறைகளில் 6வது அறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், எனவே அதைத் திறக்கக் கூடாது என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். மதிப்பீட்டுக் குழுவினரும் கோர்ட்டின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறர்கள்.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களோ பொற்குவியலை மன்னர் குடும்பத்தினர் எடுத்துச் செல்வதற்காகத்தான் இப்படி புரளியைக் கிளப்புகிறார்கள் என்றும் தேவ பிரசன்னத்தில் உண்மை இல்லை என்றும் மறுத்துள்ளார். ஏற்கனவே கோவிலுக்கு நாள்தோறும் தரிசனத்திற்குச் செல்லும் மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மர், ஒருநாள் பாயாச பிரச்சாதம் எடுத்துச் செல்லும் பத்திரத்தில் தங்க நகைகள் இருந்ததைப் பார்த்துவிட்ட பூசாரியை அவர் வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்றதாக புகார் வந்திருப்பதாகவும் முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.
எல்லாம் அறிந்த பத்மநாபசுவாமிகள் தான் நமக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்.

No comments: