மாவீரன் நெப்போலியனிடம், பிரஞ்சுப்படையில் இருக்கும் வீரர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் "என்னைச் சேர்க்காமல் 50,000 பேர்" என்பானாம்! "உங்களையும் சேர்த்தால் 50,001 அப்படித்தானே" என்றால் "இல்லை, 1,50,000, அந்த இலக்கம் 1ஐ முதலில் சேர்க்க வேண்டும்" என்பானாம்.
பிரெஞ்சுக்காரர்களைக் கேட்டால் இந்த வார்த்தைக்கு அவன் மிகவும் பொருத்தமானவன் என்பார்கள்! ஏனெனில் அவனை மாவீரன் என்று உலகுக்குப் பறை சாற்றிய துலோன் யுத்தம் (டிசம்பர், 1793), ஒரு தளபதியாக அவன் நடத்திய கன்னிப்போர்! யுத்தத்தை நடத்திய தளபதி போர்க்களத்தில் காயமடையவே, பதிலுக்கு தளபதியாக நியமிக்கப் பட்ட நெப்போலியன், யுத்தகளத்தில் தோற்று ஓடிய சொற்ப வீரர்களை ஒரு குன்றின் மீது ஒன்று திரட்டி, நகரை முற்றுகை யிட்டு நின்ற ஆங்கிலோ-ஸ்பானிய கூட்டுக் கடற்படையை குன்றின் மீதிருந்தே தனது பீரங்கிப் படையால் தாக்கி எதிரி களைச் சிதறடித்து ஓடச் செய்தவன் அவன்!
ஆனால் ஆங்கிலேயர்கள் நெப்போலியனது இந்தப் பேச்சை அவனது மமதை என்றுதான் சொல்வர்கள்! ஏனெனில் அம்மாவீரனின் கடைசி யுத்தம் வாட்டர்லூ (ஜூன் 18, 1815), அவனை அப்படித்தான் சித்தரிக்கின்றது! அவன் துலோன் யுத்தத்தில் காட்டிய தீர்க்கத்தை வாட்டர்லூவிலும் காட்டி இருந்தால் அந்த யுத்தத்தில் நியாயமாக நெப்போலியன்தான் வென்றிருப்பான். தீரமிக்க 74,000 துருப்புகளைக் கொண்டிருந்த பிரெஞ்சுப்படை, அன்று காலையிலேயே தாக்குதல் யுத்தத்தைத் துவங்கி இருந்தால், 67,000 வீரர்கள் அடங்கிய நேசப்படைகளைத் துவம்சம் செய்து வெற்றிக் கொடி நாட்டி இருக்கும்! அவனுக்கு எதிரில் நின்ற பிரிட்டிஷ் தளபதி வெலிங்டன் பிரபு தாக்குதல் யுத்தம் நடத்தாமல், பின்னால் வரும் பிரஷ்யப் படைகளை எதிர்பார்த்து தற்காப்பு யுத்தம் நடத்த, அதற்குத் துணை போவதுபோல் முதல்நாள் இரவு பெய்த மழையை காரணம் காட்டி மதியம் வரை அவனது தளபதிகளின் விருப்பத்துக்கு மாறாக நெப்போலியன் போரை நடத்தாமல் முயலைப் போல் படுத்து தூங்கி விட்டு, பிரஷ்யப் படைகள் நெருங்கி விட்ட செய்தி கேட்டு, மதியத்திற்கு மேல் அதிரடி யுத்தம் நடத்தி 40,000 வீரர்களை பலிகொடுத்தது தான் மிச்சம்! கடைசியில் ஆமைகள் கூட்டம்தான் வாட்டர்லூ யுத்தத்தில் வென்றதாக மார்தட்டிக் கொள்ள முடிந்தது!
போர்முனை என்றால் இப்படி எதிர்பாரா திருப்பங்கள் ஏதாவது நிகழ்ந்து நம்மைத் திடுக்கிடவைக்கும்தான். இப்போது எட்டி விடும் தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட தமிழ் ஈழம், இன்று எட்டாக் கனியாகி, விலகி விலகி ஓடி, முல்லைத்தீவின் கடற் கரை விளிம்பிற்கே சென்று உலகத்தின் ஒட்டுமொத்த பார்வை யையும் தன்னகத்தே ஈர்த்து நிற்கிறது. இந்த பின்னடைவு உலகெங்கும் உள்ள தமிழர் நெஞ்சங்களைக் கலங்கடித் திருக்கிறது. அடுத்து என்ன நேருமோ என்று அவலம் குருத் தெலும்பில் ஊடுறுவி குலைநடுங்கச் செய்கிறது.
இந்த நிலையில் கூட மனிதநேய உணர்வற்று, “சர்வதேச நாடுகளின் எந்த நெருக்கடிக்கும் பணிந்து போரை நிறுத்த மாட்டோம். புலிகளிடம் உள்ள இலங்கை மக்களுக்குச் சொந்தமான கடைசி அங்குல நிலத்தைக் கைப்பற்றும் வரை ஓயப் போவதில்லை” என்று புலிகள் சரணடைய 24 மணி நேர கெடு விதித்திருக்கிறார் அதிபர். இனி எத்தனை தமிழர்களின் இரத்தம் குடித்தால் அவரது பசி தீருமோ தெரியவில்லை.
எந்த அரசகுலத்தையும் சாராத சாதாரண போர் வீரன்நெப்போலியன், பிரான்சின் அதிபரானது பலரது கண்களை எப்போதும் உறுத்திக் கொண்டேயிருந்தது. நெப்போலியனை எப்படியும் வீழ்த்தியே தீருவது என்ற முனைப்பில் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா போன்ற நேசநாடுகள் வாட்டர்லூ யுத்தத்தில் வியூகம் வகுத்து செயல்பட்டது போல், தமிழ் ஈழப் பிரச்சினையை எப்படியும் நசுக்கியே தீர்வது என்ற அரசின் மூர்க்கத்தனம் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. சிங்களர்களின் ஒட்டுமொத்த விருப்பத்தின் இப்பொதைய குவிமையம் இதுதான்.
"What will save them is the speedy and efficient destruction of the LTTE that has visited this catastrophe on them" - என்று சிங்கள அரச பயங்கரவாத ஆதரவு எழுத்தாளர் டேவிட் பிளாக்கர் 'A Cause Untrue', என்ற கட்டுரையின் இறுதி வாசகங்களாக எழுத்தாளர் அருந்ததிராய்க்குப் பதில் சொல்லும் விதமாக அதிபரின் உள்ளத்தை உலகமக்களிடம் அப்படியே பிரதிபலிக்கச் செய்கிறார். ஈழத் தமிழர்களை இப்போது காக்கக்கூடிய ஒரே வழி இதுதானாம். ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் கவலைப் படுகின்றன.
இந்த பேரறிவாளர்கள் ஈழத் தமிழர்களை மனிதநேயத்துடன், நடத்தியிருந்தால் அவர்கள் ஏன் யுத்த களத்திற்கு வந்திருக்கப் போகிறார்கள்? ஆயுதம் எடுக்க வைத்தது யார்? அவர்கள்தானே!
எந்த ஒரு யுத்தத்தின் முடிவிலும் வெற்றியாளர்கள் தங்கள் ஆத்திரம் அத்தனையையும் தோல்வியுற்ற மக்கள் மீதுதான் கொட்டித் தீர்ப்பார்கள். முதல் உலகப்போர் வெற்றியாளர்கள் தோல்வியுற்ற ஜெர்மனி மீது விதித்த மூர்க்கத்தனமான தண்டனைகளும் நிபந்தனைகளும்தான் இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.
இப்போது ஈழத் தமிழர்கள் முன் உள்ள பெரிய கேள்வி இந்த இக்கட்டான நிலையில் அவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? எல்லாமே முடிந்து விட்டது. இனி என்ன இருக்கிறது. நடப்பது நடக்கட்டும் என்ற விரக்தியில் ஒதுங்கி விடுவதா? கட்டுண்டோம் பொருத்திருப்போம் காலம் மாறும்! என்று காத்திருப்பதா...???
அடிபட்ட புலிகள் சும்மா இருப்பார்களா? இரண்டாம் உலகயுத்தத்தின் போது பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டிகாலே நாட்டைப் பறிகொடுத்துவிட்டு லண்டனில் இருந்து யுத்ததை நடத்தவில்லையா? நாட்டை மீட்கவில்லையா? அதுபோல் புலிகள் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடம் மாறி எப்படியும் மீண்டும் பலம் பெற்று திரும்புவார்கள் என்று இலவு காத்த கிளியாக பொறுமை காப்பதா?
துரியோதணன் தான் புத்திகெட்டுப்போய் பாண்டவர்களுக்கு ஐந்து குக்கிராமங்கள் கூடக் கிடையாது என்று சொல்லி யுத்தம் நடத்தி அழிந்து போனான். அதிபர் மகிந்த ராஜபக்சே ஒரேயடியாய் அப்படியெல்லாம் சொல்விடுவாரா என்ன? ஏதோ சிங்களர்களுக்குப் போக மிச்சம் மீதி இல்லாமலா போகும்! கி.மு 100 லிருந்து, அதாவது 2109 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இத்தீவுவாசிகள் ஆயிற்றே நாம். அதிபர் பார்த்து சில மாட்டுக் கொட்டடிகளையாவது நமக்கு கொடுக்காமலா போய்விடுவார்? என்று சமதானம் பேசி அதிபர் பின்னால் போவதா? எத்தனை காலத்துக்குத்தான் யுத்தம் யுத்தம் என்று சகித்து சலித்துப் போவது?
எந்த வழியில் போனால் ஈழத் தமிழர்கள் யுத்தத்தின் பின் விளைவுகளிருந்து, சிங்களர்களின் மூர்க்கத்தனத்திலிருந்துதங்களைக் காப்பாற்றி இந்த இக்கட்டிலிருந்து விடுபட முடியும்? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.
எந்த ஒரு விடுதலை இயக்கத்திற்கும் இது போன்றதொரு இக்கட்டான சூழ்நிலைகள் சில சமையம் ஏற்படத்தான் செய்யும். அம்மாதிரியான சூழ்நிலைகளில் நிதானம் இழக்காமல் நாம் எடுத்து வைக்கும் அடுத்த அடிதான் இந்த தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றி வாகைசூடச் செய்யும் என்பது பல வரலாற்று நிகழ்வுகளில் புதைந்து கிடக்கும் மறுக்க முடியாத உண்மைகள்!
தமிழ் ஈழத்தில் இன்று இருக்கும் சூழ்நிலையிலும் படுகேவலமாய், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ சாம்ராஜ்யப் பெரும்படையால் தரைமட்டமாக்கப்பட்ட மதுரை மாநகர வீதிகளைப் பார்த்து கண்ணிர் விட்டுக் கதறி நின்றான் இளவரசன் சுந்தரபாண்டியன். இன்று சின்னா பின்னமாகிச் சிதைந்து கிடக்கும் கிழிநொச்சி நகர் இடிபாடுகள் மீது ராஜநடை போட்டு வீதிவலம் வருகிறார்களே அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும்!
அதே போன்றுதான் அன்று சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கனும் அவர் மகன் மூன்றாம் ராஜராஜனும் மதுரை நகர இடிபாடுகளில் திருவீதி பவனி வந்தனர்.சுந்தரபாண்டியன் தனது ராஜதந்திரத்தினாலும் புத்திக் கூர்மையினாலும் அடுத்த சில ஆண்டுகளில் வீறு கொண்டு எழுந்து, சோழ சாம்ராஜ்யத்தின் மாபெரும் தலைநகராம் கங்கைகொண்ட சோழபுரத்தின் கோட்டைக் கதவுகளைப் போய்த் தட்டி நின்றான். சோழர்களை யுத்தகளத்தில் வீழ்த்தி மதுரையை மீட்டான் என்பது வரலாறு.
நாம் முயன்றால் உலகத்தில் முடியாதது என்று எதுவும் இல்லை என்று நிரூபித்தவன் சுந்தரபாண்டியன். நெப்போலியனின் கடைசி யுத்தம் விவேகமற்ற வீரத்தினால் பலன் இல்லை என்பதற்கு உதாரணம் ஆனது.
ஒரு வழி மூடினால் மறுவழி திறக்கும் என்பர்கள். மலை குலைந்தாலும் நிலைகுலையாமல் சோழ சாம்ராஜ்யத்தை எதிர்த்து நின்று, சுந்தரபாண்டியன் எப்படி வெற்றிவாகை சூடினான்? நம் இனத்தைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர்கள் இப்போது அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய தாரக மந்திரம் இது. அது பற்றி அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.
உரிமைப்போர் நடத்தும் எந்த ஒரு இனத்து மக்களுக்கும் உலக சரித்திரத்தின் வீர அத்தியாங்கள் சில தெரிந்திருப்பது அவசியம். ஈழத் தமிழகள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களைக் காத்து அதிலிருந்து அவர்கள் மீண்டு வெளிவர, அவர்கள் முன் இருக்கும் அனைத்து வழிகளையும் திறந்து விடுவதே இக்கட்டுரையின் நோக்கம். இன்று இல்லா விட்டாலும் நாளை அவர்கள் கரை சேர கலங்கரை விளக்கு போல் இவ்வரலாறுகள் நிச்சயம் உதவும்.
2 comments:
நல்ல இடுகை
மிக நல்ல இடுகை. எந்தனை காலம் சென்றாலும் நாளையோ நானுறு வருடங்களோ சென்றாலும் நாம் இன்று அதற்காக செயற்படவேண்டும். விரைவாக முனைப்பாக. உறுதியாக ஒற்றுமையாக. ஈழத்தமிழர் தமிழ்நாட்டுத் தமிழர் என பிரிவு பார்க்காமல் ஒன்றினைந்து செயற்படுவோம்.
Post a Comment