Sunday, April 26, 2009

தமிழ் ஈழமும் மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - III


ழத் தமிழர்கள் 1948க்கு முன்பு ஒன்றுபட்ட இந்தியா-இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்களின் ஆட்சியையும் பார்த்திருக்கிறாகள். அதன் தாக்கம் 1970 வரை இரு நாடுகளிலும் நீடித்தது.

எங்கள் ஊர் வேம்பார் இலங்கைக் கடற்கரையிலிருந்து 20 கல் தொலைவில் உள்ள ஒரு இந்தியக் கடற்கரைக் கிராமம். கொழும்புத் தேங்காய் எண்ணையும், சிலோன் சாக்லெட்டுகளும் எங்கள் ஊரில் அப்போது சர்வ சாதாரணம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன வர்த்தகசபை ஒலிபரப்புதான் நான் இளமைக் காலத்தில் கேட்ட ரேடியோ நிகழ்ச்சிகள். அது பட்டியலிடும் செட்டியார் தெரு கொழும்பில் உள்ள அத்தனை வர்த்தக நிறுவனங்களும் இன்றும் என்மனதில் நிழலாடுகின்றது. ஆண்டு தோறும் இலங்கையிலிருந்து சொந்த பந்தங்களுடன் வந்து எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவையும் மாதாகோவில் திருவிழாவையும் போட்டி போட்டு நடத்தி அமர்களப்படுத்தும் பாங்கு தனி அழகு. "என்ன அண்ணே என்று இன்று ஆளே காணோம்" என்றால், "சிலோன் போய் வந்தேன்" என்பார்கள் சாதாரணமாக.

1956ல் அப்போதைய பிரதமர் S.W.R.D பண்டார நாயகா, சிங்களம் தான் இலங்கைத்தீவின் ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றி இந்த தொப்புள் கொடி உறவுக்கு சவுக்கடி கொடுத்தார். அதற்கடுத்த சாஸ்திரி-சிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தமும், கச்சத் தீவை தாரை வார்த்ததும், இந்திய இலங்கை நலன்களுக்காக தமிழர் நலன்களைப் பலிகொடுத்த நிகழ்வுகள். எங்கோ லண்டனிலிருந்து நம்மை ஆண்டவர்களுக்குத் தெரிந்த இந்த உறவின் இனிமையும் இதமும் டெல்லியில் இருப்பவர்களுக்கும் கொழும்பில் இருப்பவர் களுக்கும் தெரியாமல் போய்விட்டது.


1948 முதல் 1983 வரை ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள், செட்டியார் தெருவிலிருந்த தங்கநகை மாளிகைகளும் பிற வர்த்தக நிறுவனங்களும், கொழும்பு நகரில் இருந்து வேறு நாடுகளுக்கு வெளியேறிச் சென்ற காட்சியைத்தான் காண முடிந்தது. ரேடியோ நிலையங்கள் பள்ளி கல்லூரி மற்றும் பிற இடங்களிகளிலும் பணிபுரிந்த அத்தனை அறிவுலக பெருமக்களும் புலம் பெயர வேண்டிய கட்டயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். தமிழர்கள் வரலாற்றில் மிகவும் கசப்பான அனுபவங்கள் இவை!


அடுத்து 1983-லிருந்து இன்றுவரை தமிழ் ஈழ விடுதலைக்காக அவர்கள் போராடிப் பார்த்தாகிவிட்டது. இன்னும் ஒரு விடிவெள்ளி அவர்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.


தமிழ் ஈழம் கோரிக்கையில் எத்னையோ நியாயமான அம்சங்கள் உள்ளன. தமிழ் ஈழத்திலுள்ள நிலப்பரப்பைவிட, ஜனத் தொகையை விட, எத்தனையோ சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் சுதந்திரம் பெற்று தனி நாடுகளாகத் திகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வைக் கொடுக்கக் கூடிய அரசியல் தீர்வு இதுவாகத்தான் இருக்க முடியும். ஈழ சுதந்திரப் போராட்டத்திற்கு உலகிலுள்ள 10 கோடி தமிழர்களின் தார்மீக ஆதரவு இருக்கிறது. உயிருக்காகப் புலம் பெயர்ந்தவர்கள் கூட போராட்டம், பொருளுதவி என அத்தனையும் தியாகம் செய்கிறார்கள். ஆனாலும் தமிழ் ஈழம் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. தமிழ் ஈழம் அமைவதில் ஏன் இந்த இடர்பாடுகள்? முட்டுக் கட்டைகள்?


பதில் ஒன்றே ஒன்றுதான். நியாயமான அம்சங்களை மட்டுமே பார்த்த அவர்கள், தமிழ் ஈழம் அமைவதில் உள்ள சாதக / பாதகமான அம்சங்களை சுந்தரபாண்டியனைப் போல் அலசி ஆராய்ந்தார்களா என்றால், இல்லை என்பதுதான் பதில்.


சில நேரம் சில உண்மைகள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் அதையும் தெரிந்து, ஜீரணித்துக் கொண்டால்தான் நம் மனது நடுநிலையோடு ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும்.

அமெரிக்கா கண்டத்திலே உள்ள கியூபா என்ற சின்னஞ்சிறு தீவின் விடுதலைப் போரைப் பற்றித் தெரிந்து கொண்டால் இலங்கையில் இன்று நடக்கும் நிகழ்வுகள் நமக்குச் சில உண்மை களைப் புரியவைக்கும். ஏனென்றால் அதன் மறுஒளிபரப்பு காட்சிகள்தான் இன்று இலங்கை தீவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.


உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடி வந்தது. அதோடு கறுப்பர்களின் அடிமைத்தன விடுதலையும் சேர்ந்து கொண்டது. 1886ல் கியூபாவில் அடிமைத்தனத்தை ஒழிப்பதாக ஸ்பெயின் அறிவித்தது. ஆனாலும் போராட்டம் நிற்காமல் அது விடுதலைப் போராக உருவெடுத்து வலுப்பெற்றது. இப்போது இந்தியா இலங்கையில் நடப்பதை வேடிக்கை பார்ப்பது போலத்தான், அமெரிக்கா தன் பக்கத்து நாடு கியூபா போராட்டத்தை, வேடிக்கை பார்த்தது. ஸ்பெயின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட மறுத்து மௌனம் சாதித்து வந்தது. 1897-1898 காலகட்டத்தில் கியூபாவினர் ஆயிரக்கணகில் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்காணோர் அகதிகளாகப் புலம்பெயர்ந்த அவலமும் அடுக்கடுக்காய் அறங்கேற, அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லே, ஒன்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள், அல்லது கியூபாவை விட்டு வெளியேறுங்கள் என்று ஸ்பெயினை எச்சரித்தார். ஆனால் பலன் இல்லாமல் விடுதலை யுத்தம் தீவிரமடைந்தது. அமெரிக்கா தன் நாட்டுப் பிரஜைகளை அழைத்துக் கொள்ள MAINE என்ற யுத்தக் கப்பலை கியூபாவிற்கு அனுப்பியது. அது ஹாவனா துறைமுகத்தில் வந்து நின்ற போது மர்மமான முறையில் வெடித்து சிதறியது. ஸ்பெயின் நாட்டின் மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா போரில் தலையிட்டு கியூபாவிற்கு பாரிஸ் உடன்படிக்கையின் படி விடுதலை வாங்கிக் கொடுத்தது.


அமெரிக்கா கியூபாவில் இராணுவ ஆட்சியை அமல் படுத்தியது. அதற்கும் எதிர்ப்பு கிளம்பவே 1902ல் தேர்தல் நடந்தது. அதிபர் ஆனவர்கள் அமெரிக்கர்களுக்கு நன்றிக் கடனாக மேலும் பல சர்க்கரை ஆலைகளையும், பால் பண்ணைகளையும், எண்ணைக் கிணறுகளையும் அமைக்க அனுமதி வழங்கினார் அதிபர் பாடிஸ்டா.


அன்னியர்களுக்கு கதவை திறந்து விட்டதையும், கியூபா வளங்கள் பறிபோவதையும், கியூபாவினர் பசியிலும் பஞ்சத்திலும் வாழ்வதையும் கண்டு பொறுக்க மாட்டாமல் பிடரல் காஸ்ட்ரோ என்ற வழக்ககறிஞர் தலைமையில் 1953ல் மீண்டும் போராட்டம் வெடித்தது. அது இம்முறை வர்க்க போராட்டமாக உருமாறியது. அதிபர் ஈவிரக்கமின்றி போராட்டத்தை அடக்கினார். காஸ்ட்ரோவும் 11 தளபதிகள் மட்டுமே தப்பி மலைக்காடுகளில் ஒளிந்து அங்கிருந்து கொரில்லா யுத்தத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தனர். இராணுவ மையங்கள், ரயில்வே டிராக்குகள், பாலங்கள் என தகர்க்கப்பட்டு போராட்டக்காரர்கள் கை ஓங்க, அமெரிக்கா அவர்களுக்கு மறைமுக உதவி அளித்தது. மக்களுக்கு அதிபர் மீது இருந்த நம்பிக்கை தகர்ந்தது. அதிபர் 1959ல் நாட்டைவிட்டு ஓடினார். காஸ்ட்ரோ அதிபர் ஆனார்.


ஆனால் வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கைவைத்து பரிசோதிக்க விரும்பிய வல்லரக்கன் கதைபோல், அமெரிக்க-கியூபா அரசியல் உறவு மாறியது. கியூபா அதிபர் காஸ்ட்ரோ அமெரிக்காவின் தலைவாசலிலேயே சோஷலிசக் கடையை விரித்தார். அமெரிக்கர்களின் சர்க்கரை ஆலைகள் மற்றும் அனைத்து தொழிலகங்களையும் கியூபா அரசுடமை ஆக்கியது. பதிலடியாக அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து கியூபாவிற்கு வரும் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் தடுத்தது. பொருளாதார சீரழிவினால் நூற்றுக் கணக்கில் படகுகள் கொள்ளாத அளவிற்கு அகதிகள் ஆயிரக்கணக்கில் நாள் தோறும் அமெரிக்க கடற்கரையில் போய் இறங்கினர். எத்தனையோ படகுகள் நடுவழியில் மூழ்கின. மனிதகுல அவலத்தின் உச்சகட்டம் என்றால் அது இதுதான்.


அடுத்து கியூபா சோவியத் ரஷ்யாவின் உதவியை நாடியது. ரஷ்யா கியூபாவிற்குத் தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்ததோடு தன் ஏவுகணைகளையும் கொண்டு கியூபாவில் நிறுத்தியது. அமெரிக்கா தன் கடற்படையை கொண்டு ரஷ்ய கப்பல்களைக் கியூபாவிற்குள் நுழைய விடாமல் மறித்தது. மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் நேரிட்டது. அப்போதைய அமெரிக்க ஜனதிபதி ஜான். F. கென்னடி தலையீட்டின் பேரில் கியூபாவைத் தாக்குவதில்லை என்ற உத்தரவாதத்தை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்டு ரஷ்யா 1962ல் தன் ஏவுகணைகளை கியூபாவிலிருந்து விலக்கிக் கொண்டது.


பிடரல் காஸ்ட்ரோ இதோடு நிற்கவில்லை. அசோகர் புத்த மதத்தை எல்லா நாடுகளிலும் பரப்பியது போல் கொரில்லா யுத்தத்தை உலகின் பல நாடுகளுக்கும் பரவச் செய்தார். பொலிவியா, நிகாராகுவே அங்கோலா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு தன் பிரதம சீடர் சேகுவேரா மூலம் கொரில்லா யுத்தம் நடத்த உதவினார். புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இந்த சேகுவேரா தான் மானசீக குரு என்று சொல்வார்கள். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியும் ஒரு சோஷலிசவாதி. எனவே புலிகளுக்கு ஆதரவு அளித்தார். புலிகளும் ஆரம்ப நாட்களில் பல வெற்றிகளைப் பெற்றனர். ஆனால் திம்பு மாநாடுக்குப் பின் எல்லாமே திசைமாறிச் சென்று விட்டன.


இந்தியாவின் ஆதரவை பெற்ற நிலையில் மட்டுமே தமிழ் ஈழத்தில் புலிகளால் வெற்றிக்கொடி நாட்ட முடிந்தது. அந்த ஆதரவு இப்போது கைமாறிச் சிங்களர்களுக்கு போய் விட்ட நிலையில் தான் இப்போது புலிகளுக்குப் பின்னடைவு.


இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் ஆதரவு இல்லாமல் அங்கு எதுவுமே சாத்தியமில்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. மீண்டும் இந்தியாவின் ஆதரவை ஈழத் தமிழர்கள் பெறுவது எப்படி? இதில் உள்ள பெரிய தடைக்கல் ராஜிவ் காந்தி கொலை வழக்கு. அதை எப்படி தங்கள் வழியிலிருந்து விலகச் செய்வது?


மேலும் தனித் தமிழ் ஈழம் என்பதை கியூபா அரசியல் பின்னனியில் இந்தியாவால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இன்றைய மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு அதன் கார்பரேட் கம்பெனிகளின் நலன்தான் முக்கியமே தவிர, ஈழத் தமிழனின் கூக்குரல் அல்ல என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அமெரிக்காவின் பக்கம் இந்தியா சார்ந்திருக்கும் நிலையில் கியூபா விவகாரத்தினால் அமெரிக்காவிற்கு நேர்ந்தது போன்ற அவமானங்களை இந்தியா ஒருபோதும் விரும்பாது. அமெரிக்காவும் அதை உபதேசிக்காது.


இரண்டாவது தனித் தமிழ் ஈழம் உருவாக்கிக் கொடுப்பது இந்தியாவில் தனி நாடு கேட்டுப் போராடும் பல தீவிரவாதிகளுக்கும் வலு சேர்க்கும் அம்சம் ஆகும். பின்னாளில் தமிழ் நாட்டிலும் அத்தகைய கோரிக்கை ஏற்பட்டு தமிழ் ஈழம் அதற்கு உதவ நேர்ந்தால் இந்தியாவிற்கு அதைவிட தலைவலி என்ன இருக்க முடியும்?


அடுத்து வடக்கே தாலிபான்கள் அச்சுறுத்தல் வலுத்துவரும் நிலையில் தெற்கே ஒரு பிரச்சினையை இந்தியா விலை கொடுத்து வாங்க நினைக்குமா?


எல்லாவற்றிலும் முக்கியமாக இந்திராகாந்திக்குப் பிறகு வலுவான தலைமையோ தலைவரோ இந்தியாவில் கிடையாது. கூட்டு மந்திரிசபையின் எல்லை ஒரு வரையறைக்கு உட்பட்டது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் போது நடந்த அரசியல் கூத்துகளை உலகம் அறியும்.


இங்கே தமிழக அரசியல் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆஸ்திரியா நாட்டில் வால்டர்ஷ்லாக் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் 1889ல் பிறந்த அடால்ப் ஹிட்லருக்குத் தாய் மொழி ஜெர்மன். முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனிக்கு நேர்ந்த அவல நிலையைக் கண்டு அவன் நிலை குலைந்தான். துடி துடித்தான். அவனுள் முகிழ்த்த ஜெர்மானிய தேசியவாதம் போன்று, வாக்கு வங்கி அரசியல் நடத்தும் தமிழகத் தலைவர் களுக்கு ஒரு போதும் உதிக்க முடியாது. இவர்கள் துடித்து எழுந்தாலும் இவர்கள் குரலின் தொனியை (Decibel) அளவிடுவது புதுடில்லியே! அது எதிரொலிக்கும் எல்லை தமிழகக் கடற்கரை வரை மட்டுமே. அதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது.


பிறகு ஈழத் தமிழர்கள், மீண்டும் இந்தியாவின் நட்பைப்பெற என்ன தான் வழி?


சுந்தரபாண்டியன் புலவராக மாறுவேடம் பூண்டு சோழர்களை எதிர்த்து நாட்டு மக்களிடம் எழுச்சி மிக்க வீர உரையாற்றி அவர்களிடம் உணர்ச்சித் தீயைப்பற்ற வைத்தான். அவன் அழைப்பிற்கு அணிவகுக்கும் படை தயாரானது.


சோழர்களை எதிர்த்து கங்கைகொண்ட சோழபுரத்தைக் கைப்பற்றி ராஜராஜனை திருமுனைப்பாடியில் சிறை வைத்தான். வடக்கே தன் எதிரிகளிடம் கவனம் செலுத்தியிருந்த சோழ குலக் காப்பான் வீரநரசிம்மன் பார்வை பிறகு தெற்கே சுந்தரபாண்டியன் மீது திரும்பியது. காஞ்சியிலும், கண்ணனூரில் இருந்த தனது லட்சக்கணக்கான படை வீரர்களை மதுரை நோக்கி அணிவகுக்க தளபதிகளுக்கு உத்தரவிட்டான் வீரநரசிம்மன்.


சுந்தரபாண்டியனிடம் மீதம் இருந்தது ஒரு சிறுபடை மட்டுமே! ஆனாலும் அவன் சற்றும் கலங்கவில்லை. இரு நாட்டுப் படைகளும் காவேரிக்கரையில் மகேந்திரமங்கலம் என்னும் இடத்தில் சந்தித்தன. கடைசியில் வீரநரசிம்மனைச் சமாளிக்க சுந்தரபாண்டியன் எடுத்த ஆயுதம் தான் நட்புறவு. அது வீரநரசிம்மன் மகள் பாமினி மூலம் மண உறவாகியது. ஈழத் தமிழர்களும் இந்தியாவுடன் மலேசியாவின் சராவாக், சபா மாகாணங்கள் போன்று நிரந்தர நட்பு கொண்டு விட்டால் பிரிட்டிஷ் இந்தியா - இலங்கையின் தொப்புள்கொடி உறவு மீண்டும் மலர்ந்து மணம் வீசும் தானே!


ஈழத் தமிழர்களே, ஒருமித்து குரல் கொடுங்கள்! இந்தியாவின் 29 வது மாகாணமாக தமிழ் ஈழ மந்திரி சபையின் முதல் தீர்மானம் ‘புலிகளுக்குப் பொது மன்னிப்பு என்ற ஒருவரியின் மூலம் பிரபாகரன் கூட இந்தியாவின் இராணுவ அமைச்சர் ஆக முடியும்! ஈழத் தமிழர்களே நன்கு யோசியுங்கள்! தமிழர்கள் நாம் வாழ்ந்தாலும் ஒன்றாக வாழ்வோம்! வீழ்ந்தாலும் ஒன்றாக வீழ்வோம்!


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட நேற்று (ஏப்ரல் 25, 2009) திருவாய் மலர்ந்து எச்சரித்து விட்டார், இலங்கை பிளவுபடுவதைத் தடுக்க முடியாது என்று. பிறகென்ன வெற்றிச் சங்கெடுத்து ஊதுங்கள் பலமாக! திக்கெட்டும் கேட்கட்டும்!


இந்தக் குரல் காற்றில் கலந்தாலே போதும்! ஈழத் தமிழர்கள் இதில் வெற்றி பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். இந்தியா காஷ்மீருக்காக கோடிக்கணகான ரூபாயை அங்கு கொட்டி, பல ஆயிரம் வீரர்களை ஆண்டுதோறும் பலிகொடுத்து பாகிஸ்தான் பக்கம் காஷ்மீர் சாய்ந்து விடாமல் பார்த்துக் கொள்கிறது. அதே போல் இலங்கை அதிபரும் தமிழர்களை சமாதானம் செய்யும் அளவுக்கு நாளை தள்ளப்படுவார் என்பது மட்டும் நிச்சயம். இந்த மட்டுமாவது ஈழத் தமிழர்களுக்கு இது உடனடி வெற்றி தானே!


'அரசியல் பிழைத் தோற்கு அறம் கூற்றாவதும்...' என்ற இளங்கோ அடிகளின் பதில்தான் அதிபர் மகிந்த ராஜபக்சே அவர்களுக்கு. இரண்டாம் உலகப் போரையே வென்ற வின்சன்ட் சர்ச்சிலுக்கு அடுத்த தேர்தலில் பிரிட்டிஷ் மக்கள் கொடுத்த தீர்ப்பை அதிபரும் மறக்க வேண்டாம்!


ஈழத் தமிழர்களே எண்ணித் துணிக!


'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்'

விரைவில் !

Thursday, April 23, 2009

தமிழ் ஈழ விடுதலையும், மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - II

டக்கே தெலுங்கு ஹோய்சாலம் முதல் தெற்கே குமரி முனை வரையிலான மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் ஏகச் சக்கரவர்த்தி! ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களுக்கு அதிபதி! சோழர்களுக்கு இணையான படைபலம் கொண்ட ஹோய்சால நாட்டு மன்னன் வீரநரசிம்மனுக்கு ‘சோழர் குலக் காப்பான்’ என்ற பட்டபெயர் கொடுத்து மணவுறவு சொந்தம் கொண்டவர்! கம்பர், செயம்கொண்டார், ஒட்டக்கூத்தர் போன்ற மாபெரும் புலவர்களை ஆதரித்த வள்ளல்! மதுரையை இடுகாடாக்கி ‘மதுராந்தகன்’ என்று பெயர் சூட்டிக்கொண்டவர்! அப்படிப்பட்ட வீராதி வீரரை ‘சுந்தரபாண்டியன் படை எடுத்து வருகிறான்’ என்ற ஒரு வரிச் செய்தி அந்த வீரவேங்கை குலோத்துங்கரை மரணப்படுக்கையில் வீழ்த்தி விட்டது!

ஈழத் தமிழர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அஸ்திரம் மட்டும் இப்போது கையில் கிடைக்குமானால்.......நிச்சயம் கிடைக்கும். நாம் முடிந்தால் முடியாதது உலகில் இல்லை! சுந்தரபாண்டியன் வழியில் சென்று முயன்று பார்ப்போம்.

சொற்ப வீரர்களை மட்டுமே கொண்ட சோழ சிற்றரசின் இளவரசனுக்கு, படைதிரட்டக் கூட அனுமதி இல்லாத பாண்டியனுக்கு, இது எப்படி சாத்தியம் ஆயிற்று?

தன் நிறை, குறை எதிரியின் பலம், பலவீனம், நட்பு வட்டம் என பிரச்சினை ஒவ்வொன்றையும் அவன் அறிவுபூர்வமாக ஆராய்ந்து வள்ளுவர் காட்டிய அறம், பொருள் வழியில் அதற்கு பரிகாரம் கண்டதுதான் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருக்கும் இரகசியமாகும்.

அவன் வழியிலேயே இப்போதைய தமிழ் ஈழத்தின் அடிப்படை பிரச்சினைகளை ஆராய்வோம். முதலில் ஏன் இந்த யுத்தம் என்பதைப் பார்ப்போம்.

மொழியியல் வல்லுனர்கள் உலகில் பேசப்படும் அத்தனை மொழிகளையும் பத்து மொழிக்குடும்பங்களாகப் பகுத்து அவற்றை வகைப்படுத்தி உள்ளனர். ஒரு தனி மரத்திலிருந்து பல கிளைகளாகப் பிரிந்து வந்து, விழுதுகளாக இன்று வேர்விட்டு நிற்கும் பல மொழிகளுக்கும் ஆதியில் ஆணிவேராகத் திகழ்ந்த அந்த பத்து தாய்மொழிகளைப் பற்றியும் ஆராய்ந்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

1. இந்தோ-ஐரோப்பியன்,
2. திராவிடம்,
3. மலேயோ-பாலினேசியன்

என்ற மூன்று மட்டும் அந்த பத்து மொழிக் குடும்பங்களில் நமக்கு இப்போது முக்கியமானவைகள். அவைகளைப் பற்றி இப்போது ஒவொன்றாகப் பார்ப்போம்.

இந்த மூன்றிலும் இந்தோ-ஐரோப்பியன் மொழிகள்தான் உலகின் 47% மக்களால் பேசப்படுகிறது. இந்த மொழிக் குடும்பத்தில் 8 உட்பிரிவுகள் உள்ளன.

அ)
இந்தோ-ஈரானியன்: இந்த உட்பிரிவில், பார்சி, பாலுசி, பெங்காலி, ஒரியா, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, மற்றும் சிங்களம் போன்ற மொழிகள் அடங்கும்.


ஆ)
ஜெர்மானிக்: என்ற இந்த உட்பிரிவில் டேனிஷ், டச்சு, ஆங்கிலம், நார்வெ, ஸ்வீடிஷ், ஜெர்மன், போன்ற மொழிகளும்

இ) ரோமன்ஸ்: ரோமானியர்களின் மொழியாகிய இந்த லத்தீன் உட்பிரிவில் பிரெஞ்சு, இத்தாலியன், போர்துக்கீஸ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளும் அடங்கும். 

ஈ) பால்டொ-ஸ்லாவிக்: ரஷ்யன், ஸ்லோவாக், போலிஷ், பல்கேரியன், செக், லாட்வியன், செர்போ-குரோசியன் போன்றவை இந்த உட்பிரிவில் அடங்கும். மற்ற நான்கு உட்பிரிவுகள் அல்பேனியன், ஆர்மேனியன், கிரீக் மற்றும் செல்டிக் ஆகும்.

இரண்டாவது மொழிக்குடும்பமான திராவிட குடும்பத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் உலகின் 4% மக்களால் பேசப்படுகின்றது.

மலேயோ-பாலினேசியன் மொழிக் குடும்பத்தில் மலெசியா, இந்தோனேசியா, பிலிபைன்ஸ், நியூஜிலாந்து, மடகாஸ்கர் போன்ற மொழிகள் உலகின் 5% மக்களால் பேசப்படுகின்றது.

வட இந்திய மொழிகளும் சிங்களமும் ஒரே மொழிக் குடும்பத்தில் ஒரே உட்பிரிவின் கீழ் வரும் மொழிகளாகும். அதனால் தான் வட இந்தியர்களும், வட இந்திய பத்திரிகைகளும் தமிழ் ஈழ யுத்தத்தை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் சிங்களர்களுக்கு முழு ஆதரவான நிலைதான் அங்கு. தென்னிந்திவிலும் தமிழர்கள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். தமிழத்திலும் கூட, திரவிடர்களும் திராவிட ஆதரவு பத்திரிகைகள் மட்டுமே ஈழத் தமிழர்கள் ஆதரவு நிலை எடுத்துள்ளன. தமிழில் மற்ற பத்திரிகைகள் சிங்களர்களுக்கு ஆதரவாக செயல்படும் சூட்சமம் இதுதான். கலங்காலமாய் போரிட்டு வரும் இரண்டு வேறுபட்ட இனங்கள், ஒரு இன ஆட்சியின் கீழ் வாழ்வது சாத்தியம் இல்லை என்பது தெரிந்தும் ஆங்கிலேயர்கள் இரண்டு இனங்களுக்கும் நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டுச் செல்லாமல் சிங்களர்களிடம் ஒப்படைத்துச் சென்ற இரகசியமும் இதுதான். ஐரோப்பாவில் நடந்த யுத்தங்களின் பின்னனியை ஆராய்ந்தால் ஜெர்மானிக், ரோமன்ஸ், ஸ்லாவிக் என்ற மூன்று இனங்களுக்கு இடையே தான் பெரும்பாலான யுத்தங்கள் நடந்துள்ளன என்பது தெரிய வரும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு அடிப்படை உண்மை, இனம் இனத்தோடுதான் சேரும், சேரவேண்டும் என்பதுதான்.

மேலும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

1945 - இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த காலகட்டம் அது. உலகெங்கும் காலனி அரசுகளின் கட்டமைப்பு ஆட்டங்கண்டு விட்டன. எனவே 1945 லிருந்து 1960 ம் ஆண்டு வரையான காலத்தில் உலகெங்கும் இந்தியா உட்பட சுமார் 180 நாடுகள் காலனி ஆதிக்கத்தின் பிடியிலிருந்தது விடுபட்டுச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின.

பெரும்பாலான நாடுகள் தங்கள் பாரம்பரிய மொழி இன அடிப்படையிலும், காலனி நாடுகள் ஆண்ட பகுதிகள் என்ற அடிப்படையிலும் சுதந்திர நாடுகள் உருவாயின. பின்னர், பக்கத்துப் பிரதேசங்களும் சுதந்திரம் பெற்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு உருமாறின.

இப்போது மலேயோ–பாலினேசியன் மொழிக்குடும்பத்துக்கு வருவோம்.

டச்சுக்காரர்களிடமிருந்து இந்தோனேசியா 1949ல் சுதந்திரம் அடைந்தது. மலேயோ–பாலினேசியன் மொழிகளில் ஒன்றான 'போஹ்ரா இந்தோனேசியா', இந்தோனேசியாவின் ஆட்சி மொழி ஆயிற்று.

பிரிட்டிஷாரிடமிருந்து 1957ல் மலேயா சுதந்திரம் அடைந்தது. அக்குடும்த்தின் மற்றொறு மொழியான போஹ்ரா மலேசியா, மலேயாவின் ஆட்சி மொழி ஆனது.

ஆனால் மலேயாத் தீவுக்கூட்டங்களில் ஒன்றான போர்னியோத் தீவின் வடபகுதியில் இருந்த சராவாக், சபா மாகாணங்கள் பிரிட்டிஷார் வசம்தான் இருந்தன. அத்தீவின் தென்பகுதி டச்சுக்காரர்களிடம் இருந்ததால் அப்பகுதி இந்தோனேசிய ஆதிக்கத்தில் ஏற்கனவே வந்துவிட்டது.

சராவக், சபா மாகாணங்கள் எப்படி இயங்குவது என்ற கேள்வி எழுந்தது. அப்போதைய மலேயப் பிரதமர் துங்க அப்துல் ரஹ்மான் மலேயா தீபகற்பத்திலிருந்து கடலில் 650 கி.மீ தள்ளி போர்னியோதீவு இருந்தாலும் அந்த இரண்டு மாகாணங்களிலும் போஹ்ரா மலேசிய மொழி வழக்கத்திலிருப்பதைக் காரணம் காட்டி, மலேயாவுடன் இணைக்க வற்புறுத்தினார்.

இந்தோனேசியாவோ ஒன்றுபட்ட போர்னியோ என்ற கோஷத்துடன் தங்களிடம் இணையவேண்டும் என்றது. கடைசியில் பிரிட்டன் இரண்டு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி 80 சதம் மக்கள் மலேயாவுடன் இணைய விருப்பம் தெரிவித்ததன் பேரில் மலேயாவுடன் 1963ல் இணைந்து மலேசியா என்ற நாடாக மலர்ந்தது. ஆனால் இலங்கையில் நடந்தது என்ன? அங்கிருந்த ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்து கடைசிவரை கேட்டறியப்படவே இல்லை.


இன்றைய தமிழ் ஈழ சிக்கலுக்கான மூல காரணம் இதுதான். இந்த பின்னனியில் இப்போது தமிழ் ஈழப் பிரச்சினைக்கு வருவோம். சமீபத்தில் இந்திய அரசின் அழைப்பின் பேரில் மத்திய அரசின் உயரதிகாரிகளைச் சந்திக்க புதுடில்லி வந்திருந்த இலங்கை எம்.பி சிவலிங்கம் அவர்கள் தமிழ் ஈழ மக்களின் கருத்துக்களை அறிய ஐ. நா ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்றார். இதுதான் சரியான அணுகு முறை. பிரச்சினையின் முடிவுக்கு ஒரே தீர்வு.

ஆனால் அந்த ஓட்டெடுப்பின் அடிப்படை விஷயம் என்னவாக இருக்க வேண்டும்? அதுதான் தீர்மனிக்கப்பட வேண்டும். அந்த விஷயம் ஒட்டுமொத்த சிங்களர்களின் சப்த நாடிகளையும் ஒடுக்குவதாக இருக்கவேண்டும். அதிபர் ராஜபக்சே வெல்லவே முடியாத அலெக்சாண்டர் அல்ல என்பதையும் நாம் நிரூபிக்க வேண்டும். தன் நாட்டு அப்பாவி மக்கள் மீது இரசாயணக் குண்டுகளை வீசியவரை எப்படி மகா அலெக்சாண்டருடன் ஒப்பிட முடியும்?

இந்த அதர்ம யுத்தத்தை புலிகள் நடத்த விரும்பியிருந்தால், தமிழ் ஈழம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே மலர்ந்திருக்கும். ஆனால் வரலாறு புலிகளை மன்னித்திருக்காது. இப்போது தர்ம யுத்தத்தில்தானே புலிகள் தோற்றிருக்கிறார்கள். தர்மயுத்தம் தோற்றதாக வரலாறு கிடையாது. வரலாறு திரும்பும். ஆனால் அதிபர் ராஜபக்சேவை இரண்டாவது ஹிட்லராகத்தான் மனிதகுலம் இனிப் பார்க்கும்!

ராஜபக்சே தர்பாருக்கு முடிவுரை பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Tuesday, April 21, 2009

தமிழ் ஈழமும், மதுரை மீட்ட சுந்தரபாண்டியனும் - I

மாவீரன் நெப்போலியனிடம், பிரஞ்சுப்படையில் இருக்கும் வீரர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் "என்னைச் சேர்க்காமல் 50,000 பேர்" என்பானாம்! "உங்களையும் சேர்த்தால் 50,001 அப்படித்தானே" என்றால் "இல்லை, 1,50,000, அந்த இலக்கம் 1ஐ முதலில் சேர்க்க வேண்டும்" என்பானாம்.

 

பிரெஞ்சுக்காரர்களைக் கேட்டால் இந்த வார்த்தைக்கு அவன் மிகவும் பொருத்தமானவன் என்பார்கள்! ஏனெனில் அவனை மாவீரன் என்று உலகுக்குப் பறை சாற்றிய துலோன் யுத்தம் (டிசம்பர், 1793), ஒரு தளபதியாக அவன் நடத்திய கன்னிப்போர்! யுத்தத்தை நடத்திய தளபதி போர்க்களத்தில் காயமடையவே, பதிலுக்கு தளபதியாக நியமிக்கப் பட்ட நெப்போலியன், யுத்தகளத்தில் தோற்று ஓடிய சொற்ப வீரர்களை ஒரு குன்றின் மீது ஒன்று திரட்டி, நகரை முற்றுகை யிட்டு நின்ற ஆங்கிலோ-ஸ்பானிய கூட்டுக் கடற்படையை குன்றின் மீதிருந்தே தனது பீரங்கிப் படையால் தாக்கி எதிரி களைச் சிதறடித்து ஓடச் செய்தவன் அவன்!

ஆனால் ஆங்கிலேயர்கள் நெப்போலியனது இந்தப் பேச்சை அவனது மமதை என்றுதான் சொல்வர்கள்! ஏனெனில் அம்மாவீரனின் கடைசி யுத்தம் வாட்டர்லூ (ஜூன் 18, 1815), அவனை அப்படித்தான் சித்தரிக்கின்றது! அவன் துலோன் யுத்தத்தில் காட்டிய தீர்க்கத்தை வாட்டர்லூவிலும் காட்டி இருந்தால் அந்த யுத்தத்தில் நியாயமாக நெப்போலியன்தான் வென்றிருப்பான். தீரமிக்க 74,000 துருப்புகளைக் கொண்டிருந்த பிரெஞ்சுப்படை, அன்று காலையிலேயே தாக்குதல் யுத்தத்தைத் துவங்கி இருந்தால், 67,000 வீரர்கள் அடங்கிய நேசப்படைகளைத் துவம்சம் செய்து வெற்றிக் கொடி நாட்டி இருக்கும்! அவனுக்கு எதிரில் நின்ற பிரிட்டிஷ் தளபதி வெலிங்டன் பிரபு தாக்குதல் யுத்தம் நடத்தாமல், பின்னால் வரும் பிரஷ்யப் படைகளை எதிர்பார்த்து தற்காப்பு யுத்தம் நடத்த, அதற்குத் துணை போவதுபோல் முதல்நாள் இரவு பெய்த மழையை காரணம் காட்டி மதியம் வரை அவனது தளபதிகளின் விருப்பத்துக்கு மாறாக நெப்போலியன் போரை நடத்தாமல் முயலைப் போல் படுத்து தூங்கி விட்டு, பிரஷ்யப் படைகள் நெருங்கி விட்ட செய்தி கேட்டு, மதியத்திற்கு மேல் அதிரடி யுத்தம் நடத்தி 40,000 வீரர்களை பலிகொடுத்தது தான் மிச்சம்! கடைசியில் ஆமைகள் கூட்டம்தான் வாட்டர்லூ யுத்தத்தில் வென்றதாக மார்தட்டிக் கொள்ள முடிந்தது!

 

போர்முனை  என்றால் இப்படி எதிர்பாரா திருப்பங்கள் ஏதாவது நிகழ்ந்து நம்மைத் திடுக்கிடவைக்கும்தான். இப்போது எட்டி விடும் தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட தமிழ் ஈழம், இன்று எட்டாக் கனியாகி, விலகி விலகி ஓடி, முல்லைத்தீவின் கடற் கரை விளிம்பிற்கே சென்று உலகத்தின் ஒட்டுமொத்த பார்வை யையும் தன்னகத்தே ஈர்த்து நிற்கிறது. இந்த பின்னடைவு உலகெங்கும் உள்ள தமிழர் நெஞ்சங்களைக் கலங்கடித் திருக்கிறது. அடுத்து என்ன நேருமோ என்று அவலம் குருத் தெலும்பில் ஊடுறுவி குலைநடுங்கச் செய்கிறது.

 

இந்த நிலையில் கூட மனிதநேய உணர்வற்று, சர்வதேச நாடுகளின் எந்த நெருக்கடிக்கும் பணிந்து போரை நிறுத்த மாட்டோம். புலிகளிடம் உள்ள இலங்கை மக்களுக்குச் சொந்தமான கடைசி அங்குல நிலத்தைக் கைப்பற்றும் வரை ஓயப் போவதில்லை என்று புலிகள் சரணடைய 24 மணி நேர கெடு விதித்திருக்கிறார் அதிபர். இனி எத்தனை தமிழர்களின் இரத்தம் குடித்தால் அவரது பசி தீருமோ தெரியவில்லை.


எந்த அரசகுலத்தையும் சாராத சாதாரண போர் வீரன்நெப்போலியன், பிரான்சின் அதிபரானது பலரது கண்களை எப்போதும் உறுத்திக் கொண்டேயிருந்தது. நெப்போலியனை எப்படியும் வீழ்த்தியே தீருவது என்ற முனைப்பில் பிரிட்டன், பிரஷ்யா, ரஷ்யா போன்ற நேசநாடுகள் வாட்டர்லூ யுத்தத்தில் வியூகம் வகுத்து செயல்பட்டது போல், தமிழ் ஈழப் பிரச்சினையை எப்படியும் நசுக்கியே தீர்வது என்ற அரசின் மூர்க்கத்தனம் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. சிங்களர்களின் ஒட்டுமொத்த விருப்பத்தின் இப்பொதைய குவிமையம் இதுதான்.


"What will save them is the speedy and efficient destruction of the LTTE that has visited this catastrophe on them" என்று சிங்கள அரச பயங்கரவாத ஆதரவு எழுத்தாளர் டேவிட் பிளாக்கர் 'A Cause Untrue',  என்ற கட்டுரையின் இறுதி வாசகங்களாக எழுத்தாளர் அருந்ததிராய்க்குப் பதில் சொல்லும் விதமாக அதிபரின் உள்ளத்தை உலகமக்களிடம் அப்படியே பிரதிபலிக்கச் செய்கிறார். ஈழத் தமிழர்களை இப்போது காக்கக்கூடிய ஒரே வழி இதுதானாம். ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் கவலைப் படுகின்றன.

 

இந்த பேரறிவாளர்கள் ஈழத் தமிழர்களை மனிதநேயத்துடன், நடத்தியிருந்தால் அவர்கள் ஏன் யுத்த களத்திற்கு வந்திருக்கப் போகிறார்கள்? ஆயுதம் எடுக்க வைத்தது யார்? அவர்கள்தானே! 

எந்த ஒரு யுத்தத்தின் முடிவிலும் வெற்றியாளர்கள் தங்கள் ஆத்திரம் அத்தனையையும் தோல்வியுற்ற மக்கள் மீதுதான் கொட்டித் தீர்ப்பார்கள். முதல் உலகப்போர் வெற்றியாளர்கள் தோல்வியுற்ற ஜெர்மனி மீது விதித்த மூர்க்கத்தனமான தண்டனைகளும் நிபந்தனைகளும்தான் இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது.


இப்போது ஈழத் தமிழர்கள் முன் உள்ள பெரிய கேள்வி இந்த இக்கட்டான நிலையில் அவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? எல்லாமே முடிந்து விட்டது. இனி என்ன இருக்கிறது. நடப்பது நடக்கட்டும் என்ற விரக்தியில் ஒதுங்கி விடுவதா?  கட்டுண்டோம் பொருத்திருப்போம் காலம் மாறும்! என்று காத்திருப்பதா...???


அடிபட்ட புலிகள் சும்மா இருப்பார்களா? இரண்டாம் உலகயுத்தத்தின் போது பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டிகாலே நாட்டைப் பறிகொடுத்துவிட்டு லண்டனில் இருந்து யுத்ததை நடத்தவில்லையா? நாட்டை மீட்கவில்லையா? அதுபோல் புலிகள் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு இடம் மாறி எப்படியும் மீண்டும் பலம் பெற்று திரும்புவார்கள் என்று இலவு காத்த கிளியாக பொறுமை காப்பதா?


துரியோதணன் தான் புத்திகெட்டுப்போய் பாண்டவர்களுக்கு ஐந்து குக்கிராமங்கள் கூடக் கிடையாது என்று சொல்லி யுத்தம் நடத்தி அழிந்து போனான். அதிபர் மகிந்த ராஜபக்சே ஒரேயடியாய் அப்படியெல்லாம் சொல்விடுவாரா என்ன? ஏதோ சிங்களர்களுக்குப் போக மிச்சம் மீதி இல்லாமலா போகும்! கி.மு 100 லிருந்து, அதாவது 2109 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இத்தீவுவாசிகள் ஆயிற்றே நாம். அதிபர் பார்த்து சில மாட்டுக் கொட்டடிகளையாவது நமக்கு கொடுக்காமலா போய்விடுவார்? என்று சமதானம் பேசி அதிபர் பின்னால் போவதா? எத்தனை காலத்துக்குத்தான் யுத்தம் யுத்தம் என்று சகித்து சலித்துப் போவது?


எந்த வழியில் போனால் ஈழத் தமிழர்கள் யுத்தத்தின் பின் விளைவுகளிருந்து, சிங்களர்களின் மூர்க்கத்தனத்திலிருந்துதங்களைக் காப்பாற்றி இந்த இக்கட்டிலிருந்து விடுபட முடியும்? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.


எந்த ஒரு விடுதலை இயக்கத்திற்கும் இது போன்றதொரு இக்கட்டான சூழ்நிலைகள் சில சமையம் ஏற்படத்தான் செய்யும். அம்மாதிரியான சூழ்நிலைகளில் நிதானம் இழக்காமல் நாம் எடுத்து வைக்கும் அடுத்த அடிதான் இந்த தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றி வாகைசூடச் செய்யும் என்பது பல வரலாற்று நிகழ்வுகளில் புதைந்து கிடக்கும் மறுக்க முடியாத உண்மைகள்!


தமிழ் ஈழத்தில் இன்று இருக்கும் சூழ்நிலையிலும் படுகேவலமாய், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ சாம்ராஜ்யப் பெரும்படையால் தரைமட்டமாக்கப்பட்ட மதுரை மாநகர வீதிகளைப் பார்த்து கண்ணிர் விட்டுக் கதறி நின்றான் இளவரசன் சுந்தரபாண்டியன். இன்று சின்னா பின்னமாகிச் சிதைந்து கிடக்கும் கிழிநொச்சி நகர் இடிபாடுகள் மீது ராஜநடை போட்டு வீதிவலம் வருகிறார்களே அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும்! 


அதே போன்றுதான் அன்று சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கனும் அவர் மகன் மூன்றாம் ராஜராஜனும் மதுரை நகர இடிபாடுகளில் திருவீதி பவனி வந்தனர்.சுந்தரபாண்டியன் தனது ராஜதந்திரத்தினாலும் புத்திக் கூர்மையினாலும் அடுத்த சில ஆண்டுகளில் வீறு கொண்டு எழுந்து, சோழ சாம்ராஜ்யத்தின் மாபெரும் தலைநகராம் கங்கைகொண்ட சோழபுரத்தின் கோட்டைக் கதவுகளைப் போய்த் தட்டி நின்றான். சோழர்களை யுத்தகளத்தில் வீழ்த்தி மதுரையை மீட்டான் என்பது வரலாறு.


நாம் முயன்றால் உலகத்தில் முடியாதது என்று எதுவும் இல்லை என்று நிரூபித்தவன் சுந்தரபாண்டியன். நெப்போலியனின் கடைசி யுத்தம் விவேகமற்ற வீரத்தினால் பலன் இல்லை என்பதற்கு உதாரணம் ஆனது.


ஒரு வழி மூடினால் மறுவழி திறக்கும் என்பர்கள். மலை குலைந்தாலும் நிலைகுலையாமல் சோழ சாம்ராஜ்யத்தை எதிர்த்து நின்று, சுந்தரபாண்டியன் எப்படி வெற்றிவாகை சூடினான்? நம் இனத்தைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர்கள் இப்போது அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய தாரக மந்திரம் இது. அது பற்றி அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.


உரிமைப்போர் நடத்தும் எந்த ஒரு இனத்து மக்களுக்கும் உலக சரித்திரத்தின் வீர அத்தியாங்கள் சில தெரிந்திருப்பது அவசியம். ஈழத் தமிழகள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களைக் காத்து அதிலிருந்து அவர்கள் மீண்டு வெளிவர, அவர்கள் முன் இருக்கும் அனைத்து வழிகளையும் திறந்து விடுவதே இக்கட்டுரையின் நோக்கம். இன்று இல்லா விட்டாலும் நாளை அவர்கள் கரை சேர கலங்கரை விளக்கு போல் இவ்வரலாறுகள் நிச்சயம் உதவும்.