Sunday, January 6, 2008

கனவுக் கிராமம் - ஒரு அறிமுகம்...

விஞ்ஞான தொலைத்தொடர்பு சாதனங்களால் உலகம் ஒரு கிராம அளவில் சுருங்கிவிட்ட இக்காலத்தில் உலக ஞானம் நமக்கு எத்தனை அவசியம் என்பது சொல்ல வேண்டியது இல்லை...வெளிநாடுகளுக்கு நேரில் சென்று அந்நாடுகளின் கலாச்சாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவற்றை அறிந்து வந்து எழுதுவது என்பது பொருளாதார ரீதியில் நமக்கு கட்டுபடியாகாத ஒன்று...அந்நாடுகளுக்கு போகாமல் நாம் எழுத முடியுமா? என்று என் மனதில் எழுந்த கேள்விக்கு விடைதான் "கனவுக் கிராமம்"...

இதற்காக உலகைச் சுற்றுவதர்க்குப் பதிலாக சில நூலகங்களை வலம் வந்தேன்...எதிர்பார்த்ததற்கும் மேலாகவே லண்டன் நகரைப் பற்றி ஒவ்வொரு சதுர மீட்டருக்கும், பிரிட்டனைப் பற்றி ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் தகவல்கள் கிடைத்தன...

பல கதைகளில் சொல்லப்பட்ட கற்பனைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உண்மைகளாகி உள்ளன...முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட பிரெஞ்சு தத்துவ ஞானி மாண்டஸ்க்கியூவின் கூற்று இன்று உண்மையாகி ஐரோப்பா கண்டமே ஒரே நாடாக மாறி அடுத்த நூற்றாண்டில் காலடி வைக்க இருக்கிறது...இதேபோல இந்நூலின் வாயிலாக நான் அப்போது வலியுறுத்திய பல கருத்துக்கள் இன்று உண்மையாகி வருகின்றது...

இலக்கிய ரீதியில் தம் ஆற்றலால் அறிவுத்திறத்தால் தமிழன்னைக்கு மாலைகளாகச் சூட்டி மகிழ்ந்த மாமேதைகள் கொலுவீற்றிருக்கும் இத்தரணியில் அறிமுகமே இல்லாத நான் ஒரு சிறு மலர் கொண்டு இந்நாவலின் வாயிலாக அன்னைக்கு அர்ச்சனை செய்திருக்கிறேன்...