Tuesday, January 31, 2017

மெரினா புரட்சி - தலைவனில்லாத காவியம்!

(Jallikattu: The Voice of Marina - Pride and prejudice)


ஜல்லிக்கட்டுப் போராட்டம்!
பனி கொட்டிய தைமாதம்!
மெரினா! வீரத்தின் விளை நிலம்!
அலைகடல் தாண்டிப் பரவிய வேகம்!
உலகத் தமிழர்களே ஒன்று கூடி,
உலகம் நமது என்று சிந்துபாடி
வென்றெடுத்த வீர விளையாட்டு!  
இதோ அவனியாபுரத்தில் களம் விரிகிறது!


ரு இனம் தான் கடந்து வந்த பாதையைப் பல்வேறு விதமான கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மூலமாகத்தான் அதன் பாரம்பரியத்தைப் பேணிக்காத்து வருகிறது. உலகில் சீனர்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காது பேணிக்காத்து வருகின்றனர். அவர்களை அடுத்து 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்ள இருக்கும் ஒன்றிரண்டு இனங்களில் தமிழினமும் ஒன்று. ஒரு இனத்தின் பாரம்பரியத்தை அழிக்க முயல்வது அந்த இனத்தை அழிப்பதற்குச் சமம்! அந்த இனத்திற்கு எதிரான போர் எனலாம்!. பரம்பரியத்தை அழிக்க முயற்சிப்பதை எந்த ஒரு இனமும் விரும்புவதில்லை என்பதைத்தான் கடந்த 17-01-2017 முதல் 23-01-2017 வரை உலகம் முழுக்க நடந்த பெருந்திரள் போராட்டத்தில் நாம் பார்த்தோம். இது ஒரு இனத்தின் சுயமரியாதைக்கான போராட்டம். ஒரு ஆட்சியின் ஆன்மாவும் மூளையும் ஒட்டு ஒத்தமாக அந்த இனத்தின் நலன் சார்ந்துதான் இயங்க வேண்டும் என்பதை உணர்த்த நடந்த பண்பாட்டுப் புரட்சி!


பிரான்ஸ் தேசத்தில் 1789-ல் பதினான்காம் லூயி மன்னன் தன் ஆடம்பரமான செலவினங்களுக்காக அதிக வரி விதித்தான். அதற்கு அங்கீகாரம் கோர அந்நாட்டில் அன்று வழக்கத்திலிருந்த மதகுருக்கள் சபை, பிரபுக்கள் சபை, மக்கள் சபை என்ற மூன்றும் அடங்கிய ’எஸ்டேட்ஸ் ஜெனரல்’ எனப்படும் பொதுசபையைக் கூட்டினான். ஏற்கனவே அதிக வரிவிதிப்பால் நொந்து போயிருந்த மக்களைக் காக்க  ’மக்கள் சபை’ மட்டும் அதற்கு அனுமதி மறுத்து, புதிதாக ’நேஷனல் அசெம்ளி” என்ற ஒரு தேசிய அமைப்பைக் கூட்டி மன்னரின் அதிகாரங்களைக் குறைக்க முயலவே, வெடித்தது பிரஞ்சுப் புரட்சி! புரட்சியாளர்கள் ஜூலை 14, 1789-ல் பாரிஸ் நகருக்குள் புகுந்து, கோட்டை கொத்தளங்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.  (The Storming of the Bastille). அந்நாளை இன்றும் ’பாஸ்டைல் தினம்”  என்று கொண்டாடி வருகின்றனர்


மெரினாவில் .இந்தத் தன்னெழுச்சி போராட்டத்திற்கு காரணமே மத்திய மாநில அரசுகள் மீதான கோபம்தான். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, ஈழத்தமிழர் விவகாரம், மீனவர் விவகாரம், கெயில், மீத்தேன், நீட் தேர்வு என இப்படித் தொடர்ந்து அனைத்து தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளிலும் மத்திய அரசின் அலட்சியமும் பாராமுகமும், தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனமும்தான் இத்தகைய எழுச்சிக்கு வித்திட்டது.


தைப்பொங்கலுக்கு அரசு விடுமுறை கிடையாது. வேண்டுபவர்கள் விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு பொங்கலுக்கு முன்பே தமிழர்கள் மனதில் கோபம் கொப்பளிக்க வைத்தது.  இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டும் இல்லை. தங்கள் தற்சார்பு வாழ்க்கையின் மீது அடிமேல் அடிவிழுந்த ஆற்றாமையில் வெடித்ததுதான் இந்தப் போராட்டம். தமிழ், தமிழர் நலன்களைப் பின்னுக்குத் தள்ளி மத்திய அரசு நடந்து கொண்டிருக்கும் விதத்தில் எரிச்சலும் கோபமுமான அழுத்தத்தின்  வெளிப்பாடுதான் இது. கோவன் போன்ற தெருகூத்துப் பாடர்களுக்குக் கூட கடந்த காலங்களில் அனுமதியில்லை போன்ற காரணங்களும் வெறுப்பாகப் புகைந்து கொண்டிருந்தது.


50 லட்சம் மக்களுக்கு உணவு அளிக்ககூடிய அவினாசி - அத்திக்கடவு திட்டம் கடந்த 50 ஆண்டுகளாக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைப்போல் மேலும் பல சிறந்த திட்டங்களையும் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு விவசாயிகளுக்காக எதுவும் செய்யாமல், ஓட்டுக்காக தேர்தல் நேரத்தில் கொடுக்கும் சில நூறு ரூபாய்களுக்காகக் கையேந்தும் நிலையில் அவர்களை வைத்திருப்பதே ஒரே நோக்கம்.


’நீரின்றி அமையாது உலகு’ என்று உலகிற்கே உபதேசித்தவன் தமிழன். இப்போது நீர் நிலைகளைக் காக்கத் தவறிவிட்டான். பக்கத்து மாநிலங்கள் பாசனத்துக்காக நதிகளின் குறுக்காக ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டும்போது, விளைநிலங்களை கட்டிடங்களாக்கவும், கட்டிடங்களுக்காக ஆற்று மணலையும் நாம் விற்கிறோம். வசிப்பிடங்களுக்காக நிலத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மாஸ்கோவில் அனைத்துக் கட்டிடங்கங்களும் 12 மாடிகளாகவும் சிங்கபூரில் வானளாவிய கட்டிடங்களாகவும் பார்க்கிறோம். நவீன தொழில் நுட்பம் குறைந்த செலவில் அழகான வீடுகளைக் கட்ட துணை நிற்கிறது!


தஞ்சைத் தரணியில் விளைந்த நெல்மணிகள்தான் சோழர்களின் பொற்காலத்திற்கும் அனைத்து வளத்திற்குமான மூலகாரணம். எனவேதான் வளத்திற்கு காரணமான காவிரி நதி தீரத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்டவே சோழ – சாளுக்கிய போர்கள் பல இடையறாது நடந்தன என்பது வரலாறு. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் தங்கள் சுயநலனுக்காக தமிழக நதிகள் மீது நமக்கிருக்கும் பாத்தியதை அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு, தஞ்சைத்தரணியைப் பாலைவனம் ஆக்கிவிட்டனர். அதுதான் விவசாயிகளின் உள்ளக் குமுறலுக்கும் தொடர் மரணத்துக்கும் காரணம்.


இந்நிலையில் அமைதி வழி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அலங்காநல்லூரில் தடியடி என்ற செய்தி இவ்வாறு எகிறிக்கொண்டிருந்த கோபத்திற்குச் சிறுபொறி போல் ஆனது. அலங்காநல்லூர் ஒட்டுமொத்த தமிழகத்தின் குவிமையம் ஆக., பலதரப்பினர் ஆதரவும் பெருகியது. ஜல்லிக்கட்டு கிடையாது என்று உச்சநீதிமன்றமும் கைவிரிக்கவே, பெருநெருப்பாகப். பற்றிக்கொண்டு இந்தியாவையே ஏன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்புப் போராட்டம்


சரித்திரத்திலேயே இவ்வளவு வேகமாக ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது மாணவர்களின் எழுச்சிக்குக் கிடைத்த வெற்றி. இது அவர்கள் போராட்டத்திற்குக் கிடைத்த பெருமை என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்கள். தலைவனே இல்லாத இந்தப் போராட்டம்தான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த மாநில அரசையும் வெற்று வெறும் சால்சாப்புகளையும் பசப்பு வார்த்தைகளையுமே சொல்லிக்கொண்டிருந்த மத்திய அரசையும் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்க நிர்பந்தித்தது


வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடிஉயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயரும்


என்றார் மூதாட்டி அவ்வையார். நீர் நிலைகளைப் பேணுவதும்  மண் வளம் காப்பதும் நமது தலையாய கடமைகளில் ஒன்று.  


‘விலங்குகள் நலம்’ பேணுவதற்கென்று மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் தவிர, பீட்டா, மேனகா காந்தியின் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ், புளூ கிராஸ்  போன்று 12க்கு மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. ’பீட்டா’ செயல்பாடுகளின் மறுபக்கத்தை அமெரிக்காவிலேயே ‘ஹாஃபிங்டொன் போஸ்ட்’ என்ற பத்திரிக்கை அம்பலப்படுத்தியது. சூழலியலாளர் நக்கீரன் போன்ற  எழுத்தாளர்களும் இங்கே அதன் கோர முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளனர். பீட்டா வசம் வரும் விலங்குகளை அதன் உரிமையாளர்கள் 15 தினங்களுக்குள்  உரிமை கோரவில்லை எனில் அந்த விலங்குகள் வதைக்கப்படும் விதம் ஹிட்லரின் வதை முகாம்களுக்கு இணையானது. சரி, விலங்குகள் நலத்தைப் பற்றிப் பேசவே அறுகதையற்ற பீட்டா விற்கு தமிழகத்தில் என்ன வேலை?


தமிழகம் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலம். இதற்கான காரணம் நமது பாரம்பரிய மிக்க நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிகட்டுக் காளைகள். காங்கேயம் காளைகள் போன்ற இனங்கள் சர்வதேச தரத்திலானது. மாடுகளில் கலப்பினங்களைப் புகுத்தவும், வியாபார நோக்கத்திற்காவும் வெளிநாட்டு கால்நடைத் தீவன நிறுவனங்கள் பலனடையவுமே அவைகள் இங்கு செயல்படுகின்றன. ஜல்லிக்கட்டுக் காளைகளை ஒழிப்பதன் மூலம் மாடுகள் இணைசேர்வதைத் தடுக்க முடியும். அதன் பிறகு ஹார்மோன்களைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் தரமற்ற பாலை நமது வருங்கால சந்ததியினருக்குக் கிடைக்கச் செய்யவே பிட்டா பாடுபடுகிறது. இதுதான் ஜல்லிக்கட்டை ஒழிப்பதாற்காக அவர்கள் மல்லுக்கு நிற்கும் ரகசியம்.


மாடுகளில் நாட்டு இனங்களை ஒழித்துவிட்டு அவர்கள் புகுத்த நினைக்கும் பாலின் தரத்தைப் பார்க்கலாம்.


தமிழகத்தில் பால் உற்பத்தி என்பது வேளாண் உற்பத்தியில் ஒரு உபரிப் பொருள். கால் நடைகளின் உணவு என்பது வேளாண்மையில் தானியங்களை நாம் எடுத்தது போக மிஞ்சும் புல், நாற்று, வைக்கோல் போன்றவைகளும் தானியங்களில் நாம் உண்டது போக மிஞ்சுவன மட்டுமே.


ஆனால் மேலை நாடுகளில் கால்டைகளுக்கென்றே தனியாகப் புல் வளர்க்கப்படவேண்டும். அதற்கென தனி நிலம் வேண்டும். தீவனமாக நாம் கொடுக்கும் பருத்தி விதை, புண்ணாக்கு போன்றவற்றிற்குப் பதில் அவர்கள் பசுக்களுக்குப் பால் உணவைத் திணிக்கிறார்கள். அதிக பால் உற்பத்திக்காக ஹார்மோன்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் மேலை நாட்டு குளிர்மண்டல சீமைப்பசுக்கள் சுரக்கும் பாலில் ’லாக்டோஸ்’ எனப்படும் சக்கரையின் அளவு அபரிமிதமாக இருக்கிறது. நாமோ லாக்டோஸ்-சகிப்புதன்மையற்றவர்கள். விளைவு, சர்க்கரை நோய்.


மொத்தத்தில் ’வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் இந்தியாவில் ’பால் வெள்ளம்’ (Operation Flood) அமல் படுத்தப்பட்டதின் பலன் பெண்கள் வசம் இருந்த இந்த பால், நெய், மோர் போன்ற சிறு வணிகப் பொருளாதாரம், கார்பரேட் நிறுவங்களான நெஸ்லே, காட்பரீஸ், குவாலிடி வால்ஸ் போன்ற பகாசுர கம்பெனிகளுக்கு தாரைவார்த்திருப்பது தான். இதன் மூலம் அவற்றின் பங்குகள் எகிற, தெரிந்தோ தெரியாமலோ நாம் காரணம் என்கிறார் சூழலியலாளர் நக்கீரன் அவர்கள்.


னத்துறை பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வனவிலங்குகளை வேட்டையாடுவதோ வேட்டையாட முயற்சிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. நடிகர் சல்மான்கான்  மான்வேட்டையாடினார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது இப்பிரிவின் கீழ்தான்.


1960  மிருகவதை சட்டத்தின்படி மனிதர்களால் வதைபடுத்தப்படும் மற்றும் அதற்குள்ள வாய்ப்புள்ள விலங்குகள் பட்டியலிடப்பட்டு அவை காட்சிப்படுத்தப்பட்ட, கட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் எனப் பட்டியலிடப்பட்டது.
மத்திய அரசின் சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களில் மக்கள் பார்வையிட அனுமதிக்கும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் எனப்படுகிறது.


2.3.1991-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம் மற்றும் நாய் ஆகியவை கட்சிப்படுத்த தடைசெய்யப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டன. மத்தியஅரசு 2011-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்தப்பட்டியலில் காளையையும் சேர்த்ததால் ஜல்லிகட்டுக்குச் சிக்கல் ஏற்பட, 2014ல் சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடை விதித்து விட்டது.
இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தால் இனி ஜல்லிகட்டு நடத்த எந்தபிரசினையும் எழ வாய்ப்பிள்ளை
மிகப்பெரிய போராட்டத்தில் சில ஆர்வக்கோளறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.. அணி அணியாய் மக்கள் திரள தமிழகமெங்கும் பெருந்திரள் கூட்டம் அலை’மோதியது! வெளிநாட்டினரும் இப்பாரம்பரிய பண்பாட்டு போராட்டத்திற்குப் பின்னே அணிவகுத்தனர். மிஸ்டர் காளை’ தான் போராட்ட நாயகன்!


நடந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது போராட்டத்தை நசுக்க அரசும் அதிகாரவர்க்கமும் காத்திருந்தது போல் தெரிகிறது. மாணவர்களிடையே எற்பட்ட சில குழப்பங்களை சட்டம் ஒழுங்குப்பிரச்சினையாக்கி பொதுமக்களின் ஆதரவை இழக்க வைக்க சிலர் முயற்சி மேற்கொண்டனர். எதிர்காலத்தில் இத்தயகைய போராடங்களில் யாரும் பங்கெடுக்கக் கூடாது என பயமுறுத்தவே போராட்டத்தைக் கைவிட வேண்டினார். 22-ம் தேதி.கடற்கரைச் சாலையில் மர்ம கும்பல் ஊடுருவ. இறுதியாக மாணவர் புரட்சியை வன்முறைக்களமாக மாற்ற முயன்றாலும் இறுதியில் வென்றது மாணவர்களே!
.
மெரினாவை சுத்தப்படுத்துதல், போக்குவரத்தைச் சரி செய்தல் என சுயகட்டுப்பாட்டுடன் இருந்த மாணவர்கள் போராட்டத்தை  அடக்க கடற்கரைசாலையில் மின்சாரத்தைத் துண்டித்தனர். ஒலி அலைவரிசையும் துண்டிக்க ஜாமர் கருவிகளைப் பயன்படுத்த முயன்ற காவல்துறையின் முயற்சியை, ஐடி மாணவர்கள் முறியடித்துள்ளனர். செல்போன்களின் டார்ச் வெளிச்சம் மெரீனாவெங்கும் நட்சத்திரங்களைப் போல் ஜொலித்தன. தனியார் நிறுவனங்களும் தனிநபர்கள் சிலரும் மாணவர்கள் செல்போன்களுக்கு சார்ஜ் செய்து கொடுத்துள்ளனர்.


முல்லைத் திணையில் ஆநிரை கவர்தல் என்பது பண்டைய போர்முறைகளில் ஒன்று. எனவே ஊருக்கு வெளியே இருக்கும் மாட்டு மந்தையைக் காப்பது மேய்ப்பவனின் கடமையாதலால் ஒரு போர் வீரனின் தீரத்துடன் அவன் திகழவேண்டியவன் ஆனான். காளைகளை அடக்கவும் காளைகளுக்கு வீர் விளையாட்டை கற்பிக்கவும் ஏர்தழுவுதல் போன்ற வீர விளயாட்டுகள் அவனுக்கு அவசியம் ஆதலால் புலவர்களே அதைப் போற்றிப் புகழ்ந்தனர். இளைஞர்களுக்கு அவ்விளையாட்டில் ஆர்வம் ஏற்பட காளைகளை அடக்குவோருக்கு தம் மகளையே பரிசாகப் பறைசாற்றினர். மங்கையரும் காளைகளை அடக்குவோருக்கே மாலை சூடி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் மாடுகளின் கொம்பில் துணியில் சல்லிக் காசுகளை வைத்துக் கட்டி வைத்தனர்  மாட்டுக் கொம்பிலிருந்து காசுகளை எடுப்பவர்கள் வீரர்களாக போற்றப்படவே. ’ஏர்தழுவுதல்’ சல்லிக்கட்டு என்றாகி பிற்காலத்தில் ஏர்தழுவுதல் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு ஆனது.


சீனாவில் மங்கோலியப் படையெடுப்பைத் தடுக்க. எழுப்பப்பட்டதுதான் சீன நெடுஞ்சுவர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் அமெரிக்கர்களின் ஊடுருவலைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் ஒரு சுவர் எழுப்ப தனது முதல் கையெழுத்தைப் பதித்திருக்கிறார். மெரீனாவில் இருக்கும் காவல் சுவரைப் பார்க்கும் போது மெரினாவிலும் ஒரு சுவர் வந்து விடுமோ என்ற அச்சம் இருந்தது. நல்ல வேலையாக தடைஉத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.  


வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் திரும்ப மாட்டோம் என்ற மாணவர்களின் லட்சியப் போராட்டம் கனவாகிப்போன ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டு நாளை (05-02-2017) மதுரை அவனியாபுரத்தில் வாடிவாசல் திறப்பதன் மூலம் நனவாக்கியுள்ளனர். சீறிப்பாயட்டும் காளைகள்! வென்று காட்டட்டும் அஞ்சாத சிங்கங்களான காளையர்கள்!  கண்டுகளிப்போம். வாழ்க! வெல்க!  


பலவகைகளில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு ஆடப்பட்டாலும் அவற்றில் பிரதானமாக விளங்குபவை  என அரசிதழில் குறிப்பிடப்பட்டிருப்பது, ஜல்லிக்கட்டு (ஏர்தழுவுதல்), மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடு விழா போன்ற வைகளுக்கான தடைகள் நீக்கப்படுள்ளன.


இதோ ஒரு மஞ்சு விரட்டு காட்சியின் ஒளிவடிவம்!




No comments: