நவீன அறிவியல் நுட்பங்களின் பயன்களை தமிழில் பிரபலப்படுத்தும் ஒரு சிறு முயற்சியில் நானும் ஒரு அங்கமாக...
Saturday, April 1, 2017
Tuesday, January 31, 2017
மெரினா புரட்சி - தலைவனில்லாத காவியம்!
(Jallikattu: The Voice of Marina - Pride and prejudice)
ஜல்லிக்கட்டுப் போராட்டம்!
பனி கொட்டிய தைமாதம்!
மெரினா! வீரத்தின் விளை நிலம்!
அலைகடல் தாண்டிப் பரவிய வேகம்!
உலகத் தமிழர்களே ஒன்று கூடி,
உலகம் நமது என்று சிந்துபாடி
வென்றெடுத்த வீர விளையாட்டு!
இதோ அவனியாபுரத்தில் களம் விரிகிறது!
ஒரு இனம் தான் கடந்து வந்த பாதையைப் பல்வேறு விதமான கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மூலமாகத்தான் அதன் பாரம்பரியத்தைப் பேணிக்காத்து வருகிறது. உலகில் சீனர்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காது பேணிக்காத்து வருகின்றனர். அவர்களை அடுத்து 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியம் என்று சொல்லிக் கொள்ள இருக்கும் ஒன்றிரண்டு இனங்களில் தமிழினமும் ஒன்று. ஒரு இனத்தின் பாரம்பரியத்தை அழிக்க முயல்வது அந்த இனத்தை அழிப்பதற்குச் சமம்! அந்த இனத்திற்கு எதிரான போர் எனலாம்!. பரம்பரியத்தை அழிக்க முயற்சிப்பதை எந்த ஒரு இனமும் விரும்புவதில்லை என்பதைத்தான் கடந்த 17-01-2017 முதல் 23-01-2017 வரை உலகம் முழுக்க நடந்த பெருந்திரள் போராட்டத்தில் நாம் பார்த்தோம். இது ஒரு இனத்தின் சுயமரியாதைக்கான போராட்டம். ஒரு ஆட்சியின் ஆன்மாவும் மூளையும் ஒட்டு ஒத்தமாக அந்த இனத்தின் நலன் சார்ந்துதான் இயங்க வேண்டும் என்பதை உணர்த்த நடந்த பண்பாட்டுப் புரட்சி!
பிரான்ஸ் தேசத்தில் 1789-ல் பதினான்காம் லூயி மன்னன் தன் ஆடம்பரமான செலவினங்களுக்காக அதிக வரி விதித்தான். அதற்கு அங்கீகாரம் கோர அந்நாட்டில் அன்று வழக்கத்திலிருந்த மதகுருக்கள் சபை, பிரபுக்கள் சபை, மக்கள் சபை என்ற மூன்றும் அடங்கிய ’எஸ்டேட்ஸ் ஜெனரல்’ எனப்படும் பொதுசபையைக் கூட்டினான். ஏற்கனவே அதிக வரிவிதிப்பால் நொந்து போயிருந்த மக்களைக் காக்க ’மக்கள் சபை’ மட்டும் அதற்கு அனுமதி மறுத்து, புதிதாக ’நேஷனல் அசெம்ளி” என்ற ஒரு தேசிய அமைப்பைக் கூட்டி மன்னரின் அதிகாரங்களைக் குறைக்க முயலவே, வெடித்தது பிரஞ்சுப் புரட்சி! புரட்சியாளர்கள் ஜூலை 14, 1789-ல் பாரிஸ் நகருக்குள் புகுந்து, கோட்டை கொத்தளங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். (The Storming of the Bastille). அந்நாளை இன்றும் ’பாஸ்டைல் தினம்” என்று கொண்டாடி வருகின்றனர்
மெரினாவில் .இந்தத் தன்னெழுச்சி போராட்டத்திற்கு காரணமே மத்திய மாநில அரசுகள் மீதான கோபம்தான். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, ஈழத்தமிழர் விவகாரம், மீனவர் விவகாரம், கெயில், மீத்தேன், நீட் தேர்வு என இப்படித் தொடர்ந்து அனைத்து தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளிலும் மத்திய அரசின் அலட்சியமும் பாராமுகமும், தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனமும்தான் இத்தகைய எழுச்சிக்கு வித்திட்டது.
தைப்பொங்கலுக்கு அரசு விடுமுறை கிடையாது. வேண்டுபவர்கள் விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு பொங்கலுக்கு முன்பே தமிழர்கள் மனதில் கோபம் கொப்பளிக்க வைத்தது. இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டும் இல்லை. தங்கள் தற்சார்பு வாழ்க்கையின் மீது அடிமேல் அடிவிழுந்த ஆற்றாமையில் வெடித்ததுதான் இந்தப் போராட்டம். தமிழ், தமிழர் நலன்களைப் பின்னுக்குத் தள்ளி மத்திய அரசு நடந்து கொண்டிருக்கும் விதத்தில் எரிச்சலும் கோபமுமான அழுத்தத்தின் வெளிப்பாடுதான் இது. கோவன் போன்ற தெருகூத்துப் பாடர்களுக்குக் கூட கடந்த காலங்களில் அனுமதியில்லை போன்ற காரணங்களும் வெறுப்பாகப் புகைந்து கொண்டிருந்தது.
50 லட்சம் மக்களுக்கு உணவு அளிக்ககூடிய அவினாசி - அத்திக்கடவு திட்டம் கடந்த 50 ஆண்டுகளாக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைப்போல் மேலும் பல சிறந்த திட்டங்களையும் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு விவசாயிகளுக்காக எதுவும் செய்யாமல், ஓட்டுக்காக தேர்தல் நேரத்தில் கொடுக்கும் சில நூறு ரூபாய்களுக்காகக் கையேந்தும் நிலையில் அவர்களை வைத்திருப்பதே ஒரே நோக்கம்.
’நீரின்றி அமையாது உலகு’ என்று உலகிற்கே உபதேசித்தவன் தமிழன். இப்போது நீர் நிலைகளைக் காக்கத் தவறிவிட்டான். பக்கத்து மாநிலங்கள் பாசனத்துக்காக நதிகளின் குறுக்காக ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டும்போது, விளைநிலங்களை கட்டிடங்களாக்கவும், கட்டிடங்களுக்காக ஆற்று மணலையும் நாம் விற்கிறோம். வசிப்பிடங்களுக்காக நிலத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மாஸ்கோவில் அனைத்துக் கட்டிடங்கங்களும் 12 மாடிகளாகவும் சிங்கபூரில் வானளாவிய கட்டிடங்களாகவும் பார்க்கிறோம். நவீன தொழில் நுட்பம் குறைந்த செலவில் அழகான வீடுகளைக் கட்ட துணை நிற்கிறது!
தஞ்சைத் தரணியில் விளைந்த நெல்மணிகள்தான் சோழர்களின் பொற்காலத்திற்கும் அனைத்து வளத்திற்குமான மூலகாரணம். எனவேதான் வளத்திற்கு காரணமான காவிரி நதி தீரத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்டவே சோழ – சாளுக்கிய போர்கள் பல இடையறாது நடந்தன என்பது வரலாறு. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் தங்கள் சுயநலனுக்காக தமிழக நதிகள் மீது நமக்கிருக்கும் பாத்தியதை அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு, தஞ்சைத்தரணியைப் பாலைவனம் ஆக்கிவிட்டனர். அதுதான் விவசாயிகளின் உள்ளக் குமுறலுக்கும் தொடர் மரணத்துக்கும் காரணம்.
இந்நிலையில் அமைதி வழி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அலங்காநல்லூரில் தடியடி என்ற செய்தி இவ்வாறு எகிறிக்கொண்டிருந்த கோபத்திற்குச் சிறுபொறி போல் ஆனது. அலங்காநல்லூர் ஒட்டுமொத்த தமிழகத்தின் குவிமையம் ஆக., பலதரப்பினர் ஆதரவும் பெருகியது. ஜல்லிக்கட்டு கிடையாது என்று உச்சநீதிமன்றமும் கைவிரிக்கவே, பெருநெருப்பாகப். பற்றிக்கொண்டு இந்தியாவையே ஏன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்புப் போராட்டம்
சரித்திரத்திலேயே இவ்வளவு வேகமாக ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது மாணவர்களின் எழுச்சிக்குக் கிடைத்த வெற்றி. இது அவர்கள் போராட்டத்திற்குக் கிடைத்த பெருமை என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்கள். தலைவனே இல்லாத இந்தப் போராட்டம்தான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த மாநில அரசையும் வெற்று வெறும் சால்சாப்புகளையும் பசப்பு வார்த்தைகளையுமே சொல்லிக்கொண்டிருந்த மத்திய அரசையும் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்க நிர்பந்தித்தது
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடிஉயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயரும்
என்றார் மூதாட்டி அவ்வையார். நீர் நிலைகளைப் பேணுவதும் மண் வளம் காப்பதும் நமது தலையாய கடமைகளில் ஒன்று.
‘விலங்குகள் நலம்’ பேணுவதற்கென்று மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் தவிர, பீட்டா, மேனகா காந்தியின் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ், புளூ கிராஸ் போன்று 12க்கு மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. ’பீட்டா’ செயல்பாடுகளின் மறுபக்கத்தை அமெரிக்காவிலேயே ‘ஹாஃபிங்டொன் போஸ்ட்’ என்ற பத்திரிக்கை அம்பலப்படுத்தியது. சூழலியலாளர் நக்கீரன் போன்ற எழுத்தாளர்களும் இங்கே அதன் கோர முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளனர். பீட்டா வசம் வரும் விலங்குகளை அதன் உரிமையாளர்கள் 15 தினங்களுக்குள் உரிமை கோரவில்லை எனில் அந்த விலங்குகள் வதைக்கப்படும் விதம் ஹிட்லரின் வதை முகாம்களுக்கு இணையானது. சரி, விலங்குகள் நலத்தைப் பற்றிப் பேசவே அறுகதையற்ற பீட்டா விற்கு தமிழகத்தில் என்ன வேலை?
தமிழகம் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலம். இதற்கான காரணம் நமது பாரம்பரிய மிக்க நாட்டு மாடுகள் மற்றும் ஜல்லிகட்டுக் காளைகள். காங்கேயம் காளைகள் போன்ற இனங்கள் சர்வதேச தரத்திலானது. மாடுகளில் கலப்பினங்களைப் புகுத்தவும், வியாபார நோக்கத்திற்காவும் வெளிநாட்டு கால்நடைத் தீவன நிறுவனங்கள் பலனடையவுமே அவைகள் இங்கு செயல்படுகின்றன. ஜல்லிக்கட்டுக் காளைகளை ஒழிப்பதன் மூலம் மாடுகள் இணைசேர்வதைத் தடுக்க முடியும். அதன் பிறகு ஹார்மோன்களைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் தரமற்ற பாலை நமது வருங்கால சந்ததியினருக்குக் கிடைக்கச் செய்யவே பிட்டா பாடுபடுகிறது. இதுதான் ஜல்லிக்கட்டை ஒழிப்பதாற்காக அவர்கள் மல்லுக்கு நிற்கும் ரகசியம்.
மாடுகளில் நாட்டு இனங்களை ஒழித்துவிட்டு அவர்கள் புகுத்த நினைக்கும் பாலின் தரத்தைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் பால் உற்பத்தி என்பது வேளாண் உற்பத்தியில் ஒரு உபரிப் பொருள். கால் நடைகளின் உணவு என்பது வேளாண்மையில் தானியங்களை நாம் எடுத்தது போக மிஞ்சும் புல், நாற்று, வைக்கோல் போன்றவைகளும் தானியங்களில் நாம் உண்டது போக மிஞ்சுவன மட்டுமே.
ஆனால் மேலை நாடுகளில் கால்டைகளுக்கென்றே தனியாகப் புல் வளர்க்கப்படவேண்டும். அதற்கென தனி நிலம் வேண்டும். தீவனமாக நாம் கொடுக்கும் பருத்தி விதை, புண்ணாக்கு போன்றவற்றிற்குப் பதில் அவர்கள் பசுக்களுக்குப் பால் உணவைத் திணிக்கிறார்கள். அதிக பால் உற்பத்திக்காக ஹார்மோன்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் மேலை நாட்டு குளிர்மண்டல சீமைப்பசுக்கள் சுரக்கும் பாலில் ’லாக்டோஸ்’ எனப்படும் சக்கரையின் அளவு அபரிமிதமாக இருக்கிறது. நாமோ லாக்டோஸ்-சகிப்புதன்மையற்றவர்கள். விளைவு, சர்க்கரை நோய்.
மொத்தத்தில் ’வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் இந்தியாவில் ’பால் வெள்ளம்’ (Operation Flood) அமல் படுத்தப்பட்டதின் பலன் பெண்கள் வசம் இருந்த இந்த பால், நெய், மோர் போன்ற சிறு வணிகப் பொருளாதாரம், கார்பரேட் நிறுவங்களான நெஸ்லே, காட்பரீஸ், குவாலிடி வால்ஸ் போன்ற பகாசுர கம்பெனிகளுக்கு தாரைவார்த்திருப்பது தான். இதன் மூலம் அவற்றின் பங்குகள் எகிற, தெரிந்தோ தெரியாமலோ நாம் காரணம் என்கிறார் சூழலியலாளர் நக்கீரன் அவர்கள்.
வனத்துறை பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வனவிலங்குகளை வேட்டையாடுவதோ வேட்டையாட முயற்சிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. நடிகர் சல்மான்கான் மான்வேட்டையாடினார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது இப்பிரிவின் கீழ்தான்.
1960 மிருகவதை சட்டத்தின்படி மனிதர்களால் வதைபடுத்தப்படும் மற்றும் அதற்குள்ள வாய்ப்புள்ள விலங்குகள் பட்டியலிடப்பட்டு அவை காட்சிப்படுத்தப்பட்ட, கட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் எனப் பட்டியலிடப்பட்டது.
மத்திய அரசின் சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களில் மக்கள் பார்வையிட அனுமதிக்கும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் எனப்படுகிறது.
2.3.1991-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம் மற்றும் நாய் ஆகியவை கட்சிப்படுத்த தடைசெய்யப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டன. மத்தியஅரசு 2011-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அந்தப்பட்டியலில் காளையையும் சேர்த்ததால் ஜல்லிகட்டுக்குச் சிக்கல் ஏற்பட, 2014ல் சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடை விதித்து விட்டது.
இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தால் இனி ஜல்லிகட்டு நடத்த எந்தபிரசினையும் எழ வாய்ப்பிள்ளை
மிகப்பெரிய போராட்டத்தில் சில ஆர்வக்கோளறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.. அணி அணியாய் மக்கள் திரள தமிழகமெங்கும் பெருந்திரள் கூட்டம் அலை’மோதியது! வெளிநாட்டினரும் இப்பாரம்பரிய பண்பாட்டு போராட்டத்திற்குப் பின்னே அணிவகுத்தனர். மிஸ்டர் காளை’ தான் போராட்ட நாயகன்!
நடந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது போராட்டத்தை நசுக்க அரசும் அதிகாரவர்க்கமும் காத்திருந்தது போல் தெரிகிறது. மாணவர்களிடையே எற்பட்ட சில குழப்பங்களை சட்டம் ஒழுங்குப்பிரச்சினையாக்கி பொதுமக்களின் ஆதரவை இழக்க வைக்க சிலர் முயற்சி மேற்கொண்டனர். எதிர்காலத்தில் இத்தயகைய போராடங்களில் யாரும் பங்கெடுக்கக் கூடாது என பயமுறுத்தவே போராட்டத்தைக் கைவிட வேண்டினார். 22-ம் தேதி.கடற்கரைச் சாலையில் மர்ம கும்பல் ஊடுருவ. இறுதியாக மாணவர் புரட்சியை வன்முறைக்களமாக மாற்ற முயன்றாலும் இறுதியில் வென்றது மாணவர்களே!
.
மெரினாவை சுத்தப்படுத்துதல், போக்குவரத்தைச் சரி செய்தல் என சுயகட்டுப்பாட்டுடன் இருந்த மாணவர்கள் போராட்டத்தை அடக்க கடற்கரைசாலையில் மின்சாரத்தைத் துண்டித்தனர். ஒலி அலைவரிசையும் துண்டிக்க ஜாமர் கருவிகளைப் பயன்படுத்த முயன்ற காவல்துறையின் முயற்சியை, ஐடி மாணவர்கள் முறியடித்துள்ளனர். செல்போன்களின் டார்ச் வெளிச்சம் மெரீனாவெங்கும் நட்சத்திரங்களைப் போல் ஜொலித்தன. தனியார் நிறுவனங்களும் தனிநபர்கள் சிலரும் மாணவர்கள் செல்போன்களுக்கு சார்ஜ் செய்து கொடுத்துள்ளனர்.
முல்லைத் திணையில் ஆநிரை கவர்தல் என்பது பண்டைய போர்முறைகளில் ஒன்று. எனவே ஊருக்கு வெளியே இருக்கும் மாட்டு மந்தையைக் காப்பது மேய்ப்பவனின் கடமையாதலால் ஒரு போர் வீரனின் தீரத்துடன் அவன் திகழவேண்டியவன் ஆனான். காளைகளை அடக்கவும் காளைகளுக்கு வீர் விளையாட்டை கற்பிக்கவும் ஏர்தழுவுதல் போன்ற வீர விளயாட்டுகள் அவனுக்கு அவசியம் ஆதலால் புலவர்களே அதைப் போற்றிப் புகழ்ந்தனர். இளைஞர்களுக்கு அவ்விளையாட்டில் ஆர்வம் ஏற்பட காளைகளை அடக்குவோருக்கு தம் மகளையே பரிசாகப் பறைசாற்றினர். மங்கையரும் காளைகளை அடக்குவோருக்கே மாலை சூடி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் மாடுகளின் கொம்பில் துணியில் சல்லிக் காசுகளை வைத்துக் கட்டி வைத்தனர் மாட்டுக் கொம்பிலிருந்து காசுகளை எடுப்பவர்கள் வீரர்களாக போற்றப்படவே. ’ஏர்தழுவுதல்’ சல்லிக்கட்டு என்றாகி பிற்காலத்தில் ஏர்தழுவுதல் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு ஆனது.
சீனாவில் மங்கோலியப் படையெடுப்பைத் தடுக்க. எழுப்பப்பட்டதுதான் சீன நெடுஞ்சுவர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் அமெரிக்கர்களின் ஊடுருவலைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் ஒரு சுவர் எழுப்ப தனது முதல் கையெழுத்தைப் பதித்திருக்கிறார். மெரீனாவில் இருக்கும் காவல் சுவரைப் பார்க்கும் போது மெரினாவிலும் ஒரு சுவர் வந்து விடுமோ என்ற அச்சம் இருந்தது. நல்ல வேலையாக தடைஉத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.
வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் திரும்ப மாட்டோம் என்ற மாணவர்களின் லட்சியப் போராட்டம் கனவாகிப்போன ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டு நாளை (05-02-2017) மதுரை அவனியாபுரத்தில் வாடிவாசல் திறப்பதன் மூலம் நனவாக்கியுள்ளனர். சீறிப்பாயட்டும் காளைகள்! வென்று காட்டட்டும் அஞ்சாத சிங்கங்களான காளையர்கள்! கண்டுகளிப்போம். வாழ்க! வெல்க!
பலவகைகளில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு ஆடப்பட்டாலும் அவற்றில் பிரதானமாக விளங்குபவை என அரசிதழில் குறிப்பிடப்பட்டிருப்பது, ஜல்லிக்கட்டு (ஏர்தழுவுதல்), மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடு விழா போன்ற வைகளுக்கான தடைகள் நீக்கப்படுள்ளன.
இதோ ஒரு மஞ்சு விரட்டு காட்சியின் ஒளிவடிவம்!
Wednesday, January 25, 2017
MAAYA CHILAI – A HISTORIC THRILLER NOVEL - INTRODUCTION
‘Chilai’
in Tamil means idol. ‘Mayam’ here means not illusory. It is neither magical nor
gorgeous like the Golden Dear that cheated Sita, the Crown Princess of Ayodya
and wife of Rama in the jungle of Dandakarunya. But it is a marvelous idol with
boundless beauty. We can’t see such an unique, matchless idol anywhere in the
world. This was the most famous image at that time. The icon is remarkable for
its grace and majestic for its expressions. The image is the ultimate in molded
casting with immense art, craft and workmanship. It belongs to the Tamil soil,
rooted with Tamil culture. It was few centuries ago the artifact idol disappeared
(Mayam) from its own soil.
We
all know that the Northern part of the Tamil Nadu is called Tondaimandalam. The
region is nourished by the river Palaar and flourished with Tamil culture and
tradition. Under the Chola rule from 9th Century A.D the arts,
poetry, dance, and temple building also
flourished here. A war of succession to the Chola thrown, led to the outbreak
of a war in this land like Kurushektra, some 1067 years ago. The war caused
greater destruction, awful bloodshed that killed five lake soldiers and thirty
thousand elephants, eleven thousand horses, than any other war took place in
this region before. The Trial of strength was between Rashtrakudas and the
rising Cholas in the year 949 A.D to prove their mighty and supremacy over this
region. The battle field was Thakkolam near Arokonam wherein the CISF camp is
now situated is also a co-incident.
Now
the curtain rises at this point and the first scene of the novel opens. It was
a Chitra Pournami day evening. (Full moon day). Arrangement for an engagement
ceremony was on at Thokkoolam. Vandana, daughter of a CISF Deputy Commandant
officer, is the bride and the groom is a CISF Inspector, Gowtham. CISF band
music fill the air! All ranks of the CISF staffs including the Inspector
General and the entire village were gathered there except one important
personality Vandhana’s affectionate brother, Navin SP, Economics offences wing
CID, IDOL Wing, Chennai. He could not attend the function because he is busy in
supervising the security arrangement of an International Antique exhibition at
Nandambakkam Trade centre, which is about to kick off by the Union Minister for Culture, Mr.
Duraisingam by the next day. The idea of the exhibition is conducted mainly
with an eye, to trap the ‘Mayach Chilai’, if it appears in the exhibition.
It
is because the idol is surfaced again in Europe after many decades. Now the
idol is in possession of an International mafia gang. They barely want to know
the era and period of the statue to sell the idol for huge price through the Auction
houses. Nithya a Berlin University Museology Research Scholar, followed the
track and history of the idol with help his grandfather and UNESCO Archeologist,
Sembian Tamilvel.
The
gang seriously discussed whether they could know the fact, if the image is
displayed in the exhibition? The CISF commandoes were also deployed in the
inner most circle of the security wing of the bronze gallery, including
Gowtham. At one stage Nithya’s life hangs between two options, either to
disclose the facts of the idol to the gang or to die at gun point. Gowtham’s
life also wait for her very word at this point, if she discloses the fact he
becomes a culprit before law! What ‘word’ can Nithya utter at this juncture for
her beloved Navin?
What
happened in the exhibition? Navin SP, Economics offences wing CID, IDOL Wing, locked
horn with the mafia. Thakkolam war was a great tragedy to the Cholas! Will the
history repeat here now? Whether the idol returns to its home land or not is
the mystery behind the story. Now let’s join to see minute by minute heroism of Navin and enjoy it.
Labels:
intro,
maayachilai,
teaser
Tuesday, January 17, 2017
நியூட்ரினோ - அண்டத்தின் தூதுவன்
நட்சத்திரங்கள் பிறப்பு இளமைக் காலம் வாலிப நட்சத்திரம்
முதுமைக் காலம் (சூப்பர்நோவா) மறைவு (சூப்பர்நோவா வெடித்த நிலை)
முதுமைக் காலம் (சூப்பர்நோவா) மறைவு (சூப்பர்நோவா வெடித்த நிலை)
நியூட்ரினோக்களின் பிறப்பிடங்கள்
சென்ற நூற்றாண்டின் மத்தியில் தொடங்கிய மின்னணுப் புரட்சி, (Electronics) இந்த நூற்றாண்டில் இன்று வரை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக விளங்கி வருகிறது. இன்று தொலைதொடர்புச் சேவையில் அதன் பங்களிப்பின்றி ஒரு அணுவும் அசையாது என்கிற நிலை! சமீபத்தில் மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை இந்திய பொருளாதாரத்திலும் மக்கள் வாழ்க்கை முறையிலும் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிச் சேவையில் மக்களை ரொக்கப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு மின்னணுப் பணப்பரிமாற்றத்திற்கு மாற்ற விரும்பும், நம் மத்திய அரசாங்கம் இந்த டிஜிட்டல் புரட்சியைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. இனி வருங்காலம் ’வாலட் யுகம்’ என்று மாற்றங்களுக்கு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தால் நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் பறிபோய்விடும் என்ற கூக்குரலிட்டவர்கள் கைகளை இன்று ’ஸ்மார்ட்போன்’கள் அலங்கரிக்கின்றன. இப்படி அனைத்து துறைகளிலும் வியாபித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது ’மின்னணு’ என்ற எலெக்ட்ரானிக்ஸ்! ஆனால் சென்ற நூற்றாண்டில் இவைற்றைப் பற்றி நிச்சயம் நாம் கனவுகூடக் கண்டிருக்கமாட்டோம். ஆனால் காலத்தின் கட்டாயம் நம்மை அதன் வழியே மாற்றி அழைத்து வந்திருக்கிறது என்பதே உண்மை..
அதேபோலத்தான் நாம் இன்று உதட்டளவில் கூட உச்சரிக்கத் தயங்கும் இந்த ’நியூட்ரினோ’ தான் நாளைய உலகை ஆளப்போகிறது என்றால் மிகையில்லை! ஏனென்றால் நியூட்ரினோக்கள் பிரபஞ்சம் உருவான நாளிலிருந்தே இருப்பவைகள் என்பதால் பிரபஞ்ச ரகசியங்கள் பற்றிய பல தகவல்கள் அதில் பொதிந்துள்ளன. அண்ட வெளியெங்கும் அபரிமிதமாக நீக்கமற நிறைந்துள்ளது நியூட்ரினோ துகள்கள். ஒளிக்கு இணையான வேகத்தில் இவற்றால் அண்டம் முழுக்க பயணிக்க முடியும். அண்டவெளிக் கதிர்கள் ஊடே (Cosmic Rays) பயணிக்கும் ஆற்றல் கொண்டவைகள் இத்துகள்கள். பூமி போன்ற கிரகங்களைக் கூட ஒரு பக்கத்திலிருந்து ஊடுறுவி மறுபக்கம் வழியாக எந்தவித சக்தி இழப்புமின்றி வெளியேறி விடும் ஆற்றல் கொண்டவைகள் இத்துகள்கள்.
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இரு கற்களை ஒன்றோடொன்று வேகமாக உரசவைத்து தீப்பொறி உண்டாக்கி நெருப்பை மூட்டக் கற்றுக் கொண்டது மனித இனம். அதன் மூலம் இந்த உலகையே தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்கள். இப்போது நியூட்ரினோ ஆய்வு மூலம் இப்பிரபஞ்சத்தையே நம் கையில் கொண்டுவரும் தருவாயில் இருக்கிறோம் நாம் என்கிறார் அறிவியல் தீர்க்கதரிசி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள்.
ஆதியில் காடுகளில் பற்றி எரிந்த பெருநெருப்பைக்கண்டு அலறி அடித்து ஒடி ஒளிந்தது மனித இனம். ஆனால் இன்றோ காட்டுத்தீயை அணைக்கவும் கற்றுக்கொண்டான். நெருப்பைப் பலவிதங்களில் பயமின்றிப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டான். இன்று நியூட்ரினோக்கள் பற்றிய அறிவு, ஆய்வு நிலையில் இருப்பதால் அதைப்பற்றிய பலவித பயம் நமக்கு இருப்பது இயல்பே. ஆனால் காலத்தின் வல்லமை நியூட்ரினோக்கள் இல்லாத ஒரு வாழ்வை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையை நமக்கு ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவை அனைத்தும் நிகழப்போவதும் சாத்தியமே.
நியூட்ரினோ ஒர் அறிமுகம்:
சூரிய வெயில் பற்றி காலம் காலமாக நம் மனதில் விதைக்கப்பட்டு வரும் ஒரு பழங்கால எச்சரிக்கை உச்சி வெயில்ல போனா உடம்புக்கு ஆகாது. வெயிலுக்கு ஒதுங்க வேண்டும், வெயில்ல போயிட்டு வந்தியா? இந்தா நீராகாரம், அல்லது மோரைக் குடி. எதுவும் இல்லையா தண்ணீரையாவது குடி என்று சொம்பை நீட்டுவார்கள். கிராமப்புரங்களில் நமது பண்பாட்டோடு இணைந்த ஒரு கலாச்சாரம் இது. யாராவது வீட்டிற்கு வந்துவிட்டால் முதலில் பருகக் கொடுப்பது ஒரு சொம்பு தண்ணீர். இவைகள் கோடை பருவத்திற்கேற்ப விதைக்கப்பட்ட நமது ஆரோக்கியம் சார்ந்த நம்பிக்கைகள். வழியில் ஒரு இளநீர் கடையையோ நுங்கு விற்பவரையோ கண்டால் நாமாகச் சென்று வாங்கி அவற்றைப் பருகுகிறோம். அப்பாடா என்ன வெயில்? என்று அலுத்துக் கொள்வோம். சூரிய ஒளிபற்றி பொதுவாக நமக்குத் தெரிந்த பொது அறிவு இவ்வளவுதான்.
சூரியனிலிருந்து பூமிக்கு வரும் நியூட்ரினோக்கள் நமது நகக்கண் வழியே கடந்து செல்லும் நியூட்ரினோக்கள்
ஆனால் சூரிய ஒளியில் பொதிந்துள்ள பல தகவல்களை நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதையே இந்த பாமர எச்சரிக்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அடுத்ததாக சூரிய ஒளியில் இப்போதைக்கு நாம் சூழியல் பாதுகாப்புக்கு உகந்த மின் உற்பத்தி பற்றி அதிகம் பேசுவது இதன் அடுத்த கட்டம். ஆனால் சூரியன் வெளிப்படுத்தும் சக்தி என்பது இத்தோடு முடிந்து விடும் சமாச்சாரமல்ல. மேலும் அது பெற்றுள்ள பல மதிப்புமிக்க தகவல்கள் மனித இனத்தை அடுத்த பரிணாமத்திற்கு அழைத்து வந்திருக்கிறது என்பதை அடுத்த நூற்றாண்டின் இதே காலகட்டத்தில் வாழப்போகும் அடுத்த தலை முறையினர் பேசப்போகும் சங்கதிகள் இவை.
அண்டம் முழுக்க நியூட்ரினோக்கள் ஏன் நிறைந்துள்ளன? நியூட்ரினோக்கள் என்பது நட்சத்திரங்களின் மையத்தில் நிகழும் தொடர் அணுப்பிளவின் போது வெளிப்படும் உட்துகள்கள் (Subatomic particles) ஆகும். நமது சூரியன் வெளிப்படுத்தும் நியூட்ரினோக்களே நமது சூரிய குடும்பத்தின் எல்லையான சூரியனைச் சுற்றும் புளூட்டோவின் சுற்றுப்பாதை வரை சுமார் 70% அளவிற்குப் பரவியுள்ளது என்றால் அண்டம் முழுக்க நிறைந்திருக்கும் நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் நியூட்ரினோக்கள் அளவை மதிப்பிடுவது அசாத்தியம்.
சூரியனின் மையத்தில் நிகழும் தொடர் அணுப்பிளவின் போது நான்கு ஹைட்ரஜன் புரோட்டான்கள் சேர்ந்து ஹீலியம் என்ற வாயுவாக மாறுகிறது. இந்த அணுச் சேர்க்கையின் விளைவாக வெளிப்படும் சக்தி ஒளியும் வெப்பமுமாக பூமியை அடைகின்றன. இந்த அணுச் சேர்க்கையின்போது சூரியனில் 60 கோடி டன் ஹைட்ரஜன் அணுக்கள் ஒவ்வொரு வினாடியும் ஹீலியமாக மாறுகின்றன. அப்போது சூரியனின் மையத்திலிருந்து காமா கதிர்களும் நியூட்ரினோக்களும் வெளியேறுகின்றன. இவ்வாறு சூரியனிலிருந்து வெளிப்படும் கோடிக்கணகான நியூட்ரினோக்களும் காமாக்கதிர்களுடன் பூமிக்கு வருகின்றன. நமது நகக்கண் வழியே வினாடிக்கு 6.5 கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்கின்றன என்பதை நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
பூமியில் உள்ள உயிரினங்களைப் போலவே நட்சத்திரங்களுக்கும் பிறப்பு ((Nebula) இளமைக் காலம் (Protostar) உயிரோட்டமுள்ள சூரியன் போன்ற வாலிபப்பருவம், (Main Sequence Stars) அந்திமக்கால நட்சத்திரங்ககள் (Supernova) எனப்பருவங்கள் உண்டு. அப்பருவங்களை பூமியின் ஆண்டுக் கணக்கில் சொல்வதானால் இளமைப் பருவம் சில லட்சக்கணக்கான ஆண்டுகளும், வாலிபம் 100 லட்சம் ஆண்டுகளும் வயோதிகம் 4 லட்சம் ஆண்டுக் காலமும் இருக்கும். நட்சத்திரங்கள் அதன் இறுதிக்கட்டத்தில் வெடித்துச் சிதறி விடுகின்றன. அப்போது அந்த நட்சத்திரங்கள் வெளியிடும் நியூட்ரினோக்களில் அந்த வெடிப்பின்போது வெளிப்படும் சக்தி முழுதும் நியூட்ரினோக்களில்தான் பொதிந்திருக்கும். அத்தகைய அபரிமிதமான சக்தியைத் தன்னகத்தே சுமந்தபடிதான் நியூட்ரினோக்கள் பிரபஞ்சம் முழுக்கச் சுற்றித் திரிகின்றன. இந்த சக்தியில்தான் மனிதகுலத்தை அடுத்த நூற்றாண்டிற்கு வழி நடத்தத் தேவையான தகவல்கள் பொதிந்துள்ளன. அதை வெளிப்படுத்தும் ஆய்வுகளை மேற்கொள்ளத்தான் ஆய்வகங்கள் தேவைப்படுகின்றன. தேனி மாவட்டம் பொத்திபுரத்தில் அமையவுள்ள ஆய்வகமும் இதில் ஒன்று. இந்தியாவில் இந்த இடம் ஏறக்குறைய 850 கிழக்குத் தீர்க்க ரேகையிலும் பூமிப்பந்தின் இதற்கு நேர் எதிர் மறுபக்கமான அமெரிக்காவின் சிக்காகோ நகரம் 850 மேற்குத் தீர்க்கரேகையிலும் வருவதால் சிகாகோவின் ஆய்வகத்திலிருந்து நியூட்ரினோக் கற்றைகளை பூமிப்பந்தின் பாறை அடுக்குகள் ஊடாக தேனி மாவட்டம் பொட்டிபுரம் அனுப்பி ஆராயவுள்ளனர்.
விண்வெளியில் எங்கிருந்தோ வரும் காஸ்மிக் கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள அணுக்களைத் தாக்கும். போதும் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன. இவைகள் வளிமண்டல நியூட்ரினோக்கள் எனப்படும். சூரியனில் உருவாகி வரும் நியூட்ரினோக்கள் சோலார் நியூட்ரினோக்கள் எனப்படும். இதுமட்டுமின்றி வேறு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் நியூட்ரினோக்களும் பூமியை வந்தடைகின்றன. சூப்பர்னோவாக்கள் என்ற வெடித்த நட்சத்திரங்களிலிருந்தும் நியூட்ரினோக்கள் வெளிவருகின்றன..
பூமிக்கடியில் யுரேனியம் போன்ற தனிமங்கள் இயற்கையாகச் சிதையும் போதும் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன. இவைகளை புவி நியூட்ரினோக்கள் என்கின்றனர். இப்படிப் பலவிதங்களிலும் நியூட்ரினோக்கள் இயற்கையில் உருவாகின்றன. இயற்கையில் இவ்விதம் உருவாகும் நியூட்ரினோக்களால் நமக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. பயன்பாடும் இல்லை. ஆனால் நாம் செயற்கையாக ஆய்வங்களில் உருவாக்கும் நியூட்ரினோக்களால் நிச்சயம் பாதிப்பு உண்டு என்கின்றனர் ஒருசாரர். ஏனெனில் அவைகள் வீரியம் மிக்கவை என்பது அவர்கள் கருத்து. அணுமின்சார நிலையங்களில் உள்ள அணு உலைகளிலிருந்தும் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன.
.
திறன் மிகுந்த, எவ்வித கட்டுப்பாடுமின்றி பிரபஞ்சம் முழுக்க சுற்றித் திரியும் இக்கோயில் காளைகளை வசமாக்க நமக்கு ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கிக் கிடந்த மனிதனுக்கு கடைசியில் அதன் பலகீனம் ஒன்றைக் கண்டறியும் வாய்ப்புக் கிடைத்தது.
எப்பேர்பட்ட திறமைசாலியானாலும் அவனுக்கும் ஏதாவதொரு பலகீனம் நிச்சயம் இருக்கும். அவனது பலம் எது? பலகீனம் எது என்று அறிந்து கொண்டால்தான் அவனை எளிதில் நம்மால் வீழ்த்த முடியும் .என்பது அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படியே நடந்த இடைவிடாத ஆராய்ச்சியின் பயனாக நியூட்ரினோக்கள் பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு என்பதை ஓரளவேனும் தெரிந்து கொண்டால்தான் நியூட்ரினோக்கள் பற்றி நாம் மேலும் அறிந்து கொள்ள முடியும். உல்ஃப்காங் பவுலி என்ற இயற்பியல் நோபல் விஞ்ஞானிதான் 1930ல் முதன் முதலில் நியூட்ரினோக்கள் பற்றி உலகுக்குத் தெரிவித்தார். ஆஸ்திரியா நாட்டில் வியன்னா நகரில் பிறந்த இவர் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள ’ஃபெடரல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் அணுவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். உல்ஃப்காங் பவுலி ஆய்வுகள் பற்றிய அறியுமுன் அவரது ஆராய்ந்த துறையைப் பற்றிய ஒரு முன்னோட்டம் நமக்குத் தெரிந்தால் அவரது ஆய்வுகளைப் பற்றி புரிந்து கொள்வது எளிதாகும்.
இப்பூவுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் பொருள்கள் (Matter) என்கிறோம். இப்பொருட்கள் யாவும் லட்சக்கணக்கான அணுக்களால் ஆனவை. ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் பொருட்களின் இறுதித்துகள் என நம்பப்பட்டது. ‘அணு’ (Atom) என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) ‘பிளக்க முடியாதது’ என்பதாகும். ஆனால் பின்னர் வந்த ஆய்வு முடிவுகள் ஒவ்வொரு அணுவும் பல மூலத்துகள்களால் (Elementary Particles) ஆனது என நிரூபணம் ஆனது. பிரிக்கவே முடியாத அணுத்துகளை மூலக்கூறுகள் (Molecules) என்கிறோம். இப்பொருட்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் எவ்வாறு உருவாகி இருக்க முடியும்? பொருட்கள் ஆற்றைலையும் நிறையையும் எவ்வாறு பெற்றன?. என்பதற்கான விடை தேடித்தான் மனிதன் தனது ஆராய்ச்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.
நாம் ஏற்கனவே முந்தைய அணுசக்தி பற்றிய கட்டுரைகளில் ஒரு அணுவின் உட்கூறு அமைப்பும் சூரிய குடும்பத்தை ஒத்த ஒரு நட்சத்திரக் குடும்பத்தின் அமைப்பும் ஒன்று போலிருக்கும் என்பதைப் பார்த்திருக்கிறோம். ஒரு அணுவின் உட்கருவில் (Neucleus) நியூட்ரான்களும் புரோட்டான்களும் பின்னிப் பிணைந்திருக்க அந்த உட்கருவை எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் (Orbit) சுற்றி வருகின்றன. சென்ற நூற்றாண்டின் இதே கால கட்டத்தில் (1913ல்) நடந்த அணுக்கள் பற்றிய ஆய்வில் நீல் போர் என்ற டென்மார்க் விஞ்ஞானி, ஹைட்ரஜன் அணுவின் உட்கருவை ஒரே ஒரு எலெக்ட்ரான் சுற்றி வருகிறது என்ற தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவாரது ஆய்வு ஒரு அணுவின் உள்கட்ட அமைப்பு முறையை நன்கு அறிய உதவியது
Structure of an Atom Solar System
அடிப்படை துகள்கள்-குவார்க்ஸ்
குவார்க்ஸ், போஸான் ’லெப்டான்’ என்பன அணுவியலில் (Particle Physics) அடிப்படைத் துகள்கள் (Elementary Particles) பற்றிப் பேசும் மூன்று பிரிவுகளாகும். இது பற்றி நாம் ஏற்கனவே முன்னர் பார்த்திருக்கிறோம். இதில் குவார்க்ஸ் என்பது அணுவின் உட்கருவில் உள்ள நியூட்ரான் மற்றும் புரோட்டான் ஆகியவற்றின் அடிப்படை உப அலகுகளாகும் (Subunit). குவார்க்ஸ் ’அப்ஸ்’, ’டவுன்’ என்ற மேல், கீழ் உபதுகள்கள் அமைப்பின் மூலம் நியூட்ரான் புரோட்டான் பிணைப்பை உறுதிசெய்கின்றன.
போஸான் என்பது ஒரே ஒரு பிரிக்கமுடியாத அடிப்படை மூலக்கூறைக் கொண்டது (Molecule). இது மூலத்துகள் களுக்கிடையே உருவாகும் விசையைக் (Force Carriers) கடத்தும் ஆதாரத் துகள்கள் ஆகும். ஒரு மூலத்துகள் வெளியிடும் போஸான்களை மற்றொரு மூலத்துகள் கிரகித்துக் கொள்வதன் மூலம் மூலத்துகள் வெளியிடும் விசை மற்றொரு துகளுக்குக் கடத்தப்படுகின்றது. அடிப்படையில் ஃபோட்டான், க்ளூஆன், வீக்கான் என்ற மூன்று வகை போஸான்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ஃபோட்டான்கள் என்பது ஒளியின் மூலத்துகள்கள் ஆகும். இவைகள் அடிப்படை துகள்களுக்கிடையில் உருவாகும் மின்காந்த அலைகளைக் கடத்துவன. ’க்ளூஆன்’ என்பது குவார்க்ஸ் இடையில் உருவாகும் சக்தியைக் கடத்துவன ஆகும். ’வீக்கான், ஒரு துகளின் அடிப்படைத் தன்மையையே மாற்றி மற்றொன்றாக உருமாற்றி விடும் ஆற்றல் கொண்டவைகள். நவீன ஆராய்ச்சியில் கிரேவிட்டான், ‘கிக்ஸ் போஸான்’ என்ற மேலும் இரண்டு போஸான்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கிரேவிடான்கள் ஈர்ப்பு விசையைக் கடத்துவன.
‘கிக்ஸ் போஸான்’ என்று அழைக்கபட்ட ’கடவுள் துகள்’, பிரபஞ்ச சிருஷ்டி பற்றிய ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். ஏனெனில் இவைகள்தான் அடிப்படைத் துகள்களுக்கிடையில் வெளிப்படும் நிறையை எடுத்துச் செல்வதாக (Mass Carriers) கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் பெருவெடிப்பிற்குப் பிறகு உருவான வாயுக்களிலிருந்து மூலத் துகள்களான (Elementary Particles) அணுக்கள், மூலக்கூறுகள் (Molecules) பொருள்கள் (Matter) போன்றவை எவ்வாறு உருவாயின? அவைகள் ஆற்றலையும் (Energy) நிறையையும் (Mass) எவ்வாறு பெற்றன? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..
மூன்றாவதான லெப்டான் குடும்பத்தைச் சேர்ந்தவைகள்தான் நாம் பேசப்போகும் இந்த நியூட்ரினோக்கள். பொதுவாக இது மின்னூட்டம் (Electrical Charge) இல்லாத நிறை (Measurable Mass) இல்லாத ஒரு துகளாகும். இதன் குறிப்பிடத் தக்க மூன்று வகைகளில் ’எலக்ட்ரான் நியூட்ரினோ’ என்பது மேலே சொன்ன வகையாகும். மற்றவை இரண்டும் ’மியூவான்’ (Muons) மற்றும் ’டாவ்’ (Taus) நியூட்ரான்களாகும். இந்த இரண்டும் மின்னோட்டமுள்ள நிறையுள்ள நியூட்ரினோக்களாகும்.
இதன் மூலம் நியூட்ரினோ என்பது ஒரு உப அணுத்துகள் (Subatomic particle) என்பதை அறியலாம். ஒரு எலக்ட்ரான் எடையில் பத்தாயிரத்தில் ஒருபங்கு எடையே கொண்டது நியூட்ரினோக்கள் என்பதால் அதன் குறைந்த அளவான அணு நிறையானது நம் கண்ணுக்குப் புலப்படும் எந்த ஒரு பருப்பொருளின் (Matter) ஊடேயும் தடையின்றி உட்புகுந்து வெளிவரும் ஆற்றலை அந்த நுண்துகளுக்கு அளிக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. கோள்கள், நட்சத்திரங்கள், பாறைகள், மனித உடல்கள் என எதன் மீதும் மோதாமல் எதை வேண்டுமானாலும் நியூட்ரினோக்களால் துளைத்துக் கொண்டு செல்ல முடியும். நமது நகக்கண் வழியே வினாடிக்கு 6.5 கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்கின்றன என்பதை நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
ஒரு அணுவின் உட்கூறு அமைப்பையும், அதனுள் இயங்கும் அணுதுகள்களின் இயக்கத்தையும், அவற்றின் (Motion) மின்காந்த புலம் பற்றியும் விவரிக்கும் அணுவியல் பிரிவிற்கு ’குவண்டம் மெக்கானிக்ஸ்’ எனப் பெயர். இப்பிரிவிவு எப்படி அணுக்கள் சக்தியை தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது என்பதையும் ஒளியாக வெளியிடுகிறது என்பதையும் விளக்குகிறது. ஒரு அணுவில் எலெக்ட்ரான் என்பது எதிர் மின்னோட்டம் கொண்டது. இந்த எலெக்ட்ரான் நேர்மின்னோட்டம் கொண்ட அணு உட்கருவை ஒரு குறிபிட்ட பாதையில் குறிப்பிட்ட வேகத்தில் சுற்றிவருவதால் அப்பாதை ஒரு குறிப்பிட்ட சக்தியின் அளவைக் கொண்டிருக்கும். அப்போது அந்த எலெக்ட்ரான் எந்த சக்தியையும் ஈர்ப்பதோ, வெளியிடுவதோ கிடையாது.
இயற்பியளாளர் நீல் போர் ஆய்வைப் பின்பற்றிய உல்ஃப்காங் பவுலி பல தனிமங்களின் அணுக்கள் பற்றிய தனது ஆய்வை மேற்கொண்டார். குறிப்பாக அணுக்களில் எலக்ட்ரான்களின் தன்மை மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆராய்ந்தார். ‘Pauli Exclusion Principle’ என்று அழைக்கப்படும் அவரது ஆய்வறிக்கை ஒரு அணுவின் உட்கருவைச் சுற்றும் எந்த இரண்டு எலக்ட்ரான்களின் ’மின்கந்த ஆற்றல் சிற்றெண்ணும்’ (Quantum Number) ஒன்றுபோல் இராது.. அவைகள் நான்கு விதத்தில் இருக்கும். அது எந்த விதம் என்பது, அந்த எலக்ட்ரான் சுற்றுப்பாதையின் சக்தி அளவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த சக்தியின் அளவானது, அணு உட்கருவிலிருந்து அந்த எலக்ட்ரான் சுற்றுப்பாதையின் தூரம், அச்சுற்றுப்பாதையின் வடிவம், அச்சுற்றுப்பாதையில் அதன் வேகம் அது தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும் வேகம் (Spin) போன்ற நான்கு அம்சங்களில் தீர்மானிக்கப்படுகிறது என்றார். சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொறு தன்மையுடன் வெவ்வேறு சுற்றுப்பாதையில் சுற்றி வருவது போலவே ஒரு அணுவின் உட்கருவைச் சுற்றிவரும் எலக்ட்ரான்களும் அவ்வாறே அமைந்துள்ளன. அந்த நான்கு விதத்தில் முதலாவதான அணு உட்கருவிலிருந்து அந்த எலக்ட்ரான் சுற்றுப்பாதையின் தூரம்தான் ஒரு சுற்றுப்பாதையின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது. (The orbital angular momentum quantum number l, determines the shape of an orbit).
உல்ஃப்காங் பவுலியின் இந்த எலெக்ட்ரான்களின் பண்புகள் பற்றிய ஆய்வுதான் பிற்காலத்தில் ஒவ்வொரு தனிமங்களிலும் உள்ள இரசாயண அணுக்களிலும் உள்ள உபஅணுக்களின் அமைப்பு முறையை (Atomic Structure) படம் பிடிக்க பிற்காலத்தில் வந்த விஞ்ஞானிகளுக்கு பேருதவியாய் அமைந்தது. அதன் பயனாக உலகில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் முதல் இரும்பு, செம்பு, தங்கம், வெள்ளி, பிளாட்டினம், யுரேனியம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட (103) தனிமங்களை நாம் வகைப்படுத்த வழிவகுத்தது.
மேலும் இந்த எலெக்டான்களின் குணாதிசயங்கள்தான் தனிமங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டுப் பொருள் உருவாகும் போது அந்த சேர்க்கையானது எப்படி அமையவேண்டும் என்பதையும், புதிதாக உருவாகும் அக்கூட்டுப்பொருளின் தன்மை என்ன என்பதையும் தீர்மானிக்கிறது என்று பவுலி கூறினார். உதாரணமாக இருபங்கு ஹைட்ரஜன் அணுக்களும் ஒருபங்கு ஆக்சிஜனும் அதனதன் அணு நிறைகளுக்கேட்ப இணைந்து ஒரு புதிய பொருளான நீர் (H2O) உருவாகின்றது. எலெக்ட்ரான்களின் பண்புகளைக் கொண்டே இந்த அணுச்சேர்க்கை தீர்மானிக்கப்படுகின்றது என்பது பவுலியின் கருத்து.
அணுவின் உட்கருவிலுள்ள புரோட்டான்கள், நியூட்ரான்களின் மீது எலெக்ட்ரான்கள் மோதும்போது, அதன் விளைவாக அணுக்களில் தொடர்வினை நிகழ்கிறது என்பதையும் இதே காலட்டத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதன் மூலம் அணுசக்தி உருவாவதைப் (Atomic chain reaction) பற்றியும் நாம் ஏற்கனவே “அணுசக்தி பிறந்த கதை” என்ற தலைப்பில் பார்த்திருக்கிறோம். பவுலியும் தனது ஆய்வுக்கூடத்தில் அணு உட்கருமீது எலெக்ட்ரான்களை மோத விட்டு (Atom smashing experiments) தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அத்தைகைய சில ஆய்வுகளில் (Beeta Decay) உல்ஃப்காங் பவுலி, தொடர் வினைகளில் உருவாக வேண்டிய சக்தியின் அளவும், உட்கரு மீது மோதி வினைபுரிந்த எலெட்ரான்களின் இயங்கு விசையிலும் (Momentum), சுழலும் வேகத்திலும் (Angular momentum in the Spin) அளவு (Loss of energy) குறைந்திருப்பதைக் கண்டுணர்ந்தார். மேலே கூறியுள்ளதுபோல் ஒரு அணுவின் உட்கருவை எலெட்ரான்கள் ஒரு குறிபிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வருவதாகப் பார்த்தோம். அப்போது அதன் ஆற்றல் ஒரு நிலைத்த தன்மையில் நிலைகொண்டிருக்கும். ஆற்றல் அழியா விதியின்படி (Law of conservation of energy) ஆற்றல் என்பது புதிதாக உருவாகாது. அது அழியவும் அழியாது.
ஒரு நிலையிலிருந்து இந்த சக்தி இழப்பிற்கான காரணத்தைக் கண்டறிய அவர் மேற்கொண்ட அயராத தொடர் ஆராய்ச்சியின் பயனாக கி.பி 1930-ல் அணுப்பிளவின் போது எற்படும் சக்தி இழப்பிற்கும் (Loss of energy) மற்ற மாறுதல்களுக்கும் (In the measurement if spin) காரணமான ஒரு புலப்படாத புதிய உப அணு அப்போது உருவாகி இருப்பதைக் கண்டறிந்தார் பவுலி. அதற்கு நியூட்ரினோ என அவர் பெயரிட்டார். அணுப்பிளவின் போது உருவாகும் நியூட்ரினோ சக்தியின் ஒரு பகுதியை எடுத்துச் செல்வதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்தார். ஆனால் அதை நிரூபிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு ஆண்டுகள் பல ஆனதற்குக் காரணம் நியூட்ரினோக்களின் நிலையற்ற தன்மையாகும்.
இப்போது நாம் நம் சூரியனுக்கு வருவோம் ஒரு அணுவிற்குள் அணுப்பிளவின் போது எத்தகைய மாறுதல்கள் நிகழ்ந்தனவோ அதே நிகழ்வுகள் சூரியனில் நிகழ்வதையே நாம் மேலே பார்த்தோம். அங்கு எப்படி நியூட்ரினோகள் உருவாவதையும். கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும். சூரியனில் ழிகழும் இந்த தொடர்வினை காரணமாகத்தான் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் ஒவ்வொரு வினாடியும் நம்மை வந்து அடைகின்றன.
நியூட்ரினோக்களின் பயன்கள்
சில முக்கிய காரணக்களுக்காக நியூட்ரினோ ஆய்வு அவசியம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- நியூட்ரினோக்கள் இயற்கையிலேயே அபரிமிதமாகக் கிடைக்கின்றன.
- ஏற்கனவே நியூட்ரினோ பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் சீனா, தென்கொரியா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் உள்ளன. இந்தியாவும் இந்த பட்டியலில் இடம் பிடித்தால்தான் அறிவியல் ரீதியில் எதிர்காலத்தில் மற்ற நாடுகளோடு போட்டியிட முடியும். எனவேதான் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் ஒரு ஆய்வுக்கூடம் எப்படியும் நிறுவி விடவேண்டும் என்று இந்திய அணுசக்திக் கழகம் ஆர்வம் காட்டிவருகின்றது.
- அடுத்து நியூட்ரினோக்களில் பல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தால் வான சாஸ்த்திரம் விண் இயற்பியல், தகவல் தொடர்பு, மருத்துவத்தில் உள்ளுறுப்புகலைப் படம் பிடிக்கும் திறன் (Medical Imaging) என்று பல துறைகளுக்குப் பயன்படும். பிரபஞ்சம் பற்றி அறியவும் சூரியனைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் நியூட்ரினோ பற்றிய ஆய்வுகள் உதவும்.
- நியூட்ரினோக்கள் அணு உலைகளைக் கண்காணிப்பதற்கு உதவும். இதன்மூலம் அணு ஆயுதபரவலைத் தடுக்க முடியும். தீவிரவாத குழுக்களுக்கள் கைகளில் அணு ஆயுதம் சிக்குவதையும் தடுக்க உதவும்.
- எவ்வளவு தொலைவு கடந்தோம் எந்தெந்த பொருட்களைக் கடந்தோம் என்பதைக் கொண்டு நியூட்ரினோக்களின் தன்மையில் மாறுதல்கள் ஏற்படும். இவ்வாறு நியூட்ரினோக்களை நாம் புரிந்துகொண்டால் பூமிக்கடியில் புதைந்துள்ள கனிம வளங்களையும் பெட்ரோலிய எண்ணை வளங்களையும் கண்டுபிடிக்கலாம்.
- பூமிக்கடியில் பாறை அடுக்குகளில் ஏற்படும் ஏற்படக்கூடிய மாற்றங்களை (டோமோகிராஃபி) அறிவதன் மூலம் நிலநடுக்கம் போன்றவற்றையும் முன்கூட்டியே கணிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
- அச்சுவடிவிலான நியூட்ரினோக் கற்றைகளை ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து நிலத்தடிப் பாறைகள் வழியே அனுப்ப, அது பூமியைத் துளைத்துக் கொண்டு அச்சுவடிவம் அப்படியே பூமியின் மறுபக்கம் வழியே வெளிவந்திருக்கிறது. இந்த ஆய்வின் முடிவானது தகவல் தொழில்நுட்பத்தில் வருங்காலத்தில் ஒரு பெரும்புரட்சியை எற்படுத்தக்கூடும். இது சாத்தியமாகும்பச்சத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு செயற்கைக்கோள்கள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிடும். நாமும் விண்வெளியை செயற்கைக்கோள்களின் குப்பைக்கிடங்காக மாற்ற அவசியமும் இராது.
நியூட்ரினோவும் தொலைநோக்குத் திட்டங்களும்:
தொழில்நுட்ப தொலைநோக்குத் திட்டம் 2020 நாட்டின் வளர்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் தொழில்நுட்ப தொலை நோக்குத் திட்டம் 2035 நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரமான வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டுள்ளது. வருங்கால இந்தியாவின் சேவையில் தொழில் நுட்பமானது, ஒவ்வொரு இந்தியனின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி செல்வ செழிப்பை அவன் அதிகரித்து தனி அடையாளத்தை வலுப்படுத்தும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வருங்காலத்தில் தொழில் நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எந்த எந்த துறைகளில் எத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த நாம் தயாராக வேண்டும்? என்று தொலைநோக்கு ஆவணத்தில் குறிப்படப்பட்டுள்ளது. தனிமனித மேம்பாடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கிய தொழில் நுட்பம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சீனாவில் நியூட்ரினோ ஆய்வு மையம் கட்டத் தொடங்கி விட்டனர். அதேபோல் நம் நாட்டிலும் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கபட வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத்தான் அது பெரிய இழப்பாகும் என்கிறார் அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் அனில் ககோட்கர்.
ஆய்வகம்:
பொதுவாக லெப்டான் குடும்பத்தின் அடிப்படைத் துகள்களின் தன்மை மற்ற எந்த துகள்களோடும் வினைபுரிந்து செயலாக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதே. மின்னோட்டம் உள்ளவை (Charged Leptons) மின்னோட்டம் அற்றவை (Neutral Leptons) என லெப்டான் குடும்பத்தில் இருபிரிவுகள் உள்ளன. இரண்டாவது வகையான நியூட்ரல் லெப்டான்களைத்தான் நாம் நியுட்ரினோ எனப் பெயரிட்டு அழைக்கின்றோம். மொத்தத்தில் லெப்டான்கள் அனைத்துமே எலெக்ட்ரான்கள்தான்.
மின்னோட்டம் உள்ள லெப்டான்கள் அதாவது எலெக்ட்ரான் வகை நியூட்ரினோக்கள் மற்ற அணுத்துகள்களுடன் வினையாற்றி வேறு வகை அணுக்களையும் பொசிட்ரோனியம் என்ற கூட்டுப்பொருளாகவும் மாறும் தன்மை உடையன. ஆனால் நியுட்ரினோக்கள் நிறையற்ற மின்னூட்டமில்லா துகள்கள் என்பதால் அது எந்த ஒரு பொருளின் மேல் மோதும் போது அது எந்த ஒரு அணுத்துகளுடனும் சேர்ந்து வினைபுரிவதில்லை (Interact). மாறாக அது அப்பொருளின் மீது மோதும் போது அப்பொருளை ஊடுருவிச் சென்றுவிடும் தன்மையது.
ஆனால் நியூட்ரினோக்கள் ஒரு மின்காந்தப் புலத்தினூடே (Electromagnetic Force) ஊடுருவும் போதோ ஒரு அணுத் துகளுடன் மோதும் போதோ மிக அரிதாக மிக பலவீனமான ஒரு தாக்கத்தை (weak interactions) அப்பொருளின் மீது ஏற்படுத்துதுகின்றது. வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவான நேரத்திற்குள் நிகழ்ந்துவிடும். இந்த வினைகளின் போது நியூட்ரினோக்கள் மின்னோட்டம் உள்ள லெப்டான்களாக மாறிவிடும். சில நியூட்ரினோக்கள் சில அணுத்துகளின் மீது வினையேதும் புரியாமல் அதைத் உருட்டிச் சென்று விடுவதும் உண்டு. இப்படியான நிகழ்வைப் பதிவு செய்து நியூட்ரினோக்களின் தன்மை பற்றி மேலும் அறிந்துகொள்வதே நியூட்ரினோ ஆய்வகங்களின் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்தியாவில் கோலார் தங்கச் சுரங்கத்தில் 1965-ம் ஆண்டில் நடந்த ஆராய்ச்சியின் போதுதான் நியூட்ரினோக்கள் இருப்பது முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்கு வளிமண்டல நியூட்ரினோக்களை ஆராய ஜப்பான் நாட்டின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இந்தியாவின் டாடா ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து உலகிலேயே கோலாரில்தான் வளிமண்டல நியூட்ரினோக்கள் இருப்பதைப் முதலில் பதிவு செய்தனர். கோலார் தங்கவயல் மூடப்பட்டபிறகு அப்போதிருந்தே இயற்பியலாளர்கள் இந்தியாவில் ஒரு ஆய்வகத்துக்கான இடத்தேடலைத் தொடர்ந்தனர். பல்வேறு இடங்களில் முயன்றும் மக்கள் எதிர்ப்பு, சூழியல் போன்ற காரணங்களால் முடியாமல் போகவே, கடைசியாகத் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
இவ்வாறு உருவாகும் நிலையற்ற தன்மையிலான நியூட்ரினோக்களை மட்டும் பதிவு செய்ய 1 கி.மி நீள அகலம் உயரமுள்ள கடினப்பறைகளான மலைப்பகுதி தேவை. மலை உச்சியிலிருந்து சுமார் 1500 மீட்டர் ஆழத்தில் 132 மீட்டர் நீளம், 26 நீட்டர் அகலம் 20 மீட்டர் உயரம் கொண்ட குகை அமைக்கப்பட்டு. அதில் 50 ஆயிரம் டன் எடைகொண்ட காந்தமாக்கப்பட்ட இரும்பு கலோரிமீட்டர் நிறுவப்படும். அதனருகே இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் குறிப்பிட்ட இடைவெளியில் அறைகள் போல் அமைக்கப்படும். காந்தத்தின் செயல்பாடுகளையும் மின்தட்டு அறைகளின் செயல்பாடுகளையும் தூண்டுதல் செய்து அதனிடையே நியூட்ரினோ துகள்கள் ஆய்வு செய்யப்படும். 1300 மீட்டர் அதாவது 5200 அடி ஆழத்தில் இந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இந்த ஆழத்தில்தான் நியூட்ரான்களின் தன்மை வளிமண்டல நியூட்ரினோக்களிலிருந்து மாறுபட்டிருக்கும். நியூட்ரினோத் துகள்கள் அண்டவெளிக்கதிர்கள் ஊடே பயணிப்பதால் அவற்றை தனியே வடிகட்டிப்பிரித்துத்தான் ஆய்வு செய்யவேண்டும். தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையும் ஆய்வுக்கூடம் முதலில் வளிமண்டல நியூட்ரினோக்களை மட்டுமே ஆராயும். பிறகு உலகின் மற்ற ஆய்வங்களிலிருந்து பூமிக்கடி வழியே கற்றைகளாக பொட்டிபுரத்திற்கு அனுப்பி ஆராய இருக்கிறார்கள். இந்த நியூட்ரினோக்களின் கிரகங்களை ஊடுருவும் தன்மையானது பொருட்கள் பற்றிய (Particles) ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவும்.என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
இயற்கையான நியூட்ரினோக்களைவிட ஆய்வுக்கூட நியூட்ரினோக்கள் ஆபத்தானவை என்று சிலர் கூறுகின்றனர். அறிவியல்பூர்வமாகச் சொல்வதானால் இது உண்மையே அல்ல. ஏனெனில் நியூட்ரினோ என்பது ஒரு அடிப்படைத் துகள். அதில் இயற்கை செயற்கை என்பதற்கான இடமில்லை. அணுமின் நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் அதே வோல்டேஜில் புனல்மின் நிலையத்திலிருந்து கிடக்கும் மின்சாரத்தைவிட அதிக ஆபத்தானவை என்பதைப் போன்ற பிதற்றலே இது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
நியூட்ரினோ ஆய்வகத்தால் ஏற்படும் விளைவுகள்.
ஆனால் நியூட்ரினோக்களால் ஏற்படப்போகும் பயன்கள் எத்தகையதாக இருந்த போதும் ஆய்வகங்கள் பற்றி அதன் எதிர்ப்பாளர்கள் சொல்லும் கருத்துக்களை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. தேனிமாவட்டத்தில் நீராதாரங்கள் உட்பட எதிர் காலத்தில் விளையப்போகும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மூடிமறைக்க முடியாது. இப்படியான காரணங்களால்தான் உலகில் பல நியூட்ரினோ ஆய்வகங்கள் மக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்டு விட்டன.
உலகின் ஆபத்தான ஆராய்சிகளின் ஆய்வுக்கூடமாக தமிழகம் மாறுகின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கல்பாக்கம், கூடங்குளம், நெய்வேலி, மீத்தேன், எரிகுழாய். போன்ற தமிழகத்தின் எந்த ஒரு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் மத்திய மாநில அரசுகளிடமிருந்து பதில் கிடையாது. நீதிமன்றங்கள்தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் என்றால் கூட போபால் விபத்துக் கிடைத்தது போன்ற இழப்பீடுதான் இருபது முப்பது வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் போலும். மேற்சொன்ன அனைத்து திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்த போது, நிலமளிக்கும் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பும், வாழ்வாதாரத்துக்கு உத்தராவாதமும் அளிக்கப்பட்டது. ஆனால் நடந்தது நடப்பது எல்லாமே நேர்மாறாகத்தான் உள்ளது.
தமிழகத்திற்கு உண்மையிலேயே நன்மை பயக்கும் உருப்படியான குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் போன்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடக்கின்றது. அதே போல்தான் சேதுசமுத்திரத் திட்டமும். ஆனால் சுற்றுச் சூழலை அதிகம் பாதிக்கும் அம்சங்கள் கொண்ட நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடைக்கின்றது.
இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் 750 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு கடைநிலை அரசு ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை! கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறார்கள்! லஞ்சத்தால் எதையும் தமிழ்நாட்டில் சாதிக்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. அதிகார வர்க்கமும் சர்வதேச வணிகமுதலைகளும் இணைந்த ஒரு வலிமையான வலைப்பின்னலின் பேராசையின் விளைவுகள்தான் அனைத்துக்குமான காரணம்!
திருவண்ணாமலை தலபுராணம் பற்றிக் கூறுகையில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு சமயம் பிரம்மாவுக்கும் மகா விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டதாம் அவர்கள் இருவரும் தங்கள் வழக்கை சிவபெருமானிடம் எடுத்துச் சென்றார்களாம். சிவபெருமான் என்னுடைய சிரசையோ அல்லத பாதத்தையோ யார் முதலில் காண்கின்றார்களோ அவரே பெரியவர் என்று சொல்லியபடி ஆகாயத்துக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்தாராம். பிரம்மா பருந்தாக மாறி சிவன் சிரசை காணப் பறந்தாராம். மகாவிஷ்ணு பன்றி உருவம் எடுத்து பூமியைத் துளைத்துச் சென்றாராம். முடிவில் விஷ்ணு சிவன் பாதத்தைக் காண இயலாமல் திரும்பி வந்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டாராம். அனால் பிரம்மாவோ சிவன் தலையிலுள்ள தாழம்பூவைச் சாட்சி வைத்து தான் அவர் சிரசைக் கண்டதாகச் சொன்னாராம். அவர் பொய்யுரையை ஏற்கமறுத்த சிவன் பிரம்மனுக்கு பூவுலகில் கோயில்களே இருக்காது என்று சபித்தாராம். தாழம்பூவை பூஜைக்கு அருகதை அற்ற பூ என்றும் கூறிவிட்டாராம். ஆனல் நமக்கு இக்கதை கூறும் உண்மை பிரபஞ்சமும் அணுவும் ஆராய ஆராய முடிவற்றவைகள் என்பதுதான். பிரபஞ்சத்தில் புதுப்புது கோள்களும் நட்சத்திரங்களும் புதுப்புது தகவல்களுடன் நாள்தோரும் வலம் வருகின்றன. அதேபோல் அணுவைத் துளைத்துச் செல்லும் ஆராய்விலும் புதுப்புது துகள்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றது. அதைத்தான் இந்த நியூட்ரினோ பற்றிய ஆய்வும் தெரிவிக்கின்றது.
இன்று ஆண்டுக்கணக்கில் ஆராய்ந்து விஞ்ஞானம் சொல்லும் ஒரு விஷயத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் தனது மெய்ஞானத்தால் சொல்லிவிட்டான்! தலை நிமிர்ந்து நடந்த தமிழனுக்குத்தான் சோதனைக்கு மேல் சோதனையாக எத்தனை பேரிடிகள்? ஜல்லிக்கட்டு நடத்தக்கூட அனுமதியில்லையாம். வெக்கக்கேடு. யாதும் ஊரே யாவரும் கேளீர்!.
மார்ஷல் தீவுகளில் அமெரிக்கா 1940-50 களில் நடத்திய அணு குண்டு சோதனைகளைப் போல் ஜனசஞ்சாரமற்ற தீவுகளைத் தேர்வு செய்து நியூட்ரினோ போன்ற திட்டங்களைச் செயல்படுத்தலாம். அதை விட்டு விட்டு அரசாங்கம் நம் காதில் பூ சுற்றுகின்றது.
கான்கிரீட்டால் மூடப்பட்ட அணுகுண்டு சோதனை நடந்த இடம்: ரூனிட் தீவு – பசிபிக் மார்ஷல் தீவுகள்
Source: The world Book Encylopedia, DK ultimate visual dictionary, National Geography Answer Book & தமிழ் ஹிந்து அறிவியல் கட்டுரைகள்.
Labels:
அண்டத்தின் தூதுவன்,
நியூட்ரினோ
Subscribe to:
Posts (Atom)