Saturday, September 17, 2011

அணு சக்தி பிறந்த கதை - 5

ந்த அணுசக்தி பிறந்த கதை எழுதப்பட தூண்டுகோலாய் அமைந்த  கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு பற்றி மக்களிடம் எழுந்துள்ள ஐயப்பாடுகளைப் போக்கும் விதமாக அணு விஞ்ஞானிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று (17-09-2011) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அதில் கூடங்குளம் அணுமின் நிலையம் நில நடுக்கம் ஏற்பட சாத்தியமில்லாத இரண்டாம் நிலை மண்டலத்தில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது எனவும், கடல் மட்டத்திலிருந்து ஆழிப்பேரலை நெருங்க முடியாத 7.5-9 மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அணு உலைகளை இயக்கத்திலிருந்து நிறுத்தி வைத்திருக்கும் போது அவற்றைக் குளிர்விக்க ஒன்றுக்குப் பதிலாக நான்கு டீசல் மின்னாக்கிகள் (Diesel Generators) 9 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்பதால் மக்கள் பயப்படத் தேவை இல்லை என்றும் எனவே போராட்டத்தைக் கைவிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எப்படியெல்லாம் விபத்து நடக்லாம் என, அனைத்து கோணங்களையும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆராய்ந்து  எந்த நிகழ்வானாலும் கதிர்வீச்சோ, கட்டடங்களுகுச் சேதமோ, சுற்றுப்புற ஊர்களுக்குச் சிக்கலோ ஏற்படாத அளவிற்கு மற்ற உலக நாடுகளும் பின்பற்றக் கூடிய அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடங்குளத்தில் செயல்படுத்தியுள்ளோம்  என்கிறார் கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குனர் காசிநாத் பாலாஜி அவர்கள். 

(இது தொடர்பான தொழில் நுட்பக்கூறுகளை அடுத்து வரும் அணு உலைகள் பற்றிய கட்டுரைகளில் விரிவாக ஆராய்வோம்)

கடந்த 20 ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்திய அணுமின் கழகத்தால் ரூ 16,700 கோடி மதிப்பில் 2000 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட இத்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு 925 மெகாவாட் என்பது, 3000 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலத்திற்கு எத்தனை முக்கியமான திட்டம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


ஒரே நேரத்தில் எந்த சுற்றுச் சூழல் சீர்கேடும் இல்லாமல் 2000 மெகாவாட் மின் உற்பத்திக்கு உகந்த இத்திட்டம் அடுத்த மாதம் மின் உற்பத்தி துவங்க வேண்டிய நிலையில் திடீரென எதிர்ப்பு கிளம்பியிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமோவென நடுநிலையாளர்கள் கருதுகிறாகள். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆரம்பகட்டத்தில் இருந்த அணுமின் திட்டத்தைத்தான் நிறுத்திவைத்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் பஸ் ரயில், விமானம் என எந்த ஒரு பயணமாகட்டும் விபத்து இல்லாமல் இருக்கிறதா? அதற்காக யாரும் பயணம் மேற்கொள்ளாமல் இருக்கிறோமா? என்பது நடுநிலையாளர்களின் கேள்வி. சேது சமுத்திரம்  திட்டத்தைப் போல் ஒவ்வொரு திட்டமும் இப்படி அரசியல் சகதியில் சிக்கி சீரழிந்தால் தமிழ் நாட்டில் இனி வளர்ச்சி என்பது கேள்விக்குறிதான் என்பதும் அவர்கள் ஆதங்கம்.

இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக் குழுவினர் முதல்வர் வேண்டுகோளை ஏற்றுப் போராட்டத்தைக் கைவிடுவார்களா அல்லது தலையும் வயிற்று வலியும் தனக்கு வந்தால்தானே தெரியும் என்ற ரீதியில் போராட்டத்தை தொடர்வார்களா என்பது காலதேவனின் பதிலில்தான் உள்ளது. 

இனி கட்டுரைக்கு வருவோம்.

அணுக்குள் நிலவும் பல்வேறு விசைகள்  (Forces):





குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற இயக்கயெந்திர அணுவியல் பிரிவு அணுக்குள் நிலவும் பல்வேறு விசைகளைப் பற்றியும்,  உட்பிரிவு அணுத் துகள்களின் (Sub atomic particles) இயக்கத்தைப் பற்றியும் விவரிக்கும் துறையாகும். 1913ல் டென்மார்க் இயற்பியல் விஞ்ஞானி நீல்ஸ் பேகர் என்பவர் அணுவில் எலெக்ட்ரான்களின் இயக்கத்தை விளக்க குவாண்டம் மெக்கானிசத்தைப் பயன்படுத்தினார். அதன் பிறகு வந்த விஞ்ஞானிகள் இதன் கோட்பாடுகளை அணு உட்கருவைப் பற்றி ஆராயவும் பயன்படுத்தினர். எலெக்ட்ரான்களைப் பற்றி மேலும் விரிவாக ஆராய்ந்து செயற்கைப் பிரளயம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் இப்பிரபஞ்சம் உருவாகக் காரணமான கடவுள் துகளைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு வளர்ச்சி காண இக்கோட்பாடுகள்தாம் காரணம். 

எலெக்ட்ரானின் சக்தி வெளிப்பாடு:

எலெக்ட்ரான் ஒரு எதிர்மின் சக்தி கொண்ட மின்னணு. இதனால் மின் ஆற்றலைத் தன் வயப்படுத்தும் தன்மை இதற்குக் கிடையாது. ஆனால் இயல்பு நிலையில் இவை உட்கருவைத் தேர்ந்தெடுத்த ஒரு சுற்றுப் பதையில் வலம் வருகின்றன. எலெக்ட்ரானின் இந்த நிலையைத்தான் எலக்ட்ரான் ஆற்றல் நிலை அல்லது வளையம் (Quantum State or Energy Level) என்கிறோம்.

                                                                              
                                      பாத்திரத்தில் நீரின் மட்டம்

நீரானது அதன் கொள்கலத்தில் எப்போதும் குறைந்த உயரத்தில்தான் நிலை கொள்ளும். தன்மையுடையது. அதே போல் மிகக் குறைந்த ஆற்றல் பெற்ற நிலையில் இயங்குவதுதான் எலெக்ட்ரான்களின் தனிப் பண்பு. ஒரு குறிபிட்ட நேரத்தில் குறைந்த நிலை ஆற்றல் வளையத்தை (உள் வளையம்) இட்டு நிரப்ப ஒரே ஒரு எலெக்ட்ரானால் மட்டுமே முடியும். முதல் வளையம் நிரப்பப்பட்டதும் மற்ற எலெக்ட்ரான்கள் அடுத்த உயர் நிலை வளையத்தை நோக்கிச் செல்ல வேண்டிய நிர்பந்ததிற்கு ஆட்படும். இவ்வாறு சதாரண வெப்ப நிலையில் முடிந்த அளவு குறைந்த நிலை ஆற்றல் வளையயங்களை எலெக்ட்ரான்கள் ஆக்கிரமித்து முடிந்த அணுவை அதன் இயல்பு நிலையில் (Ground state) இருப்பதாகக் கொள்ளலாம்.
                                                               
 

இந்நிலையில் அந்த அணுவால் உள்ளிருக்கும் ஒரு எலெக்ட்ரானை இழக்கவோ, வெளியில் இருந்து மற்றொரு எலெக்ட்ரானைப் பெறவோ இயலாது.
  
அணுக்குள் நிலவும் பல்வேறு விசைகள்  (Forces):

ரு பொருளை நாம் சூடேற்றும் போது  அப்பொருளில் உள்ள அணுக்கள் கிளர்ச்சி அடையும். வெப்பநிலை 2000 அல்லது 3000 க்கு மேற்படும் போது உட்கரு அருகில் முதல் சுற்றில் உள்ள எலெக்ட்ரான்கள் வெப்பத்தால் கிளர்ச்சி அடைந்து அடுத்த சுற்றுக்கு மாறும் அளவிற்கு கூடுதல் சக்தியைப் பெறுகின்றன. இதை அணுக்களின் கிளர்ச்சி நிலை (Excited state) என்கிறோம். இக்கிளர்ச்சி நிலையில் எலெக்ராடான்கள் அடுத்தடுத்த உயர் சுற்றுப்பதைக்கு மாறும் போது ஒரு கிளர்சியடைந்த எலெக்ட்ரானால் நூற்றிலொரு பங்கு வினாடி நேரம் கூட அந்த உயர் சுற்றுப் பதையில் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. உடனே அவைகள் பழைய சுற்றுப்பாதைக்கு திரும்பி இயல்பு நிலைக்கு வருகின்றன.

          
எலெக்ட்ரான்கள் இப்படி உயர் வெப்ப நிலையிலிருந்து கீழ் நிலைக்கு மாறி வரும்போது அது கொண்டிருந்த கூடுதல் வெப்பத்தை ஒரு சிறு ஒளிப் புள்ளியாக மாற்றி வெளியேற்றுகின்றன. இதைத்தான் நாம் ஃபோட்டான் (Photon) என்கிறோம். ஒளிக்கும் சக்தி உண்டு என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஒளிமின் விளைவுகள்  (Photoelectric effects) தத்துவத்தின் மூலம் நமக்குக் கிடத்த வரப்பிரசாதம் இந்த ஃபோட்டான்கள்.  இன்றைய உலகில் இதன் பயன்பாடு லேசர், ஸ்பெக்ட்ரம், கைபேசி என விரிந்து செல்லும் ஒன்றாகும்.

உட்கருவில் நிலவும் விசைகள்:

குவாண்டம் கோட்பாடுகள் எப்படி எலெக்ட்ரான்களுக்குப் பொருந்துகின்றதோ அப்படியே அணு உட்கருவில் உள்ள புரொட்டான் மற்றும் நியூட்ரான்களுக்கும்  பொருந்தும். ஆனால் உட்கருத் துகள்களை ஒருங்கிணைக்கும் விசைக்கும் அணுவில் இயங்கும் எலெக்ட்ரான்களை ஈர்த்து வைக்கும் மின் ஆற்றலுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு.  உட்கரு துகள்கள் மிக அண்மையிலுள்ள துகளுடன் ஒன்றுக்கொன்று  தொடர்பிலான ஒருவித சக்தியால் பிணைந்து கிடக்கின்றன. இந்த ஒட்டுமொத்த உள் விசையைவிட உட்கருவின் வெளிப்புற (Nuclear force) விசையானது மிஞ்சி நிற்பதால் உட்கருத் துகள்கள் எப்போதும் சிதறிவிடாமல் வெல்லப்பாகு கடலை உருண்டையைப் பிடித்து வைப்பது போல் ஒரு பிடிப்பில் வைத்துள்ளது.
                                                                                 
                                                                                                                                     அடுத்த  சந்திப்பில் பார்ப்போம்...                                       
                       



                                               

                                                                                                                                

No comments: