Sunday, January 17, 2010

சபாஷ் சரியான போட்டி!

சந்திரனுக்குப் போகலாம் வாங்க - 2

வானைத் தொடப் போட்டியிடும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நியூயார்க் நகரம்! அங்குள்ள புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆற்றோரத்து மாபெரும் தேவாலயம்! அத்தேவாலயத்தின் புனிதமான வெண்சுவர்களில் மனித குலத்துக்கு அரும்பெரும் தொண்டாற்றிய அமரத்துவம் வாய்ந்த அறுநூறு பெரியோர்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

clip_image001

clip_image002


<- அணுவில் அண்டம் & அண்டத்தில் அணுத்திரள் ->

பேரரசர்கள், மகான்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள் என வெண்சுண்ணாம்புக் கல்லில் சமைக்கப்பட்ட அவ்வுருவங்களில் அழிவில்லாத அருவமான உயிரோட்டம் இப்பிரபஞ்சம் முழுவதும் பரிணமித்திருக்கிறது. தேவாலயத்தின் அறுநூறு அப்பிரபல உருவங்ளில் 14 விஞ்ஞானிகளின் உருவங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த 14 விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுக்க, அதற்கான பொறுப்பேற்ற டாக்டர் ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் என்பவர், அப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளில் விஞ்ஞான சரித்திரத்தில் இடம் பெற்ற தலைசிறந்த 14 விஞ்ஞானிகளின் பட்டியலை அனுப்புமாறு கேட்டிருந்தார்.

அவ்வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒரு பட்டியலை அனுப்பி இருந்தனர். பெருவாரியான விஞ்ஞானிகள், ஆர்க்கிமிடீஸ், யூக்ளிட், கலிலியோ, கோபர்நிகஸ், ஐசக் நியூட்டன் போன்ற பிரபலங்களின் பட்டியலை அனுப்பியிருந்தனர். ஒவ்வொருவர் பட்டியலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தது. ஆனால் அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியலிலும் ஒரே ஒரு விஞ்ஞானியின் பெயர் மட்டும் தவறாமல் இடம் பெற்றிருந்தது!

அந்த தலைசிறந்த விஞ்ஞானி யாராயிருக்கும்?

மேற்கொண்டு நாம் பயணத்தைத் தொடருமுன் நம் பயணத்திற்கு விண்வெளியில் அறிவியில் ரீதியாக ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அந்த மாபெரும் அறிவியல் மேதையைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமல் நாம் பயணத்தைத் தொடர்ந்தால் அதில் பொருள் இல்லை.

ஏனெனில் 19ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை விஞ்ஞான உலகில் ஒரு குழப்பமான நிச்சயமற்ற நிலை நிலவியது.

கி.மு 300லிருந்து, இன்று வரை 2300 ஆண்டுகளாக ஜியோமிதி கணிதத்தின் தந்தை என்று போற்றப்படுகிறவர் யூக்லிட். சதுரம், வட்டம் செவ்வகம், முக்கோணம், ஐங்கரம், அறுகோணம், கனசதுரம், கனச்செவ்வகம், கோளம், உருளை பற்றி இன்றும் பள்ளிக் கணிதத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை கோட்பாடுகளும் இவருடையவை! பைபிளுக்கு அடுத்தபடியாக 13 தொகுதிகள் அடங்கிய இவரது கோட்பாடுகள் தான் உலகின் அத்தனை மொழிகளிலும் அதிக பிரதிகள் பதிப்பாகியுள்ளன!

ஆனால் பூமி தட்டையானது என்ற அனுமானத்தில் சொல்லப்பட்ட பல முக்கிய யூக்லிட் கோட்பாடுகள் பூமி உருண்டை என்று ஆனதும் தவறாகிப் போனது.

மேலும் அந்த காலகட்டத்தில் வெளிவந்த மேக்ஸ்வெல்லின் மின் காந்தவியல் கோட்பாடுகள் நியூட்டனின் இந்திரவியல் கோட்பாடுகளுக்கு மாறுபட்டிருந்தது. மாக்ஸ் பிளாங்கின் பகுதித் தத்துவம் (QUANTUM THEORY) விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராயிருந்தது. ஏற்கனவே கலிலியோ, பைசா கோபுரத்திலிருந்து இரண்டு வெவ்வேறு எடை கொண்ட இரும்பு குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட, இரண்டும் ஒரே நேரத்தில் தரையைத் தொட்டு, இது அதுவரை நிலவிவந்த அதிக எடை கொண்ட பொருள் தான் முதலில் பூமியைத் தொடும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்றுக்கும், அவருக்கு பின்னால் வந்த நியூட்டனின் இரண்டாவது விதிக்கும் மாறுபட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒலி பரவ காற்றும், அலைகள் தோன்ற நீரும் இன்றிய மையாதது போல், ஒளி பயணிக்க ஈதர் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஊடகம் பிரபஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கிறது. நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் அந்த ஊடகத்தில் மிதக்கிறது என்ற கூற்று நியூட்டன் காலத்திலிருந்து நிலவி வந்தது. இது கோபர்னிகசின் கிரகங்கள் தன்னைத்தானே சுற்றுகின்றன என்ற விதிக்கும், கிரகங்கள், நட்சத்திரங்கள் இவைகளின் இயக்கத்தால் ஒளியின் வேகம் மாறாது என்ற கோட்பாட்டிற்கும் முரண்பட்டிருந்தது.

இப்படி அவிழ்க்கமுடியாத பல புதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஒரு தேக்க நிலையை உண்டாக்கியிருந்த ஒரு காலகட்டத்தில் அம்மேதையின் கோட்பாடுகள் இந்த புதிர்களுக்கெல்லாம் விடை சொன்னதோடு மட்டுமல்லாமல், விஞ்ஞான உலகின் முகத் தோற்றத்தையே மாற்றி அமைத்தது, உலகின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியது. அவரது கோட்பாடுகள் மனித குலம் இருபதாம் நூற்றாண்டைக் கடந்து வர ஆதாரமாய் அமைந்தது என்றால் மிகையில்லை.

அணுவில் அண்டம்! அண்டத்தில் அணுத்திரள்! என்பது அவரது கோட்பாடுகளின் சாரம். அப்படிப்பட்ட ஒரு மகானைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பயணிப்பது சுவைக்குமா?

அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியலிலும் இடம் பெற்ற அந்த அறிவியல் மேதை யார்?

சரியான விடையை மின்னஞ்சல் செய்யும் வாசகர்களில் குலுக்கல் முறையில் ஐந்து நபர்களுக்கு பரிசாக அறிவியல்வீதி பதிப்பகம் சார்பில் இரண்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

(வெற்றியாளர்களின் விருப்பப்படி கீழ்க்கண்ட இரண்டு தொகுப்புகளில் ஏதேனும் ஒன்று)

1) கனவுக் கிராமம் + சுழலிறக்கை விமானம்

(அல்லது)

2) இங்கேயும் ஒரு சொர்க்கம் + ஆகாய விமானம்

உலகின் எந்த நாட்டில் இருப்பவரானாலும் அவருக்கு பரிசு பதிப்பகத்தின் செலவில் அனுப்பி வைக்கப்படும்.

பதில் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: arivialnambi@gmail.com

கடைசி தேதி: ஜனவரி 26 – பகல் 12 மணி வரை (இந்திய நேரம்)

No comments: