Tuesday, March 9, 2010

புதிய விற்பனை மையம்

அறிவியல் வீதி மற்றும் பாவை பப்ளிக்கேஷன்ஸ் இணைந்து உருவாக்கும் புதிய விற்பனை மையம் நாளை உதயமாகிறது!




Tuesday, January 26, 2010

நிலவில் ஒரு பாலிவுட் நட்சத்திரம்!

சந்திரனுக்குப் போகலாம் வாங்க-3

நியூயார்க்கில் உள்ள சந்திர நில இயலின் சர்வதேச சங்கம் (International Lunar geographic society) நம் ஷாரூக்கான் பெயரை அங்குள்ள ஒரு எரிமலை வாய்க்கு (Crater) வைத்துப் பெருமைப் படுத்தியுள்ளது. இந்த அமைப்பு நிலாவியல் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஓர் அமைப்பாகும். அதை சர்வதேச வான சாஸ்திரவியல் ஒருங்கிணைப்புக்குழு (International Astronomical Union)  ஆமோதித்துள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் அப்பல்லோ-11 விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங்க் எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் காலடி வைத்த அதே அமைதிக்கடல் பிரதேசத்தில்தான் (Sea of Tranquility) இந்த எரிமலைவாய்  அமைந்துள்ளது. பிரஞ்சு வானவியல் வல்லுனர் பிரான்சிஸ் J. D அரக்கோ, என்பவர் பெயரில் அமைந்துள்ள மாபெரும் 'அரக்கோ' தொகுப்பில் உள்ள நான்கு  எரிமலை வாய்களில் ஷாரூக்கான் பெயரில் அமைந்துள்ள எரிமலை வாய்தான்  மிகப் பெரியது. அப்பல்லோ-11 வீரர்கள் இறங்கிய இடம் இதற்கு தென் கிழக்கே உள்ளது. ஏராளமான ஷாரூக் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஷாரூக்கின்  தீவிர  ரசிகர் ஒருவர் ஏற்கனவே ஒரு துண்டு நிலத்தை சந்திரனில் வாங்கி அவருக்கு பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கணிதவியல் மேதை சர் சி.வி ராமன், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாரபாய், இந்திய அணுவியலின் தந்தை எனப் போற்றப்படும் ஹோமி பாபா ஆகியோர் வரிசையில் ஷாரூக் பெயரும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் லியார்னா டோ டாவின்சி, கிறிஸ்டோபர் கொலம்பஸ், சர் ஐசக் நியூட்டன், ஜூலியஸ் சீசர், ஜூல்ஸ் வெர்ன், பிளேட்டோ, ஆர்க்கிமீடிஸ், கெப்ளர், கோபர்னிக்கஸ், அரிஸ்டாட்டில் போன்ற வானவியல் மேதைகள் மற்றும் கிரேக்க ரோமானிய இதிகாச தெய்வங்கள் பெயர்களிலும் ஏற்கனவே சந்திரனின் பல மலைத் தொடர்களுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், எரிமலை வாய்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளன.

இந்திய நிலாவியல் அமைப்பின் காரியதரிசி பிரதீப் மோகன்தாஸ், இந்திய சந்திரபயணத் திட்டத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கஸ்தூரிரங்கன், தேசீய விண்வெளி அமைப்பின் தலைவர் சுரேஷ் நாயக் ஆகியோர் இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த இந்தியர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என வரவேற்றுள்ளனர்.

இனி நாம் நமது சந்திர பயணத்தை மேற்கொண்டு தொடர்வோம். வெண்ணிலாவில் நமக்கென்று ஒரு இடத்தை நாமும்  பிடிக்க வேண்டுமல்லவா?

சந்திரன் - சி அடிப்படைத் தகவல்கள்:

வயது : 460,00,00,000 ஆண்டுகள். 

பூமியிலிருந்து தூரம் மிகஅருகில் : 3,56,399  கி.மீ.

                   மிகதூரத்தில் :  406699 கி.மீ.

விட்டம் : 3476 கி.மீ (ஆஸ்திரேலியாவில் சிட்னி-பெர்த் நகரங்களுக்கு இடைப்பட்ட தூரம்)

சுற்றளவு : 10,927 கி.மீ.

தன்னைத் தானே சுற்ற ஆகும் காலம்: 27நாள் 7மணி 43நிமிடம்.

பூமியைச் சுற்றிவர  ஆகும் காலம்   : 27நாள் 7மணி 43நிமிடம்.

ஈர்ப்பு விசை : புவி ஈர்ப்பு விசையில் ஆறில் ஒருபங்கு.

ஈர்ப்புவிசையிலிருந்து விடுபட தேவையான வேகவிசை : 2.4 கி.மி/செகண்ட் 

வாயுமண்டலம் : சிறிதளவு/இல்லை.

வெப்பம் சூரிய உச்சத்தில்  : 1270C

சந்திரனின் நள்ளிரவில்    : -1730C௦

பொருள்திணிவு (Mass): பூமியின் 81ல் ஒரு பங்கு.

கொள்ளளவு (Volume) : பூமியின் 50ல் ஒரு பங்கு.

சந்திரனும் புதன், வெள்ளி போன்றே தனித்து சூரியனைச் சுற்றிய ஒரு கிரகம் என்றும், ஒரு தருணத்தில் பூமியின் மிக அருகில் வந்த சமையம் பூமியின் புவிஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியின் துணைக்கிரமாக மாறியது என்ற ஒரு கருத்தும் உள்ளது.

துணைக்கோள் இலக்கணத்திற்குச் சற்று பெரிது சந்திரன். இதன் குறுக்களவு 3470 கி.மீ. பூமியின் குறுக்களவில் கால் பங்கிற்கும் சற்றே அதிகம். சந்திரன் தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கும், பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கும் ஒரே நேரம் அதாவது 27.3 நாட்களே எடுத்துக் கொள்வதால்,  நிலாவில் நாம் பார்க்கும் அதே பகுதிதான் நமக்கு எப்போதும் தெரியும். ஆனால் நாம் பார்க்கும் சந்திரனின் பரப்பளவில் வித்தியாசம் இருக்கும். ஏனெனில் சந்திரன் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது அது பெரிதாகத் தெரியும். அதாவது அதன் மீது படும் சூரிய ஒளியின் பரப்பளவு அதிகம்.

நாம் சாதாரணமாகச் சந்திரனைப் பார்க்கும் போது சந்திரன் மென்மையான ஒரு பஞ்சு உருண்டை போல் காட்சி அளிக்கிறது. அதில் கறுப்பு மற்றும் சாம்பல் நிற திட்டுகள் பல இருப்பது போலும் உள்ளது. ஆனால் நாம் சந்திரனை ஒரு தொலைநோக்கி வழியே பார்த்தால் இந்தக் கறுப்புத் திட்டுகள் அகண்ட சமவெளி போல் காட்சி தரும். இக்காட்சியை முதன் முதலில் கலிலியோ தொலைநோக்கி வழியே பார்த்தபோது அவருக்கு இது பரந்த கடல் போல் கட்சி தரவே இதை அவர் மரியா (Maria) என்று லத்தீன் மொழியில் அழைத்தார். லத்தீனில் ‘மரியா’ என்றால் கடல் என்று பொருள். எனவேதான் நாம் இன்றும் சந்திரனின் சமவெளிப் பிரதேசங்களை ‘அமைதிக் கடல் பிரதேசம்’ போன்று ‘கடல் பிரதேசம்’ என்ற அடைமொழியுடன் அழைகிக்கிறோம்.

ஆனால் இன்று நமக்கு அந்தச் சமவெளிகள் சந்திரனில் உள்ள பள்ளத்தாக்குகள் என்றும், அவைகள் மெல்லிய மணல் அடுக்கினால் மூடியுள்ளன என்பதும் தெரியும். இவைகள் எரிமலைக் குழம்பாலும், சாம்பலாலும் உருவானவை.

அடுத்து அந்த சாம்பல் நிறத் திட்டுகளில் பெரும்பாலானவகள் உயர்ந்த பீடபூமி போன்ற மலைத் தொடர்களாகும். இவைகள் கற்களால் ஆன கெட்டியான வறண்ட பாறைத்தொடர்களாகும். சமெவேளிகள் நம் கண்ணுக்குத் தெரியும் நிலாப் பகுதிகளில் அதிகமாகவும் அதன் மறுபக்கத்தில் உயர்ந்த பீடபூமிகள் அதிகமாயும் காணப்படுகின்றன.

இவை தவிர பூமியைப் போல் இல்லாமல் சந்திரனில் கோடிக்கணக்கான எரிமலை வாய்கள் உள்ளன இவற்றில் 50 லட்சம் எரிமலை வாய்கள் 1.5 கி.மீக்கு அதிகமான விட்ட அளவு கொண்டவைகள். இந்த எரிமலை வாய்களில் சில 80 முதல் 100 கி.மீ விட்டம் கொண்டவைகள் கூட இருக்கின்றன. மீதி குறைந்த பட்சம் 30 செ.மீ விட்டத்திற்குக் குறையாதவைகள். மிகப்பெரிய ‘இம்பிரியம் பேசின்’ எரிமலைவாய் 1100 கி.மீ விட்டம் கொண்டது. இதைத்தான் நாம் தினம் தோறும் பார்க்கும் சந்திரக் கிழவியின் கண் என்கிறோம். உயர்ந்த மலைகள்தான்  சுவர்போல் இந்த எரிமலையைச் சூழ்ந்து நிற்கின்றன! இம்மலைத் தொடர்களில் சில 1000க் கணக்கான கி.மி உயரம் கொண்டவை. இத்தகைய ஒரு எரிமலை வாய்க்குத்தான் ஷாரூக்கான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.   

நிலவு குளிர்வானது. சூரியனையைப் போல் சந்திரன் தானாகவே பிரகசிப்பதில்லை. சூரியன் ஒளிர்விப்பதால் வானத்தில் சந்திரன் தெரிகிறது. அங்கு வாயு மண்டலம் என்ற ஒன்று கிடையாது. இப்போதுதான் நீர் இருப்பதற்கான சத்திய கூறுகள் பற்றி தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சி தொடர்கின்றது. ஆனால் கண்களுக்கு தெரியும் அளவுக்கு நீர் இல்லை என்பது மட்டும் நிச்சயம். இதன் உட்கரு (Core) உருகிய பாறை அல்லது இரும்பு குழம்பால் ஆனது. நிலவின் மேற்பரப்பு தூசுப் படலமானது. உயர்ந்த நிலப்பரப்புகளும், தாழ்ந்த   பள்ளத்தாக்குகளும் விண்கற்கள் விழுந்ததனால் உண்டானவை. தாழ்வான நிலப்பரப்புகள் எரிமலைக் குழம்பால் நிரம்பி இருண்ட பிரதேசமாய்க் காணப்படுகிறது. இவைகள்  நாம் நாள்தோறும் பார்க்கும் பகுதியில் உள்ள பள்ளத்தாக்குகள் ஆகும். நிலவின் மறு பிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்குகள் பெரும்பாலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றன.

சந்திரன் நமக்கு அருகாமையில் உள்ள ஒரே இயற்கைத் துணைக்கோள். சந்திரன் வெகு தொலைவில் உள்ளது என்றாலும் மற்ற எல்லா வானொளிக் கோளங்களையும் விட இது நமக்கு மிக அருகில் உள்ள கோளாகும். எனவேதான் இதை பூமியின் துணைக்கோள் என்கின்றனர். நாம் பூமியை ஒரு எழுமிச்சை பழத்திற்கு ஒப்பிட்டால் சந்திரன் ஒரு பட்டாணியின் அளவே உடையது.

பயணம் தொடரும்.....

சந்திரனுக்குப் போவோமா-2 கட்டுரையின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு  ஆல்பர்ட் ஐயின்ஸ்டீன் என்று சரியாக பதிலளித்தவர்கள் 3 பேர். அவர்களை இக்குடியரசு நன்னாளில் மனதார வாழ்த்துவதோடு அவர்களுக்கு உரிய பரிசு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

1. Srivatsan Gopalan
         Technical Manager
         Novalock Pvt. Ltd.  Chennai - 600 020

2. Thanga Murugan 

         Trichy - 620017

3. Vadivel Rajan

         Kovilpatti - 628501    

Friday, January 22, 2010

மனிதாபிமானம் – சிறுகதை

manithapi

ம்மே குத்துக்கல்லாட்டம் உக்காந்து கிடக்காம ஆக வேண்டியதைப் பாருங்க. ரோசாமணியைப் பெண் பார்க்க வாராக. இன்னும் மணி நேரம் கூட இல்லை”.

“எலே என் செல்ல ராசா, நெசம்மாவா சொல்றே?”  

நெசம்மாத்தான் பாட்டி. எங்க சின்ன முதலாளிதான் வெவரம் சொன்னாரு. மாப்பிள்ளைக்கு ரோசாமணியை விட பெரிய படிப்பாம். சென்னையில் ஒரு பெரிய மருந்துக் கம்பெனியில் வேலையாம்.  நல்ல சம்பளம். கவுரவமான குடும்பம்னு சொன்னாரு”. 

“தங்கச்சிக்கு சீர் செனத்தியெல்லாம் பேசியாச்சா ஆறுமுகம்”. தாயின் குரலில் கவலை. 

“நம்ம குடும்பத்தை பத்தி முதலாளி வெவரமா சொல்லிட்டாராம். அவங்களுக்கு படிச்ச பொண்ணா குடும்ப லட்சணமா இருந்தாப் போதுமாம். நம்மால முடிஞ்சத செய்யச் சொல்லிட்டாக. சம்மதிச்சுப்புட்டுத்தான் வாராக”  

“ராசா என் வயித்துல பால வார்த்த. அந்த நீலியம்மன் இன்னைக்காவது கண்ணைத் திறந்தாளே! அப்படியே உனக்கும் ஒன்னப் பார்த்துட்டா ஒரு செலவா போகும்”.

“பாட்டி நீ வாய மூடி சும்மா இருக்க மாட்டே? கல்யாணாச் செலவு அவங்கது. நீ ஓசில ஒல வைக்கப் பார்க்கியா? போங்க. போயி முதல்ல ஆக வேண்டியதைப் பாருங்க”.  

”சரி ஆறுமுகம்! ரோசாமணிக்கு சேதி சொல்லியாச்சா?”

“மதியமே அவ ஸ்கூலுக்குப் போயி சேதிய சொல்லிட்டேன். வந்திருவா”.

நம் நாட்டின் பட்ஜெட் பற்றிக் கவலைப்படாத குடும்பங்களில் ஆறுமுகசாமி குடும்பமும் ஒன்று. இரண்டு பேர் உழைத்தும் பற்றாக்குறை நிலவரம்!

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை அதுவும் நல்ல நிலையில் இருந்த குடும்பம்தான். அவன் தந்தைக்கு இதய நோய் என்ற வடிவில் துரதிருஷ்டம் அக்குடும்பத்தை தொற்றிக் கொள்ள, அது அக்குடும்பத்தின் சொத்துக்களையும் விழுங்கி, ரோசாமணிக்கு என்று இருந்த சேமிப்பையும் சேர்த்து ஏப்பம் விட்டு விட்டது.

ரோசாமணி ஒரு பட்டதாரி ஆசிரியை. படிப்பைப் பொறுத்த வரை அவள்தான் அந்த ஊருக்கு கின்னஸ் ரேகார்டு. பெயருக்கு ஏற்றாற்போல் அவள் உணமையிலேயே  அழகு ரோசாதான்.  அக்கிராமத்து சொந்தங்களில் ரோசாமணியை மணந்து கொள்ள பலருக்கு கொள்ளைப் பிரியம். அடைந்தால் ரோசாமணிதான் என்று சிலர் வரிந்துகட்டிக் கொண்டிருக்க, அவள் தந்தையோ படிப்பை அளவு கோலாக வைத்து, வெளியில் மாப்பிள்ளை பேசி முடித்து விட்டார். அவள் பருவம் இசைத்த ராகத்திற்கு மயங்க்கிக் கிடந்த சொந்தங்கள் அதிர்ந்து போனார்கள். ஏமாற்றம் பொறாமையாய் வளர்ந்து குரோதத்தில் முடிந்தது. 

ரோசாமணி குடும்பதின் நிலை தலைகீழானதும் அவள் தந்தை பேசி முடித்திருந்த மாப்பிள்ளை வீட்டார் நழுவிக் கொண்டனர். திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கையில் மருத்துவமனையில் இருந்த அவருக்கு விவரம் எப்படியோ கசிந்து விட, செயற்கை சுவசத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அவர் உயிர் அதிர்ச்சியில் விடை பெற்றுக்கொண்டது.

அவள் தந்தையின் மறைவுக்குப் பிறகும் எத்தனையோ சம்மந்தங்கள் வரத்தான் செய்தன .சிலர் கொண்டு வந்த வரதட்சணை அளவு கோல் ரோசாமணியின் குடும்ப சக்திக்கு எட்டவில்லை. வரதட்சணையை வற்புறுத்தாதவர்களிடம் அவள் சொந்தங்கள் இல்லாதையும், பொல்லாததையும் சொல்லி கலைத்து விடுவதில் குறியாயிருந்தனர்.

எப்படியோ ரோசாமணியின் தந்தையிடமே “ஆண்பிள்ளையிருக்க பெண்ணைப் படிக்க வைப்பானேன்” என்று சவடால் விட்டவர்களுக்கு அக்குடும்பம் மூன்றாண்டு காலம் தீனி போட வேண்டியதாயிற்று. இத்தனை காலம் மௌனத்தில் ஊர்ந்த அவ்வீட்டின் வாயிலை இப்போதுதான் இன்ப கணங்கள் எட்டிப் பார்க்கின்றன. வீடு தடபுடல் ஆக்கிக் கொண்டிருந்தது.  

அந்தத் தனியார் பள்ளியில் பணி முடிந்து ரோசாமணி வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் பயணம் செய்த பேருந்து, ரயில்வே கேட்ட் திறப்பதற்காக காத்திருக்க, தாமிரபரணிக் கரையின் துடிப்பை அவள் கண்கள் அளந்துகொண்டிருந்தன. 

செந்நெல் வயலில் தென்றால் தவழ, இளம் பயிர்களில் அலைகள் தோன்ற அந்த இதமான காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.   

ரயிவே கேட் திறந்தது, இறக்கைகள் முளைத்து விட்டது போல் வாகனங்கள் பறந்தன. என்னதான் இயற்கைக் காட்சிகளும், தோழிகளின் பேச்சுகளும் அவள் மனதை அமைதிப் படுத்த முயன்றாலும், ஊர் நெருங்க நெருங்க அலைபாயும் அவள் மனதில் இன்னும் ஆறதா ரணம் சிந்தும் நிகழ்வுகள் பீரிட்டுக் கிளம்பின. 

“புதுக்குளம் இறங்குங்க.” கண்டக்டர் குரலில் உயிர் பெற்றாள். 

“ரோசாமணி என்ன கனவா? தூக்கத்தில் திருநெல்வேலி போயிடாதே...” சிரிப்பும் கும்மாளமுமாய் தோழிகள் இறங்க.... கனத்த மானதுடன் ரோசாமணி இறங்க்க்கினாள்.

நெடுஞ்சாலையிலிருந்து எதிரில் பிரியும் புதுக்குளம் விலக்கு கிளைச் சாலைக்கு வந்தனர்.

“ரோசாமணி விட்டுக்குப் போய்விட்டு கால்மணி நேரத்தில் உன் வீட்டுக்கு வந்து விடுவோம். அதுக்குள்ள மாப்பிள்ளையை அனுப்பிவிடமாட்டியே?”

“சீ போடி...”

“அட வெட்கத்தைப் பாரேன். எதற்கும் கொஞ்சம் மிச்சமிருக்கட்டும், மாப்பிள்ளைக்கு.

“ஏய் நீ சும்மாவே இருக்க மாட்டியா” அவள் பதில் சொன்னதும் தோழிகள் பிரியும் நேரம், அந்த சம்பவம் நடந்தே விட்டது. புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்த அவன் அவர்களை நோக்கி வந்தான். 

“அந்தப் பைத்தியம் வற்றான். எதுவும் வாங்கம போக்கமாட்டான். பர்ஸுகளைத் துளாவினார். ஆனால் அவனோ     

“ரோசாமணி நான் பழசெல்லாம் மன்னிச்சிடறேன். என்னைக் கட்டிக்கோயேன்.  இன்னிக்கு சினிமாக்கு போகலாம் வர்றியா?”

என்னடா சொன்னே...” ஓங்கிய அவள் கையைப் பிடித்து முத்தமிட முயன்றான். வெடுக்கெனப் பிடிங்கிக் கொண்டாள். 

“நீ என்ன அடிக்க வந்தே... உன் வண்டவாளத்தை ஊருக்குள்ளே போயி சொல்லிடு வேன். ஆமா...” அவள் பதிலுக்கு அவன் காத்திருக்கவில்லை.  பக்கத்திலிருந்த வாழைத் தோப்புக்குள் புகுந்து மறந்தான்.

ரோசாமணி வீடு களைகட்டியிருந்தது. உள்ளே அவளுக்கு அலங்காரம். அவமானத்தால் குன்றிப்போயிருந்த அவள் மனம் அடிக்கடி முகத்துக்கு வந்தது. என்னதான் மேக்-ஆஃப் போட்டாலும் முகம் வெளிறிக் கிடந்தது. அவளைக் கூடத்துக்கு அழைத்து வந்தனர்.

கூடத்தில் மாப்பிள்ளை விட்டார் உள்ளூர் வாசிகளுடன் கலகலப்பாய் வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அங்கு ரோசாமணி வந்ததுதான் தாமதம். நிலைமை தலைகீழாகி விட்டது. கலகலப்பு எங்கோ ஓடி ஓழிந்து கொண்டது.

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவு. உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். நல்லா யிருக்குடா கதை.  தேடிப் பிடிச்சிருக்க பாரு பொண்ண. மேயப்போறா மாட்டுக்கு கொம்புல புல்லுக் கட்டு கேட்குதாம். இன்னும் ஏண்டா இடிச்ச புளி மாதிரி உட்காந்திருக்கே...” ஏழுந்தாள்.

“அம்மா நீங்க என்ன சொல்றீங்க.” பதைபதைத்தான் ஆறுமுகம்.

“ம்... என்னை ஏன்யா கேட்கறே... அந்தக் கன்றவிய என் வயலா வேறே சொல்லனு மாக்கும்...” இந்தாதானே இருக்கா ஒன் தங்கச்சி... கேளேன் நடு ரோட்ல நடந்த கூத்த... நாங்க சீர்வரிசைதான் கட்டு செட்டா வேண்டாம்னு சொன்னொம். ஆனா மனம் ரோஷம் வேண்டாம்னு சொல்லல... உள்ளுர்ல வெல போகாத மாடு வெளியூர்லயா போகும்னு சொல்வாங்க. சும்மாவா சொன்னாங்க. ஏண்டா அருண் இன்னுமா உட்கார்ந்திருக்கே.”

உலகின் அத்தனை இடிகளும் அவன் தலையில் இறங்கியது போலானான் ஆறுமுகம். அவன் முதலாளியைப் பார்த்தான். “ஐயா நிங்களாவது ஒரு வார்த்த சொல்லுங்க... போக வேண்டாம்னு...” கூடத்தில் ஒரே கூச்சல்.

ரோசாமணியின் மனமோ குமுறிக் கொந்தளித்தது. உள்ளங்கைக்குள் முகத்தைப் புதைத்து மனதை அடக்கி விடப் பார்த்தாள். அவள் பொன்னுடல்தான் குலுங்கியது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவியாய்த் தவித்தாள். மலைப் பிரதேசங் களைத் தேடி மனதை அமைதிப்படுத்த முயன்றாள். அவைகள் எரிமலைகளாயின. துருவங்களின் பனிப்பொழிவை நாடிப் பார்த்தாள். அவைகள் சுட்டெரித்தன. வெண்ணிலாவில் அடைக்கலம் வேண்டிப் பார்த்தாள் அது பேச மறுத்து ஒளிந்து கொண்டது.

ஏ! மனிதாபிமானமே! உன் விலைதான் என்ன?  அவள் துன்பத்தின் கூர்முனை அதை யும் சீண்டிப் பார்த்தது... ம்.. தெரியும். என் உயிர்தானே. கொடுத்து விடுகிறேன் இனியும் என் அப்பாவி அண்ணன் வாழ்விற்கு ஒரு வினாடி கூட தடையாய் இருக்க மாட்டேன். பொங்கி ஓடும் தாமிரபரணியே! பொறு ஒரு நிமிடம்! இதோ வந்து விடுகிறேன். என் தந்தையிடம் என்னையும் சேர்ப்பித்துவிடு... எழுந்தாள்.

அருண்குமாரும் எழுந்தான். 

“அம்மெ நீ செத்த வய முடி சும்மா இருக்கியா” அவன் கணீர் குரல் சூழ்நிலையை அமைத்திக்குக் கொண்டு வந்தது. அவன் பார்வை ஆறுமுகசாமியின் குடும்பத்தார் மீது விழுந்தது. வாள் வீச்சென அந்த அமைதியைக் கூறுபோட்டன அவன் வாத்தைகள். “நீங்க எதையும் மனசில வைத்துக் கொள்ள வேண்டாம். எங்கம்மா பேசியதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இங்கு வரும் முன் புதுக்குளம் விலக்கில் இளநீர் சாப்பிட காரை நிறுத்தியிருந்தோம். ஒரு பஸ்ஸிலிருந்து நான்கைந்து பெண்கள் இறங்கி வந்தனர். அவர்களில் ஒருத்தியை ஒரு பைத்தியம் வம்புக்கிழுத்தான். அவள் மீது எந்தத் தவறும் இல்லை. நான் காரை விட்டு இறங்கி அவனைப் பிடிக்க நினைத்தேன். அதற்குள் அவன் ஓடிவிட்டான். உண்மை பேசுபவன் ஓடுவானா? உங்க முதலாளி வார்த்தைய நம்பித்தான் நான் இவ்வளவு தூரம் வந்ததே. அந்தப் பெண்தான் உன் தங்கை என்று எனக்கு அப்போது தெரியாது. உன் குடும்பத்துக்கு ஏற்படும் இன்னல்களை உன் முதலாளி சொன்ன போது அது இத்தனை தீவிரமாயிருக்கும் என்று நான் கனவிலும் கருதவில்லை. நல்லது நடக்க நாலுபேர் என்றால் அதைக் கெடுக்க பத்து பேர் இருப்பார்கள் போலும்.  எனக்கு உன் தங்கையை ரொம்ப பிடிச்சிருக்கு.”

மனிதாபிமானத்தை நேரில் பார்க்க ரோசாமணி தலையை நிமிர்த்தினாள். விழிநீர் மறைவில் அவனைப் பார்த்தாள். தன்னைச் சூழ்நிதிருப்பது வெறும் மூடுபனிதானா? விலகினால் தெரியுமா நட்சத்திரம்?

அவன் வார்த்தைகளில் நிலைமை இயல்புக்கு வர, அருண்குமார் பார்வை தாயிடம் திரும்பியது. “உங்களுக்கு வரவர என்ன பேசரதுனே தெரியலை. ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு ஒரு பெண்ணே எதிரியா? என்னமா இது. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். மறந்து விட்டீர்களா? இத்னை பெரிய மனிதர்கள் இங்கே கூடியிருக்க, ஒரு பைத்தியம் ஏதோ உளறியதுதான் உனக்கு பெரிசா போச்சா? சென்ற வாரம் என்னை ஒரு பெண் நிராகரித்தாள். நீ என்னமாய்ப் புலம்பினே. அப்படித்தானே இவர்களும் துடித்திருப்பார்கள்... ஆமா ஆறுமுகம். அவன் பார்வை திரும்பியது.

“எனக்கு பிறவியிலேயே கால் சிறிது ஊனம். என் மனோபலத்தாலும் சிகிச்சையாலும் அது சரியாகி விட்டது. காலைக் காட்டினான். ஆனாலும் எனக்கு நிலைத்துவிட்ட பழைய பெயரை மாற்ற முடியவில்லை. இதையே காரணம் காட்டி எனக்கு பலர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. நாளை உன் தங்கை என்னைத் தவறாக நினைக்கக் கூடாது பார். இப்பக் கேள், அவள் சம்மதத்தை. அவளுக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம்”.

ரோசாமணியின் உள்ளம் அவள் வாய்க்கு வரத் துடித்தது. ஆனால் வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை. கதிரவனின் ஆளுகைக்குக் கிழ் அவன்தான் மனிதனாகத் தெரிந்தான். பெருமிதத்தில் விளங்கிய அவள் மனதை முகம் பிரதிபலித்தது.

நான்கு கண்களின் ஊடுருவலில் இரு உள்ளங்கள் சங்கமித்தன. அங்கு சுறக்கும் இன்பத் தேனுக்கு ஈடிணை இல்லைதானே!

“ரோசாமணி”... குரல் வந்த திக்கில் அனைவர் பார்வையும் திரும்ப “இன்று மெயில் வந்தது தாமதம் என்றாலும் உனக்கு சரியான நேரத்தில்தான் வந்திருக்கு இந்தக் கடிதம்.

நிகழ்ச்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் என்றுதான் எடுத்து வந்தேன்.  இது ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து வந்தாலும் என்னைப் பொறுத்த வரை இது உன் தந்தை உனக்கு அனுப்பியிருக்கும் சீதனம்தான் வாழ்த்துக்கள்!

கற்ற கல்வி காலத்துக்கும் உதவும் என்றார் போஸ்ட்மாஸ்டர். அதை ஆமோதிப்பது போல் வெளியே வானம் தூறிக்கொண்டிருந்தது.

FULL VERSION - FREE DOWNLOAD

Sunday, January 17, 2010

சபாஷ் சரியான போட்டி!

சந்திரனுக்குப் போகலாம் வாங்க - 2

வானைத் தொடப் போட்டியிடும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நியூயார்க் நகரம்! அங்குள்ள புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆற்றோரத்து மாபெரும் தேவாலயம்! அத்தேவாலயத்தின் புனிதமான வெண்சுவர்களில் மனித குலத்துக்கு அரும்பெரும் தொண்டாற்றிய அமரத்துவம் வாய்ந்த அறுநூறு பெரியோர்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

clip_image001

clip_image002


<- அணுவில் அண்டம் & அண்டத்தில் அணுத்திரள் ->

பேரரசர்கள், மகான்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள் என வெண்சுண்ணாம்புக் கல்லில் சமைக்கப்பட்ட அவ்வுருவங்களில் அழிவில்லாத அருவமான உயிரோட்டம் இப்பிரபஞ்சம் முழுவதும் பரிணமித்திருக்கிறது. தேவாலயத்தின் அறுநூறு அப்பிரபல உருவங்ளில் 14 விஞ்ஞானிகளின் உருவங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த 14 விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுக்க, அதற்கான பொறுப்பேற்ற டாக்டர் ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் என்பவர், அப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளில் விஞ்ஞான சரித்திரத்தில் இடம் பெற்ற தலைசிறந்த 14 விஞ்ஞானிகளின் பட்டியலை அனுப்புமாறு கேட்டிருந்தார்.

அவ்வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒரு பட்டியலை அனுப்பி இருந்தனர். பெருவாரியான விஞ்ஞானிகள், ஆர்க்கிமிடீஸ், யூக்ளிட், கலிலியோ, கோபர்நிகஸ், ஐசக் நியூட்டன் போன்ற பிரபலங்களின் பட்டியலை அனுப்பியிருந்தனர். ஒவ்வொருவர் பட்டியலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தது. ஆனால் அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியலிலும் ஒரே ஒரு விஞ்ஞானியின் பெயர் மட்டும் தவறாமல் இடம் பெற்றிருந்தது!

அந்த தலைசிறந்த விஞ்ஞானி யாராயிருக்கும்?

மேற்கொண்டு நாம் பயணத்தைத் தொடருமுன் நம் பயணத்திற்கு விண்வெளியில் அறிவியில் ரீதியாக ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த அந்த மாபெரும் அறிவியல் மேதையைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமல் நாம் பயணத்தைத் தொடர்ந்தால் அதில் பொருள் இல்லை.

ஏனெனில் 19ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை விஞ்ஞான உலகில் ஒரு குழப்பமான நிச்சயமற்ற நிலை நிலவியது.

கி.மு 300லிருந்து, இன்று வரை 2300 ஆண்டுகளாக ஜியோமிதி கணிதத்தின் தந்தை என்று போற்றப்படுகிறவர் யூக்லிட். சதுரம், வட்டம் செவ்வகம், முக்கோணம், ஐங்கரம், அறுகோணம், கனசதுரம், கனச்செவ்வகம், கோளம், உருளை பற்றி இன்றும் பள்ளிக் கணிதத்தில் இடம் பெற்றிருக்கும் அத்தனை கோட்பாடுகளும் இவருடையவை! பைபிளுக்கு அடுத்தபடியாக 13 தொகுதிகள் அடங்கிய இவரது கோட்பாடுகள் தான் உலகின் அத்தனை மொழிகளிலும் அதிக பிரதிகள் பதிப்பாகியுள்ளன!

ஆனால் பூமி தட்டையானது என்ற அனுமானத்தில் சொல்லப்பட்ட பல முக்கிய யூக்லிட் கோட்பாடுகள் பூமி உருண்டை என்று ஆனதும் தவறாகிப் போனது.

மேலும் அந்த காலகட்டத்தில் வெளிவந்த மேக்ஸ்வெல்லின் மின் காந்தவியல் கோட்பாடுகள் நியூட்டனின் இந்திரவியல் கோட்பாடுகளுக்கு மாறுபட்டிருந்தது. மாக்ஸ் பிளாங்கின் பகுதித் தத்துவம் (QUANTUM THEORY) விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராயிருந்தது. ஏற்கனவே கலிலியோ, பைசா கோபுரத்திலிருந்து இரண்டு வெவ்வேறு எடை கொண்ட இரும்பு குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட, இரண்டும் ஒரே நேரத்தில் தரையைத் தொட்டு, இது அதுவரை நிலவிவந்த அதிக எடை கொண்ட பொருள் தான் முதலில் பூமியைத் தொடும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்றுக்கும், அவருக்கு பின்னால் வந்த நியூட்டனின் இரண்டாவது விதிக்கும் மாறுபட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒலி பரவ காற்றும், அலைகள் தோன்ற நீரும் இன்றிய மையாதது போல், ஒளி பயணிக்க ஈதர் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஊடகம் பிரபஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கிறது. நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் அந்த ஊடகத்தில் மிதக்கிறது என்ற கூற்று நியூட்டன் காலத்திலிருந்து நிலவி வந்தது. இது கோபர்னிகசின் கிரகங்கள் தன்னைத்தானே சுற்றுகின்றன என்ற விதிக்கும், கிரகங்கள், நட்சத்திரங்கள் இவைகளின் இயக்கத்தால் ஒளியின் வேகம் மாறாது என்ற கோட்பாட்டிற்கும் முரண்பட்டிருந்தது.

இப்படி அவிழ்க்கமுடியாத பல புதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஒரு தேக்க நிலையை உண்டாக்கியிருந்த ஒரு காலகட்டத்தில் அம்மேதையின் கோட்பாடுகள் இந்த புதிர்களுக்கெல்லாம் விடை சொன்னதோடு மட்டுமல்லாமல், விஞ்ஞான உலகின் முகத் தோற்றத்தையே மாற்றி அமைத்தது, உலகின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியது. அவரது கோட்பாடுகள் மனித குலம் இருபதாம் நூற்றாண்டைக் கடந்து வர ஆதாரமாய் அமைந்தது என்றால் மிகையில்லை.

அணுவில் அண்டம்! அண்டத்தில் அணுத்திரள்! என்பது அவரது கோட்பாடுகளின் சாரம். அப்படிப்பட்ட ஒரு மகானைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பயணிப்பது சுவைக்குமா?

அனைத்து விஞ்ஞானிகளின் பட்டியலிலும் இடம் பெற்ற அந்த அறிவியல் மேதை யார்?

சரியான விடையை மின்னஞ்சல் செய்யும் வாசகர்களில் குலுக்கல் முறையில் ஐந்து நபர்களுக்கு பரிசாக அறிவியல்வீதி பதிப்பகம் சார்பில் இரண்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

(வெற்றியாளர்களின் விருப்பப்படி கீழ்க்கண்ட இரண்டு தொகுப்புகளில் ஏதேனும் ஒன்று)

1) கனவுக் கிராமம் + சுழலிறக்கை விமானம்

(அல்லது)

2) இங்கேயும் ஒரு சொர்க்கம் + ஆகாய விமானம்

உலகின் எந்த நாட்டில் இருப்பவரானாலும் அவருக்கு பரிசு பதிப்பகத்தின் செலவில் அனுப்பி வைக்கப்படும்.

பதில் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: arivialnambi@gmail.com

கடைசி தேதி: ஜனவரி 26 – பகல் 12 மணி வரை (இந்திய நேரம்)

Thursday, January 14, 2010

சந்திரனுக்குப் போகலாம் வாங்க - 1

14-01-2010

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!

இனி சந்திரனுக்குப் போகலாம் வாங்க...

நிலவில் மனிதன்

18ம் நூற்றாண்டின் இறுதி வரை 100 கோடியாயிருந்த உலக மக்கள் தொகை 1920ல் இருநூறு கோடியை எட்டியது. 1960ல் மூன்று கோடியாக உயர்ந்த மக்கள் தொகையோ இன்று 679,58,00,000!

கி.மு 334ல் மகா அலெக்சாண்டர் தான் முதன் முதலில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி படையெடுத்து வந்த பேரரசராவார். இதன் மூலம் அவர் ஐரோப்பிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த மேற்கு கிழக்கு மக்கள் இணைய ஒரு பாலமாகத் திகழ்ந்தார். அவர் வழியைப் பின்பற்றி மார்கபோலோ என்ற இத்தாலிய யாத்ரீகர் கி.பி 13ம் நூற்றாண்டில் தரை மார்க்கமாக சீனா வரை சென்று, அங்கு குப்ளாய்கான் அரண்மனையில் பலகாலம் தங்கி கீழ்திசை நாடுகள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு தாய்லாந்து, இந்தியா, இலங்கை, பாரசீகம் வழியே கடல் மார்க்கமாக தாகம் திரும்பி அவரது அனுபவங்களை Description of the worldஎன்ற பயணநூலாக எழுதினார். இந்நூல் பிற்காலத்தில் ஐரோப்பிய கடலோடிகளுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. அவர்கள் உலகம் முழுக்க பயணம் செய்து ஜல்லடை போட்டுத் தேடி அலைகடலுக்கப்பால் இருந்த சின்னஞ்சிறு தீவுகளைக் கூட கண்டறிந்து மனித இனம் குடியேற வழி வகுத்தார்கள்.

பார்தலோமியாடையஸ் ஆப்பிரிக்காவின் மேற்குக்கரை ஓரமாகப் பயணித்து அக்கண்டத்தின் தென்கோடியில் உள்ள நனம்பிக்கை முனையை அடைந்தார். வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றி ஆபிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியே பயணித்து இந்தியாவை வந்தடைந்தார். கொலம்பஸ், அமெரிக்கோ வெஸ்புஸ்ஸி போன்றவர்கள் அமெரிக்க கண்டத்தை கண்டறிய, மெலன் முதன் முதலில் கடல் மார்க்கமாக உலகை வலம் வந்தார். ஜேம்ஸ் குக், டஸ்மென் போன்றோர் ஆஸ்திரேலியா கண்டத்தை உலகம் அறியச் செய்தனர். இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்ரிக்காவின் உட்புறத்தை ஆராய்ந்த டேவிட் லிவிங்ஸ்டன், சர் ஹென்றி மார்டன் ஸ்டேன்லி போன்றோரும் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

மக்கள் தொகையில் இன்று 700 கோடியை நெருங்கும் நாம், ஏறக் குறைய பூமியின் முக்கால் பங்கு வளத்தை உறிஞ்சி விட்டோம். இனி இருக்கும் வளத்தைக் கொண்டு மனித இனம் இந்த நூற்றாண்டின் பாதியைக் கடக்க முடியுமா? என்பதே பெரிய கேள்விக்குறிதான். மிருகங்களை விடக் கேவலமாக வாழ்வாதாரத்திற்காக இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் வேகத்தைப் பார்த்தால் அனைவர் மனதிலும் இக் கேள்வி எழுவதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. இதற்கான ஒரு பரிகாரம் தேடித்தான் மனிதன் விண்வெளி ஆய்வை தொடர்ந்து நடத்தி வருகிறான்.

14, 15ஆம் நூற்றாண்டுகளில் மனிதனின் தேடுதல் வேட்டையில் சிக்கி புது உலகம் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா கண்டம், இன்று மக்கள் தொகையால் நிரம்பி வழிகிறது. அது போலவே ஆஸ்திரேலியா கண்டதித்திலும் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு இனி பூமியில் இடம் போதாது என்ற நிலையில்தான் அவன் தேடுதல் வேட்டை விண்வெளியின் பக்கம் திரும்பியுள்ளது. பூமியைப் போல் மனித இனம் வாழத்தகுந்த கிரகம் அல்லது துணைக் கிரகம் ஏதாவது அவன் தேடுதலில் அகப்படுமா? ங்கு மனிதன் குடியேறி வாழ முடியுமா? என்பது தான் அவன் இன்றைய தேடுதலின் இறுதி இலக்கு.

1865ல் பிரஞ்சு எழுதிதாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய சந்திர ரயில் (moon train), என்ற அவரது நாவலில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் தொடர் வண்டிபோல் சென்று வரும் கார்களைப் பற்றிய கதையை அவர் கற்பனையாகத்தான் எழுதினார். ஆனால் அவரது கற்பனைகள் கூட இன்று செயல் வடிவம் பெற்று சாத்தியமாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். மனிதனது விண்வெளி யுகம் ஆரம்பமான நாள் 1957, அக்டோபர் திங்கள் 14 எனலாம். அன்றுதான் ரஷ்யா ஸ்புட்னிக்-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திர ரயிலுக்கு அடிகோலிய ரஷ் விண்வெளி வீரர் யூரிகாகரின், விண்கலம் வோல்ஸ்டாக், முதன் முதலாக ஏப்ரல் 12, 1961ல் பூமியைச் சுற்றிவர, காகரின் விண்கலத்திலிருந்து வெளி வந்து விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தார். இச்சாதனையைத் தொடர்ந்து அடுத்து வந் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான விண்வெளிப் போட்டி, ஜூலை 20, 1969ல் சந்திரனில் மனிதன் இறங்கிய சாதனையில் முடிந்தது. அதன் பின் பல சாகச ராக்கெட்டுகள் சூரிய குடும்பத்தின் பிற கிரகங்களுக்கும் சூரிய குடும்பத்தைத் தாண்டி அதற்கு அப்பால் வேறு கிரகங்களுக்கும் சென்றுள்ளன.

விண்வெளி என்றால் என்ன?

வெற்றிடத்திற்கு மற்றொரு பெயர்தான் விண்வெளி. ஆனால் இந்த பேரண்டம் என்ற வெற்றிடத்தில்தான் கோடானுகோடி விண்மீன்கள் மொய்த்திருக்கும் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்கள் (Galaxies), நட்சத்திங்களைச் சுற்றிவரும் கிரகங்கள், அவற்றின் துணைக் கோள்கள், விண்கற்கள் எ நாம் அறிந்த அனைத்துமே விண்வெளியில் ஒரு சின்னஞ்சிறு புள்ளிதான் என்றால் ஆச்சரியமாய் ருக்கிறதல்லவா!

நம்மைப் பொருத்தவரை விண்வெளி என்பது, பூமியையும் அதைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்தையும் தாண்டி பூமியிலிருந்து சுமார் 95 கி.மீ உயரத்திலிருந்து விண்வெளி ஆரம்பமாகிறது எனலாம். ஆனால் அங்கு இதுதான் வளிமண்டலத்தின் எல்லை என்று எதுவும் கிடையாது. காற்றழுத்தம் குறைந்து குறைந்து காற்றே இல்லை என்று ஆன இடம்தான் விண்வெளியின் ஆரம்பம்.

தத்தமது சுற்றுப்பாதையில் கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் ஆகர்ஷண சக்தியால் இந்த இயக்கம் நடைபெறுகிறது. சூரியனின் இந்த ஈர்ப்பு விசைக்குட்பட்ட விண் வெளிப்பகுதியை நாம் கிரகங்களுக்கிடையிலான விண்வெளி (Interplanetary space) என்கிறோம்.

இதே போன்று நட்சத்திரங்களுக்கு டையிலான விண்வெளியை நட்சத்திர விண்வெளி (Interstellar space) என்கிறோம். இந்த பெரும் தூரத்தைக் கணக்கிட கி.மீ கணக்கு பொருந்தாது என்பதால் ஒளியின் வேகமான விநாடிக்கு 2,99,792 கி. மீ வீதம் அது ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரத்தைக் கொண்டு கணக்கிடு கிறோம். தையே நாம் ஒளியாண்டு என்கிறோம். ஒரு ஓளி ஆண்டு சுமார் 9.46 ட்ரில்லியன் கி.மீ க்குச் சமம். (ட்ரில்லின் என்பது பத்து லட்சம் கோடி. (10,00,00,00,00,000). உதாரணமாக சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் பிராக்ஸிமா செஞ்சூரி 4.3 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

கண்ணுக்குப் புலப்படாத விண்வெளியின் இந்த தூரங்களைக் கடக்க நாம் கண்டுபிடித்த வாகனம்தான் விண்கலம் என்பதாகும். பூமியின் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து விண்கலத்தை நாம் விண்வெளியில் செலுத்துவதற்கு அதீதசக்தி தேவைப்படுவதால், ராக்கெட்டுகள் இதற்கு உதவுகின்றன.

அமெரிக்கா ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் விண்வெளிக்கு பல ராக்கெட்டுகள் அனுப்பியுள்ளன. சந்திரனை ஆராய்வதற்காக இந்தியா சமீபத்தில் சந்திராயன் என்ற விண்கலத்தை அனுப்பியது. சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி அது அனுப்பிய தகவல்கள் நமக்கு நம்பிக்கையை ளித்துள்ளன. இது பற்றி அமெரிக்காவின் NASA மேற்கொண்டு ராக்கெட்டுகளை அனுப்பி ஆராய்ந்து வருகிறது.

ராக்கெட், ஏவுகணை போன்ற சொற்களால் நாம் குறிப்பிடுவது ஒரு சாதாரண எஞ்சினைத்தான். இந்த எஞ்சின், மற்ற எஞ்சின் களிலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது. அதே அளவிலான ஒரு கார் எஞ்சினைவிட ராக்கெட் எஞ்சின் 3000 மடங்கு அதிக சக்தியை அளிக்க வல்லது. ஒரு ரயில் எஞ்சினை விட 1000 மடங்கு பலமிக்கது. தற்போது ராக்கெட் என்ற சொல் இந்த வகை எஞ்சின்களைக் கொண்டு விண்ணிற்கு ஏவப்படும் விண்கலத் தையும் சேர்த்தே இச்சொல் குறிக்கின்றது.

உயர அளவுகளில் வித்தியாசம் கொண்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட ராக்கெட்டுகள், தற்போது உருவாக்கப்படுகின்றன. 60 செ.மீ அளவிலான பட்டாசு ரக வெடிகூட ராக்கெட் என்றே அழைக்கப்படுகின்றது. பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கும் 15மீ முதல் 30மீ நீளம் கொண்ட ஏவுகணைகளும் ராக்கெட் வகையைத்தான் சேரும். இவற்றை விட அதிக சக்தியுடன் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களையும் (satellite), விண்கலத்தையும் சுமந்து செல்லும் விண்ணூர்திகளும் ராக்கெட் என்றுதான் அழைக்க படுகின்றது. 1969-70களில் சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற சனீஸ்வர விண்கலம்-5என்பதுதான் மனிதன் உருவாக்கிய விண்கலங்களில் மிகப் பெரியது. இது 110 மீட்டர் உயரம் கொண்டது.

ராக்கெட்டுகள் வினாடி நேரத்துக்குள் அளவற்ற சக்தியை உருவாக்குக்கின்றது. அது எரிபொருளைக் கபளீகரம் செய்யும் வேகம் அதைவிட ஆச்சர்யம் அளிக்கக் கூடியது. இதனால்தான் குறைந்த தூரமே கடக்க வேண்டுமென்றாலும், அந்த குறைந்த நேரத்திற்கும் ராக்கெட்டுகளுக்கு அதிக எரிபொருள் தேவைப் படுகின்றது.

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அதை விட அதியம் சனீஸ் வர ராக்கெட்- 5 விண்ணில் ஏவப்பட்டபோது அது தரையிலிருந்து கிளம்ப 2,120,000 லிட்டர் எரிபொருளை 2 நிமிடம் 45 வினாடிகளில் கபளீகரம் செய்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இதனால் ரக்கெட் எஞ்சின்களின் வெப்பம் சிலசமயம் 33000 C என்ற உச்ச நிலைக்குக் கூடச் செல்வதுண்டு. இது எஃகின் இரண்டு மடங்கு உருகு நிலைக்குச் சமமானது.

அப்பல்லோ-11 சந்திரனுக்கு புறப்பட்ட காட்சி

பயணம் தொடரும்...

Friday, January 1, 2010

சந்திரனுக்குப் போகலாம் வாங்க!

01-01-2010

வாசகர்களுக்கு
2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

வரவிருக்கும் "சந்திரனுக்கு
ப் போகலாம் வாங்க!" கட்டுரைகள் வாயிலாக சூரியன், பூமி, சந்திரன் போன்றவற்றின் இயற்கை மைப்பு, பண்புகள், சந்திரனில் என்ன உள்ளது? சந்திரன் ஏன் வளர் பிறை வடிவமானது? என்பது பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம். அறிவியல் வீதி பதிப்பகம் மூலம் அடுத்து வெளியாகவுள்ள 'ராக்கெட்' என்ற நூலிலிருந்து தரப்படும் தகவல்கள் மூலம் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

புத்தாண்டுக் கொண்டாட்டமாக,

1) கனவுக் கிராமம்
2) இங்கேயும் ஒரு சொர்க்கம்
3) ஆகாய விமானம்
4) சூழலிறக்கை விமானம்

ஆகிய நான்கு படைப்புகளும் வாசகர்களின் கைகளில் தவழ, சென்னையில் நடைபெற்று
வரும் 33-வது புத்தகக் கண்காட்சியில்
காத்திருக்கின்றன. (Stall nos. 30 & 31)

இடம்: செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை.

தமிழக அரசின் விருது பெற்ற நாவலான கனவுக் கிராமம் நூலின் முன்னோட்டமாக முதல் பத்து அத்தியாயங்கள், உருவாகி வரும் எங்கள் வலைதளத்தில் வரும் பொங்கல் நன்னாளிலிருந்து
(14-01-2010) அனைவரும் படிக்கலாம்.



அன்புடன்,
அறிவியல்நம்பி