முன்னாள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் க.பா அரவாணன் அவர்கள் பாரீஸ் விமான நிலையத்தில் ஒரு முறை இறங்கிய போது தொலைபேசி வரவேற்பில் அவர் இந்தியர் என்பதால் இந்தியில் வரவேற்றுள்ளனர். அவர் முகபாவணையைக் கவனித்த வரவேற்பாளர் நீங்கள் இந்தியர் தானே? இந்திதானே உங்கள் தாய் மொழி என்று கேட்டாராம். அதற்கு துணைவேந்தர் இல்லை. நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். என் தாய் மொழி தமிழ் என்றாராம். வரவேற்பாளர் ’டமிழ்’ என்று யோசித்துவிட்டு ‘ஓ பிரபாகரன் பேசும் மொழிதான் உங்களுக்கும் தாய்மொழியா?’ என்று வியந்தாராம். தமிழுக்கு அப்படி ஒரு உளகளாவிய அங்கீகாரத்தை அளித்த பெருமைக்குரிய வீரர் அவர்! ஆண்டு தோறும் நவம்பர் திங்கள் 27 மாவீரர் தினவிழா இறுதி நாளில் “தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற பிரபாகாரன் குரலுக்காக ஏங்கித் தவிக்கும் எத்தனையோ தமிழ் நெஞ்சங்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு? அத்தனை தியாகங்களும் வெறும் கனவாகவே முடிந்ததோ என்று என்னும் போது ஏதோ ஒரு இறுக்கம், ஒரு வெறுமை மனதை ஆட்கொண்டது போன்ற பிரமை!
சமீபத்தில் தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்கள் முகாம்களுக்குச் சென்று வந்த எம்.பிக்கள் குழு ஆளுக்கொரு கருத்தை முன்வைத்தாலும் அவைகள் அனைத்தும் பிரதிபலித்த உள்ளடக்கம் ஒன்றே ஒன்றுதான்.
“ஜனநாயகம் வென்றது! சர்வாதிகாரம் தோற்றது! தமிழர்களின் ஒற்றுமையின்மை தான் தோல்விக்குக் காரணம்” என்பதோடு இன்று பிரபாகாரன் பின்பற்றிய வழிமுறைகள் பற்றிய விமர்சனங்களும் எல்லாப் பத்திரிகைகளையும் ஆக்கிரமித்துள்ளது. அவர் வென்றிருந்தால்?
காட்டுவழியே செல்பவன் ஒரு கருநாகம் எதிர்ப்பட்டால் என்ன செய்வானோ அதைத்தான் பிரபாகரன் செய்தார். அன்று அவருக்கு கையில் கிடைத்த ஆயுதம் சே குவேரா! இந்திராகந்திக்குத் தெரியாத அரசியல் சாணக்கியத்தனமா இன்றுள்ளவர்களுக்குத் தெரிந்தி ருக்கிறது? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். சென்ற அதிபர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் தேர்தலில் பங்கேற்று, ரணில் விக்க்ரமசிங்கே அதிபராகி இருந்தால் கூட, பிரபாகரன் கிடைத்த அவகாசத்தில் தன்னை மேலும் பலப்படுதிக்கொண்டு யுத்தத்தைத்தான் தொடர்ந்திருப்பாரே தவிர, ஆயுதம் துறந்து ஜனநாயக ரீதியான தீர்வுக்கு சமாதான மேஜைக்குத் திரும்ப அவர் ஒத்துக்கொண்டிருப்பார் என்று நம்புவதற்கு எந்தவித முகாந்திரமோ முன் நிகழ்வு ஆதாரமோ இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியானாலும் பிரபாகரன் கொண்ட லட்சியம் உன்னதமானது. அதைக் கொச்சைப்படுத்துவது நம் தலையில் கொள்ளிக் கட்டையால் நாமே சொறிந்து கொள்வது போலத்தான்.
முதல் உலகப்போர் முடிவில் ஜெர்மானியர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியதைவிட படு கேவலமாக இன்று தமிழர்களின் உணர்வுகள் கொச்சைப் படுத்தப்படுகின்றன.
இரண்டாம் உலப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த அணுகுண்டின் ஆற்றல் மனித உயிர்களைப் பஸ்பமாக்கிய விதம் கண்டு பதபதைத்த அன்றைய அரசியல் தீர்க்கதரிசிகள் இனி எதிர்காலத்தில் இது போன்றதொரு கொடுமை மனிதகுலத்துக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சர்வதேச மனித உரிமை ஆணையத்தை ஏற்படுத்தி சில யுத்தகால நியதிகளை வரையறுத்தார்கள். இன்றோ தங்கள் வசதிக்கேட்ப அந்த ஆணையத்தின் நெறிமுறைகளை வளைத்து, நாடற்றவனுக்கு ஒரு நியதி, நமக்கு ஒரு நியதி என்று வல்லரசு நாடுகள் தங்கள் காலில் போட்டு அவற்றை மிதித்து நசுக்கியுள்ளன!
சூரியனே அஸ்தமிக்காத அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இன்று என்ன ஆனது? வல்லரசு நாடுகள் எழுப்பிய பெர்லின் சுவர் எத்தனை ஆண்டுகள் நீடித்தது? இரும்பு மனிதர் ஸ்டாலின் கட்டிக் காத்த சோவியத் ரஷ்யா எத்தனை காலம் இருந்தது? புலிவாலைப் பிடித்தவர்களுக்கும் வரலாறு நிச்சயம் பதில் சொல்லும்.
முன்பை விட இன்றைய சர்வதேச சூழல் மிக மிக வேகமாக மாறி வருகிறது.
இந்தியா மற்ற நாடுகளைப் போலவே சீனாவுக்கெதிராக எந்த ஒரு ராஜதந்திர யுக்தியையும் கையாளவில்லை. ஆனால் சீனாவோ ஆசிய பிரந்தியத்தில் தானே முடிசூடா மன்னன் என்பதை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக் கெதிராக பலகாலம் திட்டமிட்டு கச்சிதமாகக் காய்களை நகர்த்தி வருகிறது.
இலங்கையில் ஹம்பன்தோட்டா, மியான்மரில் கியாக்பு போன்ற துறைமுகத் திட்டங்கள், பாகிஸ்தானிலிருந்து தொடர்வண்டிப் பாதை, மியான்மர், ஈரான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலிருந்து எண்ணை, எரிவாயு குழாய்த் திட்டம் என பல திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இவைகள் உள்நாட்டில் நட்புறவைப் பலப்படுத்தவும், சர்வதேச ரீதியில் அமைத்தியைப் பேணிக்காக்கவும் என்று சொல்லப்பட்டாலும் இந்த திட்டங்கள் மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் தீட்டப்பட்டுள்ளன. இவை இந்தியாவுடன் ஒரு யுத்தத்திற்கு என்று சொல்ல முடியாவிட்டாலும் இந்தியாவின் எதிர்கால பொருளாதார செயல் திட்டங்களை முடக்கிப்போடும் ஒரு முயற்சியாகத்தான் இதைச் செய்து வருகிறது.
இலங்கையின் பிரதான வியாபார நிறுவனங்கள் பொருளாதார உதவி கேட்காமலே சீனா அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக உதவியிருப்பது, யுத்தம் முடியட்டும், இலங்கையில் கல்லாப் பெட்டியைத் திறக்கலாம் என்று காத்திருந்த பல இந்திய நிறுவனங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்திய அமெரிக்க உறவும், சீன இந்திய உறவும் முக்கோணத்தின் மூன்று பக்கங்களைப் போல் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அதே போல் தலாய்லாமா பிரச்சினையும் இதில் பின்னிப் பிணைந்த ஒரு அம்சம். இந்திய அமெரிக்க உறவில் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க இந்திய சீன உறவில் விரிசல் அதிகமாகும்.
சிங்கபூரைச் சேர்ந்த அரசியல் மேதையும் மந்திரியுமான லீ குவான் ஈவ் இது பற்றிக் கூறும் போது, ”தலாய் லாமா இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பது இந்திய சீன உறவைப் பலப்படுத்துவதற்குப் பதில் சீனாவுக்கு அவர் ஒரு முள்ளாகத்தான் உறுத்துவார். ஏனெனில் அமெரிக்காவுக்கு பின்லேடன் எப்படியோ, இந்தியாவுக்கு தாவூது இப்ராகிம் எப்படியோ அப்படித்தான் சீனா தலாய்லாமாவைப் பாவிக்கிறது. ஒரு துறவியாக அல்ல. சீனாவுக்கெதிராக திபெத் விவகாரத்தில் அவரை இந்தியா துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது எந்த விதத்திலும் பயனளிக்காது என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். 1959ல் தலாய்லாமா இந்தியா வந்தபோது இருந்த அரசியல் சூழல் வேறு. இன்றைய 2009 ஆம் ஆண்டு சர்வதேச அரசியல் சதுரங்க அரங்கில் காய்களின் வரை வடிவம் (Configuration) வேறு. 19ம் நூற்றாண்டை ஆட்டிப் படைத்த பிரிடிஷ் சாம்ரஜ்யத்தைப் போல், 20ம் நூற்றாண்டின் அணு ஆயுத அமெரிக்காவைப் போல், 21ம் நூற்றண்டை ஆட்டிப் படைக்கப் போவது சீனாதான் என்றும் அவர் அடித்துக் கூறுகிறார்.
இதைக் கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்காவின் கரிசனம் அணுசக்தி ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா மீது திரும்பியுள்ளதை சீனா நன்கு உணர்ந்துள்ளது. போதாததற்கு அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த விருந்தில் 'ஆசியாவின் ஒப்பற்ற தலைவர் மன்மோகன்’ என்று பாராட்டி கொம்பு சீவி விட்டுள்ளார். ஏற்கனவே சீனா அருணாசலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளது. அங்குள்ள திபத்தை ஒட்டியுள்ள தவாங் நகர் அருகில் தனது படைகளைக் குவித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அதை மாற்றியுள்ளது.
சீனா 1962 பாணியில் மீண்டும் இந்தியா மீது படையெடுக்குமா? அல்லது மிரட்டல் பாணி அரசியல் மூலம் இந்தியாவின் கவனத்தை இராணுவத்தின் பக்கம் திருப்பி அதன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயலுமா என்பது 2012 க்குள் தெளிவாகி விடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியாவின் எதிர்த் தாக்குதல் 1962ல் போரில் ஏற்பட்ட தோல்விக்கு வாலில்தானே லேசான காயம். தலைக்கொன்றும் ஆபத்தில்லையே என்ற பாணியில் நிச்சயம் இராது. சீனாவின் வாலுக்கு மட்டுமல்ல தலைக்கே ஒரு பேரிடியாக இந்தியாவால் இன்று பதிலடி கொடுக்க முடியும். இதை நன்கு உணர்ந்துள்ளதால் தான் சீனாவின் போக்கில் நிதானம் காணப்படுகிறது.
இந்த இந்திய-சீனா அரசியல் சித்தாந்தம் தென்கிழக்கு ஆசியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது. பாகிஸ்தான் ஏற்கனவே தான் விதைத்த வினையை இன்று தலிபான்கள் மூலம் அறுவடை செய்யவே அதற்கு நேரம் சரியாக இருக்கிறது. எனவே இந்தியாவின் கவனம் பாகிஸ்தான் பிரச்சினையிலிருந்து விடுபட்டு சர்வதேச அரங்கில் சீனாவின் இந்திய எதிர்ப்பு பாணி அரசியலுக்குப் பதிலடியாகத் தன் பர்வையைத் திருப்ப சரியான தருணம் வாய்த்துள்ளது. இந்தியர்கள் பல நாடுகளிலும் படும் அவதிக்கு ஒரு தீர்வுகாணவும் இச்சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக இந்தியா கருத இடம் உண்டு.
இந்திய-சீன உரசல் இலங்கையிலும் நிச்சயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், என்று நேற்று வரை முழங்கிய சீன சார்பு அதிபர் ராஜபக்சேவுக்கு, சரத் பொன்சேகா மூலம் அமெரிக்கா ’செக்’ வைத்துள்ளது. வருங்காலத்தில் இலங்கையின் வெளிப்படையான ஆதரவு இந்தியாவுக்கா சீனாவுக்கா என்ற கேள்வி எழும்போது அதன் சாயம் நிச்சயம் வெளுத்துப் போகும். அப்போது இலங்கையைப் பொருத்த வரை இந்திராகாந்தி பின்பற்றிய வழியே சிறந்தது என்று இந்தியாவும் உணர்ந்து கொள்ளும். பிரபாகரன் வழித்தோன்றல்கள் மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப தங்கள் கடந்த காலத் தவறுகளைத் திருத்தி சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்தினால் தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கு எதிர்காலம் நிச்சயம் பதில் சொல்லும். காத்திருக்கும் விடிவெள்ளி முகம் மலர்ந்து வரவேற்கும்.
2 comments:
அஹிம்சை வழி தான் எப்பவும் சால சிறந்தது. இந்த வருடம் யார் தான் மாவீரர் தின உரை நிகழ்த்தினார்கள்?
பிரபாகரன் இப்போது உயிருடன் இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
வெளிநாடு வாழும் இலங்கை தமிழ் இனத்தவர், சிறிலங்காவில் வாடும் எம் தமிழர்க்கு உதவி புரிந்திட ஓடோடி வரவேண்டும். தேயிலை தொழிலோ, விவசாயமோ, தெரிந்த தொழிலோ கொண்டு உயிர் வாழ்ந்திட வகை செய்ய வேண்டும். வேலை செய்யாமல் கேம்பில் இருந்து வாழ யாருக்கும்பிடிக்காது.
1997-ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனவுக் கிராமத்தை எழுதிய எழுத்தாளரிடம் இருந்து இப்படியான மனித நாகரிகத்துக்கு எதிரான புலி+பிரபாகரன் புகழ்பாடும் கருத்துக்கள் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஏமாற்றம்.
Post a Comment