வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலங்களைப் பேலியோசோயிக், மீசசோயிக், சீனசோயிக் என மூன்று யுகங்களாகப் பிரித்துள்ளதைப் பற்றி ஏற்கனவே அறிவோம். பேலியோசோயிக் யுகம் பற்றிய தகவல்களைச் சென்ற அத்தியாயத்தில் பகிர்ந்து கொண்டோம். இனி மீசசோயிச் யுகம் பற்றி இப்போது பார்ப்போம்.
மீசசோயிக் யுகம்:
இந்த யுகம் 24.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்தது. இந்த யுகத்தின் ஆரம்ப காலத்தில் நம் பூமி ஒரே நிலப்பரப்பாக இருந்தது. இப்போதைய வட அமெரிக்கா ஆப்ரிக்கா மேற்கு ஐரோப்பா முதலிய கண்டங்களின் நிலப்பகுதி மீது கடல்நீர் உட்புகுந்து பின்னர் வெகுகாலத்திற்குப்பின் ஒருசில இடங்களிலிருந்து பின்வாங்கியது. இதனால் நிலப் பகுதி சதுப்பு நிலமாக மாறி அங்கு உயிரினங்கள் தோன்றி வாழ ஏதுவான ஒரு சூழல் உருவாயிற்று. இதன் காரணமாக பின்னாளில் கண்டங்கள் பிரியவும் இந்த உட்புகுந்த நீர் வழி வகுத்தது. இந்த யுகத்தின் கடைசிக் காலகட்டத்தில் பாறைகள் நுண்ணுயிரிகளால் மிருதுவாகி சுண்ணாம்பு பாறைகள் உருவாயின. சிப்பிகளைக் கொண்ட நத்தை போன்ற இனங்கள், ஏராளமான மீன் வகைகள், தவளை, தேரை போன்ற நீர் நிலவாழ்வன, ஊர்வன போன்ற இனங்கள் பல்கிப்பெருகின. பிரமாண்ட வகை பல்லி இனமான டைனோசர்கள் தோன்றி அழிந்ததும் இந்த கால கட்டத்தில்தான். பறவை இனம் உதித்ததும் இந்த யுகத்தின் க்டைசி காலகட்டத்தில்தான். வெப்ப இரத்த பாலூட்டி வகைகள் ஒருசில இந்த யுகத்தில் தோன்றி மறைந்தன. பூக்காத தாவரங்களும் பூக்கும் தாவரங்களும் தோன்றி இன்று வரை உள்ளன.
அறிவியல் வல்லுனர்கள் மீசசோயிக் யுகத்தை டிரையாசிக், ஜுராசிக், கிரடேசியஸ் என மூன்று சகாப்தங்களாகப் பிரித்துள்ளனர்.
முதலில் டிரையாசிக் சகாப்தத்தில் நம் பூமி எவ்வாறு இருந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.
டிரையாசிக் சகாப்தம்: (24.5 கோடி ஆண்டுகள் முதல் 20.8 கோடி ஆண்டுகள் வரை)
ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக பாங்கியே (Pangaea) என நம் பூமி அழைக்கப்பட்டு பிறகு பல கண்டங்களாகப் பிரியத் தொடங்கிய காலகட்டம் இதுவே. இந்த சகாப்தத்தின் தொடக்க காலத்தில்தான் டைனோசர் இனம் இப்பூமியில் தோன்றி வளரத்தொடங்கியது எனலாம். எனவே பூமியில் எந்தக் கண்டத்தில் முதல் டைனோசர் உதித்திருக்கும் எனக் கூறுவது அரிது.
பொதுவாக பூமியில் அதிக வெப்பம் நிலவிய காலம் இது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் மட்டுமே பச்சைப்பசேலென அடர்ந்த புல்வெளிகளும் நீரோடைகளும் ஏரிகளும் காணப்பட்டன. உட்புற நிலப்பரப்பு அதிவெப்பப் பாலைவனமாகக் காட்சியளித்தன. இந்த சகாப்தத்தின் ஆரம்ப காலத்தில்தான் பூமியில் முதல் டைனோசர் உதித்தது. முதலைகள் போன்ற மற்ற ஊர்வன் இனத்தைச் சேர்ந்த ஏறாளமான பிராணிகள் வாழ்ந்து வந்தன
.
டிரையாசிக் சகாப்தத்தில் நம் பூமி
தாவர வகைகளில் பசுமையான பெரணி வகைகளின் ஆதிக்கம் ஆரம்பமான காலம் இதுவாகும். இந்த காலகட்டத்தில்தான் பனைக் குடும்பத்தின் முன்னோடிகளான சைகட்ஸ் வகை தாவரங்கள் நீரோடைகள் அருகே முளைத்துப் பரவி பெருகின. எந்த ஒரு புல் வகையும் அப்போது கிடையாது.
பிராணி வகைகளில் நீரில் வாழும் இனங்களான மீன்கள், ஆமைகள் போன்றவகைகள் கடலிலும் ஆறு குளங்களிலும் நீந்தி அரசோச்சின. ஆதிகால நீர்நில வாழும் இனத்தில் தவளை, தேரை இனங்கள் தோன்றியிருந்தன. கடல் வாழ் ஊர்வன இனத்த்தில் மிக்சோசரஸ் எனும் விலங்கு தோன்றி வாழ்ந்து வந்தன. நிலத்தில் வாழும் ஊர்வன இனத்தில் ரிங்கோரஸ் எனப்படும் ஒருவித அலகுள்ள பல்லியினங்களும் இந்த சகாப்தத்தில் பல்கிப் பெருகியிருந்தன.
தோல்போன்ற இறக்ககளைக் கொண்ட பீட்டோசரஸ் எனப்படும் பல்லியினம் பறக்க முயன்ற காலம் இது. முதல் பாலூட்டி இனங்கள் தோன்றிய
கால கட்டமும் இதுவே.
அடுத்த ஜுராசிக் சகாப்தத்தில் நம் பூமி
டைனோசர் இனம் இந்த டிரையாசிக் சகாப்தத்தின் கடைசி காலங்களில் தோன்றி ஜுராசிக் சகாப்தத்தில் பூமி முழுக்க வியாபித்தன. முதன் முதலில் மாமிசபட்சனி டைனோசர் வகைகள் தான் உதித்ததாகக் கருதப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு வகை டைனோசர்கள் ஹெரராசரஸ் ஆகும். தாவரங்களை உண்ணும் டைனோசர்கள் இரண்டாவதாகத் தோன்றி இப்புவியை ஆக்கிர மித்தன் . இதனால் மற்ற ஏராளமான ஊர்வன இனங்கள் அழிந்தன. தாவரங்களை உண்ணும் டைனோசர்களில் குறிப்பிடத்தக்கது டெக்னோசரஸ் ஆகும்.
இந்த சகாப்தத்தில் நிலப்பகுதியின் உட்புறம் வெப்பம் மிகுந்து காணப்பட்டதால் அங்கு பாலை நிலத்தின் அம்சங்களே நிறைந்து காணப்பட்டது. எனவே அந்த உட்புற நிலப்பரப்பில் எந்த வித தாவரங்களோ பிராணிகளோ வாழ்வதற்கான சாத்தியம் இல்லைலாது போனது.
டிரையசிக் சகாப்தம்: விலங்குகளும் பெரணிவகைத் தாவரமும்.
No comments:
Post a Comment