Sunday, June 28, 2009

அலைகள் பலவிதம்

பொழுது புலர்ந்திருக்க, போர்டிகோவில் நின்றிருந்த ஹோண்டா சிட்டியில் அவசர அவசரமாய்த் தன் உடமைகளைத் திணித்துக் கொண்டிருந்தாள் அருணா.

அருணா ஒரு நவீனயுக யுவதி. சென்னையில் அவள் வங்கிக்கான ஐந்து நாள் பயிற்சி முடிந்து இன்று
மதுரை திரும்புகிறாள்.

“ரகு அண்ணா! 7.50க்கு ரயில். சீக்கிரமாத்தான் கிளம்பேன்.”

“வந்துட்டேன் அருணா.”

“இல்லே நீ வேணும்னா தூங்கு. நான் காரை ஸ்டேஷனில் விட்டு விட்டுப் போறேன். ஸ்பேர் சாவிய மறக்காம எடுத்துட்டுவா?”

“எல்லாவற்றிலும் உனக்கு அவசரம்தான். வண்டிக்கு மட்டும் ஸ்பேர் சாவி ஞாபகம் வருதா? அம்மா, அப்பா குறை தெரியாம உன்னை வளர்த்து விட்டேன். நாலு பேரைப் போல நீயும் இருக்கணும். என்னை அனுபவம் போதாதவன்னு பிறர் சொல்லும்படி வைத்து விடாதே அருணா.”

“ஆரம்பிச்சாச்சா? நான் மதுரை போன மாதரித்தான்.” அவள் பார்வை அவனை அடக்கியது.

“சரி சரி உன்னால என் வாயைத்தான் மூட முடியும் அருணா.”

“ஊர் வாய மூடனும்னா இப்பச் சொல்லு ரகு. உன் டேஸ்டுக்கு ஏற்றால் போல் அழகா அம்சமா ஒருத்திய…”

“நோ நோ அருணா! உன் வாழ்க்கை பிரச்சினை முதலில் முடியட்டும்.”

“நீ மூளையோடுதான் பேசறியா ரகு?” இல்ல குளிச்சிட்டு வரும்போது அதையும் வெளுத்துக் காயப்போட்டுட்டு வந்துட்டாயா? நீ பேசாம மதுரைக்கே வந்துரு. உன் டேஸ்டுக்கு தகுந்த மாதிரி சமைச்சாவது போடுறேன்.”

“நீ சென்னைக்கு மாறி வரணும். நாம ரெண்டு பேர் கல்யாணமும் ஒரே முகூர்த்தத்தில் நடக்கணும். அது தான் என்னோட ஆசை அருணா.”

“என் நிலைதான் உனக்குப் புரியலை. என் அவசரமுமா தெரியாது? சீக்கிரமா வண்டில ஏறிக்க.”

ரகு ஏறியதுதான் தாமதம். அருணா வண்டிய விருட்டெனக் கிளப்பினாள்.

எழும்பூர் ரயில் நிலைய வளாகம் உட்சபட்ச பரபரப்பில் திணறிக் கொண்டிருந்தது. வாகனங்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தின் எதிரே நின்று விட்ட பஸ்ஸிலிருந்து குதித்த நிஷாந்த், நிலையத்தை நோக்கி ஓட, எதிர்பட்ட ஆட்டோவில் இடித்தான். ஆட்டோ டிரைவரிடம் ‘சாவு கிராக்கி’ பட்டம் பெற்றுக் கொண்டு அடுத்த வழித் தடுப்பில் ஏறி நிலையத்தை பார்த்தபடி கார் பாதையில் இறங்க, வேகமாக வந்த ஹோண்டா சிட்டி, அவனை முத்தமிட்டு நின்றது. அவன் ஆட்டோ டிரைவரிடம் வாங்கியிருந்த பட்டத்தை கார் டிரைவருக்கு கொடுத்துவிட கோபத்தில் திரும்பினான். கண்ணாடி வழியே ஸ்டியரிங் வீலுக்குப் பின்னாலிருந்த அருணாவின் தோற்றம் அவன் கண்களைப் பரவசப் படுத்தியிருக்க வேண்டும்! மௌனித்தான்.

“சாரி” என்ற அவள் வார்த்தகளைத் தொடர்ந்து அவள் இதழ்கள் உதிர்த்த புன்னகை ஜீரோ டிகிரிக்கு அவனை குளிர்விக்க, நிஷாந்த் உரைந்து போனான்.

மணி 7.47. ‘பயணிகள் கவனத்திற்கு. 6127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஐந்தாவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்’ என்ற அறிவிப்பைக் கேட்ட நிஷாந்த், மின்னல் வேகத்தில் ஓடி மின்அணு எந்திரத்தில் முன் பதிவை உறுதிப் படுத்தி விட்டு, எஸ்கலேட்டரை நோக்கிப் பாய்ந்தான். ஐந்தாவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலில் S-6 பெட்டிக்கு அவன் தாவவும், ரயில் நகரவும் சரியாய் இருந்தது. இருக்கை எண் 48. அது பக்க இருக்கைகளில் ஒன்று. மேல் பெர்த்தில் சூட்கேசை வைத்தவன் கீழே குனிய ‘வாவ்’ அவன் மனம் கூவியே விட்டது! காரில் வந்து அவனை இடித்த அதே பெண்! அருணாவின் பார்வையை ரகுவிடமிருந்து பறித்துக் கொண்ட ரயில் வேகமெடுத்ததும், உள்ளே திரும்பியவள் பார்வை நிஷாந்த் மீது விழ, லேசாய்ப் புன்னகைத்தாள். காதல் பூக்கள் உதிர்வதாக உணர்ந்தான்! நளினமான சிவந்த தளிர் விரல்கள்! உடல் முழுதும் சுடிதார்ப் பூக்கள்!

“காயம் எதுவும் இல்லையே! ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரம். அதான் காரை கொஞ்சம் வேகமாய் ஓட்டி வந்தேன்.”

இந்த விரல்கள் ஒத்தடம் கொடுக்குமானால் அவனுக்கு காயம் பட்டிருந்தால் தேவலாம் போலிருந்தது. சுதாரித்துக் கொண்டவன் “எனக்கும் அதே பிரச்சினைதான். எல்லாம் அப்பவே மறந்து விட்டென், உங்கள் முகம் தவிர.”

“என் முகம் என்ன அவ்வளவு அசிங்கமா?” சிரித்தாள்

“சீ சீ என்னங்க நீங்க. 1000 வாட்ஸ் பளிச் உங்க முகத்தில்!”

“என் அண்ணன் காருக்கு ஏதும் ஆகியிருக்குமோ வென முறைத்தான். நீங்க வேறு கோபத்தில் திரும்பினீர்களா... உங்களுக்கு அடிபட்டிருக்குமோவென பயந்து போனேன்.”

ஆளை பார்க்கா விட்டாலும், உடன் வந்தது அண்ணன் என்பதில் அவனுக்கு அலாதி திருப்தி. அவள் மணமானவளோ? அறிந்து கொள்ள அவனுள் ஒரு துடிப்பு. அவள் கழுத்தைத் துப்பட்டா மறைத்திருந்தது.

“உள்ளே வரும்போது நான் ஒரு ஆட்டோவை இடித்து விட்டேன். அவன் என்னை அசிங்கமா திட்டிவிட்டான்.”

“ஓகோ அதை என் மீது திருப்பி விடத்தான் முறைத்தீர்களாக்கும்?” அதே டிரேட் மார்க் புன்னகை! “பிறகு ஏன் என்னைத் திட்டாமல் நிறுத்திக் கொண்டீர்கள்?”

“எல்லாம் உங்கள் புன்னகையின் மகிமை தான். முதலில் அதை காப்பீடு செய்து விடுங்கள்.”

“நல்லாவே பேசறீங்க” வார்த்தையை அவள் முடித்த போது TTR வந்து அவள் டிக்கெட்டை சரி பார்த்தவர், நிஷாந்திடம் திரும்பினார். அவனுள் ஒரு பளிச்! TTR அவன் பெயரை தேடிய போது, சார்ட்டில் அவன் கண்கள் மேய, இருக்கை எண் 47 Ms. அருணா 23 என்றிருந்தது. Miss என்று எதிர் பார்த்தவனுக்கு ஏமாற்றம்! அடுத்த ஏமாற்றம் அவளுக்கு 18 வயது இருக்கலாம் என்ற அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக அவள் இளமைக்குள் மேலும் 5 ஆண்டுகள் ஒளிந்திருந்தது!

சென்னைப் புறநகரின் காலை நேரத் துடிப்புகள் அருணாவின் கண்களில் படமாயின.

அவளிடமிருந்த தமிழ் நாளிதழை வாங்கிக் கொண்ட நிஷாந்த் பக்கங்களைப் புரட்டினான்.

காலமான கைம்பெண் சொத்துக்காக நடந்த வழக்கில் கணவன் வீட்டுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!’ என்ற செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.

திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவனை இழந்த பெண்ணை, அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கூறி கணவன் வீட்டார் விரட்டி விட்டனர். அவள் தந்தை அவளை மேலும் படிக்க வைத்து, ஒரு வேலையில் சேர்த்து விட்டார். வாரிசு இல்லாமல் மரணமடைந்த அவள் பணத்துக்கும், சொத்துக்கும் யார் வாரிசு என்பதில் அவள் தந்தைக்கும், கணவர் வீட்டாருக்கும் நடந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியிருந்தது. செய்தியைப் படித்து முடித்ததும்...

“மேடம் படித்தீர்களா இந்த செய்தியை. அருணா பதில் சொல்லும்முன் பாதையைத் தாண்டி அமர்ந்திருந்த பெரியவர் பதில் சொன்னார். “நானும் அந்த செய்தியைப் படித்தேன் தம்பி. ஒரு சிற்பியின் கண் கொண்டு, மனிதனின் யதார்த்த வாழ்வை ஒவ்வொறு கோணத்திலும் நுட்பமாக ஆராய்ந்து எழுத்துக்களாக நமக்குச் செதுக்கித் தந்தவர் லியோ டால்ஸ்டாய். அப்படி ஒரு யதார்த்தமான தீர்ப்பை நாம் கோர்ட் மூலம் எதிர்பார்க்க முடியாதுதான். நீதிமன்றத்தின் கண்களுக்கு சட்டம் மட்டுமே தெரியும். மனச்சாட்சி எப்படித் தெரியும் தம்பி?.

“எப்படி சொல்றீங்க?” ஒரு பெண்ணுக்கு மணமான பின் புகுந்த வீடுதானே எல்லாம்.

“நீங்க சொல்றது வாஸ்தவம் தான் தம்பி. ஆனா அதிர்ஷ்டம் இல்லை என்று விரட்டி விடப்பட்டவள் சொத்துக்கு, புகுந்தவீடு எப்படி உரிமை கோரலாம்?”

“சார்! நீங்க சொல்வதுதான் சரி. பெண்களின் வாழ்க்கை ஒரு ஓடம் போன்றது. அதன் பயணத்துக்கு அன்பு என்ற துடுப்பு அவசியம் தேவை. இவங்க பிறந்த வீட்டின் அன்பில் பயணம் செய்தவர்கள். அதன் பலனை பெற்றவர்கள் அனுபவிப்பதுதான் நியாயம். ஆனால் படகையே கவிழ்த்து விட்ட புகுந்த வீட்டார், பலனைத் தட்டிப் பறித்திருக்கின்றனர். அதற்கு நீதிமன்றமும் துணை போயிருக்கிறது. இது அநியாயம் சார்.” என்றாள் அருணா.

“உண்மைதான்!” அனைவரும் அருணாவை அமோதித்தனர்.

“இப்படி பேசுகிறாள்! ஒரு வேளை இவளும் மணமானவளோ?” துப்பட்டா விலகி யிருந்த இடைவெளியில் அவள் கழுத்தைப் பார்த்தான். ஒரே ஒரு செயின் மட்டும் மின்னியது. சே!..சே!

விழுப்புரம் இரயில் நிலையம். டீ காபி.... டீ காபி...

“இரண்டு காபி” என்றாள்.

அவன் பணம் கொடுக்க பர்ஸை எடுத்தான்.

“இல்ல...நான் தானே வாங்கினேன். நீங்க காபி நல்லா இருக்கா பாருங்க.”

“நீங்க வாங்கிக் கொடுத்தால் ருசிக்கு கேட்கவா வேண்டும்?”

அப்போது ஊட்டிய இட்லியை அம்மாவிடம் வாங்கிக் கொண்ட சிறுமி பிரீத்தி இருக்கைகளுக்கு இடையில் பின்னாலேயே நடந்து வந்து அருணாவை நெருங்கி விட்டாள். புறப்படும் போது ரயில் குலுங்க, சிறுமி லேசாகத் தடுமாற...

“பிரீத்தி ஒழுங்கா பார்த்து நட. கீழே விழுந்தா அம்மாவிடம் சொல்லாதே.”

“சரி அப்பாவிடம் சொல்லிக்கறேன்” என்று பிரீத்தி சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டனர். விழ இருந்த சிறுமியை அருணா பிடித்துக் கொண்டாள்.

“உனக்கு அப்பான்னா ரொம்ப இஷ்டமா?”

“ஆமா என்றவள் எனக்கு அம்மாவையும் பிடிக்குமே.” என்றபடி அருணாவையும் நிஷந்தையும் மாறி மாறிப் பார்த்தவள் “உங்க பாப்பா வரலையா” என்றதும் அவர்கள் இருவருமே சிரித்து விட்டனர்.

“யேய் வாயாடி இங்க வா. அவங்க அம்மா அப்பா இல்லை.” என்று அம்மா சொன்னதும் அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே சென்றாள் சிறுமி.

நிஷாந்த் பேப்பரை மறுபடி புரட்டினான். மணமகன் தேவை பகுதியில் ஒரு செய்தி பேனாவால் கட்டமிடப்பட்டிருந்தது.

வங்கிப் பணி 23/152 செ.மீ. பி.காம் சிவந்த நிறம். பொருத்தமான மணமகன் தேவை.
அந்தச் செய்தியை அவன் மனம் அசை போட்டது. எதேச்சையாய் அவள் பார்வை நிஷாந்த் மீது விழ, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களைப் பிடித்துக் கொண்டதும்,

“உங்களுக்கு பேங்கில் தானே வேலை.”

“ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்? எங்க பிராஞ்சுக்கு வந்திருக்கீங்களா?” என்று அவள் கேட்க, சிரித்துக் கொண்டான்.

“முதல்ல உங்க சிரிப்பைத்தான் இன்ஷுர் செய்ய வேண்டும்.” என்றதும் அண்டார்டிகாவின் ஐஸ் முழுக்க அவன் தலைக்கு மேல் வந்தது போல் உணர்ந்தான்.

“இன்று காலை நம் கண்கள் ஒரு சவாலை ஏற்றுக் கொண்டுதான் சந்தித்திருக்க வேண்டும். நம் சந்திப்பிற்கு நிச்சயம் ஒரு அர்த்தமிருக்க வேண்டும். நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” நிஷாந்த் கேள்வியில் ஆர்வம் தொற்றிக்கொள்ள...

“நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.”

பகல் மணி 1.00 திருச்சியில் சாப்பாடு முடிந்ததும் அசதியில் நிஷாந்த் மேல் பெர்த்துக்குத் தாவிப் படுத்துக் கொண்டான்.

ரயில் அந்த வளைவில் திரும்புகிறதா அல்லது உலகம் சுழல்கிறதா? அவன் மெய்மறந்தான்! அவன் கனவில் தேவதையாக வலம் வந்தாள் அருணா! அவளிடம் அவன் மனம் திறந்தான் நிஷாந்த்! அவள் பதிலுக்காக அவன் ஏங்கித் தவிக்க...

“மிஸ்டர் நிஷாந்த்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவன், மிரள மிரள விழித்தான்! அவன் பெயரை யார் கூப்பிட்டது?

“என்ன அப்படிப் பாக்கறீங்க! தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? மதுரை வரப் போகுது” என்றவுடன் கீழே குதித்தான்.

வெளியே அவன் பார்வை தாவியது. ரயில் சோழவந்தான் நிலையத்தில் சிக்னலுக்கு நின்றிருந்தது. அவன் பார்வை மீண்டு அவளிடம் சென்றது.

“நிஷாந்துனு கூப்பிட்டது நீங்களா?”

“ஆமா ஏன்? உங்களால் என் உத்தியோகத்தைத் தெரிஞ்சுக்க முடியும் போது, உங்க பேரை என்னால் யூகிக்க முடியாதா?”

பெயரை யூகிக்க ... இல்லை என்னைத் தெரிந்தவங்களாத்தான் இருக்கணும்...அவன் மூளையின் நினைவாற்றல் தொகுப்பிலிருந்து அவனுக்குத் தெரிந்தவர்கள் பட்டியல் அணிவகுத்தன! ஞாபகப்படுத்திப் பார்த்தான். ம்..கூம். ரயில் கிளம்பியது.

அருணா அந்த தினசரியை பெரியவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு “நன்றி” என்றாள்.

“அது உங்க பேப்பர் இல்லையா?”

“இல்ல ஏன்?”

அசடு வழிந்தான்.

“உங்க பேர் எனக்கு எப்படித் தெரியும் என்று குழம்பியிருக்கிறீர்கள். சரிதானே?”

அவன் பார்வை ஆமா என்றது.

“என் அண்ணன் ரகுதான் சொன்னான். அவன் உங்க கிளாஸ்மேட்டாம்?”

“ஓ நீங்க ரகுவோட சிஸ்டரா? அப்ப நாம நெருங்கி வந்துவிட்டோம்!”

“என்னது”

“ரகு உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கான். நாம தான் சந்திச்சதில்லையே!”

“இன்று காலையில் நானும் அண்ணனும் தான் காரில் வந்தோம். உங்களைக் கூப்பிட்டார். நீங்க ஸ்டேஷன் ஒலிபெருக்கி அறிவிப்பைக் கேட்டதும், நிற்காமல் ஓடி விட்டீர்கள்.”

“ஆமா எனக்கு மதுரையில் அவசரமான வேலை. டிக்கட் வேறு கன்பர்ம் ஆகலயா. அதான். இப்ப ரகு என்ன செய்கிறான்? பார்த்து நாளாச்சு.”

“ஒரு தனியார் கம்பெனில எக்ஸிகியூட்டிவா இருக்கான். ரகு விஷயமா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும். நான் உங்களுக்கு காபி வாங்கிக் கொடுத்ததிலும் கொஞ்சம் சுயநலம் உண்டு.”

“இந்த பயணத்தில் உங்களை நான் முழுசா நம்பிவிட்டேன். நீங்கதான் என்னை நம்பவில்லை போல் தெரிகிறது. நான் என்ன செய்யனும் சொல்லுங்க..”

“ரகு கல்யாணம் பண்ணிக்காம அடம் பண்றான். என் சூழ்நிலையைப் புரிஞ்சுக்காம பிடிவாதமா இருக்கான். அவனைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்கணும்” அவள் ரகுவின் விசிட்டிங் கார்டை நீட்டினாள். ரயில் நின்றது.

மதுரை சந்திப்பு. ரயில் நிலைய கடிகாரம் மணி மாலை 4.25 என்றது.

“என்னிடம் ஒரு சூட் கேஸ் கொடுங்க”.

“தேங்க்ஸ் நிஷாந்த். நான் கேட்டுக் கொண்ட விஷயத்தில் எனக்கு உதவுங்கள். உங்கள் உதவியை என்றும் நான் மறக்க மாட்டேன். லக்கேஜ நான் மேனேஜ் பண்ணிகறேன்”. அவள் சூட்கேசை கையிலும் பையை தோளிலும் மாட்டிக் கொண்டு இறங்க ஆயாத்தமானாள்.

“கண்டிப்பாய் செய்யறேன் அருணா!” பிளாட்பாரத்தில் நடந்தவள் நின்றாள்.

“உங்க பேர்தானே? நான் ரிசர்வேசன் சார்ட்டில் பார்த்தேன்.” சிரித்தவன், ஆமா ரகு ஏன் இந்த விஷயத்துல பிடிவாதம் பண்றான்?”

“நான் மறுமணம் செய்து கொள்ள வேண்டுமாம்.”

உயரழுத்த மின்சாரம் அவன் இதயத்தைத் தாக்கியது போலானான் நிஷாந்த். அவன் கால்களுக்கு கீழே பூமி நழுவுவது போலிருந்தது.

“அதோ வர்றாங்களே... அவங்கதான் என் ஓராண்டுகால மணவாழ்க்கையில் மலந்த புது உறவுகள். அவங்க என் மாமியார். உடன் வருவது என் கணவரின் தங்கை. அவள் கையிலிருப்பது அப்பா முகத்தையே பார்த்தறியாத என் ஆறுமாதக் குழந்தை. மனோஜ். இவர்களுக்கு இன்று நான் தான் ஆதரவு. எனக்கு கிடைத்திருக்கும் வேலை மும்பைக் கலவரத்தில் உயிரிழந்த என் கணவருக்குப் பதிலாக எனக்குக் கிடைத்தது.”

மும்பைக் கலவரத்திலா?

“ஆமாம் நிஷாந்த். மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 26-11-08 அன்று தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பலியான 50 பேரில் என் கணவரும் ஒருவர். வங்கியின் தலைமை அலுவலத்திற்கு வேலை விஷயமாக சென்றிருந் தார். அன்று ஊர் திரும்ப இருந்தார். எமன் உருவில் வந்த தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் என் வாழ்வைப் பறித்து விட்டனர்!”

நிஷாந்த் சிலையாகி விட்டிருந்தான். இவள் வாழ்வு மொட்டிலேயே கருகக் காரணம் தீவிரவாதமா? இதற்கு முடிவுதான் எப்போது? அவன் உள்ளம் கனத்தது.

“நீங்க சொல்லுங்க நிஷாந்த். இவங்கள நான் உதறி விட்டு வந்துடனுமாம். ரகு சொல்றான். என் கணவர் படிப்புக்காக அத்தனையும் இழந்து விட்டு இவங்க நிர்கதியாயிருக்காங்க. என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அவள் கண்களில் நீர்
கசிந்தது.

நிஷாந்த் இன்னும் அவனுள் ஊடுருவிய அதிர்ச்சி அலைகளில் இருந்து மீளவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அருணா. அவன் மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

“கவிதா! மனோ அழாமல் இருந்தானா” அவள் பார்வை தன் மகன் மீது தாவியது.

“அண்ணி! மனோ சமத்தா இருந்தான்” குழந்தை அருணாவிடம் தாவியது.

“என் செல்லம்...” அருணா முத்த மழை பொழிந்தாள்.

“அத்தை! இவங்க ரகு அண்ணன் நண்பர். இன்று தற்செயலா ரயிலில் சந்திச்சேன். ரகு அண்ணனுக்கு நல்ல புத்திமதி சொல்லிக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பதாக உறுதி சொல்லியிருக்காங்க.”

“என்னமோ அருணா! நல்லது நடந்தா சரிதான். உன் எதிர் காலத்தை உத்தேசித்து உன் அண்ணன் சொல்வதிலும் தவறு இல்லை.”

“அத்தை நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிறீங்களா? நிஷாந்த் நாங்க கிளம்பறோம். ரகு விஷயம் மறக்க மாட்டிங்களே?”

“நிச்சயமா. இன்றே அவனிடம் தொலைபேசியில் பேசறேன்.” கூடவே நடந்து நிலையத்துக்கு வெளியே மேற்கு வெளிவீதிக்கு வந்தான். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறியதும் நன்றியுடன் கையசைத்தனர்.

ஆட்டோ டவுன் ஹால் ரோட்டில் மறையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். அருணா ஒரு அல்ட்ரா மாடர்ன்தான். ஆனால் கடமையையும் கண்ணாகக் கருதுகிறாள். சொத்து சுகம் மட்டுமே உலகமில்லை. நாம் வாழ்கிற வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவளை நினைத்துப் பெருமைப்பட்டான்.

கடலில் எத்தனையோ அலைகள் தோன்றினாலும் அத்தனையுமா கரை சேர்கின்றன? அவன் மனதில் எழும்பிய அலைகளும் இப்போது ஓய்ந்து அமைதியடைந்தன.

-முற்றும்-


(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)


2 comments:

குமாரவேல் said...

"அலைகள் பலவிதம்" ஒரு சிறந்த சிறுகதைக்கான எடுத்துக்காட்டாய் உள்ளது. இது சிறுகதை போட்டிக்காக இருப்பின் பரிசு பெறுவது உறுதி. இது போல இன்னும் பல படைப்புகளை தங்களின் எழுத்தில் எதிர்பார்க்கிறேன்.

Balamurugan said...

The short story "Alaigal Palavitham" is something meaningful...Definitely an appreciable effort by the writer...Let his service to the Tamil literature world continues for a long...