Sunday, June 7, 2009

தமிழ் ஈழம் - கனவுகள் சிதைவதில்லை


யாத குண்டு மழை எழுப்பிய கரும்புகை ஈழத்தின் வானத்தை கருமையாக்கி விட்டிருக்கிறது. தீரமுடன் குண்டுகளை எதிர்த்து நின்று சாவை முத்தமிட்ட ஆயிரக்கணக்கான போராளிகளையும், தங்கள் தானைத் தலைவர்களைக் காக்க தங்கள் இன்னுயிர் தந்து அவர்களுடன் மடிந்த லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களையும் சேர்த்து விழுங்கிய ஈழத்து மண், செங்குருதியில் நனைந்து சிவப்பாகச் சிவந்து கிடக்கிறது.


தமிழ் ஈழம் என்ற கொள்கைக்காக தங்கள் இன்னுயிர் தந்த அத்தனை வீரத் தமிழர்களுக்கும் இத்தருணத்தில் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கை ஆக்குவோம். சிங்கள வெறியர்களின் குண்டு மழையில் கருகிய அந்த தியாக மொட்டுகள் அவர்கள் தாகம் தமிழ் ஈழம் மலர தியாகமாக விளங்கட்டும்!


ஒரு தேசீய இனத்தின் விடுதலைத் தாகம் அதை அடையும் வரை அடங்காது என்பார்கள். இதைச் சாதித்துக் காட்டிய நாடுகளின் வரிசையில், ஆணானப் பட்ட கிரேட்பிரிட்டனிலிருந்தே பிரிந்து சென்ற ஐயர்லாந்து, சைப்ரஸ் தீவில் வடக்கு சைப்ரஸ் (Turkish Republic of Northern Cypress), கொசோவா, தெற்கு ஒசேத்தியா, கிழக்கு திமோர், அப்காசியா, இஸ்ரேல், அந்த சுண்டைக்காய் நாட்டிற்குள் ஒரு பாலஸ்தீனம் என எத்தனையோ சின்னஞ்சிறு நாடுகளைப் பட்டியலிடலாம்.


இந்த பட்டியலில் தமிழ் ஈழமும் சேர முடியாமல் போனது ஒரு சோகமுடிவு மட்டுமல்ல, தங்கள் உரிமைக்காக 50 ஆண்டுகளாக போராடியும் இன்னும் அவர்களுக்கு ஒரு பதில் கிடைக்காமல் போர்முடிவுக்கு வந்திருப்பது, உலகின் பத்துக் கோடி தமிழர்களுக்கும் நேர்ந்த பெருத்த அவமானம் தமிழர்களுக்கென்று ஐ.நா மன்றத்தில் குரல் கொடுக்க பிரதிநிதித்து்வம் இல்லாமையின் அவலம்.


யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள்! அது போல தமிழ் ஈழம் மலர்ந்தால் முதலில் அங்கீகரிக்க வேண்டிய பிராந்திய வல்லரசும், தமிழ் இனத்துக்கு தாயகமுமான இந்தியா அங்கீகரிக்காமல் மற்ற நாடுகள் அதை வழிமொழியாது என்ற உண்மையை மறந்து ஈழத் தமிழர்கள் இந்தியாவைப் பகைத்துக் கொண்டது இமாலயத் தவறு. வடக்கு சைப்ரஸை தாயாதி நாடான துருக்கி மட்டும்தான் அங்கிகரித்துள்ளது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. தொலைவில் உள்ள எத்தனை நாடுகளின் உதவி கிடைத்தாலும், கூப்பிடு தூரத்திலுள்ள இந்தியாவின் ஆதரவில்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்த அதிபர் ராஜபக்சே, ‘புலிகளுக்கு தடை’ என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, இந்தியா உதவியுடன் இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலிருந்தும் போராளிகளுக்கு கடல் மார்க்கமாக எந்த உதவியும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்.


அதிபர் ஜயவர்த்தனே காலத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி அரசுமுறை பயணமாகக் கொழும்பு விமான நிலையம் வந்து இறங்கினார். அங்கு அவருக்கு இலங்கை அரசின் ராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அணிவகுப்பை பார்வையிட்டு வந்த போது சிங்கள ராணுவ வீரன் ஒருவன் ராஜீவைத் தன் துப்பாக்கியால் தாக்கினான். இந்த ஒரு காரணத்தை வைத்தே ராஜதந்திரத்தை பயன்படுத்தியிருந்தால், சிங்களர்களை நிரந்தரமாக இந்தியாவிடமிருந்து விலகச்செய்து, போராளிகள் இந்தியாவிடமிருந்து எவ்வளவோ சாதித்திருக்கலாம். ‘தமிழ் ஈழம்’ இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பிரதேசம் என்பதை நிலைநாட்டியிருந்தால் தமிழ் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும். ஆனால் சந்தர்ப்பத்தை கோட்டை விட்டது மட்டுமல்லாமல் அவரையும் பகைத்துக் கொண்டது, தமிழ் ஈழம் கரையேற முடியாமல் போனதற்கு மூல காரணமாகும்.


விளைவு? பின்னாளில் மெக்சிகோ, கோஸ்டோரிக்கா போன்ற சம்மந்தம் இல்லாத நாடுகள் சேர்ந்து ‘இலங்கை விவகாரத்தில் ஐ.நா தலையிட்டு போரை நிறுத்தி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும்’ என்று ஐ.நா மன்றத்தில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்த போது, தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் இந்தியா அதை ஆதரிக்கவில்லை.


இலங்கை இராணுவ புலனாய்வுத்துறை, புலிகள் இயக்கத்துக்குள் பிளவு ஏற்பட காய்களை நகர்த்திய போது, அதை உணராமல் இயக்கம் பிளவுபட அனுமதித்தது பெருந்தவறு. இது கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் அரசிடம் இழந்து, ஈழப்போர் தீராத வேதனையில் முடிய முக்கிய காரணமாயிற்று.


போராட்டக் குழுக்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தாங்களே கோடாரிக் கம்புகளாக மாறி நம் இனத்தையெ அழித்ததோடு, முஸ்லிம்களையும் பகைத்துக் கொண்டது தேவையற்ற சம்பவங்கள்.


இனி ஈழத் தமிழர்கள் தங்கள் தவறுகளைத் திருத்தி, இந்தத் தோல்வியை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டுவார்களாக! ஒரு புதிய பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வீறுகொண்டு உயிர்த்தெழுந்து, சிதைந்து போன தங்கள் லட்சியக் கனவை நனவாக்கிக் காட்டு வார்களாக! நாம் பத்துக்கோடித் தமிழர்கள் என்பதை இவ்வுலகிற்கு நிரூபிப்போம்!

1 comment:

Anonymous said...

சிதைந்து போன புலிகளினதும், வெளிநாடுகளில் வசதியாக வாழும் தமிழர்கள் சிலரினதும் லட்சியக் கனவை நனவாக்கிக் காட்டுவதற்காக மிகுதியாக அங்கே உள்ள தமிழர்களும் அழிய வேண்டுமா? தயவு செய்து பொறுப்புடன் சிந்தியுங்கள்.