இங்கேயும் ஒரு சொர்க்கம் - அத்தியாயம்-37
பாரிசிலிருந்து மும்பைக்கான அந்த விமானம் தூனிஸ் நகரிலிருந்து சரியாக மாலை 5.30 க்குப் புறப்பட்டது. விமானம் விண்ணில் தாவி உச்சிக்கு வந்து 30000 அடி உயரத்தில் நிலைகொண்ட போது பயணிகள் கண்களுக்கு விருந்து அளித்த அட்லாஸ் மலைத் தொடர்களின் கம்பீரமான எழில் தோற்றம், துனிசிய வளைகுடாவை நோக்கி இரு பகுதிகளாகி, கிழக்கில் வர வர மலைத் தொடர் சறுக்கி துனிசிய வளைகுடாவில் சரிந்து கலந்து மறைந்து கொண்டிருந்தது. துனிசியாவின் ஜீவ நதி மஜர்தா, இரு மலைத் தொடர்களுக்கும் இடையில் ஓடி அப்பள்ளத்தாக்கை பச்சைப் பசேல் எனக்காட்டி கண்களைக் கவர்ந்தது. தெற்கிலுள்ள தாபஸ்ஸா மலைத்தொடர் தெற்கு நோக்கி குன்றுகளாக இறங்கி பீடபூமியாக மாறி சகாரா பாலைவனத்தில் சங்கமித்தது.
ரோமானியர்களின் உணவுக் களஞ்சியம் துனிசியா, பார்வையிலிருந்து விடைபெற, துனிசிய வளை குடாவில் மேலெழும்பிய விமானம், மத்தியதரைக் கடல் பகுதியில் பிரவேசித்த போது துனீசிய நேரம் மணி 5.45 (16.45 GMT) விமானப் பணிப்பெண்கள் ஒரு பக்கம் குளிர்பானங்களை வினியோகிக்க, மறுபக்கம் அதுவரை கண்களுக்கு விருந்தளித்த அட்லாஸ் மலையின் அழகிய சிகரங்கள் பின்னோக்கி விலகி மறைந்து கொண்டிருந்தன. சிலர் பானங்களை பருகியபடி காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். சிலருக்கு பானங்களில் மனம் லயிக்கவில்லை. அவர்கள் மனம் துனிசியாவின் ரம்யமான புகழ் பெற்ற மாலை நேரக் காட்சிகளில் லயித்திருந்தன. துனிசியாவின் பிரத்தியேக வயலட் வண்ணத்தில் மாலை நேரம் மிளிர, கடலில் ஒரு நெருப்புக் கோளமாய் சூரியன் விழுந்து கரைந்து கொண்டிருந்தது. சிலர் நினைவுகளில் முந்திய தினங்களின் இரவுநேர இயற்கை காட்சிகள் மின்னி மறைய அந்நெஞ்சங்களில் பிரிவு ஒரு சுமையாகி கனத்தன.
கேபினில் லைட்டுகள் மங்க, சில பயணிகள் தூங்க ஆரம்பித்தனர். குளிர் பானங்களை தொடர்ந்து சாக்லெட் மற்றும் இனிப்பு வகைகளைப் பணிப்பெண்கள் வழங்க, இனிமையாகக் களித்த விடுமுறை நாட்களைப் பல நெஞ்சங்கள் நினைவு கூர்ந்தன. சில நினைவுகள் அவர்கள் மனத்திரையில் மலர்ந்து மனதுக்கு இதமளித்தன. மறக்க முடியாத நிகழ்வுகளை மனது அசைபோட்டன. பயணம் நன்கு அமைந்த மைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டன. அரை மணி நேரம் சென்றிருக்கும். விமானம் மால்ட்டா தீவுகளின் தலைநகரம் வலேட்டா மீது பறந்து கொண்டிருந்தது.
அடுத்து வந்த நிமிடங்கள் அவர்களுக்கு பெரும் மனக்கிலேசத்தையும் சஞ்சலத்தையும் கொடுத்து அவர்களை கையறு நிலைக்கு மாற்றின. வெளியே இருள் பரவ பரவ உள்ளே பயமும் பீதியும் போட்டி போட்டு பயணிகளை அச்ச மூட்டின. பயணிகளோடு பயணிகளாக வந்த சிலர் விமானத்தைக் கடத்துவதாக அறிவித்ததும், இன்ப நினைவுகள் கொடூரமானதாக மாறியது. அவர்களைப் பயமுறுத்த பல்வேறு யுக்திகளை கடத்தல்வாதிகள் கையாள, பயணிகள் மிரண்டனர்.
பின் புறமிருந்த பெண்கள் பகுதியில்தான் அந்த பயங்கரம் முதலில் ஆரம்பமானது. மணி 6.15 இருக்கும். பின்னிருக்கை ஒன்றிலிருந்து எழுந்த அலெக்ஸ், தன் கொடூர முகத்தை ஒரு கைத்துணியால் மூடிக்கொண்டு ஒரு கை குண்டைத் தூக்கி பிடித்தபடி முன்னே வந்தான். அத்துணியில் கண்களுக்கு மட்டும் இரண்டு திறப்புகள் இருந்தன. வலப்புற இருக்கையிலிருந்து முகத்தைக் கறுப்பு துணியால் மறைத்து கட்டியிருந்த யூசுப், ஒரு ரிவால்வரை தலைக்கு மேல் உயர்த்தியவன் உரத்த குரலில் சொன்னான் "இந்த விமானம் இப்போது கடத்தப்படுகிறது என்று."
2 comments:
"Ingeyum oru Sorgam" was really great and I enjoyed each and every description of the countries/cities.
I will recommend my frds to read this novel definitely.
Hats off to the author!
-Vyku
This novel has a fascinating plot with a mix of historical facts, fast paced actions...also it draws the reader and keeps his/her attention. The author really offered a good story!
Post a Comment