Sunday, July 17, 2016

பூ உலகின் நண்பன் சீரொளி!

ஒரு குண்டூசியின் தலையில் இருநூறு துளைகள் போட வேண்டுமா? அல்லது ஒரு மீட்டர் விட்டமுள்ள நீண்ட இரும்பு உருளையை சம அளவில் 1/1000 மி.மி சுத்தமாக அறுத்துத் துண்டு போட வேண்டுமா? மிகத்துல்லியமான அளவில் பிசிறில்லாமல் அவற்றை என்னால் செய்து முடிக்க முடியும்!


மற்ற உலோகங்களை அறுக்க இயற்கையில் கிடைக்கும் மிகக் கடினமான பொருள் வைரம். ஆனால் வைரத்திலேயே துளை போட வேண்டுமா? அதுவும் என்னால்தான் செய்ய முடியும்!

மிக நுட்பமான கண் அறுவைச் சிகிச்சையா? கூப்பிடு அவனை என்று என்னைத்தான் டாக்டர்கள் உதவிக்கு அழைப்பார்கள்!


யுத்தகளமா? கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வழி நடத்தி, மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கச் செய்ய என்னால் மட்டுமே முடியும்!


ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப, இறுதி விழாக்களின் போது வார்ணஜால வித்தைகள் மூலம் காண்போரைக் களிப்படைய வைக்கும் காண் ஒளிக்காட்சிகளை உருவாக்குவதும் ஐயா நானேதான்!


பெரு வணிக நிறுவனங்களில் (Departmental Stores) கணிணி விலைப்பட்டியல் (Billing) தயாரிப்பில்  பொருளின் மீது இருக்கும் பட்டைக் குறியீடு (Bar coding) விலையை வாசித்து அச்சிட்டுக் கொடுப்பதும் அடியேன்தான்!


நவீன முறை படத்தயாரிப்பில் ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, சேகரிப்பு, சிடி, டிஸ்க், போன்றவற்றின் பதிவு மற்றும் தேவைப்படும் போது அவற்றை வாசிக்க என அனைத்து வழிகளிலுமே எனது பயன்பாடு மிக மிக முக்கியமானது.


பதிப்பகத்துறையில் அச்சு முறையைத் தூக்கி எரிந்துவிட்டு, கணிப்பொறி மூலம் டைப்பிங், பிரிண்டிங், என அனைத்து வகை வேலைகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதும் நானேதான்!.


இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய பெரிய தொழிற்சாலைகள் முதல் சிறிய தொழிற் கூடங்கள், கட்டுமானம், அணுசக்தி, வானியல் ஆய்வு, மருத்துவம் பொறியியல், பொழுதுபோக்கு, விளையாட்டு (Laser Tag) என அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளேன் நான்.


1960-ல் உலகிற்கு என்னை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது எனது தந்தையான அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி ’தியடோர் ஹாரோல்டு டெட் மைமன்’  (Theodore Harold Ted Maiman) என்பவர் ஆவார். சிவப்பு இரத்தினக்கல் படிகத்தைக் கொண்டு கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வு மூலம் செறிவூட்டப்பட்ட ஒளிக்கற்றையான என்னை முதன் முதலில் ஒரு கருவியில் உருவாக்கி அதை வெற்றிகரமாக அவர் இயக்கிக் காட்டினார்! அந்நிகழ்வுதான் ஒரு குழந்தையாக உலகிற்கு நான் அறிமுகமான நாள்!


நான் முன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளேன்.


1. மின்சாரம் அல்லது ஒளி போன்ற ஒரு சக்தியளிக்கும் கலன். (Energy Source).
2. ஒரு செயற்கருவி. (An Active Medium). இக்கருவியில் உள்ள அணுக்கள் முதல் கருவி அளிக்கும் சக்தியை உறிஞ்சுக்கொள்ளூம்.
3. ஒரு ஆப்டிக்கல் உள்ளீடு. (An optical cavity) இவ்வமைப்பு, உள்ளீட்டினுள்ளே என்னைக் கட்டமைத்து, வெளியே சுற்றிலும் மூடியிருக்கும். (A structure enclosing the active medium)  


இப்போது 1. திட (Solid state), 2. திரவ (Liquid), 3 அறைக் கடத்தி (Semiconductor) 4. வளி (Gas), மற்றும் வேதியல் (Dye) எனப் பலவகைகளிலும் என்னை உருவாக்குகிறார்கள்.  

இன்னுமா என்னைத் தெரியவில்லை? புரிகிறது. என்னைத் தெரிந்து கொண்டீர்கள்.

-- L A S E R --

ஆனால் என்னைத் தமிழில் எவ்வாறு அழைக்கிறார்கள்? யோசியுங்களேன்!

'சீரொளி'! 

     

புதிர்: 


யிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்ட ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன? 

தேன் கூடு! 

No comments: