Monday, June 20, 2011

தனித் தெலுங்கானாவும் தீர்வும்


னித் தெலுங்கானா பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ராயலசீமா, கடலோர ஆந்திரா, தெலுங்கானா என்பவைகள் ஆந்திராவில் உள்ள முக்கியமான மூன்று பிராந்தியங்களாகும்.

பிரச்சினையைத் தீர்க்க நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியானது...

1. தற்போது இருப்பதைப் போலவே, ஆந்திரா ஒரே மாநிலமாக இருக்கலாம். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவருக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவி தரலாம்.

2. ஆந்திராவை சீமாந்தரா, தெலுங்கானா என, இரண்டு மாநிலங்களாக பிரிக்கலாம்.

3. தெலுங்கானா பிராந்திய கவுன்சிலை உருவாக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத்தை அரசு இயற்றலாம்.

4. ஆந்திராவை இரண்டாக பிரிக்கும்போது, ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்கலாம். இரண்டு புதிய மாநிலங்களுக்கும், தனித்தனி தலைநகரங்களை உருவாக்கலாம்.

5. ஆந்திரா, தெலுங்கானா என, இரண்டு மாநிலங்கள் உருவாக்கும் போது, ஐதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கலாம்.

6. ஆந்திராவை ராயல் - தெலுங்கானா, கடலோர ஆந்திரா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கலாம். அப்போது, ஐதராபாத்தை ராயல் தெலுங்கானாவின் தலைநகராக அறிவிக்கலாம்-என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இப்பரிந்துரைகளில் தனித் தெலுங்கானா ஆர்வலர்கள் விரும்பும் இரண்டாவதைத் தவிர மற்றவைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்க உதவுமே அதற்குத் தீர்வாக அமையாது என்பது தெளிவு. இத்ததீர்வு மற்ற இரு பிராந்தியங்களில் கலவர சூழலை உருவாக்கும் அபாயம் உள்ளது என்பதால் அக்கமிட்டி இரண்டவது பரிந்துரையை அமல் படுத்துவது தொடர்பாக ஆக்கபூர்வமான யோசனைகள் எதையும் முன் வைக்கவில்லை.

ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்களின் மனக்குறையைப் போக்கி தெனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். மத்திய அரசு உண்மையிலேயே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்பினால் இரண்டு ஆண்டுகளில் தனித் தெலுங்கானா மாகாணம் அமைக்கப்படும் என உடனடியாக அறிவிக்கலாம். மீதமுள்ள இரண்டு பிராந்தியங்களையும் இணைத்து சீமந்திரா என்பதைவிட ஆந்திரசீமா எனத் தனிமாநிலமாக அறிவிக்கலாம். அம் மாநிலத்திற்கு விஜயவாடாவைத் தலைநகராக்கலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒரு கணிசமான தொகையை ஒதுக்கி சண்டிகாரைப் போல் விஜயவாடாவையும் ஒரு அதிநவீன தலைநகராக உருவாக்கலாம். இது ஐதராபாத்தில் கணிசமாக முதலீடு செய்திருக்கும் ஆந்திரசீமா பகுதி மக்களின் மனபயத்தைப் போக்கி கலவர சூழலை ஒரளவு தணிக்க உதவும். 1953ல் சென்னை ராஜதானியிலிருந்து ஆந்திர மாநிலம் உருவானபொதும் இதே போன்ற தொரு பிரச்சினை சென்னை மாநகருக்காக வந்த போது அப்பொது ஐதராபாத் நகர்தான் பிரச்சினைக்குத் தீர்வானது.

பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், 1956ல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படாமல் ஐதராபாத் நிஜாமிடம் தனி ராஜ்யமாக இருந்த தெலுங்கான பகுதியை ஆந்திர மாநிலத்துடன் இணைப்பதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும், நேரு தெலுங்கானாவை அப்போதே தனி மாநிலமாக உருவாக்காமல் ஆந்திராவுடன் இணைத்ததற்கு மூலகாரணம், ஐதராபாத் மட்டுமே சென்னைக்குப் பதிலாக ஆந்திராவுக்கு ஒரு சரியான தலைநகராக இருக்க முடியும் என்பதால்தான். அதுதான் உண்மையாகி காலப்போக்கில் ஆந்திர மக்களை அமைதிப்படுத்தியது. மொழி ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் எண்ணையும் நீரும்போல் ஒன்று கலக்காமல் வேறுபட்டு இருந்த போதும், நாட்டின் ஒருமைப்பட்டுக்காக 60 ஆண்டு காலம் ஆந்திராவுடன் ஒன்று பட்டு நின்ற தெலுங்கானா பகுதி மக்களுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய தருணம் இது. அதே நேரம் ஆந்திர மக்களையும் அமைதிப்படுத்த வேண்டும். நிஜாம் காலத்தில் இருந்தே ஐதராபாத் தெலுங்கானா பகுதியின் தலைநகரம் என்பதாலும், இது அப்பிராந்தியத்தின் மையத்தில் இருப்பதாலும் தெலுங்கானா தனிமாநிலத்திற்கு ஐதராபாத்தைத் தலை நகராக்குவதே நியாயமும் பொருத்தமுமாகும். ம்த்திய அரசும் மாநில அரசும் இணைந்து ஒரு புது மணப்பெண்ணின் பொலிவில் விஜையவாடாவை சகல சௌபாக்கியங்களுடன் அலங்கரித்து ஆந்திரசீமா மாநிலத்துக்கு ஒப்படைப்பது ஒன்றே பிரச்சிணைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

1 comment:

Chittoor Murugesan said...

ஆந்திரா காரனா இருந்துக்கிட்டு நான் எழுதாத மேட்டரை நீங்க எழுதினதுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் உலகவங்கியே நிர்வாக செலவை குறைங்கடான்னு நிபந்தனை விதிக்கிற இந்த காலத்துல ரெண்டு கவர்னர்,ரெண்டு சி.எம், ரெண்டு மினிஸ்டரி தெண்டம்ங்ணா.

சொல்லனும்னா நிறைய மேட்டர் இருக்கு. எப்படியும் சென்டர்ல 2014 வரை தெலுங்கானா தரமாட்டாய்ங்க.

அவிகளுக்கு தேவை ராகுலை பி.எம் ஆக்க கை நிறைய எம்பிக்கள்.

அதனால 2014ல பேசறேன்