Friday, October 2, 2009

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும்

ஆதிமனிதனின் வாழ்க்கை முறை:

மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூற்றின்படி, ஆதிகாலத்தில் வாழ்ந்த ஆணும், பெண்ணும் இக்காலத்தவர்களைப் போல் அறிவோ, நாகரீகமோ உடையவர்கள் அல்ல என்றும், வரலாற்றுக் காலத்துக்கு முந்திய இவர்கள், மந்தை மந்தையாக வாழ்ந்த காலத்தில் கோஷ்டி திருமண முறையே நடை முறையில் இருந்ததென்றும், பின்னர் குடும்பம் குடும்பமாக வாழத் தலைப்பட்ட காலத்தில் தாய்வழிச் சமுதாயம் தோன்றியது என்றும் கூறுகின்றனர். இதன்படி ஒரு குடும்பத்தின் வயதில் மூத்த பெண்ணே அக்குடும்பத்திற்கு தலைவியாவாள் (Matriarchal order). அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகளையும், பேரக்குழந்தைகளையும் பேணிக்காப்பது அவள் கடமையாக இருந்தது. உணவும், பாலுறவும் பொதுவில் வைத்துப் பகிர்ந்து கொண்டனர். நாளடைவில் அக்குடும்பம் பல்கிப் பெருகி குலம் (Clan) என்றும், குலம் பெருகி இனக்குழுக்கள் என்றும் (Tribes) தோன்ற, இனமரபுக் குழுக்கள் தங்களுக்கென்று ஒரு பாரம்பரியத்தை ஏற்படுத்திக்கொண்டன. காலப் போக்கில் வாழ்விடத்திற்காவும், உணவுக்காவும், பெண்களுக்காகவும் இனக்குழுக்களுக்கிடையே போட்டி ஏற்படவே அவர்கள் தங்கள் இனக்குழுவைக் காக்கப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. பருவ வயது வரை ஆண் மகனைக் காப்பது குடும்பத் தலைவியின் பொறுப்பாகவும், அவனுக்கு பருவம் வந்ததும், அவன் தங்கள் இனக்குழுவைக் காக்க பிறகுழுக்களோடு போரிட வேண்டிய பொறுப்புள்ளவனாகவும் மாறினான். அதனால் அக்குழுவில் உள்ள அவனுக்கு விருப்பமான பெண்ணுடன் உறவு கொள்ள அவன் அனுமதிக்கப்பட்டான். அக்குழுவில் உள்ள பிற ஆண்களுடன் போட்டி என்று வரும் போது, வலிமையே தீர்ப்பு சொல்லியது. தீப்ஸ் மன்னன் ஓடிபஸ் எதிர்பாராவிதமாக தந்தையையே எதிர்த்துக் கொன்றுவிட்டு, தாயை மணந்ததாக கிரேக்க இதிகாசம் பேசுகின்றது.

அத்தினாபுரத்து அரசன் சந்தனு மகாராஜன் வேட்டைக்குப் போன இடத்தில், பரிமளகாந்தி, என்ற இளம் பெண்ணைக் கண்டதும் காதல் கொண்டான். மகன் பீஷ்மர் தந்தைக்காக மணம் பேச அவளிடம் சென்றபோது, அவள் பீஷ்மரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்தாள். பீஷ்மர், அரசாட்சியில் அவனுக்குள்ள உரிமைகள், ஆசைகள், கனவுகள் அனைத்தையும் அவளிடம் பணையம் வைத்து, தந்தைக்கு அவளை மணம் செய்துவித்ததாக இந்திய இதிகாசம் மகாபாரதம் பேசுகிறது. மண் மணத்திற்கும் குணாதிசயத்துக்கும் ஏதும் தொடர்பிருக்குமோ தெரியவில்லை.

தாய்வழிச் சமுதாயத்தில் ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்வது என்பது சர்வசாதரணம். புராணகாலத்தில் நமக்கு தெரிந்த ஒரு உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதை. நீலகிரியில் வாழும் தோடர்கள், கேரளத்தில் நாயர் இனத்தில் ஒருபிரிவினர் போன்றவர்களிடையே இன்றும் கூட அதன் பிரதிபலிப்பு இருக்கக் காணலாம். ஜவ்வாது மலையிலுள்ள பழங்குடியின மக்களி டையே இருக்கும் விசித்திரமான பழக்கம் திருமணத்திற்கு முன்பே ஆண்மகனுடன் மணப் பெண்ணை சேர்ந்து வாழ அனுமதிப்பது. ஒரு காலகட்டத்துக்குள் மணமகனுக்குப் பிடித்தால் திருமணம். இல்லையேல் அப்பெண் வேறு துணை தேட வேண்டியதுதான். இதற்கு அவர்கள் வெளிப்படையாகக் கூறும் காரணம் திருமணச் செலவு வீணாகிவிடக் கூடாது, பிறந்தகத்தை நினைத்து அவள் ஓடிவிடக்கூடாது என்று சொல்லப்பட்டாலும், இதன் அடிப்படைக் காரணம் பெண்கள் ஒழுக்கத்தைச் சோதிப்பதுதான்.

நாளடைவில் நாடோடிகளாயிருந்த இனக்குழுக்கள் ஒரே இடத்தில் தங்கி, அவனது வாழ்க்கை முறை, உணவு தேடுதல், வேட்டையாடுதல் என்றிருந்த நிலைமாறி விவசாயம் என்றானது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் கூட பெண்கள்தான். ஆண்கள் வேட்டையாடச் சென்ற நிலையில் அவர்கள் வசித்த இடத்தில் விளைந்த பயிர்களைப் பெண்கள் பயிரிட்டு தானியங்களையும், காய்

கறி, பழங்ககளையும் விளைவித்தார்கள். இதனால் மனித இனத்தில் ஆரம்ப கால நாகரீக வாழ்கையில், குடும்பம் என்பது சமுதாய அமைப்பின் அடிப்படை அலகு என்று ஆனது. அக்குடும்பம் சார்ந்திருந்த நிலபுலன்களும் பிறவும் அவனுக்கு சொந்த உடைமை என்று ஆகி, தாய்வழிச் சமுதாயம் தந்தைவழிச் சமுதாயமாக மாற்றங்கண்டது. அக்குடும்பத்தில் மணமாகாத பெண் அவனுக்கு மணவுறவு மூலம் மனைவி என்று ஆனபோது, அவளும் அவன் உடைமை ஆனாள். அவள் தாயான பிறகு, வீட்டொடு குழந்தைகளைப் பேணிப் பராமரிப்பவள் என்ற இரண்டாம் நிலைக்கு ஆண்களுக்கு உதவியாகத் தள்ளப்பட்டாள். அவன் கட்டிக்காத்த நில புலன்கள் தனக்குப் பிறகு தன் வாரிசுகளுக்கே சேரவேண்டும் என்ற அவனது ஆசை நியாயம் என்று ஆகி, அது அங்கீகரிக்கப்பட்டபோது (Legitimate), ஆண் அவனது மனைவியைக் கற்பு டையவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். அதுவே நாளடைவில் கற்பொழுக்கம் மனைவியாகப்பட்டவளுக்கு தாரக மந்திரம் என்ற பாரம்பரியத்தை ஏற்படுத்தியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாடு, காலத்தின் நியதிகளோடு ஆணாதிக்கம் ஆரம்பமாக வழிவகுத்த காலகட்டம் இதுதான்.

ஆனால் நாளடைவில் பெண்களுக்கு பலதரப்பட்ட கட்டுப்பாடுகளையும் கற்புநெறி முறைகளை யும் நியதிகளையும் உருவக்கிய ஆணாதிக்க சமுதாயம் தங்களுகென்றும் அதே போன்றதொரு நியதியை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் இப்போது பெண்ணியம் பற்றி எழுத வேண்டிய அவசியமோ, பேச வேண்டிய கட்டாயமோ இருந்திராது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு நியதியையும் ஆண்கள் சமூகம் தங்களுக்கென்று ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பல பெண்களுடனான அவன் உறவு மட்டும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்தது. அதை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான புதுப் புதுக் காரணங்களையும் அவன் தேட லானான். இதன் விளைவாக மனித சமூகத்தில் ஏற்பட்ட ஒரு புதிய பரிமாணம்தான் கணிகையர் குலம்!

அழகுதாசிகள் (ரூபஜீபா), பொதுமகள் (கும்பதாசிகள்), கணிகையர்கள் என்று வடமொழியிலும் காமக்கிழத்தியர், பரத்தையர், காமக்கன்னிகையர், தேவரடியாள் போன்ற பெயர்கள் தமிழிலும் அவர்கள் அழகு அந்தஸ்துக்குத் தகுந்தாற்போல் வழங்கப்படாலும், நாம் நாகரீகம் கருதி அவர்களைக் கணிகையர் என்றே பொதுவில் குறிப்பிடுவோம்.

கோவலன், கண்ணகி திருமணத்தில் 2000 கணிகையர் நேரில் வந்து வாழ்த்தியதாகச் சிலப்பதி காரம் சொல்கிறது. மணிமேகலையின் பெயர்சூட்டு விழாவிற்கு 1000 கணிகையர் வந்து வாழ்த்தியதாகச் செய்தி சொல்கிறது மணிமேகலை.

இந்தப் புதிய பரிமாணத்தால் ஏற்பட்ட தீங்கு அக்கணிகைப் பெண்களை மட்டும் பாதிக்கவில்லை. அவர்கள் வாரிசுகளையும் அதிகம் பாதித்தன. விதுரனைப் போல் அரசுரிமை இழந்த அரச குமாரர்கள் எத்தனையோ பேர் வரலாற்றில் இருக்கிறார்கள். விசித்திரவீரியனின் மூத்த மகனா யிருந்தும் அவன் தாய் அரச மரபினள் அல்ல என்ற காரணத்திற்காக கண் தெரியாத திருதிராஷ்டிரனுக்குக் கிடைத்த பாக்கியம், விதுரனுக்குக் கிடைக்கவில்லை. அரச சபையில் சகுனி, துரியோதணன் போன்றோர் விதுரனின் தாயை இழித்துப் பேசிப் பரிகாசிக்காத நாளே இல்லை எனலாம். அப்படிக் கூனிக் குறுக வைத்த ஒரு வாழ்க்கை அவனுக்கு. இதற்கு யார் காரணம். விதுரனா? அல்லது அவன் தாயா? இருவரும் அல்ல. அவன் தந்தைதான் காரணம்.

ஆனால் இதற்கு விதிவிலக்கானவர்களும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்தார்கள். மௌரிய மன்னன் பிந்துசாரன் அரசவைக்கு அவனது நாட்டின் வடஎல்லை நகரான தட்சசீலத்தில் பெருங் கலவரம் மூண்டிருப்பதாகத் தூதுவர்கள் வந்து தெரிவித்தனர். மன்னன், பட்டத்து இளவரசன் சுசிமாவை உடனே படைதிரட்டிச் சென்று கலவரத்தை அடக்க உத்தாரவிட்டான். ஆனால் அவனோ அந்தப்புரத்தில் பேடியைப் போல் பதுங்கி ஒளிந்து கொண்டான். ராஜகுமாரிகளுக்குப் பிறந்த ஏழு பேர் இளவரசர்களாய் இருந்தும் போர்க்களம் செல்ல யாரும் துணியவில்லை. கடைசியில் தள்ளாத வயதில் மன்னன் போருக்குப் புறப்பட ஆயத்தமானபோது, தர்மா என்ற கணிகைக்குப் பிறந்த அவரது எட்டாவது மகன் தந்தையே எனக்கு உத்தரவு கொடுங்கள். எதிரிகளை நான் வெற்றிவாகை சூடி வருகிறேன் என்று மன்னன் காலைப் பிடித்தான்! அதுவரை அவனை ஒதுக்கியே வைத்திருந்த மன்னன் வீரமே! உனக்குப் பெயர்தான் அசோகனா? என்று அவனை வாரியெடுத்து அணைத்து உள்ளம் நெகிழ்ந்து அவனைப் போருக்கு வழி அனுப்பி வைத்தான். அசோகரது வீரமும், தர்மமும் இன்று இந்திய அரசை வழி நடத்துகிறது! பிறப்பிற்கும் பெண் குலத்திற்கும் என்ன சம்மந்தம்? என்று கேட்க வைத்தவன் அசோகன்!

பசியும் தாகமும் போல், காமமும் இருபாலருக்கும் பொதுவகக் கருதப்பட வேண்டிய நிலையில், மனைவி மட்டும் பத்தினியாயிருக்க வேண்டும், பல பெண்கள் தொடர்பு கணவனின் உரிமை என்றும், அது அவனது ஆண்மையின் அடையாளம் என்ற ஆண்வர்கத்தின் இரட்டை அளவு கோல், இந்த மணஉறவின் அஸ்திவாரத்தையே தகர்த்து, ஒட்டு மொத்த அளவில் கணிகையர் குலம் என்ற ஒரு உப பொருளை (By Product) உற்பத்தி செய்ததுதான் பலன் என்கிறார் K .லட்சுமி ரகுராமய்யா (Author, Night Birds-Indian Prostitutes from Devadasis to call girls) என்ற நூலாசிரியர். இதற்கு அரசன் முதல் ஆண்டி வரை பலதார மணத்திற்கு கற்பித்துக் கொண்ட காரணங்கள் குழந்தை இன்மை, ஆண்வாரிசு போன்றவற்றைத்தான்.

விஞ்ஞான ரீதியில் ஆண் வாரிசு உருவாக கணவனின் உயிரணுக்களில் உள்ள XY குரொம சோம்களே காரணம். கருமுட்டையில் XX குரோமசோம்களைக் கொண்ட மனைவி எவ்விதத்தி லும் இதற்குக் காரணமாக மாட்டாள். இருந்தாலும் பழி என்னவோ பெண்கள் மீதுதான்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். பெண்களுக்கு இப்ப என்ன குறைச்சல்? ஆண்களுக்குச் சமமாக எல்லா வேலைகளுக்கும் பெண்கள் போகிறார்கள்! ஜனாதிபதியிலிருந்து பிரதமர், சபாநாயகர், மந்திரி, நீதிபதி, மாவட்ட ஆட்சியர், என்று அனைத்து பதவிகளுக்கும் ஆண்களுக்குப் போட்டியாக வந்து விட்டார்கள். பாரளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றில் 33%, உள்ளாட்சி மன்றங்களில் 50% என விரைவில் வரப்போகிறது. ராக்கெட்டில், விமானங்களில், சுழலிறக்கை விமானங்களில் என பெண்கள் பறந்து பறந்து சாதிக்கின்றார்கள்! பிறகென்ன பெண்ணியம் வேண்டிக் கிடக்கிறது? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். உருக்குலைந்த கோட்டையைக் கூட சரித்திரம் மறக்காது என்பார்கள். இத்தனை ஆண்டு காலம் அழுந்திக் கிடந்த நம் பெண்கள் நிலையைப் பற்றி வரலாற்றின் பக்கங்களை நாம் சற்றுப் புரட்டிப் பார்த்தால்தான் மேலே சொன்ன பதவிகள், பட்டங்கள் அதற்கு பரிகாரம் ஆகுமா என்ற உண்மை நமக்குத் தெரியவரும்.

இத்தனை ஆயிரம் ஆண்டு காலம் வாய்மூடி மௌனிகளாக்க இந்தக் கொடுமைகள் அத்தனையும் பெண்கள் சமூகம் எப்படிச் சகித்துக் கொண்டார்கள்? இந்த அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டார்கள் என்று கேட்கத் தோன்றும்.

சொல்லாத... சொல்லுக்கு... விலையேதும் இல்லை.என்ற கவிஞர் கண்ணதாசனின் அமருத்துவம் வாய்ந்த வரிகளுக்கு பொருள் விளங்கும். காலத்தைக் கண்ணாடி வழியே திரும்பிப் பார்ப்போமானால் இந்த உண்மைகள் தெரிய வரும்.

வரலாற்றில் பெண்கள் :

பண்டைக் காலங்களில் ஆணாதிக்கம் பெண்களை எவ்வளவு கீழ்த்தரமாக மதித்தது, அவர்களுக்கு உண்டான அடிப்படை கௌரவத்தைக் கூட மறுத்து நடத்தியது என்பதற்கு சில வரலாற்று சான்றுகள்தான் கீழே உள்ளவைகள்.

பாபிலோனிய சட்டப்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டால், கொன்ற வனுக்கு மரணதண்டனை வழங்குவதற்குப் பதில் அவன் மனைவிக்கு அத்தண்டனையை அளிக்கும் வழக்கம் பாபிலொனிய நாகரீகத்தில் இருந்தது.

கிரேக்க நாகரீகம் பெண்களை மனித குலத்தில் தாழ்ந்தவர்களாகத்தான் சித்தரிக்கிறது. ஏனெனில் ‘பண்டோராஎன்றழைக்கப்பட்ட கற்பனைப் பெண்ணே மனித குலத்திற்கு ஏற்படும் அத்தனை தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்ற அவர்கள் நம்பிக்கையே அத்தகைய எண்ணத்திற்கு அடிப்படைக் காரணம். எனவே பெண்களை அவர்கள் ஆண்களுக்கு அடிமைகள் என்று கருதினார் கள். ஒரு சில கால கட்டங்களில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டாலும், பாலியல் பலாத் காரமும், தகா ஒழுக்கமும் தலைவிரித்தாடின. நாடெங்கும் சோலோன்என்ற அரசு விபச்சார விடுதிகள் அமைத்து வரி வசூலித்தார்கள்.

ரோமானிய நாகரீகம் உன்னத நிலையை எட்டியிருந்த போதுகூட ஓர் ஆண்மகன் தனது மனைவியைக் கொலை செய்வதை உரிமையாகக் கொண்டிருந்தான். மன்னர்கள் இல்லாதா காலங்களில் அரண்மனைப் பெண்கள் கற்பைக்காக்கும் (Chastity Belt) கவசங்கள் அணிந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ரோமானியர்களின் மிகச் சாதாரண ரசிப்புத் தன்மைகளில் ஒன்று பெண்கள் நிர்வாணம்!

எகிப்திய மன்னர்கள் தங்கள் மனைவியை பிறர் பார்ப்பதையோ தொடுவதையோ விரும்ப மாட்டார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கு காரணமான ஆணின் நாக்கோ, கையோ துண்டிக்கப் படுவது வேறு விஷயம். அப்பெண்ணை ஒரு தீமையாகவும் சாத்தானின் சின்னமாகவும் கருதி அவளைச் சித்தரவதை செய்தார்கள். பிரமிடுகளுக்குக் கல் சுமக்கும் ஆண்களை ஊக்குவிக்க, பெண்களைக் கட்டாயப்படுத்தி முத்தமிட செய்தார்கள் என்றும், 20,000 கற்கள் வரை கொண்டு சேர்க்க நிர்பந்திக்கப்பட்ட இளவரசிகளும் உண்டு என்றும் வரலாறு கூறுகின்றது.

இந்தியாவில் வரலாறுக் காலம்:

மொகலாயர் காலத்திற்கு முன்புவரை கட்டுப்பாடற்ற சமூகமாக விளங்கிய கணிகையர் குலம் மொகலாயர் காலத்தில் அக்பர் போன்ற ஒரு சில மன்னர்கள் அவர்களை ஆதரித்தாலும் ஔரங்கசீப் போன்றவர்கள் கணிகையர் குலத்தை ஒழிப்பதில் தீவிரமாயிருந்தார்கள். இவை எல்லாமே தேவலை என்று சொல்லுமளவிற்கு பெண்களின் சுதந்திர உணர்வுகளுக்கு எதிராக இந்தியாவில் பல கொடிய பழக்கங்கள், வழக்கதில் இருந்தன. உடன் கட்டை ஏறுதல், பெண் சிசுக்கொலை, தேவதாசி முறை, இளம்வயதில் திருமணம், பலதாரமணம், கல்வி மறுப்பு போன்றவைகள் அவற்றில் சில.

உடன்கட்டை ஏறுதல்

இந்தியாவில் பெண்ணுக்கென்று தனியாக வாழ்வு கிடையாது. அவள் வாழ்வுக்கு ஆதாரம் கணவனே. அதனால் கணவனை இழந்த பெண்கள் வாழத்தகுதியற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல உடை, உணவு, அணிகலன்கள் போன்றவைகள் மறுக்கப்பட்டன. சுபநிகழ்ச்சிகளிலிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டார்கள். இவ்வாறு அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லாதது, கல்வியின்மை போன்றவற்றால் இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். கைம்பெண்கள், சமூகத்தால் தீண்டத்தகாதவர்களை விடக் கேவலமாக வாழ்ந்து வந்தனர். 1931ஆம் ஆண்டு புள்ளிவிவரக் கணக்குப்படி 5வயதுக்கு உட்பட்ட கைம்பெண்கள் கணக்கு 11880. 10 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை 97817. 10-15 வயதுக்குட்பட்ட விதவைகள் 232147. 15-20 வயதினர் 396162 பேர்கள்.

கணவனை இழந்தபின் இவ்வாறான வாழ்க்கைக் கொடுமைகளை அனுபவிக்காது தப்புவதற்கு ஒரு வழிமுறை அக்கால சமூகத்தில் இருந்தது. அக்கொடிய பழக்கமே உடன்கட்டை ஏறுவது. இதன்படி கணவன் இறந்த பிறகு, அவன் சிதையில் ஏறி அவனோடு உயிர்துறக்கும் முறைக்குப் பெயரே. உடன் கடை ஏறுவது. பெரும்பாலான பெண்கள் இவ்வாறு இழிந்த நிலையில் கைம்மை வாழ்வு வாழ்வதற்குப் பதில் உடன்கட்டை ஏறி வெந்து மடிவதே மேல் என்று பலர் துணிந்து உயிர் விட்டனர். பின்னாளில் வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் சில சமூகத்தவரிடையே மனைவி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உடன்கட்டை ஏறுவது கட்டாயம் என்ற நிலை உருவானது. தவிர உடன்கட்டை ஏறுமாறு பெண்களைத் தூண்ட, உடன்கட்டை ஏறும் பெண்கள் நேராக சொர்க்கம் புகுவார்கள் என்றும் அவர்கள் தெய்வமாக போற்றப்படுவார்கள் என்ற நம்பிக் கைகளும் காலப்போக்கில் வளர்ந்தன. இக்கொடிய முறையை ஒழித்த பெருமைக்குரிய இராஜாராம் மோகன்ராய்க்கும், அப்போதைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபுவுக்கும் பெண்கள் சமூகம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது. இந்த நாகரீக காலத்திலும் கூட நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருக்கும் இக்கொடிய பழக்கம் ஆங்காங்கே வெகு இரகசியமாக அரங்கேறுவதாகச் செய்திகள் வரத்தான் செய்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் 1987ம் ஆண்டு ரூப் கன்வர் என்ற 18 வயது படித்த ராஜபுத்திர இளமங்கை, தியோரலா என்ற கிராமத்தில் உடன் கட்டை ஏறியதாக வந்த செய்தி இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கியது. ஆதியில் ராஜஸ்தானில் உடன்கட்டை ஏறுவதற்கென்றே குறிப்பிட்ட இடங்கள் உண்டு. ஒரு மன்னனின் பல மனைவியர்கள் ஒரே இடத்தில் உடன்கட்டை ஏறியதாகக் கூட வரலாற்றுக் குறிப்புகள் இருகின்றன.

தமிழத்தில் கோபெருஞ்சோழன் சிதையில் அரசி கோபெருந்தேவி ஏறி உயிர் துறந்ததாகச் செய்திகள் உள்ளன. பிற்காலச் சோழர் வரலாற்றிலும் உடன்கட்டை ஏறியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், கர்ணபரம்பரைக் கதைகளில் ஒன்று முத்துப்பட்டன் கதை. வில்லிசைக் கலைஞர்கள் இன்றும் கூட இக்கதையைப் பாடக் கேட்கலாம்.

சாத்தியவான் முத்துப்பட்டன்... என்று பாடல் தொடங்குவதிலிருந்து, முத்துப்பட்டன் குணத்தை நம்மால் யூகித்துக் கொள்ள முடியும். அவனது இந்தக் குணத்தால் ஏழு தமையன்மாரோடு ஒத்துப் போக முடியாததால் வீட்டை விட்டு வெளியேறி கொட்டாரக்கரை சிற்றரசனிடம் சேவகத்தில் சேர்ந்தான். வருடங்கள் சென்றன. தந்தையின் வற்புறுத்தலின் பேரில் சகோதரர்கள் முத்துப் பட்டனைப் பல இடங்களிலும் தேடிக் கடைசியில் அவன் இருக்குமிடம் வந்தடைந்தனர். தந்தையின் அழைப்பை ஏற்று முத்துப்பட்டன் ஊர் திரும்பச் சம்மதித்தான். அச்சன்கோவில், ஆரியங்காவு வழியே அவர்கள் ஊர் திரும்புகையில், ஒரு அரசடித் துறையில் நீர் அருந்த இறங்கினான் முத்துப்பட்டன். அவனுக்குப் பின்னாலிருந்து இனிய நாட்டுப் பாடலொன்று காற்றில் கலந்து வந்து அவன் செவி வழியாக உள்ளத்தில் நுழைந்தது. திரும்பிப் பார்த்தான்.

பசுக் கிடையிலிருக்கும் தந்தைக்கு ஓலைப் பெட்டியில் சோறு கொண்டு போகும் வழியில், தண்ணிர் குடிக்க ஆற்றங்கரைக்கு வந்த அழகிகள் இருவரை அங்கு கண்டான் முத்துப்பட்டன். இனந் தெரியாமல் ஏங்கிய முத்துப்பட்டன் மனம் அவர்களைக் கண்டதும் காதல் கொண்டது. வனத்தில் சுற்றி சுற்றி ஓடிவந்து கன்னியர் இருவரையும் வழிமறித்து அவர்களிடம் அவன் தன் காதலைக் கூற, அவர்களோ,

சாம்பசிவ நாதர் போலிருக்கின்றீர் சாமி

சக்கிலிச்சி நாங்கள் தீண்டப் பொறுக்குமோ பூமி?

என்று கூறிவிட்டு அவனிடமிருந்து தப்பி காட்டு வழியில் ஓடிவிட்டனர் அப்பெண்கள். முத்துப்பட்டன் மயங்கி விழுந்தான்.

மந்தையில் சேதி கேட்ட அப்பெண்களின் தந்தை வாலப்பகடை கொதித்தெழுந்தான். தன் பெண் களைச் சீண்டியவன் கதையை முடித்து விட்டுத்தான் வேறுவேலை என்ற ஆவேசத்தோடு மாடு அறுக்கும் அரிவாளை எடுத்துக் கொண்டு அரசடித் துறைக்கு ஓடி வந்தான். அங்கு புழுதியில் புரண்டு அப்பெண்களை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்த முத்துப்பட்டன் நிலையைக் கண்டு மனம் மாறினான். காதலில் முத்துப்பட்டன் உறுதியைக் கண்டு திகைத்தான். கடைசியில் 30 நாட்கள் அவர்கள் சக்கிலிக்குடியில் தங்கி, அவர்கள் குலவழக்கப்படி வாழ்ந்து காட்டினால், பெண்களை மணமுடித்து தருவதாக வாக்களித்தான் வாலப்பகடை.

அண்ணன்மார்களிடம் திரும்ப வந்த முத்துப்பட்டன் நடந்ததைக் கூறுகிறான். அவர்கள் அவனுக்கு புத்திமதி சொன்னார்கள். அவர்கள் தந்தை அவனுக்கு பார்த்து வைத்திருக்கும் பெண்ணைப் பற்றிய அழகு அந்தஸ்தை எடுத்துச் சொன்னார்கள். தாழ்ந்த சாதிப் பெண்ணை மணந்து மாடுமேய்த்து, செத்தமாடு அறுத்து வாழ்வது தற்கொலைக்குச் சமம் என்றார்கள். முத்துப்பட்டன் பதிலுக்கு சாதீயத்தை எதிர்த்துப் பேசினான். கீழ் சாதியின் இழிந்த நிலைக்கு காரணம் மேல் சாதிகாரர்கள்தான் என்றான். கடைசியில் முத்துப்பட்டனோடு விவாதிப்பதில் பயனில்லை என்று கண்ட சகோதரர்கள், அவனை ஒரு குகைக்குள் தள்ளி பறாங்கல்லை வைத்து மூடி, அவனை உயிரோடு சமாதி ஆக்கிவிட்டு ஊர் திரும்பினார்கள்.

சில நாள் முயற்சியில் குகையிலிருந்து தந்திரமாகத் தப்பிய முத்துப்பட்டன், வாலப்பகடையிடம் திரும்பி வந்தான். அவன் கூறிய நிபந்தனைப்படி 30 நாட்களும் மாடு மேய்த்து, செத்தமாடு அறுத்து, செருப்பு தைத்து, அவற்றைச் சந்தையில் விற்று வந்து, அவன் சத்தியவந்தனாய் நடந்து மணப்பந்தலில் கன்னியர் இருவரையும் மாலையிட்டு மணந்து கொண்டான்.

அன்றிரவில், திம்மக்கா மடியில் தலையையும், பொம்மக்கா மடியில் காலையும் வைத்து முத்துப்பட்டன் படுத்திருக்க, பெண்கள் இருவரும் அவனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்க, கதவு தட்டப்படவே, எழுந்து சென்று கதவைத் திறந்தான் முத்துப்பட்டன். வாசலில் மந்தையைக் காக்கும் பகடைச் சிறுவன் இரத்தம் சொட்ட வந்து நின்றான். அவன் மூலம் கள்வர்கள் மந்தையி லிருக்கும் மாடுகளை ஓட்டிச் செல்ல வந்திருப்பதை அறிந்தான். வாளையும், தடியையும் எடுத்துக் கொண்டு மனைவியர் தடுத்தும் கேளாமல் மந்தைக்கு விரைந்தான். கள்வர்களோடு போரிட்டுப் பத்துப் பேரைக் கொன்றான். ஒருவன் தப்பி ஓடிவிட்டான். கைகளைக் கழுவ ஓடைக்குச் சென்று குனிந்த போது, தப்பி ஓடியவன் திரும்ப வந்து முத்துப்பட்டன் முதுகில் கத்தியால் குத்திவிட, குத்திய கள்வனையும் வாளால் வெட்டி வீழ்த்தி விட்டு முத்துப்பட்டன் சரிந்தான்.

முத்துப்பட்டனோடு சென்ற நாய் மட்டும் திரும்பி வரவே, நாயைத் திரும்ப அழைத்துக் கொண்டு அதைப்பின் தொடர்ந்து ஓடி வந்த பொம்மக்கா, திம்மக்கா இருவரும் கணவன் ஓடைக்கரையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.

முகத்தோடே முகம் வைத்து முத்தமிட்டுக் கொண்டழுதார்,

நாலு கழியலையே நாதா நீர் கூடலையே, .......

தாலி கொண்டு வந்த தட்டானும் போகலையே,

கொட்டி பறையனுக்குக் கொத்துக் கொடுக்கலையே,

கோண மணவறையில் குந்த வைத்த தோஷமுண்டு

வட்ட மணவறையில் வந்திருந்த தோஷமுண்டு,

பொருந்தி இருந்தோமா, பிள்ளைகளைப் பெற்றோமா

பனியாரம் சுட்ட சட்டி, பாதி மணம் போகலையே,

பந்தல் பிரிக்கலையே, வந்த சனம் போகலையே,

எம் கணவா எம் கணவா இந்த விதி வருவானேன். என்று அழுது புரண்டு கடைசியில் பட்டன் உடலை இலைகளைக் கொண்டு மூடிவிட்டு, சிங்கம்பட்டி மன்னனிடம் வந்து

கள்வரோடு யுத்தம் செய்து எம் கணவரும் மாண்டுபோனார்.

வள்ளலின் பாதம் சேர வரம் தரவேணும்.

என்று சொல்ல மன்னனோ, இதற்கு ஏன் நீங்கள் தீக்குளிக்க வேண்டும்? என்று கேட்டுவிட்டுத் தன் அரண்மனையில் கவலையில்லாமல் தம் மனைவிமாரோடு வாழ அழைத்தான்.

மங்கிலியப் பெண்கள் எம்மை நகைப்பாரே!

வாலைப்பகடை நம்மை இதற்கோ வருந்திப் பெற்றான்?

சங்கடத்தைப் பார்ப்பதற்கோ, சண்டாளி போய்வாரோம்.

என்று சொல்லித் திரும்பினார்கள். மன்னன் மனமிளகி அவர்களை அழைத்து, தீப்பாய அனுமத்தித்தான். சந்தனக்கட்டை அடுக்கி பூப்பந்தல் போட்டுக் கொடுத்தான். பட்டன் உடல் தகனமாக, அவன் இருமனைவியரும் தீக்குளித்து உயிர் விட்டார்கள். வானத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்து வாழ்த்தினார்கள் என்று கதை முடிகிறது.

திருச்செந்தூர் சுற்றுக் கிராமங்களில் இன்றும் பொம்மக்கா, திம்மக்கா இருவருக்கும் கோயில் எடுத்து வழிபாடு நடக்கிறது. இதிலிருந்து தமிழகத்தில் சமுதாயத்தின் கீழ்தட்டு மக்களிடம் கூட உடன் கட்டை ஏறும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது தெரிகின்றது.

இக்கதை இறுதியாகப் பெண்களுக்கு உபதேசிக்கும் கருத்து பதிபக்தி! கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று வாழ்வின் எந்த நிலையிலும் அவர்கள் அதைப் போற்றிப் பேண வேண்டும். கணவனே கண்கண்ட தெய்வம் என்று எந்த தியாகத்துக்கும் தயாராகி மடிந்து மண்ணாகி விட வேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்திக் கூறுகிறது. இம் மன்னன் மனுநீதி காப்பவனாயிருந்தால் கீழ்சாதிப்பெண் என்றும் பாராமல் அரண்மனைக்கு அப்பெண்களை அழைத்த வன், அவனது இரண்டு வீரர்களுக்கு பூப்பந்தல் போட்டு அப்பெண்களை மணமுடித்து வைத்திருந்தால் பென்டிங் பிரபுவுக்கு சமமாக பெண்ணியம் அவனைப் போற்றிப் பாராட்டியிருக்கும். வாழ்த்தியிருக்கும். வரலாற்றில் அவன் பெயர் அழியாப் புகழ் பெற்றிருக்கும்.

கி.பி 1800களின் முற்பகுதியில் வெள்ளையர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 700 பேர் உடன் கட்டை ஏறியதாக ஆங்கில அரசாங்கப் புள்ளி விவரக் கணக்கு தெரிவிக்கின்றது. பெண்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் அறிவுக்கும் கொடுக்கப்பட்ட மிகத் தாழ்வான, கேவலமான மதிப்பையும், அவர்களை மனிதர்கள் என்று கூட மதிக்காத அக்கால சமூக நிலையையுமே இப்புள்ளி விவரம் படம் பிடித்துக் காட்டுகின்றது.

இந்திய சமூகங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த அடுத்த மிகப் பெரிய கொடுமை தேவதாசி முறை.

தேவதாசி முறை

ஒழுக்கம், கற்பு என்னும் கருத்துக்களில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற ஒரு தலைப்பட்ட நீதி வழக்கிலிருப்பதை வெளிப்படையாகக் காட்டும் நிறுவனமே தேவதாசி முறையாகும். இது ஆண்களின் வசதிக்காகவும், அவர்களின் இச்சையை அவர்கள் விருப்பப்படி பூர்த்தி செய்யவும், பெண்கள் சமூகத்தை மூளைச்சலவை செய்து ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடிய திட்டமாகும். பொட்டுக் கட்டுதல் என்ற பெயரில் பெண்களின் பலகீணமான பொருளாதார நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட அநீதியாகும்.

இம்முறையின்படி சமூகத்தில் சில பெண்கள் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக தானம் செய்யப்பட்டனர். அவர்கள் தம் வாழ்க்கையில் விலை மகளிராகத் தொழில் புரிந்தனர். மதத்தின் பெயரால் அப்பெண்கள் பலியாடாக ஆக்கப்பட்டனர். ஆடல் பாடலுக் கென்றும், பூசைகள் செய்ய ஒத்தாசைக்கென்றும், கடவுளுக்குச் சேவை செய்ய என்றும் அப்பெண்கள் கோவில்களுக்குத் தானம் செய்யப் பட்டனர். குடும்பத்தில் இடர்பாடு வரும்போது அது நீங்குவதற்காகவும், குழந்தை பிறக்காத குடும்பத்தில் குழந்தை பிறந்தால் நேர்திக் கடன் என்றும், ஆண் வாரிசுகள் இல்லாத குடும்பங்களில் வருமானத்திற்காகவும், பிற பொருளாதார சிக்கல்களுக்காகவும் பெண்கள் அவ்வூர் கோவில் தெய்வங்கள் பெயரில் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டனர். இன்னும் சில குடும்பங் களில் முதல் குழந்தை பெண் என்றால் அது கோவிலுக்கே என்று, உயில்கள் முலமாக சாசனம் செய்திருந்தனர். அக்கோவிலின் கடவுளை மணந்து கொண்டு, பூசைக்காலங்கள், திருவிழாக்கள் முதலிய சமயங்களில் இறைவனை ஆடல் பாடல்களால் மகிழ்வித்து வாழ்க்கை நடத்தினர். நடை முறையில் அவர்கள் அக்கோவில் பூசாரிகள், அவ்வூர் தனவந்தர்கள், மற்றும் பலருக்கும் இன்பமளிக்கும் விலைமாதர்களாவே வாழ்க்கையை நடத்தினர். பெண்ணைப் பெற்றவர்களோ மறைமுகமாக அச்செல்வந்தர்களிடம் இருந்து பொன், பொருள் நிலபுலன்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்தியப் பெண்களுக்கு அவர்கள் கணவன்மார்கள்தான் வாழ்வாதாரம். கணவன் இறந்தபின் மனைவிகள் வாழ்வதே வீண்! என்ற கருத்தாக்கம் வலிமை பெற்று விளங்கியது என்று முன்னரே பார்த்தோம். அதனால் நித்திய சுமங்கலிகள் பெரும் பேறு பெற்றவளாகக் கருதப்பட்டாள். அதனால் தேவதாசிகள் கடவுளைக் கணவனாக வாய்க்கப் பெற்றவர்களாதலால் அவர்கள் வாழ்வில் ஒருபோதும் கைம்மை நிலையை அடைய மாட்டார்கள். அதனால் இப்பெண்கள் ஒரு சில இடங்களில் உயர்வாகவும், கற்புநெறி தவறியதற்காக இப்பெண்டிர் சில இடங்களில் இழிவாகவும் கருதப்பட்டனர். இவ்வாறு அவர்கள் வாழ்க்கை சில முரண்பட்ட கூறுகளை கொண்டு விளங்கியது. தேவாரடியாள் என்ற வார்த்தை மூலம் தெய்வத்திற்கு அடிமையானவள் என்று கருதப்பட்டவள், பின்னாளில் தேவடியாள் என்று அவர்கள் இழிநிலையைக் குறிப்பதற்காகவும் அந்த வார்த்தை மாறியது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் இம்முறையின் கேடுகளை மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்சியை ஊட்டினார். பின்னர் அவர் 1929ல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சென்னை மாகாணத்தில் இவ்வழக்கத்தை ஒழித்துச் சட்டம் கொண்டு வர உறுதுணையாயிருந்தார்.

பெண் சிசுக்கொலை:

மேற்சொன்னவைகள் அல்லாமல் பெண்ணினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளான பலதார மணம், பெண்களுக்குக் கல்வி மறுப்பு, பெண்களைத் தனிமைப் படுத்துதல், இளவயதுத் திருமணம், கைமை அடைதல், என்பவைகளோடு வட இந்தியாவில் நிலவிய மற்றொரு சமூக கொடுமை பருவ வயதை எட்டுவதற்கு முன் பெண்ணை மணமுடித்துவிட வேண்டும் என்ற மூடப்பழக்கம். இதைப் போன்ற சமூக நியதிகளுக்காகவும், வரதட்சனைக் கொடுமையாலும், பெண்களுக்கு மணமுடிக்க முடியாத நிலையில் இருந்த பல பெற்றொர்கள் பெண்களைச் சுமையாகக் கருதினர். எனவே அவ்வாறான சமுதாயங்களில் பெண் சிசுக்கொலைகள் சர்வசாதாரணமாக அரங்கேறின. உத்திரப் பிரதேசம், இராஜஸ்தான், பஞ்சாப் குஜராத் முதலிய இடங்களில் பெண் சிசுக்கொலைகள் மிக அதிகம் காணப்பட்டன என்று ஆங்கில அரசின் நிர்வாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இம்மாநிலங்களில் 10,000 மக்கள் தொகை கொண்ட பல ஊர்களில் பெண்குழந்தைகளே இல்லை என்ற நிலை இருந்ததை அப்புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

உயர் நிலையிலிருந்த சமுதாயங்களில் கூட, பெண்களின் நிலை பற்றிய சமூக பதிப்பீடுகள் எவ்வாறு இருந்தது என்பதைக் கிழ்கண்ட பழக்க வழக்கங்களினால் அறிந்து கொள்ளலாம்.

ஒரு சமஸ்கிருத சுலோகம் (Aditi bhava devo) அதிதிகளைக் கடவுளுக்குச் சமமாகப் பாவித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்கிறது. அதோடு வந்த விருந்தினர் மனைவியைக் கேட்டாலும் முகம் சுழிக்காமல் கொடுக்க வேண்டும் என்கிறது. இப்பழக்கம் இன்றும் கூட எஸ்கிமோக்களிடம் வழக்கத்தில் உள்ளது.

அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி முழுப்பொண்டாட்டி போன்ற கிராமப்புற வழக்குச் சொற்கள் குடும்பத்திற்குள் பெண்களின் இம்சைகளைச் சித்தரிக்கும் வார்த்தைகளாகும். இதனால் தான் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்து வோம். என்று பாரதி முழங்கினான் போலும்.

கௌடில்யரின் அர்த்த சாஸ்த்திரம், கணிகையரை எப்படி எல்லாம் அரசாங்க உளவுத்துறைக்குப் பயன்படுத்தாலாம் என்று விலாவரியாக விளக்குவதோடு அரசு பராமரிப்பில் அவர்களை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

மொத்தத்தில் ஆணின் பாலியல் பிறழ்வுகள் அவர்களின் சாதனைப்பட்டியலில் சேர்ந்து விடு கின்றது. பெண்ணீன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அவளது வாழ்வை முற்றாக அழிக்கும் ஆயுதமாகி விடுகிறது என்பதே உண்மை. விதி விலக்காக தமிழ்க் காப்பியங்களில் சொல்வது போல் மாதவி, மணிமேகலை போன்ற ஒரு சிலரே அவர்கள் வாழ்க்கை நெறியைப் பின்பற்றிய விதம் காரணமாக ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்று பெண்ணின் உயர்வு பற்றிக் கூறிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாக்கை மெய்பித்தார்கள்.

பெண்ணியம்:

பெண்ணைக் குறிக்கும் Femina என்ற இலத்தீன் மொழிச் சொல், ஆங்கிலத்தில் Feminism என்றாகி அங்கிருந்து தமிழில் பெண்ணியம் என்ற சொல்லாக மலர்ந்துள்ளது.

பெண் என்ற சொல் பெண்களுக்குறிய இயல்புகளை உடையவள் என்று பொருள்படும். பெண்ணியம் என்றசொல், பாலின சமத்துவக் கோட்பாடுகளையும், பெண்ணுரிமைக்காகப் போராடும் இயங்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது.

பெண்ணியம் தொடங்கிய காலமாகிய 17ம் நூற்றாண்டில் இந்தச் சொல் கொண்டிருந்த கருத்துக்கும் இன்றைய கருத்துக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. அதே போல் ஒரு நாட்டிலுள்ள பெண்ணியம் பற்றிய கருத்துக்கும் வேறு நாட்டினர் கருத்துக்கும் மாறுபாடு உண்டு. ஒரு இனத்தவர் அல்லது பிரிவினர் கருதும் பெண்ணியத்துக்கும் மற்ற பிரிவினர் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கும். எனவே பெண்ணியத்திற்கு உலகின் அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும் படியானதாகவோ, முக்காலத்திற்கும் உரியதாகவோ ஒரு விளக்காத்தைக் கொடுக்க முடியாது. இதன் விளக்கம் ஒரு சமுதாயத்தின் வரலாறு, பண்பாடு, இவற்றைப் பற்றிய உணர்வு, நோக்கு, செயல் இவைகளைப் பொறுத்து மாறுபடும்.

பொதுவில் தெற்காசிய நாடுகளில் பெண்ணியம் என்பதற்கு அலுவல்களிலும், வீட்டினுள்ளேயும் பெண்கள் நசுக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்ச்சியும், அந்நிலையை மாற்றி அமைக்க ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயற்படும் முயற்சிகளும் என்ற விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

இதனையே புட்சர் என்பவர் பெண்ணியம் என்பது, பெண்கள் பாலின பாகுபாடால் அனுபவிக்கும் தனிப்பட்ட பொருளாதார துன்பங்களை எதிர்த்து மேற்கொள்ளும் இயக்கமே என்கிறார். பெண்ணி யம் பெண்கள் அனுபவிக்கும் எல்லாவிதமான அடக்கு முறைகளையும் எதிர்ப்பது மட்டுமின்றி பெண்களின் மேம்பாட்டிற்குரிய வழிமுறைகளையும் செயற்படுத்துகிறது.

இப்பிரச்சினையை நாம் அணுகும் போது, பெண்ணியவாதிகள் ஆண்களை வெறுப்பவர்கள் என்று பொருளல்ல. ஆண் நாயகத்தையும், ஆணாதிக்கத்தையும், ஆண் என்னும் அகம்பாவத்தையும் மட்டுமே எதிர்ப்பவர்கள். ஏனெனில் இத்தன்மைகள்தான் ஆண் மேலாதிக்கத்திற்கு வித்திட்டு அவர்களை சுயநலவாதிகளாகவும், ஆக்கிரமிப்பாளர்களாகவும் கொடுமையாளர்களாவும் அவர் களை அடையாளம் காட்டுகின்றது. பெண்களைத் தங்கள் சொத்து எனக்கருதி செயல்படுகின்ற ஆண்கள்தான் பெண்ணியத்திற்கு எதிரிகளாகின்றனர்.

ஏனெனில் காமம் என்பது உயிரியல் தொடர்பிலான ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான ஒரு இச்சை. ஆரம்ப காலத்தில் இருந்த ஒரு சில சட்டங்களின் படி (Manusmriti, ves 366, ch.viii) மணபந்தத்திற்கு வெளியே ஒரு ஆண் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளுடன் உறவு கொண்டு விட்டால், அது அவனைப் பொருத்தவரை அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அவனுக்கு தண்டனை கிடையாது. மாறாக அவள் மணமாகாதவள் என்றால் அவள் தந்தை அல்லது சகோதரனின் சொத்து என்ற வகையிலும், மணமானவள் என்றால் கணவனின் சொத்து என்ற வகையிலும்தான் (Violation of the property right) சொத்துரிமை பறிக்கப்பட்ட அடிப்படையில்தான் சட்டம் அவனைத் தண்டித்தது.

அதோடு பாலியல் பாகுபட்டினால் ஆண்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் ஏராளமானவை. மேலான சமூக மதிப்பு, அன்பு, மரியாதை, சிறந்த உணவு, மருத்துவ வசதி, வெளியுலக வாழ்க்கையில் சுதந்திரம், எதையும் முடிவு செய்தல் என்று அனைத்து வகைகளிலும் ஆணாகப் பிறந்த காரணத்தினாலேயே அவனுக்கு எதிலும் முன்னுரிமை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்க நேர்ந்தால் ஆண்கள் அனுபவித்துவரும் உரிமைகளை இழக்க வேண்டி வரும். என்வேதான் பெண்கள் வீட்டோடு இருந்தால் போதும். போட்டியாக வீதிக்கு வரவேண்டாம் என ஆண்கள் சமூகம் அச்சம் கொள்கிறது. இந்தியப் பாராளுமன்றதிற்கும், சட்டசபைக்கும் மக்கள் பிரதிநிதித்துவத்தில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய அரசியல்வாதிகள் ஏன் முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

பெண்ணியம் ஆண் பெண் உறவுகளில் மாற்றத்தை விரும்புகிறது. அதுவும் குடும்ப உறவுகள் தந்தை-மகள், கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை அக்காள்-தம்பி, தாய்-மகன் என்ற அடிப்படையிலிருந்து அந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

அடுத்ததாக பெண்ணியம் எல்லாவிதமான பாகுபாடுகளையும் நீக்கி நேர்மையான, ஆண்களுக்கு சமமான பொருளாதார அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. அதனால் ஆண்களுக்கு ஏற்படும் இழப்புகளும், அதைக்குறித்து ஏற்படும் அச்சமும் இருந்தாலும், பல வழிகளில் இதனால் ஆண்களுக்கு லாபமும் இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு இயற்கையாக அமையப் பெற்றிருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தி, தாமாக சிந்தித்து தற்சார்புடன் வாழ்வர். இதனால் குடும்ப நிலையிலும் சமூகத்திலும் மனித ஆற்றலும் அதன் பயனும் பெருகும். ஆண்களுக்கும் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் இருக்காது. அதோடு பெண்ணியம் என்பது பெண்களுக்கு மாட்டும் சமத்துவம் கேட்கவில்லை. சமத்துவம் உள்ள சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே பெண்ணியத்தின் லட்சியம்.

பெண்யத்தின் தோற்றமும் வளர்ச்சியும்:

மேலை நாடுகளில் பெண்ணியத்தின் தோற்றம்:

18-ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த சமூக மதிப்பீடுகள் அனைத்தும் சமய சார்புடையன. வாழ்க்கையின் அனைத்து நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் சமயத்தின் அங்கீகாரம் பெற்றே

வாழ்க்கையின் நியதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. சமுதாயத்தில் மதம் முழு ஆதிக்கம் செலுத்தியது எனலாம். சமூகத்தில் நிலவிவந்த தீமைகளும் மதத்தின் அங்கீகாரத்தோடும் சமூகக்

கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது என்ற கொள்கையோடும் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வந்தன.

இந்நிலையில் ஐரோப்பிய சமுதாயத்தில் சில மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன. அங்கு புதுமைக் கருத்துக்கள் பல தோன்றி மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தின. இதற்கு அடி கோலியவை அங்கு மலர்ந்த தர்க்க அறிவுக் காலமாகும். இதனால் எதையும் பகுத்தறிந்து தெளிந்து (age of reason/age of enlightenment) உண்மை எனத் தெரிந்தவற்றையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பரவ ஆரம்பித்தது. இதன் விளைவாக உலக வாழ்க்கையின் கூறுகள் அனைத்தும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. உண்மைக்குப் புறம்பான சமூக ஏற்றத் தாழ்வுகள், மத ஆதிக்கம் போன்றவைகளும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன. அதன் விளைவாக சம்த்துவம், தனிமனித சுதந்திரம், குடியாட்சி, எல்லோருக்கும் ஒரே நியதி என்ற புதிய சமூக மதிப்பீடுகள் உருவாகத் தொடங்கின.

இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் விளைவாக பிரஞ்சுப் புரட்சியும் அமெரிக்க சுதந்திரப் போரும் ஏற்பட்டு, ரூசோ, வால்டர், டிடராட் போன்ற பிரஞ்சு எழுத்தாளகளின் தாக்கமும், தாமஸ் பைன் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய மனித உரிமைகள் என்ற நூலும், இக்கருத்துக் களுக்கு மேலும் வலுவூட்டின. பிரான்சில் பெண்ணியத்திற்கு அடிப்படையான சமத்துவம், சுதந்திரம் போன்ற கருத்துக்கள் முதலில் தோன்றினாலும், அவைகள் பெண்ணிய இயக்கமாகப் பரிமளித்தது, இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும்தான்.

இதன் பலனாக ஏற்பட்ட முதல் மாற்றம் பெண்களுக்குக் கிடைத்த கல்வி அறிவு. பெண்கல்வி என்பது அதுவரை ஐரொப்பிய நாடுகளில் உயர்குடிமக்களின் அலங்காரச் சாதனமாகவே கருதப்பட்டு வந்தது. அமெரிக்காவில் எவாஞ்சலிக இயக்கத்தின் மூலம் சமூக ஒழுக்கச் சீர்திருத்த நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபட்ட பொழுது, கல்வி அவர்களுக்கு தேவையான ஒன்றாகக் கருதப்பட்டது. எனவே 1830 முதல் அங்கு பெண்களுக்காகத் தனிக் கல்விக்கூடங்கள் நிறுவப் பட்டன.

1848ல் செனாகாபால்ஸ் என்ற இடத்தில் கூடிய மகளிர் பேரவையில் பெண்கள் உரிமைகளைப் பற்றி விவாதித்து, எலிசபத் காடி ஷான்டர் என்பவரால் பெண்களின் உரிமை அறிவிப்பு (Declaration of the Rights of Women) என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது பெண்ணிய கருத்துக்களுக்கு அடிப்படையாக அமைந்தது. பின்னர் இதே இடத்தில்தான் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கையும் தீர்மானமாக எலிசபத் காடி ஸ்டாண்டன் என்பவரால் கொண்டுவரப்பட்டது. ஆனால் வேறு சில பிரச்சினைகள் காரணமாய் இத் தீர்மானம் நிறைவேறவில்லை. பின்னர் இவர் சூசன் அந்தோணி என்பவருடன் இணைந்து நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே முதலில் பஞ்சாயத்து அமைப்புகளிலும் பிற்பாடு மாகாண, பாராளுமன்ற அமைப்புகளிலும் படிப்படியாக பெண்கள் வாக்குரிமை பெற்றர்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயப் பெண்மணிகளான அன்னிபெசண்ட், மார்கரட் கசின்ஸ், டோரதி ஜினராஜதாசா முதலியோர் இந்தியப் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினர். இங்கிலாந்துப் பெண்களிடையே வாக்குரிமைக் கோரிக்கை வலுப்பெற்ற காலத்தில் இவர்கள் அங்கு அப் போராட்டங்களில் பங்கு பெற்றிருந்த காரணத்தினால், இங்குள்ளவர்களுக்கு அதன் தாக்கத்தை இவர்களால் ஏற்படுத்த முடிந்தது. சரோஜினி நாயுடுவைத் தலைவியாகக் கொண்ட 18 இந்தியப் பெண்களும் 4 ஐரோப்பிய பெண்களும் கொண்ட ஒரு குழு, ஆண்களுக்குச் சமமாக வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கையை 1917ல் மாண்டேகு பிரபுவிடம் கொடுத்தனர். இக்கோரிக்கையை முதலில் இந்தியத் தலைவர்கள் ஆதரிக்கவில்லை. ஆனாலும் சுதந்திரப் போராட்டத்திலும், சமூக சீர்திருத்தத்திலும் பெண்கள் பங்களிப்பு அவசியம் என உணர்ந்த அவர்கள், பின்னர் இதற்கு ஆதரவளித்தனர். இதன் பயனாக 1923ல் ராஜ்காட் மாநிலத்திலும் அதைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தன.

முதல் உலகப்போரும் ஓட்டுரிமைப் போராட்டமும் பெண்களில் நிலையில் பல மாறுதல்களை உண்டாக்கின. அதைத் தொடர்ந்த பொருளாதார தேக்க நிலையும், பின்னர் இரண்டாம் உலகப் போரும் அவர்கள் பொருளாதார அரசியல் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தன. 1945க்குப் பின் ஏற்பட்ட மாறுபட்ட சூழ்நிலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப் பெண்கள் உழைப்பும் தேவைப்பட்ட போதுதான், மணமான பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயமும் சூழ்நிலையும் இதனால் உருவானது.

கூட்டுப் புறாக்களாக வெளியுலகத் தொடர்பின்றி வீட்டில் அடைபட்டுக் கிடந்த பெண்கள், கல்வி கற்க தொடங்கியதன் பயனாக வெளியுலக வாழ்வில் பங்கேற்க ஆரம்பித்தனர்.

பெண்ணியத்தின் கோட்பாடுகள்:

சமூக சீர்திருத்தவாதிகள் பெண்ணியம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை பெண்கள் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். இவர்களது கருத்துக்கள் பெண்ணீய கோட்பாடுகள் எனப்படும். மிதவாத, மார்க்சிச, சோஷலிச, தீவிரவாதப் பெண்ணியங் கள் என அவைகள் நான்கு வகைப்படும். ஒவ்வொரு பிரிவும் பெண்களின் தாழ்நிலை பற்றியும் அவற்றைப் போக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்குகின்றன. இவற்றில் மிதவாதப் பெண்ணியமே குடும்ப அமைப்பை ஆதரிக்கும் கோட்பாடுகளையுடையது. பெட்டி பிரைடன், ஜெர்மைன் கிரீர் போன்ற எழுத்தாளார்கள் இதை ஆதரிப்பவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். மற்ற கோட்பாடுகள் குடும்ப வாழ்க்கை முறையைக் குறை கூறியும், குழந்தை பெற்று வளர்ப்பதைச் சுமை என்றும் கருதி ஓரினச் சேர்க்கை வழிகளை ஆதரித்துத் தடம் மாறிச் செல்கின்றன.

குடும்ப அமைப்புக் கோட்பாடை ஆதரிக்கும் பெட்டி பிரைடன் என்ற அமெரிக்க எழுத்தாளர், கட்டுரையாளர், தனது ‘பெண்மையின் மாயை(Feminine Mystique) என்ற நூலின் மூலம் 1963ல் அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் நிலவிய பெண்களின் சமூக நிலையை வெளிப்படுத்தினார். அவர் முதன் முதலாக அமெரிக்கப் பெண்களின் வாழ்வின் எதிர்காலக் கனவான ‘திருப்திகரமான குடும்ப வாழ்க்கைஎன்பதில் ஏற்பட்ட அதிருப்திகளையும் விரக்திகளையும் அழகாக எல்லோருக்கும் புரியும்படியாக எடுத்துக் கூறினார்.

அக்காலகட்டத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள், கட்டுரைகள் விளம்பரங்கள் முதலியன ஒரு லட்சியப்பெண்ணை எவ்வாறு சித்தரிக்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவை அனைத்தும் பெண்களை இளமையும், குழந்தைத்தனமும், அடங்கிப்போகும் தன்மையும் உடையவளாகவும், படுக்கை அறை, பாலியல் அறிவு, குழந்தைப்பேறு இவற்றில் மட்டுமே திருப்தி கொள்பவளாகவும் காட்டின. அவள் ஆண்களைக் கவர்பவளாகவும், உணவு உடை அலங்காராச் சாதங்கள், வீட்டு சாதங்கள் இவற்றில் அழுந்திக் கிடப்பவளாகவுமே சித்தரித்துக் கொண்டிருந்தன. இப்பெண்களுக்குக் கருத்துக்கள், மனம், உயிர் இவை பற்றிய எண்ணங்களே இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றது. பிரைடன், சமூகவியல், உளவியல் வல்லுனர்கள், சாதாரணப் பெண்கள் இவர்களைப் பேட்டி கண்டதன் மூலம் பெண்களிடையே இல்வாழ்க்கை முறை குறித்து மிகப் பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

ஆனால் இவற்றை பெண்கள் வெளியிட முடியாதவாறு தவித்தனர். இந்நிலை அவர்களை மனக்குறை உள்ளவர்களாக ஆக்கியது. இதனை மறக்க, அப்பெண்கள் பலவகை மருந்துகளையும், மதுவையும் நாடினர். இந்நிலைக்கு முக்கிய காரணம் ஆண் பெண் இருபாலரின் குண இயல்புகள் வேறுபட்டவை. அதனால் பாலின அடிப்படையில் சமூகத்தில் நிலவிய வேலைப் பங்கீடு சரியானது என்ற தவறான கொள்கையாகும். இவ்வாறு லட்சியப் பெண்களாக சித்தரிக்கப்பட்ட பெண்களால் அவர்கள் மனிதர்களாக வளர்ந்து மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூட அனுமதிக்கவில்லை என்பது இதன் மூலம் விளங்கிற்று.

மனித இனத்தின் அடிப்படைத் தேவை அவர்கள் ஆற்றல் அனைத்தும் வெளிப்பட வேண்டும் என்பதாகும். சுய மதிப்பு என்பது ஒரு மனிதனது உண்மையான இயல்பு, அறிவாற்றல், வெற்றி இவற்றின் அடிப்படையிலேயே அது அமையும். அவ்வாறு செயல்பட முடியாமல் எப்போது ஒரு பெண் தடை செய்யப்படுகிறாளோ அப்போது அவள் நோயுற்றவளாகிறாள்.

இந்நிலை மாற, பெண்கள் தங்களை அர்த்தமுள்ள வாழ்க்கைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். திருமணம், தாய்மை இவற்றுடன் வாழ்க்கைப் பணியினையும் இணைத்துச் செயலாற்றப் புதுவிதமான வாழ்க்கைத் திட்டத்தை உருவாக்கவேண்டும். இதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் ஒத்துழக்க வேண்டும் என்று பிரைடன் தீர்வு கூறுகிறார்.

இந்நூல் பெண்ணியத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு, பெண்ணீயத்தின் இரண்டாவது அலை எனப்படுகிறது. 1970ல் இந்நூல் 10 லட்சம் பிரதிகள் விற்பனையாகி அமெரிக்கப் பெண்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரைடன் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் சமூகக் கலாச்சாரா, அரசியல் தொடர்பானவை. பெண்கள் வாழ்வில் முழுமையாகப் பங்குபெறத் தடையாக இருக்கும் சட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்றார். இதற்காக தேசீய பெண்கள் அமைப்பை நிறுவினார்.

இவர் தனது அடுத்த நூலான இரண்டாவது கட்டம் (The Second Stage) என்ற நூலில், ஆண் பெண் இருபாலரும் வாழ்க்கைப் பணிகளை மேற்கொண்டு, குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளனர். இவ்வாழ்க்கை முறைக்குத் தக்கவாறு சமூகத்தைச் சீர்படுத்துவது அவசியமாகிறது. இதற்குப் பெண்ணீயத்தின் மாயை தடைக்கல்லாக உள்ளது. பெண்ணியத்தின் மாயை ஆண்களையும் பெண்களையும் எதிரிகளாகக் கருதுகிறது. இந்நிலை மாறி ஆண், பெண் இவர்களிடம் உள்ள நல்ல பண்புகள் சமுதாயத்தில் இருபாலர்க்கும் பொதுப் படையாக அமையவேண்டும். இதை வாழ்க்கையில் குழந்தைகளை மையமாகக் கொண்டு இயங்கும் சமூக அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் செயல்படுத்த வேண்டும். ஆண்களும் தங்களுடைய மதிப்புகள், தலைமைப் பண்புகள் இவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கி, ஆண்களும் பெண்களும் வீட்டிற்குள்ளும் வெளியிலும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார் பிரைடன்..

இதைப் போன்றே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மற்றொரு நூல் ஜெர்மைன் கிரீர் எழுதிய சிறைவாசப் பெண் (Captive Wife). இந்நூலில் இக்கால அடிப்படைக் குடும்பத்திற்கும் (Nuclear), பழங்காலக் கூட்டுக் குடும்பத்திற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி, கூட்டுக் குடும்பமே குழந்தைகளை வளர்க்க ஏற்ற சூழ்நிலையைக் கொண்டது என விவரிக்கிறார்.

இந்தியப் பெண்ணியம்:

இந்தியப் பெண்ணியத்தை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் உள்ள காலம், பிந்தைய காலம் எனப் பிரிக்கலாம். முதல் காலட்டத்தில் அது ஆங்கில ஆட்சிக்குட்பட்டு செயலாற்றியது. இரண்டாவது கால கட்டத்தில்தான் அவர்கள் சுதந்திரமாக செயலாற்ற முடிந்தது. வரலாற்றுக் காலத்தில் இந்தியப் பெண்கள் உயர் நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. ரிக்வேதத்தில் எழுதப்பட்ட சில பாடல்கள் பெண்களால் எழுதப்பட்டது என்றும் அவர்கள் தத்துவவாதிகள், பிரமவதனிகள் என்றும் அழைக்கப்பட்டனர். கோஷா, ரோமசா, லோபமுத்திரா போன்றவர்கள் அவர்களில் சிலர். பெண்களும் குருகுல வாசத்திற்குச் சென்றனர். ஆண்களுக்கிணையாகக் கல்வி கற்றனர். விவசாயம், நெசவு, மட்பாண்டம் வனைதல் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டனர். ஆசிரியர்களாகவும், பாடகிகளாகவும், அதிகாரிகளாகவும் பணிபுரிந்தனர். இதன் முலம் வேதகாலத்தில் பெண்கள் நிலை உயர்வாக இருந்தது எனலாம். இதற்கு அக்காலத்தில் இருந்த தாய்வழிச் சமுதாயமும் ஒரு காரணம் எனலாம்.

தமிழர் பெண்ணியம்:

சங்க காலத்தில் தமிழ் நாட்டில் பெண்களைப் பற்றிய ஆதாரங்களை முதல் நூற்களாலான தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணக்கிடக்கின்றன. இவைகள் பெண்களை ஆண்களுக்குச் சமமாக நிலையில் காட்டவில்லை. அவை ஆண்களுக்கென்று சில இயல்பு களையும், பெண்களுக்கென்று சில குணங்களையும் வரையறுத்துக் காட்டுகின்றன. வீரம் தலைமைப் பண்பு போன்றவைகள் ஆண்களுக்குரியவை என்று அவற்றை உயர்த்திக் காட்டு கின்றன. அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு என்பவை பெண்களுக்குரிய குணங்கள் என்றும் இதன்படி பெண்கள் வாழ்வதே அவர்களுக்கு அழகு என்று வலியுறுத்திக் கூறுகின்றன. மேலும் சங்க இலக்கியங்கள் அகம், புறம் என்னும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அகம் என்னும் பிரிவில் விட்டிற்குள்ளும், வெளியிடங்களிலும் நிகழும் ஆண் பெண் உறவுகளான காதல், இல்லறம், ஊடல், பிரிவு, மக்கட்பேறு போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதிகள் விளக்கப்படுகின்றன. புறம் என்னும் பகுதியின் தலைவன் ஆண். இப்பகுதியில் வீட்டிற்கு வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளான போரிடுதல், பொருளீட்டுதல் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறாகத் துறைகளைப் பாகுபடுத்தயதில் தவறேதுமில்லை. ஆயின் இதன் சமூக மதிப்பீட்டின்படி பெண்களுக்கென பாகுபடுத்திய இயல்புகளும் கடமைகளும் தாழ்ந்தவைகள். ஆண்களுக்குரியவைகள் உயர்வானவை என்ற ஏற்றத்தாழ்வுகள் நிலைபெற இப்பாகுபாடுகள் காரணமாகியுள்ளன.

மேலும் சங்க கால நாகரீகச் சமுதாயத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் அகப்பொருள் வகையையும் இரண்டு வகையாகக் கொண்டனர். இவை களவியல், கற்பியல் எனப்படும். களவியல் என்பது கொடுப்பாரும் எடுப்பாரும் இன்றித் தலைவனும் தலைவியும் தாமே ஒருவரை ஒருவர் எதிர்பட்டுக் கூடும் ஒழுக்கமாகும். இதை பிறர் அறியாது நிகழ்வதால் களவியல் எனப்பட்டது. குறுந்தொகைப் பாடல் ஒன்று,

யாயும் ஞாயும் யாரா கியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அரிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சேத் தாம்கலந் தனவே.

செம்மண் நிலத்தில் பெய்த நீரானது அம்மண்ணின் நிறத்தயும் சுவையையும் பெறுவது போல் அவர்கள் உள்ளங்கள் இணைந்து விட்டதாகத் தலைவன் கூறுகிறான். நம்மிடையேயும் நம் பெற்றோரிடையேயும் இதற்குமுன் ஒரு தொடர்பும் இல்லை. எனினும் நாம் உள்ளத்தால் இரண்டறக் கலந்து விட்டோம். இனிப் பிரிவு நேராதுஎன்று அவன் அவளுக்கு உறுதி கூறுகிறான். இந்தக் களவொழுக்கத்தை காமக்கூட்டம் என்றும் முன்பின் தெரியாதவரிடம் காதல் உணர்ச்சி தோன்றுவதால் இதைத் தெய்வீகப் புணர்ச்சி என்றும் தொல்லோர் கூறுவர். தொல்காப்பியர் இன்னும் ஒருபடி மேலே போய்த் தலைவனும் தலைவியும் அறிவு, ஆண்டு, அழகு, திரு முதலிய அம்சங்களால் ஒப்புமை உடையராயிருக்க வேண்டும் என்றும், சில அம்சங்களில் தலைவன் தலைவியை விஞ்சினாலும் தடையிலை என்றும் கூறுகிறார். அக் காமக்கூட்டம் தெய்வத்தின் ஆனையால் நிகழ்வதாகத்தான் தொல்காப்பியர் கூறுகின்றார்.

ஒன்றே வேறே என்றுஇரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்,

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப,

மிக்கோ னாயினும் கடிவரை யின்றே

களவு நெறியில் நின்றவர்கள் கற்பு நெறியில் நிற்றல் வேண்டும். நம்பிய பெண்ணை துஷ்யந்தன் சகுந்தலையை வஞ்சித்தது போல் வஞ்சித்து விடுதல் கூடாதென்பதற்காகவே பலர் அறியக் கொடுத்தற்குரியோர், கொடுக்கக் கொள்ளற்குரியோர் கொள்ளும் நிலை என்று ஏற்பட்டது. பின்னர் இரு முதுகுரவரும் சுற்றமும் நட்பும் கூடி வயிறார உண்டு மணமக்களை மனமார வாழ்த்தும் மான்பும் தமிழ்க்குலத்தின் மரபாயிற்று. இவ்வாறான சடங்குகள் (கரணம்) திருமணத்தின் இன்றியமையாத பகுதியாயிற்று.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

கற்புஎனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.

கொளற்குரி மரபிற் கிழவன் பெண்ணைக் கொள்வதற்குரிய முறையினையுடைய தலைவன்.

கொடைக்குரி மரபினோர் பெண்ணைக் கொடுத்தற்குரிய பெற்றவர், மாமன்மார், தாயத்தார் ஆசான் முதலியோர். ஆருயிர்த் தோழனான பாரியை இழந்து துன்புற்ற கபிலர், பாரியின் மகளிரை இருங்கோவேளிடம் இட்டுச் சென்று ‘யாந்தர இவரைக் கொண்மதிஎன்று கன்னிகா தானம் செய்யும் உரிமை, நன்பனான தனக்கும் இருக்கிறது என்கிறார் கபிலர்.

சங்க கால தமிழர் திருமண முறைகள்:

அகநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் தமிழரின் சங்க காலத் தமிழர் திருமண நிகழ்வுகள் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.

மணவில் கமழும் மாமலைச் சாரல் என்று மலைபடுகடாம் உவமை சொல்வது போல் நல்லதோர் மணப்பந்தல் அமைத்து அதில் மணல் பரப்பி, மனை விளக்கு நிறுத்தி, மலர் மாலைகளைத் தோரணங்களாகத் தொங்கவிட்டு அலங்கரித்த மணப்பந்தலில் மணமகளை மணமகனுக்குப் பெற்றொர் ஞெரேரெனப் புகுந்து பேரில் கிழத்தி ஆகுகஎன்று வாழ்த்தி அளிப்பர்.

மணமகளை முதிய பெண்டிர் எடுத்துவந்த நன்னீர் குடங்களில் உள்ள நீரால், புதல்வர்களைப் பெற்றெடுத்த நான்கு மங்கல மகளிர், அந்த நன்னீரில் நெல்லும் மலரும்தூவி மணப்பெண்ணை நீராட்டுவர். மணமகள் மாலை அணிகளால் ஒப்பனை செய்து கொள்வாள். புத்தாடை புனைவாள்.

திங்கள் சகடம் மண்டிய நாளில் திருமணம் நிகழ்ந்தது, என்ற வரிகள் மூலமும், தீக்கோள்கள் நீங்கி விளங்கும் திருநாளில் காரிருள் அகன்ற காலை வேளையில் திருமணம் நிகழ்ந்தது என்ற வரிகள் மூலமும் மணநாள் பார்க்கும் வழக்கம் அக்காலத் தமிழரிடையே இருந்தது தெரிய வருகிறது.

கற்பினில் வழுவாது, பொற்புடன் விளங்கிக் கணவனைப் பேணிப் பெற்றொர் விரும்பும் பெற்றியை ஆகுஎன வந்திருந்தோர் வாழ்த்தினர்.

உயர்ந்தோரைத் தொழுதலும் கடவுள் பேணுதலும் நற்சகுணம் பார்த்தலும், மணமுரசு ஒலிப்பதும் அக்காலத்தில் உண்டு.

உளுந்து கலந்து வேவித்துப் பக்குவப்படுத்திய சோறு மலைமலையாகக் குவிந்திருக்க வந்த வருக்கெல்லாம் அந்த அமுது வரையாது வழங்கப்பட்டது என்று பந்திச் சாப்பாடு வரை இக்காலத் தைப் போலவே அக்காலத்திலும் இருந்திருப்பது நம் தமிழருக்கே உரிய பாரம்பரிய ரகசியம்.

முரசு இயம்பின, முருடு அதிர்ந்தன.

முறை எழுந்தன. பணிலம், வெண்குடை

அரசு எழுந்ததோர் படி எழுந்தன.

அகலுள் மங்கல அணி எழுந்தது.

(முருடு-பேரிகை, பணிலம்-சங்கு, மங்கல அணி-தாலி, அகலுள்-ஊரில்)

இப்படியாக சிலப்பதிகாரத்தில் யானை மேற்சென்ற மகளிர், கோவலன் கண்ணகி திருமணத்தை ஊராருக்கு அறிவிக்கின்றனர்.

மாலைதாழ் சென்னி வயிரமணித் தூண் அகத்து நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்க்கீழ்அவர்கள் திருமணம் நடந்ததாகவும், “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பர் கண் நோன்புதான் என்னை! என்று கோவலன் கண்ணகி மணமேடையில் தீவலம் செய்த காட்சியை கண்டவர் பெற்ற பேருதான் என்ன? என்று வியக்கிறார் இளங்கோ அடிகள்.

மங்கல வாழ்த்துடன் அரச வாழ்த்தும் நிகழ்ந்ததாக ஆசிரியர் கூறுகிறார்.

நம் முன்னோர்கள் அக்காலத்திலிருந்து இன்று வரை இப்பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, ஒரு திருமணத்தின் பொருட்டு இத்தனை சிரத்தை எடுப்பதன் அவசியம் என்ன? காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று அவர்கள் வாழ்ந்து காட்டுவதற்காகத்தான். குலத்தை துலங்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த வயதில் எப்படியெல்லாம் தவறு நேர்ந்துவிடக் கூடும் என்று கணித்து அதைப் போக்கும் விதமாக சடங்குகளையும் சம்பிரதாயங் களையும் வகுத்துள்ளது வருங்கால சந்ததிகளின் நன்மையைக் கருதித்தான்.

நாடோடிகள் என்ற திரைப்படத்தில் வருவதுபோல் ஆசை அறுபது நாள், மோகம் 30 நாள் என்று கூட இல்லாமல், மணமான மறுவாரமே அவர்களால் கருத்து ஒருமித்துப் போகமுடியாமல் மணவிலக்குப் பெற முயல்வது போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான். துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பதை நாம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும்தான்..

அன்பும் அறனும் உடையதாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

என்ற வள்ளுவர் வார்த்தைகளுக் கிணங்க ‘Better Halfஎன்று சொல்வார்களே, அப்படிச் சொன்னால் மட்டும் போதாது, அதே போன்று ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை ஆனந்தப் பூந்தோட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.

33% பாராளுமன்ற சட்டமன்ற இட ஒதுக்கீடு, உள்ளாட்சி மன்றங்களில் 50% என்று மகளிர் பிரதி நிதித்துவம் போன்ற சட்டங்கள் நிறைவேற ஆண்களின் மனப்பூர்வ ஒத்துழைப்பு தேவை. இப்போதைய நிலையிலேயே அந்த இடங்களில் பெண்களை முன்னிலைப்படுத்தி விட்டு பின்னால் இருந்து ஆணாதிக்கம் செலுத்துபவார்களைப் பற்றிய புகார்கள் இல்லாமல் இல்லை. சமீபத்தில் நைஜீரியாவில் ஒரு பேட்டியின் போது ஹிலாரி கிளிண்டன் சொன்னதுபோல் இங்கு செக்ரடரி ஆப் ஸ்டேட் நான் தான். மிஸ்டர் கிளிண்டன் அல்லஎன்று சொல்ல நம்மில் எத்தனை பெண்கள் துணிவார்கள்?

சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்ற ரீதியில், பெண்களைத் தாழ்வுபடுத்தும் ஆண் நாயக மதிப்புகளும், அதனால் விளைந்த ஆண்களின் மனப்போக்கும் அதிக அளவில் மாற வேண்டியது அவசியம். பெண்களும் மனிதர்கள் என்று போற்றி மதிக்கப்பட வேண்டும். பெண்களைத் தாழ்வுபடுத்தும் சமூக மதிப்புகளை மாற்றும் முயற்சியில் ஆண் பெண் இரு பாலரும் ஒத்துழைக்க வேண்டும். இந்திய சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது வாழ்க்கை முறையாகும். இந்த மதிப்பு அன்பின் அடிப்படையில் குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் நிலைபெற வேண்டும்.

பெண் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், தொழிற்சாலைச் சட்டம், சமஊதியச் சட்டம், தோட்டத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், சுரங்கச் சட்டம், மகப்பேறு நலச் சட்டம், தொழிளாலர் அரசு காப்பீட்டுச் சட்டம், அலுவலகங்களில் மகளிர் பாதுகாப்புச் சட்டம் என இயற்றப்பட்டுள்ள மகளிர் நலச் சட்டங்கள் அனைத்தும் இருந்தும் இந்தியப் பெண்கள் அதனால் விழிப்புணர்வு பெற்று தங்கள் உரிமைகளைப் பெற்றதாகக் கூறமுடியாது. இவையாவும் இந்திய அரசியல் கொள்கை களை வகுப்பவர்கள், பெண்களின் நலன் கருதி இயற்றியவைகள் ஆகும். அரசியல் சட்டத்தி லேயே ஆண் பெண் வேறுபாடு காட்டக் கூடாது எனத் தடை செய்யும் இந்திய அரசியல் அமைப்பின் கொள்கை, வளர்ந்த நாடுகளில் கூட காணப்படாத ஒன்றாகும். இவற்றோடு வரதட்சணை தடைச் சட்டங்கள், வன்கொடுமை தடைச் சட்டங்கள், வீட்டில்கூட மகளிரைத் துன்புறுத்த தடைச் சட்டங்கள் என பல வந்து விட்டன. இச்சட்டங்களால் பெண்கள் எந்த அளவுக்கு பயனடைந்தார்கள் என்பது ஒருபுறமிருக்க, இச்சட்டங்களால் தாங்கள் பாதிக்கப்படுவ தாக ஆண்கள் உரிமைக்குரல் எழுப்ப சமீபத்தில் சிம்லாவில் கூடியிருக்கிறார்கள்!

ஆயின் இவ்வளவு சட்டங்கள் இருந்தாலும் இவை இந்தியப் பெண்களின் நிலையை உயர்த்த எவ்வளவு தூரம் பயன்பட்டிருக்கின்றன என்பது கேள்விக்குரிய ஒன்றாகும்.

அடுத்ததாக இவற்றை அமல்படுத்துவதிலுள்ள பெரிய சிக்கல் மதம். மத அடிப்படையிலான சட்டங்கள் அனைத்தும் ஆண் நாயக மதிப்பீடுகளை ஆதாரமாகக் கொண்டவை. இந்திய சுதந்திரத்திற்குப்பின் இந்துக்களின் சட்டங்களை மட்டுமே பெண்களின் நிலையை முன்னேற்றும் வகையில் மாற்ற முடிந்தது. இதை இந்தியாவில் வாழும் சிறுபான்மையோர் வாழ்வில் செய்ய முடியவில்லை. இதே போல் திருமணச் சட்டங்களும், விவாகரத்து சட்டங்களும் மதத்துக்கு மதம் மாறுபடுவதால், பெண்ணியம் அங்கு பலனலிக்கவில்லை.

இந்தியப் பண்பாட்டின் மறுமலர்சிக்காக உருவாகிய நிறுவனங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியசாபிகல் நிறுவனம், இராமகிருஷ்ண மடம் போன்றவைகள் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் அலசி ஆராய்ந்து, ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் பிரச்சார பீங்கிகளாக திகழ்ந்தும் கூட, அதன் பயன்பாடு இன்னும் சமுதாயத்தில் ஆழ ஊடுறுவவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னதான் சட்டங்கள் இருந்தாலும் பெரும்பாலான சட்டங்கள் பயன்படுத்தாமலே இருக்கின்றன. காரணம் சமூகப் பழக்க வழக்கங்களும், பார்வைகளும் பெண்களை சமத்துவ நோக்குடன் அணுகு வதில்லை. அதனால் சட்டங்களால் பெரும் பயன்கள் விளையா.

பெட்டி பிரைடன் போன்ற மேல் நாட்டு எழுத்தாளர்கள் வாழ்வியலில் இன்று வலியுறுத்தும் கருத்தின் குவிமையம் காதலிலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்ற இந்தக் கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவம் வலியுறுச் சென்றுள்ளது. அதே கருத்தைத்தான் இன்று உளவியல் ரீதியில் எழுதி இன்று அவர்கள் லட்சக் கணக்கில் சம்பாதிக் கிறார்கள். வள்ளுவரின் இந்த நெறியைப் பின்பற்றி வாழ்பவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் வாழ்வில் பெரும்பாலும் பிரச்சினைகள், சிக்கல்கள் என்று பெரிதாக இருக்காது எனும்போது தமிழர்களின் மான்பு எத்தகையது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை..

இளம் வயதில் கைம்பெண், வயதானவருடன் திருமணம், பொருளாதார சூழ்நிலை, ஒழுக்கம் கெட்ட கணவன், கையாலாகதா கணவன், தம்பதிகள் பிரிந்து வாழ்தல், பணி நிமித்தம் தம்பதிகள் பிரிந்திருக்க நேர்தல், விவாகரத்து, பெண் பணியிடங்களில் ஆணாதிக்கம், கேளிக்கைகள், மது, போதைப் பொருள், ஆண்களுடன் நட்பு, போன்றவைகள், மகளிர் பாலியல் பிறழ்வுகளுக்குக் காரணமாய் அமைகின்றன. வள்ளுவர் பிறன் மனை நோக்குவதையே பாவம் என்று கண்டிக்கிறார். வத்சாயனரோ பெண்களை மயக்குவது எப்படி என்பதற்குச் சூத்திரம் எழுதியதோடு நில்லாமல், அடுத்தவன் மனைவியைக் கவர்வதற்கும் வழிவகை கூறுகிறார்.

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் கூறியது போல் இம்மதிரியான சமூகக் குறைபாடுகளைப் போக்க ஆண், பெண் இருபாலர்களும் பார்த்துத் திருந்தினால் தான் பலன் உண்டாகும். அதற்காக ஒட்டு மொத்த ஆண்கள் சமூகமே குற்றவாளிகள் என்றோ, பெண்கள் சமூகம் அனைதுமே உத்தமிகள் என்றோ இதற்குப் பொருள் இல்லை. மனச்சாட்சியின் துணையுடன் சமூகத்தில் நாமாகப் பார்த்து நல்லது என்பதற்கு குரல் கொடுத்து தீமைகளைக் களைய முன்வருவோமானால் நிச்சயம் பூலோகம் சொர்க்கமாகும். ஆண் பெண் இருபாலர் வாழ்விலும் என்றும் வசந்தம் கொலுவிருக்கும்.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?


***** ***** *****

கட்டுரை ஆக்கம்: துணை நின்ற நூல்கள்,

1. Immoral Traffic – Prostitution in India by V. Siththannan, B.Sc., M.L, Additional Superintendent of police and

Vigilance officer, Corporation of Chennai.

2. பெண்ணியம் - தோற்றமும் வளர்ச்சியும், Dr. முத்துச்சிதம்பரம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

3. முத்துப்பட்டன் கதை- N. வானமாமலை, M.A. Lit.,

4. திருக்குர்ஆன் நற்செய்தி மலர், செப்டம்பர், 2007 இதழ்.

5. தமிழகத்தில் திருமண முறை - எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகள்.

No comments: