Sunday, December 28, 2008

'பங்கீ ஜம்ப்பிங்'

இங்கேயும் ஒரு சொர்க்கம் - அத்தியாயம் 34 

கார்சிகா

'பங்கீ ஜம்ப்பிங்' (Bungee Jumping) என்பது ஹெலிகாப்டர்கள், செங்குத்தான மலை உச்சிகள், உயரமான கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றிலிருந்து கீழே பாதாளத்தை நோக்கித் தலைகீழாய்க் குறிப்பிட்ட இலக்கில் குதிக்கும் முறையாகும். குதிப்பவரின் கால்களை ரப்பர் கயிறு பிணைத்திருக்க, அந்த இணைப்பிலுள்ள ஸ்பிரிங் அசைந்து அசைந்து வேகத்தைக் குறைக்க, குதிப்பவர் தரையை நெருங்கும் போது சாதாரணமாக ஒரு திண்ணையிலிருந்து குதிக்கும் வேகத்தில் தரையில் இறங்குவார்.



அன்று நடு நிசியில் கார்சிகா தீவின் தென்பகுதி மலை உச்சி ஒன்றில் பிரெஞ்சு இராணுவ ஹெலிக்காப்டர் ஒன்றின் மூலம் சப்தமின்றி 'பங்கீ ஜும்பிங்' மூலம் கீழே குதித்தான் அருண். குளிருக்கான ராணுவ உடைகள் அணிந்திருந்தாலும் உடைகளை மீறி கடும் குளிர் துளைத்தெடுக்க, 600 அடி உயரத்தில் நிலை நின்ற ஹெலிகாப்டரிலிருந்து மலைஉச்சியில் உள்ள சிறய சமநிலைப் பகுதியில் குதித்தான். மலை மீதிருந்து மெதுவாக பாறைகளை பற்றி இறங்கினான். மலை ஏறி இறங்கும் பயிற்சி அவனுக்கு இப்போது கை கொடுத்தது. பாறைகளின் வழியே 300 அடிக்கு கீழே இறங்கிய பிறகே மரம் செடி கொடிகளிடையில் அவன் ஐக்கியமானான். பொழுது புலரும் முன் கருக்கிருட்டிலேயே, அவன் மலை அடிவாரத்துக்கு சென்று விட திட்டமிட்டான். சில இடங்களில் முரட்டு செடிகொடிகளும் முட்புதர்களும் அவனுக்கு திகிலூட்டின. வன ஜந்துக்கள் சில இடங்களில் அவனை பயமுறுத்தின.

இருளைக் கவசமாக்கிக்கொண்டு இறங்கியவனுக்கு மேலும் சோதனைகளைக் கொடுத்தது மேகங்கள். ஏற்ற இறக்கமான மலை பிரதேசம் அவன் மூச்சை திணறடித்தன. வாயின் இருபுறமும் கோர பற்களையுடைய ஆபத்தான காட்டுப் பன்றிகள் பற்றி அவன் ஏற்கனவே எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறான். அவன் கை, துப்பாக்கியை ஒருதரம் தடவிப்பார்த்துக் கொண்டது. மலை ஆடுகள் தண்ணீர் இருந்த நீரோடைகளின் கரைகளில் படுத்துக் கிடந்தன. மலை அடிவாரத்தை நெருங்கியதும் அவன் விழிப்புடன் செயல்பாட்டான்.

பொழுது விடிய இருந்த நேரம். ஆனாலும் அங்கு கும்மிருட்டுதான். ஒரு மரக்கிளையைப் பிடித்து அவன் திரும்ப இருந்த நேரம், திடீரென மௌனத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு வேதனைக்குரல் விண்ணைப் பிளந்தது. அவன் முதுகுத்தண்டை உறைய வைத்து அப்பிரதேசமே நடுங்கும் கிரீச்சிடும் ஒலி. அவன் சப்த நாடியும் அடங்கிவிட்டது. சப்தம் வந்த திசையில் உற்றுப்பார்த்தான். இருளில் ஒன்றும் புலப்படவில்லை. மேலும் கீழே இறங்கி வந்து பார்த்தான். இருளில் பார்க்கக்கூடிய டெலெஸ்கோப்பை கொண்டு ஆராய்ந்தான். அங்கு ஒரு குகை இருக்கவேண்டும். இருள் தன் கட்டு குலைந்த அச்சமவெளிப் பகுதியில் அவன் கண்கள் ஊடுருவ, குகைக்குள்ளிருந்து இருவர் ஓடிவந்ததை அவன் கண்டான். அந்தக் குரலின் குலைநடுக்கத்தின் வீச்சு அவன் இதயத்தின் மையத்திலிருந்து அவன் உடலெங்கும் இன்னும் பரவிக் கொண்டிருந்தது.

... .... .....

இந்த விமானம் இப்போது கடத்தப்படுகிறது !!!

இங்கேயும் ஒரு சொர்க்கம் - அத்தியாயம்-37

பாரிசிலிருந்து மும்பைக்கான அந்த விமானம் தூனிஸ் நகரிலிருந்து சரியாக மாலை 5.30 க்குப் புறப்பட்டது. விமானம் விண்ணில் தாவி உச்சிக்கு வந்து 30000 அடி உயரத்தில் நிலைகொண்ட போது பயணிகள் கண்களுக்கு விருந்து அளித்த அட்லாஸ் மலைத் தொடர்களின் கம்பீரமான எழில் தோற்றம், துனிசிய வளைகுடாவை நோக்கி இரு பகுதிகளாகி, கிழக்கில் வர வர மலைத் தொடர் சறுக்கி துனிசிய வளைகுடாவில் சரிந்து கலந்து மறைந்து கொண்டிருந்தது. துனிசியாவின் ஜீவ நதி மஜர்தா, இரு மலைத் தொடர்களுக்கும் இடையில் ஓடி அப்பள்ளத்தாக்கை பச்சைப் பசேல் எனக்காட்டி கண்களைக் கவர்ந்தது. தெற்கிலுள்ள தாபஸ்ஸா மலைத்தொடர் தெற்கு நோக்கி குன்றுகளாக இறங்கி பீடபூமியாக மாறி சகாரா பாலைவனத்தில் சங்கமித்தது.

ரோமானியர்களின் உணவுக் களஞ்சியம் துனிசியா, பார்வையிலிருந்து விடைபெற, துனிசிய வளை குடாவில் மேலெழும்பிய விமானம், மத்தியதரைக் கடல் பகுதியில் பிரவேசித்த போது துனீசிய நேரம் மணி 5.45 (16.45 GMT) விமானப் பணிப்பெண்கள் ஒரு பக்கம் குளிர்பானங்களை வினியோகிக்க, மறுபக்கம் அதுவரை கண்களுக்கு விருந்தளித்த அட்லாஸ் மலையின் அழகிய சிகரங்கள் பின்னோக்கி விலகி மறைந்து கொண்டிருந்தன. சிலர் பானங்களை பருகியபடி காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். சிலருக்கு பானங்களில் மனம் லயிக்கவில்லை. அவர்கள் மனம் துனிசியாவின் ரம்யமான புகழ் பெற்ற மாலை நேரக் காட்சிகளில் லயித்திருந்தன. துனிசியாவின் பிரத்தியேக வயலட் வண்ணத்தில் மாலை நேரம் மிளிர, கடலில் ஒரு நெருப்புக் கோளமாய் சூரியன் விழுந்து கரைந்து கொண்டிருந்தது. சிலர் நினைவுகளில் முந்திய தினங்களின் இரவுநேர இயற்கை காட்சிகள் மின்னி மறைய அந்நெஞ்சங்களில் பிரிவு ஒரு சுமையாகி கனத்தன.

கேபினில் லைட்டுகள் மங்க, சில பயணிகள் தூங்க ஆரம்பித்தனர். குளிர் பானங்களை தொடர்ந்து சாக்லெட் மற்றும் இனிப்பு வகைகளைப் பணிப்பெண்கள் வழங்க, இனிமையாகக் களித்த விடுமுறை நாட்களைப் பல நெஞ்சங்கள் நினைவு கூர்ந்தன. சில நினைவுகள் அவர்கள் மனத்திரையில் மலர்ந்து மனதுக்கு இதமளித்தன. மறக்க முடியாத நிகழ்வுகளை மனது அசைபோட்டன. பயணம் நன்கு அமைந்த மைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டன. அரை மணி நேரம் சென்றிருக்கும். விமானம் மால்ட்டா தீவுகளின் தலைநகரம் வலேட்டா மீது பறந்து கொண்டிருந்தது.

அடுத்து வந்த நிமிடங்கள் அவர்களுக்கு பெரும் மனக்கிலேசத்தையும் சஞ்சலத்தையும் கொடுத்து அவர்களை கையறு நிலைக்கு மாற்றின. வெளியே இருள் பரவ பரவ உள்ளே பயமும் பீதியும் போட்டி போட்டு பயணிகளை அச்ச மூட்டின. பயணிகளோடு பயணிகளாக வந்த சிலர் விமானத்தைக் கடத்துவதாக அறிவித்ததும், இன்ப நினைவுகள் கொடூரமானதாக மாறியது. அவர்களைப் பயமுறுத்த பல்வேறு யுக்திகளை கடத்தல்வாதிகள் கையாள, பயணிகள் மிரண்டனர்.


பின் புறமிருந்த பெண்கள் பகுதியில்தான் அந்த பயங்கரம் முதலில் ஆரம்பமானது. மணி 6.15 இருக்கும். பின்னிருக்கை ஒன்றிலிருந்து எழுந்த அலெக்ஸ், தன் கொடூர முகத்தை ஒரு கைத்துணியால் மூடிக்கொண்டு ஒரு கை குண்டைத் தூக்கி பிடித்தபடி முன்னே வந்தான். அத்துணியில் கண்களுக்கு மட்டும் இரண்டு திறப்புகள் இருந்தன. வலப்புற இருக்கையிலிருந்து முகத்தைக் கறுப்பு துணியால் மறைத்து கட்டியிருந்த யூசுப், ஒரு ரிவால்வரை தலைக்கு மேல் உயர்த்தியவன் உரத்த குரலில் சொன்னான் "இந்த விமானம் இப்போது கடத்தப்படுகிறது என்று."