Wednesday, November 30, 2016

மாயச்சிலை - முன்னோட்டம்





வரலாறு தெரிந்தால் தான் வரலாறு படைக்க முடியும் என்பது சான்றோர்கள் வாக்கு. உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு உண்டு. மன்னர் செய்திகள் மட்டுமல்லாது மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வரலாற்றையும் அறிந்து கொள்வது மிக அவசியம். அதற்கு அவர்கள் பேசும் மொழிதான் ஆணிவேர். 

ஐரோப்பாவில் மிகப்பெரிய நாடு என்றாலும் மிகச் சிறிய நாடு என்றாலும் அனைத்தும் மொழியின் அடிப்படையிலேயே பிரிந்து கிடக்கின்றன. நம்மை 300 ஆண்டுகள் ஆண்ட ஐக்கிய முடியரசு (United Kingdom) என்ற கிரேட் பிரிட்டன் கூட இங்கிலாந்து, வட ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என்ற நான்கு உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பாகும். அந்த கூட்டமைப்பு ஆங்கிலம், ஐரிஷ், ஸ்காட்டிஷ், வேல்ஷ் என்ற நான்கு மொழி அடிப்படையிலான பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. அந்த ஒவ்வொரு உறுப்பு நாடும் எப்போது வேண்டுமானாலும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லலாம். அந்த அளவிற்கு ஐரோப்பாவில் ஒரு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அங்கு முன்னர் யு.எஸ்.எஸ்.ஆர் என்ற சோவியத் ஒன்றியமும், யுகோஸ்லாவியாவும் சிதறுண்டது மொழி அடிப்படையிலேயே. எனவே மொழி என்பதுதான் ஒரு இனத்தின் முக்கிய அடையாளம். 

இலக்கியப் படைப்புகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், புதைபொருட்கள், புராதன சின்னங்கள், நாணயங்கள், பழங்காலக் கட்டிடச் சிதைவுகள், சிற்பச்சின்னங்கள், சிலைகள் போன்றவைகள். ஒரு மொழியின் வரலாற்றுக்கு ஆதாரமாக இருக்கின்றன. இத்தகைய தமிழ் மொழியின் ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டதே தமிழக வரலாறு. 

இத்தகைய ஒரு மொழியின் வரலற்றுக்கு ஆதாரமான சிலைகளைக் திருடுவது என்பது பொருளாதார குற்றம் மட்டுமல்ல நமது கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் ஆகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் சிலை தடுப்பு மையங்கள் உள்ளன. 

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மொத்தம் 25000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை வெளியிடப்பட்டவை சிலவே. இன்னும் பல்லாயிரம் கல்வெடுகள் வெளிவராமல் கல்வெட்டுச் சாசன ஆய்வகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன. அவையும் பதிப்பில் வருமாயின் தமிழ்மக்கள் வரலாறு மிகவும் விரிவாக எழுதப்படலாம் என்பதில் ஐயம் இல்லை.

கடவுள் இருக்கிறார் இல்லை என்பது தனி விவாதத்திற்குரிய பொருள். அதற்குள் நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நம்பிக்கை என்பது கடவுளாகட்டும் ஏதாவதொன்றாகட்டும் அது ஆதிமனிதனின் அடி நாதத்திலிருந்து காலங்காலமாகக் கடமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அது அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாறிவந்திருக்கிறது. மனித குலம் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த காலத்திலிருந்து இனத்தையும் குலத்தையும் காக்கும் மாண்பை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வர காரணியாக இருந்திருக்கிறது. அதுவே கலைகளாக பிற்காலத்தில் உருக்கொண்டடுள்ளது. 

தமிழர்கள்  தங்கள்  கடவழித்தொடர்பால் உலக நாகரிக சமூகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். அனைத்து நாகரிகங்களின் சங்கமமாக கலைகளுக்காகவே கோயில்களைத் தமிழன் கட்டினான். எகிப்து பிரமிட் நம் கோயில் கோபுரங்களில் பிரதிபலிப்பது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கோயில்களும், ஏடுகளும், கல்வெட்டுகளும் மட்டும் இல்லாது போயிருந்தால் வழக்கொழிந்த எகிப்து, கிரேக்க, ரோமானிய, இன்கா, மாயா நாகரிகங்களுடன் தமிழினமும் சேர்ந்திருக்கும். எனவே நம் இனத்தை பேணிக் கட்டிக்காக்க நம் மூதாதையர்கள் வகுத்துக் கொடுத்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம். 

சோழர்கள் கடல் கடந்தும் தமிழர் நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்றால் நம் அனைத்து சமூகங்களும் ’அரசன்’ என்ற ஒருவனுக்காக ஒன்றுபட்டு தங்கள் இன்னுயிரைத் துச்சமாக மதித்து ஒற்றுமையாக உழைத்தார்கள். சோழப்பேரரசு மேற்கே பழந்தீவு பன்னீராயிரம் (இப்போதைய மாலத்தீவுகள்) முதல் கிழக்கே கடாரம் வரை (மலேயா, இந்தோனேசியா) பரந்து விரிந்ததற்கு மூல காரணம் நமது ஒற்றுமை..

நாலு வகுப்பும்இங் கொன்றே – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி 

என்று முரசு கொட்டுகிறான் பாரதி. இது மானிட சாதியில் தமிழருக்குத்தான் பெரிதும் பொருந்தும். .’நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே’ என்பதை நாம் இனியாகிலும் மனதில் கொள்ள வேண்டிய நேரமிது. 

நமது பண்பாட்டு அடையாளங்களான ஐம்பொன் சிலைகளைக் கடத்துவது என்பது நமது கலாச்சாரத்தின் ஆணிவேருக்கு வென்னீர் ஊற்றுவதற்குச் சமம். அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாவலின் முக்கிய நோக்கம். ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகலை மீட்பதில் ‘India Pride Project’ போன்ற இணைய அமைப்புகள் நமது சிலைகளை மீட்பதில் ஆர்வங் கொண்டு வெற்றி பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். 

ஆலமரத்தை ஏன் கும்பிடுகிறோம்? வேர்கள் பட்டுப்போனாலும் விழுதுகள் மரத்தை காக்கும் மாண்பு அதற்கு உண்டு என்பதால்தான். அது வயதான பறவைகளின் சரணாலயமும் கூட.

கல்வெட்டுத் தகவல்கள் ஏட்டளவிலும், தொல்லியலாளர்கள் அளவிலும் கல்விச்சாலைகள் மட்டத்திலும் இருந்த செய்திகளை தனது சரித்திர நாவல்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடையச் செய்தவர்   அமரர் கல்கி. அவரது ’பொன்னியின் செல்வன்’ எத்தனையோ சரித்திரக் கதாசிரியர்களுக்கு உந்துசக்தியாகக் திகழ்ந்துள்ளது. எனது இக்கதையும் அந்த ஆலமரத்தின் நூற்றுக்கணக்கான விழுதுகளின் ஒரு சிறு துளிரே. அந்த சரித்திர நாவலைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் இந்தக் கதைக்கான கரு என்னுள் உருக்கொண்டு வளர்ந்து, இன்று இந்த நாவலாக மலர்ந்துள்ளது. அதைப்பற்றி இங்கேயே விவரித்துவிட்டால் நாவலைப் படிப்பதில் சுவரஸ்யம் இராது. படித்து முடித்ததும் நேயர்களே அறிந்துகொள்வார்கள். சரித்திரத் தகவல்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ளும் எனது இந்த சிறிய முயற்சியை நேயர்கள் வரவேற்பார்கள் என பெரிதும் நம்புகிறேன். நன்றி.