Sunday, June 26, 2016

மெர்குரிப் பெண்ணே…(குறுங்கதை)

ன்று காலை மணி 8 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது...


ரகு முதல் வகுப்புப் படிக்கும் தன் மகள் மாலாவுக்கு காலில் சாக்ஸை அணிவித்தபடி பள்ளிக்கு அவசரப்படுத்திக் கொண்டிருந்தான் “சீக்கிரமா எந்திரின்னா கேக்கறியா?”


”படிச்சவன் பாட்டக்கெடுத்தான் எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்”. அந்தக்காலத்துப் பாட்டிமார் வெற்றிலை உரலை இடித்தவாறே ’சொலவடைகளை’ அள்ளிவிடுவார்கள். இடம், பொருள் பார்த்து ஏவப்படும் இந்த வாய்வழிச் சொல்லாடலுக்கு சக்தி மிக அதிகம்! 

இந்தக் காலத்து அம்மாயிப் பாட்டிக்கு இடிக்க உரல் ஒன்று தான் இல்லை. ஆனால் ஏவிவிடும் ’சொலவடைகள்’ நாட்டு வெடிதான்!  டிவியை விட்டால் வேறு பொழுது போக்கே இல்லாத அம்மாயிப்பாட்டி டிவியில் ஜோசியம் பார்த்துக் கொண்டே  இப்போது இடித்துக் காட்டியது தன் மகன் ரகுவை!


”ஏட்டுச் சுறக்கா எங்காவது கறிக்கு உதவுமா?” அடுத்த அணுகுண்டு பாட்டி வாயிலிருந்து  வெளிவந்தது.


”ஏம்மா இப்படி காலங்காத்தால உயிர வாங்கறே!” வெடித்தான் ரகு


”ஆமாடா நான் எது சொன்னாலும் உனக்கு வேப்பங்காயாத்தான் இருக்கும். உனக்குத் தெரியாதா? எதிர்த்த வீட்டு விமலாவ? அவ அப்பன் ஊர்ல இல்லாத படிப்பெல்லாம் படிக்கவச்சான். கடைசில அவ ஒரு மளிக கடைக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டா. இப்ப அவ கடையே கதின்னு கெடக்கா! இந்த பச்ச மண்ண காலங்காத்தாலே இப்படி இம்சப் படுத்தறயே? இவ என்னத்த நாளைக்கு சாதிக்கப் போறா?”


”அப்பா சொத்து பத்தெல்லாம் வித்துத்தான் என்னைப் படிக்க வச்சார். அந்த படிப்பு தான் இப்ப நமக்கு சோறு போடுது? படிப்பைக் குறை சொல்லாதம்மா?”


”நான் சொன்னது பொட்டப் பிள்ளைங்களப் பத்தி மட்டுந்தான்.. மாடில இருந்தாளே அர்ச்சனா, நல்லாத்தான் படிச்சா! நல்ல வேலைக்கும் போனா. கல்யாணத்துக்கப்புறம் அவ புருஷன் வீட்ல வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டங்க. கடைசியில் என்னாச்சு! எல்லாம் விழலுக்கு இரைத்த நீராத்தான் போச்சு.


”நீ கிணத்துத் தவளை மாதிரி இங்க சுத்தி நடக்கிறது தான் உலகம்னு  பேசாதம்மா”.


”பொம்பளப் புள்ளக்கி நாலு எழுத்து எழுதப்படிக்கத் தெரிந்தா போதாதா?. நான் பள்ளிக்கூடத்துப் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கினதில்ல. இப்ப எனக்கு என்ன குறைச்சல்? உன் பெண்டாட்டி வர்ஷாவும்தான் கல்யாணத்துக்கப்புறம் காச கரியாக்கி கம்யூட்டார் அது இதுன்னு…”


”நீ கடைசில சுத்தி சுத்தி எங்க வருவேன்னு எனக்குத் தெரியும்மா. ஔவைப் பாட்டியும் அந்தக் காலத்துல ஒன்ன மாதிரி ஒரு பொம்பளை தான். அவங்க யாரையும் படிக்க வேண்டாம்ணு சொல்லல. அவங்க சொன்ன ஆத்திசூடிதான் இன்னிக்கு அரிச்சுவடியா அத்தனை பசங்களும் பள்ளிக் கூடத்துல படிக்கிறங்க. அடபோம்மா. உன் வார்த்தைகள் எந்தக் காலத்திலும் அம்பலம் ஏறப்போறதில்லே.”


”சரிடா. உன் வழிக்கே வர்றேன். உன் பொண்ணு மாலாவைப் படிக்கவை. வேண்டாங்கல. உன் பொண்டாட்டிக்கு ஏழு கழுத வயதாகிறது. அவளுக்கு அவ அப்பன் வீட்ல இல்லாத படிப்பு இப்ப என்ன வேண்டிக்கிடக்கு? புள்ளய கவனிக்காம பொண்டாட்டிய சுத்தவிட்டுட்டு பொட்டப்புள்ள கால காலைல புடிச்சிட்டிருக்காம்பாரு வெட்டிப்பய!”


"அம்மா! சும்மா கத்தாதே! வர்ஷா காதுல விழுந்துடப் போகுது? அவ படிச்சது ஐஏஎஸ் னு ஒரு பெரிய படிப்பு..  தமிழ்நாட்டிலேயே முதல் ரேங்ல பாஸ் பண்ணீட்டா. இப்பத்தான் ரிசல்ட் வந்திருக்கு. கல்விக்கு வாழ்கையையே  மாற்றும் வல்லமை உண்டு புரிஞ்சுக்கோ!  நாளைக்கு இந்த ஜில்லாவுக்கு கலெக்டரா வந்து உன் வாயத்தான் முதல்ல தைக்கப்போறா பாரு!"


”அப்போதுதான் வெளியிலிருந்து வந்த வர்ஷா அத்தே! வீட்ட பாத்துக்கோங்க. நான் மாலாவ ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்.” என்றவாறே ஸ்கூட்டரைக் கிளப்பினாள் வருங்கால கலெக்டர் வர்ஷா.


”அம்மாயிப் பாட்டி வாயடைத்துப் போனாள். சொலவடை சொன்ன வாய் சொல்லத்துப் போய் மூடிக்கொண்டது .”  

------



மெர்க்குரிக் கிரகம் 450”சி வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வெகு அருகில் முதல் சுற்று வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. பெண்கள் வீட்டிலேயும் வெளியிலேயும் அம்மாயிப் பாட்டி மாதிரி அத்தனை பேரோட இடியையும் தாங்கிச் சகித்துக் கொண்டுதான் வாழ்க்கையில் முன்னேற வேண்டியுள்ளது.  வீட்டில் பெரியவங்க இச்செயல்களைப் பாராட்டா விட்டாலும் பேசாமலாவது இருக்கலாம்!