Sunday, August 16, 2009

தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்

அக்கால விஞ்ஞானமும் தற்கால விஞ்ஞானமும்:-


விண்வெளியில் தன் சுற்றுப்பாதையில் வினாடிக்கு 19 மைல் மின்னல் வேகத்தில் பாய்ந்து சூரியனைச் சுற்றி வரும் பூமி, அதேசமயம் 24 மணிநேரத்திற்கு ஒரு முறை தன்னைத்தானேயும் அதன் அச்சில் மணிக்கு 1037.56 மைல் வேகத்தில் சுற்றிக் கொள்கிறது (பூமத்தியரேகைப் பகுதி சுழற்சியின்படி). இச்சுழற்சியின் ஆற்றலானது பூமியின் வடதுருவம் எப்போதும் துருவநட்சத்திரத்தை நோக்கியே இருக்கும்படி வைக்கிறது. மாலுமிகள் இந்த இயற்கையின் அற்புதத்தை ஆதாரமாகக் கொண்டே அக்காலத்தில் கடலில் திசைகளை அறிந்து கொண்டனர்.


பிற்காலத்தில் வந்த மனிதன் இந்த உண்மையின் பின்னணியை ஆராயும் போது, பூமி அல்லது பம்பரம் போன்ற ஒரு பொருளின் சுழற்சியின் ஆற்றல் புறவிசைகளை எதிர்க்கும் சக்தி கொண்டது என்பதையும், இந்த ஆற்றலுக்குப் பெயர் ஜடத்துவம் (Inertia) என்றும், இந்த ஆற்றலானது அச்சுழலும் பொருளின் அச்சை எப்போதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கியே வைத்திருக்கும் என்ற தத்துவத்தையும் அறிந்து கொண்டான். புறவிசைகளைப் பொருள் எதிர்க்கும் இந்த ஆற்றலை (Gyroscopic Inertia) ஆதாரமாகக் கொண்டே மனிதன் திசைகளைக் கண்டறியும் கருவியான திசைமானியைக் (Gyroscope) கண்டுபிடித்தான். கப்பல்களுக்கும், ஆகாய விமானங்களுக்கும், சுழலிறக்கை விமானங்களுக்கும் திசையறிய இன்று இக்கருவிதான் உதவுகிறது. பறவையைக் கண்ட மனிதன் அதைப்போலவே இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறக்க முயன்று தோல்வியுற்றான். பின்னர் அறிவியல் ரீதியில் விமானத்தில் பறக்க அவனுக்கு லியர்னாடோடாவின்சி காலத்திலிருந்து ரைட் சகோதரர்கள் காலம் வரை சுமார் 400 ஆண்டுகள் ஆனது. திசைமானியைப் படைக்கவும் மனிதனுக்கு இதேபோல் பல நூற்றாண்டுகள் ஆயின.


இதன்படிப் பார்த்தால் அறிவியல் என்பது இவ்வுலகைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் அறியப்பட்ட விஷயங்களை வகைப்படுத்திக் கூறுவதையே முக்கியமாகக் கொண்ட ஒரு கலை என்பதை அறிந்துகொள்ளலாம். பல நாடுகளில் பல காலங்களில் அறியப்பட்ட இயற்கையின் ரகசியங்களை அலசிப் பார்த்து அவற்றினிடையே பொதுவாயுள்ள உண்மை களை அறிவியல் தொகுத்தளிக்கிறது. இவற்றைப் பரிசோதனைகள் வாயிலாக நிரூபித்த பின்னரே இவை பிறருக்கு எடுத்துக் கூறப்படுகின்றன.


இந்த இலக்கணப்படி மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை அறிவியல் வளர்ச்சி குறித்து ஓர் ஆய்வு நடத்தினால், 18ம் நூற்றாண்டுக்குப் பிறகே விஞ்ஞான அறிவு தழைத்து ஓங்க ஆரம்பித்தது தெரியவரும். இதன் பயனாக 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து சுமார் நூற்றைம்பது ஆண்டு காலம் மனிதகுலம் அடைந்த விஞ்ஞான வெற்றியானது, அவன் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிப் போட்டது. அது நீராவி எஞ்சின்கள், மின் சாதனங்கள் ஆட்சி செய்த காலம் எனலாம். அடுத்த கட்டமான பெட்ரோல், மின்னணு வியல் சாதனங்களின் ஆதிக்கம் கி.பி 2000 வரை நீடித்தது. இந்த கால கட்டத்தில் ஏற்பட்டுள்ள அறிவியல் வளர்ச்சியின் வேகமானது, அதற்கு முன் எப்போதும் கண்டிராத வளர்ச்சியின் வேகமாகும். இப்போதைய கணிப்பொறி யுகத்தில் அறிவியல் வளர்ச்சி என்பது அசுர வேகம் கண்டுள்ளது.


வண்டி மாடுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்த காலத்தில் ஒரு ஊரிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள ஓர் இடத்தை அடைய மனிதனுக்கு ஒரு நாளாவது ஆகும். பெட்ரோல் டீசல் வாகனங்களின் வருகைக்குப் பின் பயணநேரம் ஓரிரு மணிகளாகக் குறைந்தது. இன்றோ 24 மணி நேரத்தில் உலகையே வலம் வந்து விடுகிறோம். அறிவியல் வளர்ச்சியின் வேகம் அப்படி வளர்ந்து விரிவடைந்து இருக்கிறது..


நேற்று புதியது என்று சொல்லப்பட்ட தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி போன்றவைகள் இன்று பழமையாகி விட்டன. இன்று புதியது என்று பேசப்படும் கைபேசி, கணினி, மடிக்கணினி, கைக்கணினி, இணையபுத்தகம் போன்றவைகள் நாளை பழமையாகப் போகின்றது. அறிவியல் உலகம் அப்படி விரைந்து ஓடுகிறது.


நாம் சுவாசிக்கும் காற்றைப் போல் அறிவியல் பயன்பாடும் வளர்ச்சியும் நமக்கு அவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால் நம் இலக்கியங்களில் அறிவியல் தமிழின் வளர்ச்சியும் இதற்கு ஈடுகொடுக்கும் வேகத்தில் வளர்கிறதா? இது விவாதத்திற்குரிய அம்சம் மட்டுமல்ல, விரிவாக அலசி ஆராயப்பட வேண்டிய கேள்வியுமாகும்.


தமிழ் இலக்கியங்கள்:


பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் இலக்கியம் என்பதற்கு “விரிந்த பொருளில் இலக்கியம் என்பது, மக்கள்-இனத்தார் எழுதிய அனைத்தையும் குறிக்கும். மிகச் சுருங்கிய பொருளில் இலக்கியம் என்பது, அழகு உணர்ச்சி ததும்ப எழுதினவற்றையே குறிக்கும்என்கிறார். ஒரு சரித்திர நூல் அல்லது ஒரு விஞ்ஞான நூல் கூட இலக்கியமாகக் கருதப்படலாம். ஆனால் அப்பொழுது நூற்ப் பொருளையும், அதனைத் தெளிவுறுத்தும் முறையையும் மறந்து விடுகிறோம். நூலின் சொல்-அழகிலும் பொருள்-அழகிலும் நடை-அழகிலும் மனதைப் பறி கொடுத்து விடுகிறோம். இக்கலையழகுதான் இலக்கியத்தின் சிறப்புகளுள் முதன்மையானது. இது நமது உணர்ச்சியையும் பாவனா சக்தியையும் தொழிற்படுத்துகிறதுஎன்று தெளிவுபடுத்தியுள்ளார்.


தமிழ் இலக்கியம் ஆயிரக்கணக்கான வருடங்கள் சரித்திரப் பெருமை வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கிடமில்லை. அதன் தொன்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு குறைவில்லை என்பதைப் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். நம் இலக்கியத்தின் வளர்ச்சியைக் கற்போர் உள்ளத்திற்கு இன்பம் தரும் நூல்களை இன்பவியல் நூல்கள் என்றும், கற்போரின் அறிவை வளர்க்கும் நூல்களை அறிவியல் நூல்கள் என்றும் பகுத்தால், இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இன்பவியல் பகுதியில் பெற்றுள்ள வளர்ச்சியின் அளவு, அறிவியல் பகுதியில் பெறவில்லை என்பது தெளிவாகும். ஏன் இலக்கிய கர்த்தாக்கள் அறிவியல் பகுதியை அலட்சியப்படுத்தினார்கள்? இது நெடு நாட்களாகவே தமிழ் ஆர்வலர்களைச் சங்கடப்படுத்தி அவர்கள் மனதை நெருடிவரும் ஒரு கேள்வியாகும்.


நமது பழம் பெரும் நூல்கள்யாவும் மேற்கண்ட இலக்கண விளக்கத்திற்கு இயைந்து, இலக்கிய இன்பத்தைக் குறியாகக் கொண்டவையே ஆகும். தமிழ் மக்கள் நாகரீகத்திலும் பொருளாதார நிலையிலும் சிறப்புற்று இருந்ததால் இன்பியல் இலக்கியங்கள் பெருகினவா, அன்றி இலக்கிய வளர்ச்சி அரசர்களையும் குறு நில மன்னர்களையும் சார்ந்து இருந்ததால் பெருகினவா என்பதும் ஆராய்ச்சிக்குரிய ஒரு விடயம்.


வால்மீகியின் பேரிதிகாசத்தை தமிழில் தந்து தாய் மொழிக்குப் பெரும்புகழ் தேடித்தந்தான் கம்பன். ஆனால் சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரத்தையோ, ஆரியபட்டாவின் வான சாஸ்திரத்தையோ, அவன் கணிதவியலையோ தமிழுக்குக் கொண்டுவர யாருக்கும் தோன்றவில்லை. காவிரிப்பூம்படினத்தின் அதிஅற்புத அழகையும் துறைமுகத்தில் வந்து நிற்கும் விதவிதமான வடிவங்கள் கொண்ட கப்பல்களையும், துறைமுக அதிகாரிகள் சுங்கம் வசூலிக்கும் தோற்றத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பட்டினப்பாலை, அதன் மறுபக்கமான பெரும் மரக்கலங்களைப் படைத்த கரங்களின் திறமையையோ, அக்கலங்களைச் செலுத்திக் கடலை வென்ற தோள்களின் ஆற்றலையோ பற்றி விளக்கும் குறிப்புகள் ஏதும் இல்லை. இதே போல் மேற்கில் மாலத்தீவிலிருந்து, ஈழம் உட்பட, கிழக்கில் கடாரம் வரை தென்திசைக் கடல் எங்கும் புலிக்கொடி பறக்கச் செய்து புகழ் பெற்ற சோழப் பேரரசின் பெருமைமிக்க மன்னர்கள், அச்சரித்திரத்தின் வெற்றிக்கு அடிப்படையான கடற்படையின் ஆற்றல் பற்றியோ, அதன் தொழில் நுணுக்கத்தை விளக்கும் சுவடிகளையோ, செப்பேடுகளையோ, கல்வெட்டுகளையோ, அறிவியல் சார்ந்த எந்த ஒரு வரலாற்றுத் தடயங்களையோ தம் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லவில்லை என்பதும், அவற்றைக் கிடைக்கச் செய்வதில் அக்கறை கொள்ளவில்லை என்பதும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.


மேலை நாடுகளின் துறைமுக நகரங்களில் மரக்கலன்கள், கடல்சார்ந்த அருங்காட்சியகங் கள் (Maritime Museum) இல்லாத துறைகளே கிடையாது எனலாம். லண்டன் கிரீன்விச், தேசீய கடல்சார் அருங்காட்சியகமும், பிரான்சின் மார்சைல்ஸ், துலோன் துறைகளின் அருங்காட்சியகமும் உலகப் பிரசித்தி பெற்றவைகள். அங்கு ரோமனியர்கள் காலத்து மரக்கலன்களில் இருந்து, ஜேம்ஸ் குக் போன்ற பிரசித்தி பெற்ற கடலோடிகள் பயணித்த கப்பகள், அவர்கள் அனுபவங்கள், உலகப்போர்களில் பங்குபெற்ற போர்க் கப்பல்களும், அவற்றின், மாதிரிகளும், ஓவியங்களும் இருக்கின்றன. நெப்போலியன் காலத்து பிரசித்தி பெற்ற கடற்படை யுத்தங்களில் பங்குபெற்ற கப்பல்கள், ஏன் நெப்போலியனின் பூத உடலை செயிண்ட் ஹெலினாவிலிருந்து அவன் பிறந்த மண்ணிற்கு சுமந்து வந்த மரக்கலம் கூட கார்சிகாதீவின் அஜாய்சியோ துறைமுக அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது. நம்மிடம் அப்படி குறிப்பிடும்படி ஏதும் இல்லை.


இப்படிக் கடந்த பல நூற்றாண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகி னாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ் மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப்பட்டதாகவோ அறிகுறிள் எவையும் காணப் படவில்லை. அறிவியல் சார்ந்த நூல்கள் பெருமளவில் வெளிவராத போது அத்துறை சார்ந்த கலைச் சொற்களின் வளர்ச்சியும் தேவையும் குறைவாகவே இருக்க முடியும்.


தற்கால அறிவியல் கல்வி:


தற்போது தமிழகத்தில் அறிவியல் கல்வி நாள்தோறும் புதுப் பொலிவு பெற்று அறிவியல் வீதியில் பவனி வருவது என்னவோ உண்மைதான். ஆனால் அவைகள் தமிழில் அல்ல. மாறாக ஆங்கிலத்தில்! இந்த நிலைக்கு தமிழகத்தின் பள்ளி கல்லூரிகளில் இன்னும் ஆங்கிலம் கோலோச்சுவது ஒரு முக்கிய காரணம். உயர் நிலைப்பள்ளி வரைத் தமிழ் போதனா மொழி என்ற நிலையில் அறிவியல் பாடங்கள் இருந்த போதும், இன்னும் ஆங்கிலமே அரசு புரிகின்றது. காரணம் புற்றீசல் போல் ஆங்கில வழி தனியார் கல்வி நிறுவனங்கள் முளைத்து வருவதும், தமிழ் போதனா வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். தமிழ்வழியில் பொறியியல் படிப்புகள் தொடங்கியிருந்தாலும், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைசார்ந்த படிப்புகளைத் தாய்மொழித் தமிழில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற சிரத்தை இங்கு யாருக்கும் இல்லை. தமிழிலே மேற்படிப்புப்பயின்ற பட்டதாரிகள் ஏற்பட்டால் தான், நீதி நிர்வாகம், விஞ்ஞான ஆராய்ச்சி இவற்றை தமிழில் சிறப்புடன் நடத்தி முன்னேற முடியும். இந்திய அரசியல் சட்டம், மத்தியில் ஒரு ஆட்சி மொழியையும், 14 பிராந்திய மொழிகளையும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்ட போதும், இன்னும் ஆங்கிலம் அரசு புரிவதால் அதை அகற்றுவதற்கு நடுவண் அரசும், மாநில அரசும் அச்சமுறுகின்றன. இந்த அச்சம் நீடிக்கும் வரை இந்திய மொழிகளின் வளர்ச்சி என்பது பெயரளவிற்கே இருக்க முடியும்.


ரஷ்யா, சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் உயர்நிலைக் கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் தாய்மொழியில் போதிக்கப்படுவதால் தான் அந்நாடுகள் அதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆங்கிலமும் அதே மாதரியான ஒரு மொழியே. அதுவும் கிரேட் பிரிட்டன் என்று சொல்லப்படும் அந்த நிலப்பரப்புக்குள்ளேயே ஆங்கிலம், ஐரிஷ், ஸ்காட்டிஷ் வேல்ஷ் ஆகிய நான்கு மொழிகள் பேசப்பட்டு, இன்று ஐரிஷ் பேசப்பட்ட பகுதி ஐயர்லாந்து என்று தனி நாடாகி விட்டது.


இங்கே ஒன்றைத் தெளிவுபடுத்துவது அவசியம். ஆங்கிலம் அறவே நம் கல்வியில் இடம் பெறக்கூடாது என்றோ, ஆங்கிலத்தில் பல அரிய கருத்துக் களஞ்சியங்கள் இருப்பதைப் பற்றி நமக்கு எவ்வித அக்கறையும் தேவையில்லை என்பதோ இதற்கு பொருள் இல்லை.


அம்மதிரியான புதுக்கருத்துக்கள் எந்த மொழியில் உருவானாலும், மொழியியல் வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர் பெருமக்கள் துணையுடன் அவற்றைத் தமிழுக்கு கொண்டு வரவேண்டும். தமிழ் நாட்டவர் தமிழ்மொழி வாயிலாகத்தான் அப்புதுக் கருத்துக்களைக் கற்கவேண்டும். அப்போதுதான் நாம் அறிவியல் நுட்பங்களைத் தெளிவாகவும், சரியாகவும் புரிந்துகொள்ள முடியும். தமிழ் மொழியும் புதுப்புது அறிவியல் சொற்களில் செழுமை பெற்றுத் திகழ முடியும்.


இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு தமிழ் அறிஞரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் தனிநாயக அடிகளைச் சொல்லலாம். தமிழ் ஈழம் யாழ்ப்பாணம் அருகிலுள்ள கரம்பன் என்ற கிராமத்தில் 1913ல் அவதரித்தவர் தனிநாயகம் அடிகள். ஊர்காவற்துறையில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணத்தில் பள்ளிக் கல்வியையும், கொழும்பில் கல்லூரிக் கல்வியையும் முடித்த அடிகளார், தமிழ் நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பிறகு லண்டனில் ஆய்வுப்படிப்பில் கலாநிதிப் பட்டம் பெற்றார். தமிழுடன் ஆங்கிலம், இலத்தீன், ஸ்பானிஷ், பிரஞ்சு, போர்துக்கீஸ் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார் அடிகளார். தமிழ்நாட்டில் வடக்கன்குளத்தில் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியைத் துவக்கிய அடிகள், பிறகு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மலாய்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய கல்வியாய்வுகள் துறையில் தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் பாரீஸ், நேப்பிள்ஸ் போன்ற இடங்களிலும் தனது பணியைத் தொடர்ந்தார்.


அவரது அனைத்துலகப் பார்வை அறிவியல் பூர்வமானது. அவருடைய ஒப்பிடுதலும், தர மேம்பாட்டினை அறிதலும் அவரது விமர்சனப்பார்வைக்குச் செழுமையூட்டின. தமிழர் களின் நாகரீகத்தையும், இலக்கிய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிற மொழி அறிஞர்களுக்கு எடுத்துச் சொல்வதும், பிறமொழிகளில் இருந்த கருத்துக் கருவூலங்களை, வளங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து வழங்குவதும் அவர் வாழ்க்கையின் லட்சியமாய்க் கொண்டிருந்தார். தமிழ் இலக்கியப் பரப்பினுக்குள் சுருங்கியிருந்த தமிழாய்வுப் போக்கினை, திறனாய்வு என்ற புதிய தளத்திற்கு விரிவுபடுத்தியவர் அடிகளார். உலகத்தமிழ் மாநாடுகளில் பங்கேற்று அன்னைத் தமிழுக்குப் பெருமை சேர்த்த பேரறிஞர் அவர். இம்மாதரியான அறிஞர் பெருமக்களின் துணையுடனே பிறமொழிகளில் உள்ள புதுப் புது அறிவியல் கருத்துக்களைத் தமிழுக்குக் கொண்டு வரும்போது தமிழ்மொழியில் அறிவியல் கலைச்சொற்கள் வளர்ச்சியுறும்.


புத்தம் புதிய கலைகள் பஞ்ச

பூதத்தின் நுட்பங் கள்யாவும்

மெத்த வளருது மேற்கே-அந்த

மேன்மைக் கலைகள் தமிழினிலில்லை


என்ற மகாகவி பாரதியின் உள்ளக் குமுறலையும் நாம் போக்க முடியும். இதை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் யாரும் கிடையாது. ஆனாலும் செயல்படுத்துவதில் ஏனோ இன்னும் ஒரு தயக்கம்!


கலைச்சொல் ஆக்கம்:


நாம் உலகநாடுகளுடன் போட்டியிட வேண்டுமானால் அறிவியல் திறன் மட்டும் போதாது. அதனை வெளிப்படுத்தும் மொழித்திறனும் வேண்டும். அதற்கு அடிப்படைதான் அறிவியல் கலைச்சொற்கள் என்கிறார் பேராசிரியர் ஜே. ஸ்ரீசந்திரன் அவர்கள்.


இதற்கு அறிவியல் தெளிவும், தமிழ்ப் புலமையும் எழுத்து வன்மையும், பன்மொழி அறிவும், நடை முறை வழக்கும் அறிந்த வல்லுநர் குழு அக்கறையுடன் ஓயாது உழைக்க வேண்டும். வாழ்க்கையில் பல துறைகளில் இருப்போருடைய ஆலோசனையைக் கவன மாய்க் கேட்டுப் பயன்தரத்தக்க கருத்துக்களை ஏற்க வேண்டும் என்கிறார் அவர். மேலும் அவரவர்கள் தங்கள் ஆய்வின் முடிவை அரசிற்கு எடுத்துரைக்க வேண்டும். தயக்கம் இல்லாமல் பொதுமக்களுக்கு கலைச்சொற்கள் புரியும் வண்ணம் விளக்க வேண்டும் என்கிறார் அவர்.


எல்லா மொழிக்கும் இயல்பாகவே ஆய்வுத்திறன் இருந்து விடுவதில்லை. அதற்கு மொழித்திறனும், சிந்தனைப்புலமும் தேவை. தமிழுக்கு அத்தகுதி இருப்பது சிறப்பு. எனவே அறிவியல் தமிழ் ஊடாகவே தமிழின் ஆய்வுத்திறனை வளர்த்து பயன்படுத்த ந்ம்மால் முடியும். ஆனால் நாம் இன்னும் அதைச் செயல்படுத்த முனையவில்லை.


தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழிலதிபர்களுக்குக் குறைவில்லை. அகப்பை செய்யும் தொழிற்கூடத்திலிருந்து, அணுமின் நிலையம், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் வரை தொழில் நுட்ப அறிஞர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும் இவற்றின் வளர்ச்சி நம் தாய்மொழித் தமிழில் இல்லை எனும்போது நெஞ்சைப் பிழிகின்றது. நமக்குத் தெரிந்த அறிவியல், நமக்குத் தெரிந்த தொழில் நுட்பம், ஆதியிலிருந்தே சிந்தனை வளமிக்க நம் தாய் மொழியில் இவைகள் இல்லை என்பது தமிழ் மொழியின் வறிய நிலையைத்தான் பறை சாற்றுகின்றது.


தமிழ்மொழி வளர்ச்சிக்கும், கலைச்சொல் உருவாக்கத்திற்கும் தமிழகஅரசு போதிய கவனம் எடுத்து வந்துள்ள போதிலும், மால்கம் ஆதிசேஷையா அவர்களுக்குப் பின் இம்முயற்சியில் பெரிதும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அறிஞர் பெருமக்கள் ஒரு சிலரே! அவர்களில் மணவை முஸ்தபா, டாக்டர் வா.செ.குழந்தைச்சாமி போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.


மணவை முஸ்தபா அவர்கள் தம் 40 ஆண்டுகால உழைப்பைத் தமிழ் வளர்ச்சிக்காக, குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழின் செம்மொழிக் கனவை நனவாக்குவதில் அரும்பாடுபட்டவர். அறிவியல் தமிழில் இளையர் அறிவியல் களஞ்சியம் அல்லாது, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் கணினி போன்ற எட்டு துறைகளில் அறிவியல் தமிழ் சொல்லகராதிகளையும், உருவாக்கியுள்ளார். அரசுத் துறைகள், பத்திரிகைகள், ஊடகங்கள், பள்ளி, கல்லூரி பாட நூல்கள், துறை சார்ந்த நூல்கள் என அதன் பயன்பாடு விரிந்த போதும், இந்த பயன்பாட்டு அளவு, ஆங்கிலத்துடன் ஒப்பிட்டால் மிக மிகக் குறைவானதே. உருவான கலைச்சொற்களும் முழு அளவில் பயன் படுத்தப்படாமல் இன்னும் பல ஏட்டளவில் தான் உள்ளன. போதிய அளவில் பொது மக்களிடம் போய்ச் சேரவில்லை என்பதே உண்மை. இன்னும் நானோ, எந்திர மனிதன், செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) போன்ற எத்தனையோ புதிய துறைகளில் கலைச்சொல் ஆக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஆனால் ஆங்கிலத்திலோ டெர்மினேட்டர் வரிசைப்படங்கள், தி மாட்ரிக்ஸ், எ ஸ்பேஸ் ஒடிசி போன்ற செயற்கை அறிவுத் திறனை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களும், நூல்களும் எத்தனையோ வந்து விட்டன.


எனவே கலைச்சொல் உருவாக்கம் புதுப் புது துறைகளுக்கு விரிவதோடு, அதன் பயன்பாடும் அதற்குத் தகுந்தாற்ப் போல் வளர வேண்டும். அப்போதுதான் மொழி சிறப்படையும்.

அறிவியல், தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் உருவாக்குவதைச் சாதாரண மொழி பெயர்ப்புப் பணியாகவே பலரும் கருதுகின்றனர். ஒவ்வொரு அறிவுத்துறையிலும் பயன் படுத்தப்படும் கலைச்சொறகள் அல்லது துறைச் சொற்களுக்கு நேரான தமிழ் சொற்களை உருவாக்கி விடுவோமானால், பிறகு ஒவ்வொரு துறையிலும் தமிழில் நூல்கள் உருவாகி விடும் என நம்புகின்றனர். நம்மை எதிர்நோக்கியிருக்கும் பணியை நாம் சரியாக எடை போடவில்லை. அறிவியல் தமிழை உருவாக்குவது இயன்ற பணியேயாயினும் அது பலர் நினைப்பதுபோல் எளிய பணி அன்று. வெறும் மொழி பெயர்ப்புப் பணியும் அல்ல. என டாக்டர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் கூறுவது சிந்தனைக்கு உரியது.


கலைச்சொல் ஆக்கம்பற்றிக் டாக்டர் குழந்தைச்சாமி அவர்கள் மேலும் குறிப்பிடும் போது தமிழகத்தில் வழக்கில் இருக்கும் சொற்கள், தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டி ருக்கும் சொற்கள் தமிழ் அகர முதலி தரும் சொல் தொகுப்பு, இவற்றை இயன்ற வரை முழுமையாக மணக்கண் முன் நிறுத்தி, நமது இன்றைய, எதிர்காலத் தேவைகளையும் எண்ணி, இயன்றவரை இருக்கின்ற சொற்களின் அடிப்படையில் எளிய துறைச் சொற்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இது எவ்வளவு பெரிய விற்பனர் ஆயினும், ஒரு துறையினர் செய்யும் பணி அல்ல. பல பணித்துறையினர் பங்களிப்புத் தேவைப்படும். என்கிறார்.


இப்படி எண்ணற்ற இடர்பாடுகளுக்கிடையில் உருவாக்கப்படும் கலைச்சொற்கள் கூட சரி வரப் பயன்படுத்தப்படாத போது அது விழலுக்கிறைத்த நீர் போலத்தான் ஆகிவிடுகின்றது. கலைச்சொற்களுடன் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் அளவிற்கு தமிழ் மொழித்திறன் வளர்ச்சி அடைந்திருந்தும், எழுத்தாளர்களும் வெளியீட்டார்களும் அறிவியல் நூல்களில் போதிய அக்கறை செலுத்தாததும் இந்த அவல நிலைக்கான காரணம் எனலாம். அறிவியல் நூல்கள் மெதுவாகவே விற்பனையாகும். உற்பத்திச் செலவும் அதிகம். இது அவசரயுகம். ஆகையால் குறைவான உழைப்பில் துரிதமாகப் பலனடையத் துடிப்பவர்களே அதிகம். எனவே சுலபமாகவும் துரிதமாகவும் விற்பனையாகும் இன்பவியல் நூல்களை வெளி யிடவே எழுத்தாளர்களும் வெளியீட்டாளர்களும் பெரிதும் விரும்புகின்றனர்.


தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சி:


நமது இலக்கியங்கள் யாவும் இன்பியல் பகுதியினாதாயிருப்பினும் அறிவியல் பற்றி நம்மவர்கள் யாதுமறியாதவர்கள் என்றும் கூறிவிட முடியாது. இயற்பியலில் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. அண்மைக்கால இயற்பியல் வரலாற்றில் அற்புத வளர்ச்சிபெற்று விளங்குவது அணுவியல்.


மேலை நாடுகளில் ஆரம்ப காலத்தில் (கி.மு 400) டெமக்ரிடஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, பொருட்களின் அடிப்படை அலகு அணு என்றும், அதைப் பிளக்கவே முடியாது என்றும் கூறினார். அவருக்குப் பின்னால் வந்த அரிஸ்டாட்டில் இந்த கோட்பாட்டை முற்றிலும் நிராகரித்தார். ஆனால் ஐசக் நியூட்டன், கலிலியோ போன்றோர் டெமக்ரிடசை ஆதரித்தாலும் மேற்கொண்டு அவர்கள் புதிதாக அணுவியலில் ஏதும் சொல்லவில்லை.


கி.பி 1700கள் ஐரோப்பாவில் தர்க்க அறிவு மலர்ந்த காலம் (Age of reasoning) என்பர். இந்த கால கட்டத்தில் உதித்த அறிவுப்பூர்வ சிந்தனைகள்தான் பின்னாளில் விஞ்ஞான ஆராய்சிக்கு வித்திட்டது எனலாம். கி.பி 1750ல் அப்போதைய ஒட்டமான் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியதும், இப்போதைய குரோசிய நாட்டைச் சேர்ந்தவருமான ரூட்ஜர் போஸ்கோவிச் என்பவர் முதன் முதலில் அணுவைப் பிளக்க முடியும் என்ற கருத்தை முன் வைக்க, 1897ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜோசப் ஜான் தாம்சன் என்பவர் அக்கூற்றை தன் ஆராய்சிகள் மூலம் வழிமொழிந்து உறுதிப்படுத்தினார்.


இந்த காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகம் முழுக்க பரவியிருந்த காரணத்தால் அணுவியல் பற்றிய இந்திய, சீன, அரேபிய சிந்தனைகள் ஆங்கிலத்தில் இயல்பாகவே ஊடுருவி இருந்தன. தாம்சனின் மாணாக்கர் ஏர்னஸ்ட் ரூதர்போர்டு 1911ல் இன்னும் ஒரு படி மேலே போய், அணுவின் கட்டமைப்பு மாதிரி ஒன்றையே வடிவமைத்தார் அது ஏறக்குறைய நமது சூரிய குடும்பம் பேன்றே இருந்தது. அம்மாதிரியின் மையத்தில் உள்ளது உட்கரு (Nucleus) என்றும், அணுவிற்கு நிறை அளிப்பதும் அதுவே என்றும் கூறினார். உட்கருவை மின் ஆற்றல் கொண்ட இம்மிகள் (Electrons) பல மின்னல் வேகத்தில் சுற்றி வருகின்றன என்றும் எடுத்துரைத்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர் தான் அணுவியலின் தந்தை என்று போற்றப்படுபவர்.


பௌதீக விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வருகைக்குப்பின் அணுவைப் பிளக்க முடியும் என்ற கருத்து உறுதிப்பட்டு, டிசம்பர் திங்கள் 2ம் நாள், 1942ல் சிகாகோ பல்கலைக் கழகத்தில் அணுவியல் விஞ்ஞானி என்ரிகோ பெர்மி, அணுவைப் பிளந்து அணுவில் அண்டம்! அண்டத்தில் அணுத்திரள்! என்ற ஐன்ஸ்டீனின் பிரபஞ்ச சூத்திரத்தை உலகறியச் செய்தார். அணுவிற்குள் நாம் ஒரு சின்னஞ் சிறிய சூரிய மண்டலத்தையே பார்த்து விடலாம்! சூரியனை, பூமி முதலான கிரகங்கள் சுற்றிச் சுழன்று வருவது போலவே, அணுவிற்குள் அதன் உட்கருவைச் சுற்றி மின் துகள்களான எலக்ட்ரான்கள் பல சுற்றுப்பாதைகளில் நம் கற்பனைக்கெட்டாத வேகத்தில் (பத்து லட்சத்தில் ஒரு பங்கு வினாடியில் லட்சக்கணக்கான சுற்றுகள்) சுற்றி வருகின்றன என்பதைப் பெர்மியின் ஆராய்ச்சி உறுதிப்படுத்தியது.


அதைத் தொடர்ந்து நடந்த ஆராய்ச்சிகள், ஒரு இராட்டினத்தில் அதன் கம்பத்தின் உச்சியில் பிணைக்கப்பட்ட கயிறு நம்மை இராட்டினத்தைச் சுற்றி சுழல வைக்கின்றன. அதே போல் நம் பால்வீதி உட்பட நட்சத்திரக் கூட்டங்கள் (Galaxies) அனைத்திலும் உள்ள லட்சக்கணக் கான நட்சத்திரங்கள், அக்கூட்டத்தின் மையத்தை ஆதாரமாகக் கொண்டே சுற்றி சுழன்று வருகின்றன. அண்டத்தின் மையத்தை ஆதாரமாகக் கொண்டே அத்தனை நட்சத்திரக் கூட்டங்களும் ஒரு நீர்க்குமிழியின் மேற்பரப்பில் மிதப்பது போல் மிதந்து செல்கின்றன என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளைப் படிப் படியாகத் தெளிவுபடுத்தின.


ஆனால் அணுவைப்பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்திருந்தவன் தமிழன். இதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதோடு தமிழ் அறிஞர்கள் ஆதியிலேயே அணுவைப் பிளக்க முடியும் என்ற ஒத்த கருத்து உடையவர்கள். மேலை நாட்டினரைப் போல் அதில் எந்த தடுமாற்றமும் கிடையாது.


அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்என்ற அவ்வையின் பாடல் வரிகள் மூலமும்,


அவனின்றி ஓர் அணுவும் அசையாதுஎன்ற வழக்குச் சொல்லும்,


அணுவைச் சத கூறிட்ட கோணினும் உளன்.


இல்நுழை கதிரின் துன் அணு ஒப்ப” (பரந்த அண்ட கோள எல்லையில் அமைந்த எத்தனையோ கோடானு கோடி தூசுகளில் இந்த உலகமும் ஒரு தூசு)


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் (உலகம் உருண்டையானது)


என்ற மாணிக்கவாசகரின், பாடல் வரிகளும் நாம் அணுவியலில் எவ்வளவு பழமை யானவர்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றன.


பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் விரிந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விழைந்தாய் போற்றி


என்று அண்ட வெளியில் நிகழ்ந்த பெரும்பிரளயத்தின் போது உண்டான வாயுக்கள் எரிந்து குளிர்ந்து பின் நீர், நிலம் உருவானதாக கூறும் பஞ்சபூத அமைப்பின் தத்துவத்தை, பிரபஞ்ச சூத்திரத்தை, 12ம் நூற்றாண்டிலேயே மாணிக்கவாசகர் சொல்லிச் சென்றுள்ளார். தமிழ்நாடு தனித்திருந்து நம் மன்னர்கள் இந்த சிந்தனைக்கு உரமேற்றியிருந்தால் என்ரிகோ பெர்மி சாதனையை அவருக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்மால் நிகழ்த்தியிருக்க முடியும்! பின்னாளில் நமது இந்த சிந்தனை தொடராததற்கு, அடுத்து வந்த நூற்றண்டுகளில் ஆரம்பமான தமிழ் மொழியின் அடிமைச் சருக்கம், இன்று வரை தொடர்வதே மூல காரணம் எனலாம். தமிழகத்தை அடுத்து ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை, கட்டிடக்கலை, போன்ற துறைகள் ஓரளவு வளர்ந்தன. பின்னாளில் வந்த இஸ்லாமியர்கள், ஆட்சிக்காலத்தில் வாள், வேல், ஈட்டி இவற்றிற்குப் பதில் பீரங்கி முழக்கம் திக்கெட்டும் ஒலித்தன. ஆக்கபூர்வ அறிவியல் வளர்ச்சிப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை. மராத்தியர்கள் காலத்தில் தஞ்சையில் தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகள் நூலகம் அமைத்து பாதுகாக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் அறிவியல் சிந்தனையும் பயன்பாடும் தமிழ்நாட்டில் மீண்டும் எட்டிப் பார்த்தன. அதுவும் ஆங்கிலம் என்ற ஜன்னல் வழியாக.


இரண்டு நூற்றண்டுகளுக்கு மேல் தமிழ் ஆங்கிலத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஆங்கிலப் பெருவெள்ளம் தமிழ்க் குலத்திலே பாயத் தொடங்கியதால் ஏற்பட்டுள்ள சில நன்மைகளில் விஞ்ஞான அறிவும் ஒன்றாகும். ஆங்கில பயிற்சியால் தமிழ் மக்கள் விஞ்ஞான அறிவைப் பெற்றார்கள் என்றாலும், தமிழ்மொழி அதனால் வளம் பெறவில்லை. அறிவியல் நூல்கள் அருகியே இருந்தன. ஆங்கிலம் கற்ற சில அறிஞர்கள் தமிழில் அறிவியல் நூல்களைப் படைக்க முயன்றாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இப்போது நிலைமை சற்று மாறி தமிழில் அறிவியல் நூல்கள் வரத் தலைப்பட்டுள்ளன. இந்திய ஆட்சிப் பணித்துறையில் கூட தமிழ்வழி மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால் தொலைக்காட்சி, கணினி போன்ற ஊடகங்களின் வருகையால் மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்து வருகிறது. இந்தக் குறை பாட்டையும் நாம் சரிசெய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


இங்கிலாந்து நாட்டிலேயே ஒரு கால கட்டத்தில் மர்ம நாவல்கள், துப்பறியும் கதைகள் போன்றவற்றில் மூழ்கியிருந்த மக்களைத் திருப்பி, அறிவியல் நூல்களை படிக்க வைக்க ஒரு இயக்கமே தோன்றி 30 ஆண்டுகள் வரை அந்த இயக்கம் செயல்பட்டதாம். அறிவியல் நூல்கள் மலிந்த அந்நாட்டிலேயே நிலைமை இப்படி என்றால் நம் நாட்டைப் பற்றிக் கேட்பானேன்.


சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்


என்று மகாகவி பாரதி நமக்கு கட்டளையிட்டு ஆண்டுகள் 80 உருண்டோடி விட்டன. அக்கவியரசின் ஆசைப்படி இங்கு கொண்டு வந்து சேர்ப்பவர்கள் யாரும் இல்லை என்றாலும், புலம் பெயர்ந்த தமிழர்களும், வெளிநாடு வாழ் தமிழர்களும் அவர்கள் எழுத்துக்கள், வலைத்தளங்கள், வலைப்பூக்கள், வலைமனைகள் வாயிலாக அவர்கள் வாழும் இடத்திலிருந்தே அன்னைத் தமிழுக்கு ஆற்றி வரும் தொண்டு மகத்தானது. அதுவும் கணினி சார்ந்த துறைகளில் இன்று ஓரளவிற்கு அறிவியல் தமிழ் பெற்ற வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பையும், அர்பணிப்பு உணர்வையும் பாராட்டாமல் இருக்க முடியாது. தாயகத்தில் அசாதாரண சூழ்நிலைகளினால் ஏற்பட்டு வரும் அறிவியல் தமிழ் வளர்ச்சியின் பின்னடைவை ஈடு செய்வது, அவர்கள் உழைப்பே என்றால் மிகையிலை.


உலோகங்கள் மெருகு ஏற ஏறத்தான் பளிச்சிடும். இறைக்க இறைக்கத்தான் மணற்கேணி ஊறும். அதுபோலத்தான் மொழியும். அதன் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்கத்தான் கலைச் சொற்கள் ஆக்கம் பெறும்.


அறிவியல் பாதையில் எனது நூல்கள்:


என் முதல் நாவல் கனவுக் கிராமம், புலம்பெயர்ந்த சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டே எழுதப்பட்டது. கிராமங்கள், பட்டிதொட்டிகள் எங்கும் அறிவியல் மணம் வீசவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. அறிவியல் பயன்பாடு, கலைச் சொல் ஆக்கம் என அதன் நோக்கம் பரந்து விரிந்த ஒன்று என்ற காரணங்களுக்காவே தமிழக அரசு விருது பெற்றது.


எனது அடுத்த படைப்பான இங்கேயும் ஒரு சொர்க்கம் நாவலிலும் முடிந்த அளவு அறிவியல் சொற்களையும், நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் இது பற்றி தமிழறிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் குறிப்பிடுகையில் கலைச் சொல் ஆக்கம் கதையின் நோக்கம் இல்லையாயினும் ஆங்காங்கு ஆங்கிலத்தில் சொல்லப் படுகின்ற விஞ்ஞான கலைச்சொற்களுக்கு தகுந்த முறையில் தமிழில் உருவாக்கி பயன் படுத்தியிருக்கும் முறைமை பாராட்டுதலுக்குரியது என்று கூறியுள்ளார்.


அடுத்த எனது படைப்புகள் ஆகாயவிமானம் பறக்கும் விதம், சுழலிறக்கை விமானம் போன்ற சிறுவர் இலக்கிய நூல்களை உருவாக்கியபோது கலைச் சொற்களுக்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். என் தேடலில் Aerodynamic என்பதற்கு காற்றியக் கவியல் என்றும், Rudder என்பதற்கு சுக்கான் என்றும், Fin என்பதற்கு செதில் என்றும் Anchor என்பதற்கு நங்கூரம் என்றும், ஹெலிகாப்டர் என்பதற்கு உலங்கூர்தி என்று ஒரு சில வார்த்தைகளுக்கே கலைச்சொற்கள் கிடைத்தன. ஹெலிகாப்டருக்கு அறிவியல் ரீதியாக சுழலிறக்கை விமானம் என்பது பொருத்தமாய் இருப்பதால் அப்படியே பயன்படுத்தி இருக்கிறேன். வார்த்தைகளோடு பயன்பாடும் இருக்குமானால் புரிந்துகொள்வதும் எளிதாகின்றது.


Aileron – இறக்கைத் துடுப்பு

Beacon – சுழலொளி

Control Column - கட்டுப்பாடுக் கைபிடி.

Elevator உயர்த்தி

Flops - உள்ளிறக்கை

Stabilizer - நிலைநிறுத்தி

Rotor சுழலி

Rotor shaft - சுழல்தண்டு

Rotor Blade சுழல்தகடு


என இந்நூற்களில் 150 வார்த்தைகளுக்கு மேல் கலைச்சொற்களை பயன்படுத்தி இருக்கிறேன். டாக்டர் குழந்தைச்சாமி அவர்கள் குறிப்பிடுவதுபோல் இப்படி ஒரு துறையில் எண்ணற்ற எழுத்தாளர்களால் எண்ணற்ற நூல்கள் உருவாகும் போதுதான் மக்களிடையே வார்த்தைகள் பரிச்சையப்படும்.


மேலைநாடுகளில் அறிவியல் வளர்ச்சியின் வேகம்:


மேலை நாடுகளில் இன்று ஆராய்ச்சியில் இருக்கும் ஒரு கருத்துக்கூட, உருவாக்கம் பெற்று நாவலாகவோ, திரைப்படமாகவோ வந்து அக்கருத்தை உலகறியச் செய்து விடுகின்றன. உதாரணமாக சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்த ஏஞ்சல்ஸ் & டெமோன் திரைப்படக் கதையின் கருவைச் சொல்லலாம்.


பொதுவாக எதிர்வினை பருப்பொருட்கள் (Antimatter), வெடிக்கும் தன்மையின் உச்ச பட்சம் எனலாம். இது பருப்பொருளோடு (Matter), மோத நேர்ந்தால் பெருவெடிப்பு வெடித்து பிரளயமாகும். அப்போது ஏற்படும் கதிரியக்கத்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து நிர்மூலமாகிவிட, அங்கு அளவிட முடியாத சக்தியின் ஆற்றல் வெளிப்படும்.என்பது பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தத்துவங்களில் ஒன்றாகும்.


இது அண்டம் உருவாக்கத்திற்கு அறிவியலர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாகும். சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாகக் கருதப்படும் அந்த பெருவெடிப்பு அல்லது பெரும்பிரளயத்தின் (Big Bang) போது, பருப்பொருள், எதிர்வினைப் பருப்பொருள் இரண்டும் சூனியத்தில் (அந்தகாரம்) மோதிக் கொண்டன. ஐன்ஸ்டீன் தத்துவத்தின்படி அவையிரண்டுமே கதிரியக்கத்தினால் அழிந்து மறைந்துவிட, அப்போது வெளிப்பட்ட அதீதசக்தியில் உருவானதுதான் இந்த அண்டமாகும். அண்டம் என்பது அந்தக் காலக்கட்டத்தில் 10000 டிகிரி உயர்வெப்ப நிலையில் வெறும் வாயுக்களாலான ஒரு பெரிய தீக்கோளமேயாகும். அது விரிந்து பரவி பரவி குளிரும் தன்மை உடையதாய் மாறி வந்தது. அடுத்து வந்த ஆயிரக்கணக்கான வருடங்களில், வெப்பம் தணியத் தொடங்கி யதும், முதலில் அணு உட்கருவின் நுண்துகள்களில் ஒன்றான (Subatomic particles) போஸான் (ஹிக்ஸ் போசான்) உருவாக, தொடர்ந்து போட்டானும், அதன் பின்னர் புரோட்டானும் மற்றவைகளும் உருவான பின்னரே அணுவின் உட்கருவைச் சுற்றும் எலெக்ட்ரான்கள் உருவாகின என்பது இக்கோட்பாட்டின் சாரம்.


அணுவின் உட்கருவில் எதிர்வினை சக்தி கொண்ட போட்டான் இருப்பதால்தான் நாம் இன்னும் அண்டத்தில் எதிர்வினை பருப்பொருட்கள் எஞ்சி இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நம் ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.


அண்டத்தில் நிகழ்ந்த அந்த இயற்கைப் பிரளயம் போலவே செயற்கைப் பிரளயம் (கடவுள் துகள்) ஒன்றை உருவாக்க (Big Bang test) ஐரோப்பிய கூட்டமைப்பின் CERN விஞ்ஞானிகள் 300 அடி ஆழம் 27 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்ட ராட்சத ஆய்வுக்கூடத்தில் LHC எனப்படும் (Large Hadron Collider) என்னும் ஹாட்ரான் முடுக்கி சாதனம் மூலம் 2 புரோட்டான்களை மோதி வெடிக்கச் செய்வதன் மூலம், ஆதியில் இயற்கை பிரளயத்தின் போது உருவான அம்சங்களை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இச்சோதனை வெற்றி பெற்றால் மூட நம்பிக்கைகள் சார்ந்த பல போலி பழக்கங்களை அழித்து, அண்டம் தொடர்பான உண்மைகளை நிலைநாட்ட முடியும் என்பது விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.


ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆய்வுக் கூடத்திலிருந்து (CERN) கடத்தப்பட்ட எதிர்வினை பருப்பொருளைக் கொண்டு வாட்டிகனை அழித்துவிடத் துடிக்கும் கூட்டத்தைக் கண்டுபிடித்து எதிர்வினை பருப்பொருளை மீட்பதே ஏஞ்சல்ஸ் & டெமோன் கதையின் கருத்தாகும்.


மேலோட்டமாகப் பார்க்கும்போது 1 பவுண்டு எதிர்வினை பருப்பொருளின் சக்தி, 19 மெகா டன் TNT க்கு சமம் எனும் போது, இதைக் கொண்டு வாட்டிகன் போன்ற ஒரு நகரை நிச்சயம் அழித்துவிட முடியும். ஆனால் CERN அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ப் டியூட்டர் ஹியூர் அவர்கள் இது பற்றிக் கூறும் போது எதிர்வினைப் பருப்பொருள் அணுக்கள், அண்டத்தில் இருப்பது உண்மையே. ஆனாலும் அவற்றை ஆய்வுக்கூடத்தில் தயாரிப்பது என்பது இயலாத காரியம் என்கிறார். சோதனையின் போது ஒரு சில நானோ வினாடிகள் (One Trillionth of a second) நேரமே நிலைத்திருக்கும் அதைக் கைப்பற்றி திரைப்படத்தில் வருவது போல் ஒரு குப்பியில் அடைத்து வைக்கும் தொழில் நுட்பம் நமக்குக் கிடைக்க இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகும் என்கிறார். ஆனால் இப்போதைய நம் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம், பெரும் பிரளயத்தின் போது சமஅளவில் இருந்த எதிர்வினைப் பருப்பொருள், பிரபஞ்சத்தில் இப்போது இருக்கும் நிலை என்ன என்பதைக் கண்டறிவதே என்கிறார் அவர். அவரது கூற்றின்படி பருப்பொருள், எதிர்வினைப் பருப்பொருள் இரண்டும் இன்று ஆராய்ச்சியில் இருக்கும் அனுமானக் கூறுகள். முதலாவதன் பிரதிபிம்பமே மற்றது. இதுவரை மனிதனால் அறியப்பட்ட அண்டம் பற்றிய தகவல்கள் வெறும் 4% மட்டுமே. பெரு வெடிப்பின் போது அண்டத்தில் அழிந்து மறைந்ததாகக் கருதப்படும் பருப்பொருள் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கும் கணிப்புகள் 23%. மீதம் 73% அண்டத்தைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது.


பிரபஞ்ச சூட்சுமத்தைப் பற்றி நாம் கைமண் அளவே அறிந்துள்ள போதும், ஆங்கில இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் கற்பனா சக்திமூலம் ஆராய்சியிலிருக்கும் matter, antimatter என்ற வார்த்தைகளை இன்று உலகம் முழுவதும் பேச வைத்துவிட்டனர். அவர்கள் அறிவியல் வேகம் நமக்கு பிரமிப்பூட்டுகின்றது.


ஆங்கிலத்தில் இதைப்போன்ற அறிவியல் நாவல்களும், ஆயிரக்கணக்கான விஞ்ஞான சஞ்சிகைகளும், துறைசார்ந்த விஞ்ஞான இதழ்களும் அதிநவீன அறிவியல் தகவல்களை பொதுமக்களுக்கு அளிக்கின்றன. அதோடு திரைப் படங்களும், பிபிசி போன்ற தொலைக் காட்சிகளும் பொதுமக்களிடம் அதிநவீன அறிவியல் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

ஆனல் தமிழ் எழுத்தாளர்களுக்கு இத்தகைய வசதி வாய்ப்புகள் துளியும் கிடையாது. இந்தியாவில் மட்டுமல்ல. தமிழகத்திலும் கூட ஊடகங்களின் அத்தகைய ஒத்துழைப்பும் அறவே கிடையாது. ஆராய்ச்சிக் கூடங்களும் மற்ற அறிவியல் பயன்பாடுகள் நிறைந்த துறைகளும் யாருமே நெருங்க முடியாத மர்ம மாளிகைகள்தான்! மேதகு விஞ்ஞானிகள் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவதாணுப் பிள்ளை, நெல்லை சு.முத்து போன்ற அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றும் ஒரு சிலரால் மட்டுமே அதி நவீன விஞ்ஞானம் பற்றி எழுத முடியும். அதுவும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்! தமிழ்த் திரைப்படத் துறையினரோ தமிழ் எழுத்தாளார்களைக் கண்டு கொள்வதே இல்லை. தமிழில் முன்பு அறிவியல் சஞ்சிகைகள் கலைமகள், காவேரி, பாரதமணி, செந்தமிழ்ச் செல்வி என பல இருந்தன. இப்போது அவைகள் இருந்த சுவடு கூட இல்லை. மறைந்த முன்னாள் சபாநாயகர் இராஜாராம் அவர்கள் ஒரு சாமான்யனின் நினைவுகள் என்ற தமது அமெரிக்க பயணக் கட்டுரையில் விண்வெளி ஆய்வு மையம் நாசா போய் வந்து எழுதும் போது அங்கு எதுவும் ரகசியம் இல்லை என்கிறார்.


எனவேதான் மேலை நாடுகளில் எழுத்தாளர்களுக்கு எந்தத்துறை சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றாலும் அவற்றைப் பெறுவதில் எந்த சிரமும் இல்லை. அணுவியல் ஆய்வு மையம், விண்வெளி ஆய்வு மையம், உளவுத்துறை, இராணுவம், விமானப்படை, விமான நிலையம், கப்பல், துறைமுகம், நீர்மூழ்கி, துணைக் கோள்கள், மின்னணு சாதனங்கள், போன்ற எந்தத் துறை சார்ந்த தகவல்கள் என்றாலும் சரி, தொழில் நுட்பம் என்றாலும் சரி, எழுத்தாளர்களுக்கு அவற்றைத் தொகுத்து வழங்க, அவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவி ஆசிரியர்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வருகிறார்கள்.


முடிவுரை:


எப்பவோ நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டுபடிக்கப்பட்ட ஆகாய விமானத்திற்கு இன்னும் நாம் கலைச்சொற்கள் தேட வேண்டிய நிலையில் இருக்கிறோம். எப்பவோ கண்டுபிடிக்கப் போகும் ஒன்றை நடைமுறை சாத்தியமாக்க முயல்கின்றனர் மேலைநாட்டினர். நம்மிடம் அறிவியல் வளர்ச்சி இல்லை என்று சொல்லிவிட முடியாது. உலகத்தின் முயல்வேக அறிவியல் வளர்ச்சிக்கு நாம் ஆமைவேகத்தில்தான் ஈடுகொடுக்கிறோம் என்பதே இப்போதைய யதார்த்த நிலை. இங்கு ரகசியம் என்ற பெயரில் ஒவ்வொரு துறையினரும் நவக்கிரகங்களைப் போல் அவரவர்களுக்கு ஒரு பாதை வகுத்து அதன் வழி செல்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

இந்திய மொழிகளில் ஆங்கிலத்திற்கு இணையாக நடைபோடக் கூடிய ஒரே மொழி தமிழ் மட்டுமே என்கிறார் மணவை முஸ்தபா அவர்கள். எனவே நமக்கிருக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திப் பலதுறைகளில் இருக்கும் விற்பனர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நம்மிடையே அறிவியல் கலைச்சொல் மேலும் மேலும் அதிகரிக்கும். தமிழ்மொழி மேலும் சிறந்து வளர்ச்சியுறும்.


தனிமரம் தோப்பாகாது என்பார்கள். ஒரு கையை காற்றில் வீசி ஓசை எழுப்ப முடியாது. டாக்டர் குழந்தைச்சாமி அவர்கள் சொல்வதுபோல் பலதுறையைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் இருந்தால்தான் இது சாத்தியம்.


இங்கு அலசப்பட்ட பலதரப்பட்ட அறிஞர் பெருமக்களின் கருத்துக்களை ஒருமுகப்படுத்திப் பார்க்கும்போது, அறிவியல் விற்பனர்களை ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு இல்லாததே இந்தப் பின்னடைவுக்கு காரணம் என்பது புலப்படும். தமிழுக்கென்று சிரத்தை உள்ள விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், பதிப்பாளர்கள் போன்றவர்வர்களைக் கொண்டு அப்படி ஓர் அமைப்பை உருவாக்கினால் இந்தக் குறைபாடுகள் களையப்பட்டு அவர்கள் வழிகாட்டுதலில் அறிவியல் தமிழை நாம் அரியணையேற்ற முடியும்.


பத்திரிகைத் தமிழ் பாமரனுக்கும் எட்ட வேண்டும் என்ற ஒரு லட்சியத்தை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து சாதித்துக் காட்டினார் தமிழர் தந்தை ஆதித்தனார் அவர்கள். அதைப் போல் அறிவியல் தமிழும் பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சிக் கூடம் போன்றவற்றின் வாயில்களைத் தாண்டி கடைக் கோடித் தமிழனுக்கும் எட்ட வேண்டும் என்ற லட்சியத்தில் நாம் பாடுபட்டு அக்கறை காட்டி உழைத்தால் நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை. ஆதித்தனாரைப் போல் நாமும் இப்பெரும் காரியத்தில் வெற்றி வாகை சூடலாம். நம் மொழியும் வளமடையும். அப்போது நம் குழந்தைகள் எத்துறையிலும் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு அந்நிய மொழியின் முன் மண்டியிட வேண்டிய நிலைமை ஏற்படாமல் போகும்.


வாழ்க தமிழ்! வளர்க அறிவியல் தமிழ்!


***** ***** *****


சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டிக்காக எழுதிய கட்டுரை.